பங்குச்சந்தை ஆத்திச்சூடி..
சென்ற வாரங்களில் குவான்டிடேட்டிவ் அனாலிசிஸில் முதலீட்டிற்கு நேரடியாக உதவும் அளவுகோல்கள் பற்றி கண்டோம். இனி சற்று ஆழமாக அனாலிசிஸ் செய்ய விரும்புபவர்களுக்கு உண்டான அளவீட்டு முறைகள் பற்றி பார்ப்போம். விகிதாசார ஆய்வு (ரேஷியோ அனாலிசிஸ்) என்பது ஃபைனான்ஷியல் உலகில் பரவலாக பயன்படுத்தப்படும் கருவி. நிதி முதலீட்டுக்கு மட்டுமல்ல, உங்கள் தினசரி வாழ்க்கை மற்றும் தொழிலுக்கும் இது மிகவும் பயன்படும். சிறிய உதாரணம் ஒன்றைப் பார்ப்போம்...
இதேபோலத்தான் நீங்கள் வாங்கப்போகும் பங்கின் வெவ்வேறு விகிதங்களை அதன் போட்டி நிறுவனங்களோடு ஒப்பிட்டுப் பார்த்து, நீங்கள் வாங்கப் போகும் நிறுவனம் எந்த அளவு திறமையாகச் செயல்படுகிறது என்று அறிந்து கொள்ளலாம். ரேஷியோ அனாலிசிஸ் ஒரு பெரிய கடல் என்றாலும், அதில் முக்கியமான சில விகிதாசாரங்களை நாம் இங்கு தெரிந்து கொள்ளலாம். விகிதாசாரங்களை லாப அடிப்படையில், ஆபரேஷன்ஸ் அடிப்படையில், நிர்வாகத் திறமையின் அடிப்படையில், கடன் அடிப்படையில் என பலவாறாகப் பிரித்துக் கொள்ளலாம். நாம் இங்கு சில முக்கியமான விகிதங்களைப் பார்ப்போம். முதலில், லாபத்தை அடிப்படையாகக் கொண்ட சில விகிதங்களை முதலில் பார்ப்போம்...
பெல் நிறுவனத்தின் மார்ச் 2010-ல் முடிந்த 'இன்கம் ஸ்டேட்மென்ட்’ கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்டேட்மென்ட் ஒரு பொது வடிவத்தில் உள்ளது. இதில் அந்நிறுவனத்தின் நிகர விற்பனை 33,226.25 கோடி ரூபாயாகும்; மேலும் ஸ்டாக் அட்ஜஸ்ட்மென்ட்ஸ் 786.65 கோடி ரூபாயாகும். அந்நிறுவனத் தின் மொத்த செலவுகள் 27,913.71 கோடியாகும். அதன் ஆபரேட்டிங் லாபம் 6,099.19 கோடியாகும் (33,226.25 + 786.65 - 27,913.71).
ஆபரேட்டிங் பிராஃபிட் என்பது வட்டி, தேய்மானம் மற்றும் வருமான வரிக்கு முன்பான லாபம். அதாவது, நிகர விற்பனையிலிருந்து விற்பனைக்கு நேரடியாக உள்ள செலவுகளைக் கழித்தால் கிடைப்பது. இப்போது அந்நிறுவனத்தின் ஆபரேட்டிங் பிராஃபிட் மார்ஜின் என்னவென்று பார்ப்போம்...
[ஆபரேட்டிங் பிராஃபிட் மார்ஜின் = ஆபரேட்டிங் பிராஃபிட்/நிகர விற்பனை]
அதன்படி பெல்லின் மார்ச் 2010-ல் முடிந்த நிதி ஆண்டின் ஆபரேட்டிங் பிராஃபிட் மார்ஜின் 18.4% (6,099.19/33,226.25) ஆகும்.
அதைப்போல நெட் பிராஃபிட் (நிகர லாப) மார்ஜினும் மிகவும் உபயோகமான ஒன்று.
[நெட் பிராஃபிட் மார்ஜின் = நெட் பிராஃபிட்/ மொத்த வருமானம்]
நிகர விற்பனையுடன் மற்ற வருமானம் மற்றும் ஸ்டாக் கூட்டி குறைவதைச் சேர்த்துக் கொண்டால் மொத்த வருமானம் கிடைக்கும். பெல் நிறுவனத்துக்கு அவ்வருடம் பிற வருமானங்கள் (இன்வெஸ்ட்மென்ட்ஸ் மூலமோ அல்லது சொத்துக்களை விற்றதன் மூலமோ அல்லது வேறு ஏதேனும் செய்யும் தொழில் சாராததிலிருந்து வரும் வருமானம்) 1,085.73 கோடி ரூபாயாகும். ஸ்டாக் அட்ஜஸ்ட்மென்ட் 786.65 கோடி. ஆக, அந்த வருட மொத்த வருமானம் 35,098.63 கோடியாகும். நிகர லாபம் 4,310.64 கோடியாகும். இந்த நிகர லாபத்திற்கும் மொத்த வருமானத்திற்கும் உள்ள விகிதம்தான் நெட் பிராஃபிட் மார்ஜின். பெல்லின் மார்ச் 2010 நிகர லாப மார்ஜின் 12.30% (4,310.64/35,098.63) ஆகும். இந்த விகிதம் மூலம் ஒவ்வொரு ரூபாய் விற்பனைக்கும் லாபம் எவ்வளவு என்று நாம் தெரிந்து கொள்ளலாம்.
