Pages

Monday, August 1, 2011

முதற்படி முதலில் படி! - 35

முதற்படி முதலில் படி!

ஷேர் மார்க்கெட்டில் நுழைய விரும்பும் புதியவர்களுக்கான வழிகாட்டித் தொடர்!

பங்குச் சந்தையில் பங்குகள் மட்டும்தான் வர்த்தகமாகிறதா என்றால் இல்லை. பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வேண்டுமானால் பங்குகள் மட்டுமே வர்த்தகமாகியிருக்கலாம். ஆனால், இன்றோ பல்வேறு விஷயங்கள் பங்குச் சந்தைகளில் வர்த்தகமாகின்றன. அவை என்னென்ன தெரியுமா?  
1. பங்குகள், 2. இ.டி.எஃப்., 3. எஃப் அண்ட் ஓ., 4. கரன்ஸி, 5. என்.சி.டி., 6. வாரண்ட், 7. ஐ.டி.ஆர்., 8. கடன் பத்திரங்கள், 9. மியூச்சுவல் ஃபண்டுகள்.
பங்குகளைப் பற்றி கடந்த பல இதழ்களாகப் பார்த்தோம். இ.டி.எஃப்-ஐயும் கடந்த இதழில் பார்த்தோம். மற்றவற்றைப் பற்றி சுருக்கமாக இந்த இதழில் பார்ப்போம்.
எஃப் அண்ட் ஓ (Futures & Options). இவை இரண்டும் சேர்த்து பொதுவாக 'டெரிவேட்டிவ்’ என்றும் அழைக்கப்படுகிறது. ஃபியூச்சர்ஸ், ஆப்ஷன்ஸ் ஆகிய இரண்டும் ஒருவிதமான ஃபைனான்ஷியல் கான்ட்ராக்ட் ஆகும். நீங்கள் பங்குகளை விலைக்கு வாங் கினால், அவற்றை வாழ்நாள் முழுவதும் வைத்துக் கொள்ளலாம். ஆனால்,
எஃப் அண்ட் ஓ-வில் பங்குகளை அடிப்படையாகக் கொண்ட ஒப்பந்தங்களை நாம் விலைக்கு வாங்குகிறோம். அதாவது, ஃபியூச்சர்ஸில் - எதிர்காலத்தில் வாங்கப் போகும்/விற்கப் போகும் ஒன்றிற்கு இன்றே விலையை நிர்ணயித்துக் கொள்வதே ஃபியூச்சர்.
ஆப்ஷன்ஸ் சற்று மாறுபட்டது. ஒரு பங்கை குறிப்பிட்ட விலைக்கு வாங்குகிறேன்/விற்கிறேன் என்கிற ஒப்பந்தம் போட்டுக் கொண்டு சிறுதொகையை அட்வான்ஸாகக் கட்டி விடுவது. இதில் என்ன வசதி என்றால், நாம் ஒப்பந்தம் செய்து கொண்ட விலை நமக்குச் சாதகமாக இருந்தால் மட்டுமே நாம் கணக்கை முடித்துக் கொள்ளலாம். இல்லாவிட்டால், அட்வான்ஸாகக் கட்டிய சிறிய தொகையை, போய்த் தொலை கிறது என்று அப்படியே விட்டுவிடலாம். இதில் கால் ஆஃப்ஷன், புட் ஆஃப்ஷன் என இரண்டு வகை உண்டு.
இந்த எஃப் அண்ட் ஓ சிலருக்கு சில வகைகளில் உதவிகரமாக இருக்கும். நீண்டநாள் முதலீட்டாளர் தங்கள் லாபத்தைப் பாதுகாத்துக் கொள்ள மிகச் சிறந்த வழி இந்த எஃப் அண்ட் ஓ. ஆனால், சிறு முதலீட்டாளர் கள் பணத்திற்கு ஆசைப்பட்டு விஷயம் தெரியாமல் இதில் இறங்கினால் கையை சுட்டுக் கொள்ள நேரிடலாம்!
கரன்ஸி: கரன்ஸி டெரிவேட்டிவ்களும் இந்திய பங்குச் சந்தைகளில் சமீப காலமாக அறிமுகப்படுத்தப் பட்டு வர்த்தகமாகி வருகிறது. இதுவும் ஒரு ஹை ரிஸ்க்கான விஷயம்தான். விஷயம் தெரியாத முதலீட்டாளர்கள் வெறும் யூகத்தை அல்லது அதிர்ஷ்டத்தை நம்பி இறங்கினால், ஆபத்தே வரும். ஆகவே, சிறு முதலீட்டாளர்கள் இதுபோன்ற டெரிவேட்டிவ் வர்த்தகத்திலிருந்து விலகி இருப்பது நல்லது. ஆனால், நீங்கள் ஏற்றுமதி/இறக்குமதி வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தால், உங்களுடைய அல்லது உங்கள் நிறுவனத்தின் வருமானத்தைப் பாதுகாத்துக் கொள்ள, கரன்ஸி டெரிவேட்டிவ் மூலம் உங்கள் லாபத்தை அல்லது நஷ்டத்தை ஈடு செய்யலாம்.
என்.சி.டி. (NCD - Non Convertible Debentures): சமீப காலமாக மிகவும் பாப்புலராகி வருகிறது. இது சிறு முதலீட்டாளர்களுக்கு மிகவும் பயனுள்ள உபகரணமாகும். என்.சி.டி. என்பது கடன் சார்ந்த திட்டமாகும். தற்போது வெளிவரும் திட்டங்கள் பலவும் செக்யூர்ட் என்.சி.டி-கள் (Secured NCD) ஆகும். இந்த செக்யூர்ட் என்.சி.டி-களில் நிறுவனங்கள் தங்களது சொத்துக்களை முதலீட்டாளர்களிடம் அடமானமாக வைத்து நிதி திரட்டுவதால், இதில் முதலீடு செய்யப்படும் பணத்திற்கு உத்தரவாதம் அதிகம். வங்கிகள் மற்றும் பெரிய நிறுவனங்கள் நிரந்தர வைப்பு நிதிகள் (Fixed Deposits) மூலம் நிதி திரட்டுகின்றன. அந்த வைப்பு நிதிகள் அன்செக்யூர்ட் என்.சி.டி.கள் (Unsecured) ஆகும்.