இன்னும் சில முக்கியமான விகிதங்களைப் பற்றி கீழே பார்ப்போம். சிறிய தொழில் செய்யும் பலர் தங்களிடம் எவ்வளவு சரக்கு (இன்வென்டரி) உள்ளதோ அவ்வளவு தங்களுடைய தொழில் பலமாக உள்ளது என்று நினைப்பார்கள். ஆனால், பெரிய தொழில் நிறுவனங்கள் அப்படி நினைக்காது. காரணம், நாம் நூற்றுக்கணக்கான கோடிகளில் உள்ள சரக்குகளைப் பற்றி பேசுகிறோம். இதற்கெல்லாம் ஒரு படி மேலே போய் ஜப்பானியர்கள் அறிமுகப்படுத்திய 'ஜஸ்ட் இன் டைம் இன்வென்டரி மேலாண்மை’ இன்று பரவலாக உபயோகப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நிறுவனமும் தனது சரக்குகளை எத்தனை முறை சுழற்சி (அல்லது விற்பனை) செய்கிறது என்பதைக் கணக்கிட்டு விட்டால் எந்த அளவு சிறப்பாக அந்நிறுவனம் செயல்படுகிறது என்பது விளங்கும்.
உதாரணத்திற்கு, நீங்கள் ஒரு மருந்துக்கடைக்காரர். உங்களின் தினசரி விற்பனை 20,000 ரூபாய் என்று வைத்துக் கொள்வோம். வருடத்திற்கு சுமாராக 72 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்கிறீர்கள். உங்கள் கடையில் எப்போதும் இருக்கும் சரக்கோ 12 லட்சம் என்று வைத்துக் கொள்வோம். அப்படி என்றால் உங்கள் சரக்கின் சுழற்சி 6 (72/12) ஆகும். இந்த சுழற்சியை நீங்கள் கூட்ட முடிந்தால் உங்களின் லாபம் உறுதியாக கூடும். பெல் நிறுவனத்தின் சரக்கு சுழற்சி என்னவென்று கீழே பார்ப்போம்.
[இன்வென்டரி டர்னோவர் = ஆண்டின் விற்பனை/ ஆண்டு முடிவில் உள்ள சரக்குகளின் மதிப்பு]
பெல் நிறுவனத்தின் ஆண்டு இறுதி இன்வென்டரி (பாலன்ஸ் ஷீட்டில் கிடைக்கும்) 9,235.46 கோடியாகும். அவ்வருட நிகர விற்பனை 33,226.25 கோடி என நமக்குத் தெரியும். ஆக, பெல் நிறுவனத்தின் இன்வென்டரி டர்னோவர் 3.6 (33226.25/9235.46) ஆகும். இந்த இன்வென்டரி டர்னோவர் எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு நல்லது. அத்தனை முறை நிறுவனம் தன்னிடம் உள்ள சரக்குகளை சுழலச் செய்துள்ளது என்று பொருள்.
[டெப்ட் டூ ஈக்விட்டி ரேஷியோ = மொத்தக் கடன்/ ஷேர்ஹோல்டரின் நிதி]
ரேஷியோ அனாலிசிஸ் செய்யும் போது ஒன்றை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் - இந்த ரேஷியோக்களை ஒவ்வொரு துறையையும் வைத்துப் பார்க்க வேண்டும். உதாரணத்திற்கு, நிதித்துறை சார்ந்த நிறுவனங்கள், ரீடெய்ல் துறை, உற்பத்தித் துறை நிறுவனங்கள், மின்சாரம் தயாரிக்கும் நிறுவனங்கள் என ஒவ்வொரு துறைக்கும் தேவைகள் வெவ்வேறு. ஆகவே, அவற்றின் ரேஷியோக்களும் சற்று வித்தியாசப்படும். உதாரணமாக, ரீடெய்ல் துறையில் டர்னோவர் ரேஷியோ அதிகமாக இருக்கும். நிதித்துறை நிறுவனங்கள் மற்றும் மின்சாரத்துறை நிறுவனங்களுக்கு அதிகமாக கடன் இருக்கலாம். ஆகவே ரேஷியோக்களை அதன் துறை சார்ந்த, ஒரே அளவிலான நிறுவனங்களோடு ஒப்பிட்டுப் பார்ப்பதே சரி.
(படி ஏறுவோம்)
Source - Vikatan Magazine
No comments:
Post a Comment