பொதுவாகத் தற்சமயம் வெளிவரும் டிபஞ்சர்கள் ரூ.1,000 முகமதிப்பு கொண்டவையாக இருக்கின்றன. பெரும்பாலும் குறைந்தபட்ச முதலீடு ரூ.10,000 ஆகும். இந்த என்.சி.டி-கள் வெளியீடு முடிந்தவுடன், பங்குச் சந்தையில் லிஸ்ட் செய்யப்பட்டு வர்த்தகமாகின்றன. ஒவ்வொரு நாளும் அதன் விலை, அன்றைய வட்டி விகிதம், முதிர்வு தேதி, வெளியிட்ட நிறுவனத்தின் அன்றைய நிதி நிலைமை போன்ற பலவற்றின் அடிப்படையில், சந்தையால் நிர்ணயிக்கப்படுகிறது. பங்குகளை வாங்கி விற்பது போல் இந்த என்.சி.டி-களையும் வாங்கி விற்கலாம். டீமேட் கணக்கில் இந்த என்.சி.டி.கள் இருப்பதால், மூலத்தில் வருமான வரி பிடிப்பு ஏதும் இல்லை என்பது இதிலுள்ள கூடுதல் அட்ராக்ஷன்.
என்.சி.டி-களை வாங்கி, முதிர்வு வரை வைத்திருப்ப வர்களுக்கு சந்தை ரிஸ்க் ஏதும் இல்லை. அதே சமயத்தில், தங்களது தேவைகளுக் காக, முதிர்வு தேதிக்கு முன்பு சந்தையில் விற்கச் செல்லும் போது அன்றைய வட்டி விகிதத்தைப் பொறுத்து விலையில் ஏற்ற - இறக்கம் இருக்கும். இதுபோன்ற உபகரணங்களில் முதலீடு செய்பவர்கள் அதிகமாக சந்தையில் விற்க வரமாட் டார்கள். எனவே, சந்தையில் வர்த்தகம் ஆகும் அளவு குறைவாக இருக்க வாய்ப்புண்டு. இதனால் லிக்விட்டி ரிஸ்க் ஏற்பட வாய்ப்புண்டு.
வாரண்ட்ஸ்: உரிம வாரண்டுகளை நிறுவனங்கள் அவ்வப்போது வெளியிடும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அவை பங்குகளாக மாற்றப்படும். அந்த காலகட்டத்திற்குப் பிறகு நிறுவனங்கள் அவற்றை பங்குச் சந்தையில் லிஸ்ட் செய்கின்றன. அவ்வாறு லிஸ்ட் செய்யப்பட்ட நல்ல தரமான வாரண்டுகளை விவரமறிந்து வாங்கி முதலீட்டாளர்கள் லாபமடையலாம்.
ஐ.டி.ஆர் (IDR – Indian Depository Receipt): இந்திய நிறுவனங்கள் தங்களுடைய பங்குகளை ஏ.டி.ஆர்-ஆக (ADR – American Depository Receipt) அமெரிக்க பங்குச் சந்தையில் லிஸ்ட் செய்கின்றன.  அதேபோல வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களுடைய பங்குகளை இந்திய பங்குச் சந்தையில் லிஸ்ட் செய்வதே ஐ.டி.ஆர். அவ்வாறு சமீபத்தில் லிஸ்ட் செய்யப்பட்டது ஸ்டாண்டர்ட் சார்டர்டு வங்கியின் ஐ.டி.ஆர். வெளிநாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்ய நினைக்கிறவர்கள் இந்த ஐ.டி.ஆர். என்ன விதமான வருமானம் கொடுத்திருக்கிறது என்று பார்த்து விட்டு வாங்கலாம்.
கடன் பத்திரங்கள்: அரசாங்கம் மற்றும் கார்ப்பரேட் கடன் பத்திரங்களும் பங்குச் சந்தையில் வர்த்தகமாகின்றன. இதில் 'ஹோல்சேல் மற்றும் ரீடெய்ல்’ மார்க்கெட் என இரு வகை உள்ளது. நம் நாட்டில் கடன் பத்திரங்களுக்கான மார்க்கெட் இன்னும் அவ்வளவு பிரபலமடையவில்லை. செபி-யும் கடன் பத்திரச் சந்தையை இன்னும் அதிகமாக ஊக்குவிக்க வேண்டும். வளர்ந்த நாடுகளை ஒப்பிடுகையில் நம் கடன் பத்திரச் சந்தை இன்னும் முளைகூட விடவில்லை என்றே சொல்ல வேண்டும்.
மியூச்சுவல் ஃபண்டுகள்: பங்குச் சந்தை மூலம் மியூச்சுவல் ஃபண்டுகளை வாங்கலாம், விற்கலாம் என்ற வசதியை அறிமுகப்படுத்தி ஓரிரு ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால், பல அசௌகரியங்களால் இத்திட்டம் சூடு பிடிக்கவில்லை. பங்குச் சந்தை மூலம் நடைபெறும் மியூச்சுவல் ஃபண்ட் வர்த்தகம் மிக மிகக் குறைSவே! ஆகவே, சிறு முதலீட்டாளர்கள் நேரடியாக மியூச்சுவல் ஃபண்டுகளுடன் தொடர்பு வைத்துக் கொள்வதே சிறந்தது!
(படி ஏறுவோம்)
Source - Vikatan Magazine

No comments: