Pages

Saturday, July 16, 2011

புத்திசாலிகளின் புதிய பாடம்! - லாபம் ஈட்டவும் அடகு வைக்கலாம்!

புத்திசாலிகளின் புதிய பாடம்! - லாபம் ஈட்டவும் அடகு வைக்கலாம்!

டகு... போலீஸ் ஸ்டேஷன், கோர்ட் படிக்கட்டு என வாழ்க்கையில் போகவே கூடாத இடங்களின் வரிசையில் ஒருகாலத்தில் அடகு வைப்பதுவும் இருந்தது. ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது; கருத்துகளும் மாறிவிட்டது. ஓர் ஆத்திர அவசரத்துக்கு யாரிடமும் கையேந்தாமல் நம்மிடம் இருக்கும் நகைகளையோ, சொத்துகளையோ அடகு வைத்து நிலைமையைச் சமாளிப்பதே நல்லது என்ற எண்ணம் எல்லோருக்கும் ஏற்பட்டு விட்டது. இப்போது அடுத்தகட்டமாக அவசர நிலைமைகளைச் சமாளிப்பதற்காக மட்டுமின்றி, லாபம் சம்பாதிக்கும் ஒரு வழியாகவும் அடகு வைப்பதைப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள் புத்திசாலிகள்.
தனிநபர் கடன், கிரெடிட் கார்டு கடன், வீட்டுக் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களுக்கு கொடுக்கும் வட்டியைவிட அடமானக் கடனுக்கு குறைவான வட்டி என்பதால் அதன் மூலம் தங்கள் சுமையைக் குறைத்துக் கொள்கிறார்கள். இன்னும் சிலரோ ஒருபடி மேலேபோய் தங்கள் சொத்தை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு ஒரு வழியாகவே அடகு வைப்பதை மாற்றியிருக்கிறார்கள்.
சுருக்கமாகச் சொல்வதென்றால் குறைந்த வட்டியில் அடகு வைத்து, அதில் வரும் வருமானத்தைக் கொண்டு முதலீடு செய்து அதிக லாபம் பார்க்க முடியும். அல்லது அதிக வட்டி கட்டுவதிலிருந்து நமது சுமையைக் குறைத்துக் கொள்ள முடியும். அல்லது சொத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முடியும். யோசித்துப் பார்த்தால் இன்னும் எத்தனையோ விதங்களில் அடகு வைப்பது லாபம் தரக்கூடியதாகவே இருக்கிறது.
இப்படி நல்வாய்ப்புகளை வழங்குவதாக மாறியிருக்கிறது அடகு. இந்நிலையில் எவற்றையெல்லாம் அடகு வைக்கலாம், அடகு வைக்கும்போது எதிலெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்பதைப் பற்றியும் சொன்னால், அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் அவற்றைப் பற்றி வரிசையாகக் கொடுத்திருக்கிறோம், படித்துப் பயனடையுங்கள்!

தங்கத்தை தாராளமாக 'அடகின் ராணி’ என்றே சொல்லலாம். காரணம் மற்ற எந்த கடன் வாங்குவதை விடவும் டக்கென்று நகையை அடகு வைத்து கடன் வாங்கிவிடலாம் என்பதால்தான். நகை இருந்தால் கிட்டத்தட்ட கையில் ரொக்கம் இருப்பதற்குச் சமம்! அதனால்தான் தங்கம் இன்றைக்கும் பளபளக்கிறது!

சாதகங்கள்!

பத்திரங்களையும் ஆவணங்களையும்போல அல்லாமல் சில நிமிடங்களி லேயே தங்க நகையின் தரத்தை யும் மதிப்பையும் சோதித்து அறிந்து கொள்ள முடியும். இந்த கையில் நகையைக் கொடுத்து அந்த கையில் பணத்தை எளிதாக வாங்கி விடலாம்!
கூட்டுறவு உள்ளிட்ட சில வங்கிகளில் அடகு வைக்க வங்கிக் கணக்குக்கூட தேவைப் படாது. கூட்டுறவு வங்கிகளில் ரேஷன் கார்டு நகல் மட்டும் கொடுத்தால் போதும்; உடனடி யாக உறுப்பினராகி, நகைக் கடனைப் பெற்று விடலாம்.
ஒருவர் அதிகபட்சமாக 20 லட்சம் ரூபாய் வரை தாராளமாக நகைக் கடன் பெற முடியும். இருப்பினும் இத்தொகை வங்கிக்கு வங்கி மாறுபடும். தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துக்கு ஏற்ப கடன் தொகையும் மாறுபடும். தற்போது கிராமுக்கு சுமார் 1,400 ரூபாய் வரை கடன் தருகிறார்கள்.
வங்கிகளில் மட்டுமின்றி அடகுக் கடைகள், தனிநபர்கள் என எல்லா இடத்திலும் தங்கம் செல்லுபடியாகும்!

கவனத்தில் கொள்ள வேண்டியவை!
வங்கிகளில் கடன் தொகையில் சுமார் 0.56% செயல்பாட்டுக் கட்டணம் இருக்கும்.
வங்கிகளில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே அடகில் வைத்திருக்க முடியும். அதன் பிறகு மீட்டாக வேண்டும். ஆனால், மீட்ட மறுநாளே மீண்டும் அடகு வைத்து நிலைமையைச் சமாளிக்கலாம்.
பொதுவாக மூன்று வருடங்கள் வரை வட்டி, அசல் எதுவும் கட்டவில்லை என்றால் வங்கிகள் நோட்டீஸ் அனுப்பும். வங்கிக்கு வங்கி கடனுக்கான காலம் வேறுபடலாம். குறிப்பிடப்பட்ட தேதியில் கடனைக் கட்டவில்லை என்றால் நகை ஏலத்துக்குப் போய்விடும்.
தனியார் நிதி நிறுவனங் களில் வட்டி மிக அதிகம். சில தனியார் நிறுவனங்களில் முதல் மூன்று மாதங்களுக்கு ஒரு வட்டியும், அதன் பிறகு மிக அதிக வட்டியும் வசூலிக் கிறார்கள். இதில் கொடுமை, மூன்று மாதங்கள் தாண்டிய பிறகுதான் அதிக வட்டி விதிக் கிறார்கள் என்றாலும், கடன் வாங்கிய முதல் நாளிலிருந்தே அந்த அதிக வட்டியை கணக்குப் பண்ணி கறந்து விடுகிறார்கள்!
தனியார் நிதி நிறுவனங் களில் நகை அடமானம் வைக்கும் சூழ்நிலை ஏற்பட்டால், விதிமுறைகளை ஒரு முறைக்கு இரு முறை படித்து பார்த்துவிட்டு கையெழுத்து போடவும்.
தனிநபர்கள், பான் புரோக்கர்கள் ஆகியோரிடம் அடகு வைப்பதை கடைசிக் கட்டமாக வைத்துக் கொள்ளவும்.

வரிச் சலுகை!    
நகை அடமானக் கடனுக்கு மாதச் சம்பளம் வாங்கும் நபர்களுக்கு வரிச் சலுகை கிடையாது. ஆனால், பிஸினஸ் செய்யும் நபர்களுக்கு வட்டியை லாபத்தில் கழித்துக் கொள்ளலாம். அதாவது இந்தத் தொகையை தொழில் செலவில் கணக்கு காண்பித்து, சலுகை பெறலாம். நகைக் கடன் அத்தாட்சி கடிதம் மற்றும் வட்டி ரசீது போன்றவைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது அவசியம்.                                  
-பானுமதி அருணாசலம்


கையில் காசில்லை; தவிர்க்க முடியாத தேவைக்கு பணம் தேவை. இந்த மாதிரி சமயங்களில் சொத்து இருந்தால் கவலையில்லை. வீடோ, மனையோ, ஃப்ளாட்டோ அதன் மதிப்புக்கேற்றவாறு அடமானம் வைத்து பணம் பெற்றுக் கொள்ளலாம். வாங்கிய கடனை வட்டியோடு அசலையும் ஒவ்வொரு மாதமும் கட்டினால் சொத்தும் கையை விட்டுப் போகாது; நம் பிரச்னையும் தீரும்.
வீட்டை அடமானம் வைப்பது என்று முடிவு செய்யும் பட்சத்தில் தனிப்பட்ட ஆட்களிடம் அடமானம் வைப்பதைவிட வங்கிகளில் அடமானம் வைப்பது பாதுகாப்பானது. தனியார் வங்கிகளில் தாராளமாக கடன் கிடைக்கும். ஆனால் வட்டி அதிகமாக இருக்கும். பொதுத்துறை வங்கிகளில் நிறைய அலைய வேண்டியிருந் தாலும் வட்டி குறைவு.  
சாதகங்கள்!
ஜாமீனாக நம் சொத்தைக் கொடுப்பதால் கடன் எளிதாகக் கிடைக்கும்.
மாதத் தவணை முறை என்பதால் கடன் கட்டுவதில் அதிக சிரமம் இருக்காது.
அடமானம் வைத்திருந்தாலும், அந்த வீட்டில் குடியிருக்கலாம். வாடகைக்கு விடுவதிலும் பிரச்னை இருக்காது.
அடிப்படைத் தகவல்கள்!
வீடு/மனை உள்ளாட்சி அமைப்பின் முறையான அங்கீகாரம் பெற்றதாக இருக்க வேண்டும்.
வங்கியின், சொத்துகள் தொடர்பான மதிப்பீட்டாளர் ஆய்வு செய்து சொத்தின் மதிப்பை தீர்மானம் செய்வார். அதனடிப்படையில் வங்கி கடன் வழங்கும்.
கடன் தொகை!
சொத்தின் மதிப்பில் ஐம்பது சதவிகிதம் வரை அடமானக் கடன் பெறலாம். குறைந்தது ஒரு லட்சத் திலிருந்து அதிகபட்சம் ஒரு கோடி ரூபாய் வரை கடன் கிடைக்கும். இதிலும் நகர்ப்புறம், கிராமப்புறம் என அடமானத் தொகை வேறுபடும்.
சொத்தின் மதிப்பில் பாதி கடன் தொகையாகக் கிடைக்க வாய்ப்புள்ளது என்றாலும், கடனைத் திருப்பிச் செலுத்தும் திறனைப் பொறுத்தே கடன் தொகை தீர்மானமாகும். மாதச் சம்பளம் பெறுகிறவர் எனில் அவருடைய திருப்பிச் செலுத்தும் திறன் 60% என பொதுவாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
கடன் தொகை மற்றும் திரும்பச் செலுத்தும் திறன், இதில் குறைந்தபட்ச தொகை எதுவோ அந்த அளவுக்கே கடன் கிடைக்கும்.
கடனை அதிகபட்சம் 84 மாதங்கள் வரை திரும்பக் கட்டலாம்.

தகுதி!
கடனுக்கு விண்ணப் பிப்பவர் குறைந்தபட்சம் இரண்டு வருடங்களாவது நிரந்தர பணியில் இருக்க வேண்டும்.
சொந்தத் தொழில் எனில் மூன்று வருடங்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்திருக்க வேண்டும். இல்லையெனில் சம்பந்தப்பட்ட வங்கியில் ஆறு மாதங்களாவது வாடிக்கையாளராக இருக்க வேண்டும்.
வயது வரம்பு 18 லிருந்து 60 வரை. சில வங்கிகளில் 21 லிருந்து 60 வரை..
தேவையான ஆவணங்கள்!
பட்டா, சொத்து மதிப்பு சான்றிதழ், 30 வருட வில்லங்கச் சான்றிதழ், தாய்ப் பத்திரம், கிரயப் பத்திரம், சொத்துவரி ரசீது, முகவரிச் சான்று, அடையாளச் சான்று.
வட்டி விகிதம்!
மாறுபடும் வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படும். வட்டி 12-16% வரை.
- நீரை.மகேந்திரன்


காலத்துக்கேற்ப மதிப்பு உயர்ந்து, பிற்காலத்திற்குப் பயன்படும் என்பதால்தான் பங்குகள், மியூச்சுவல் ஃபண்டுகள், ஃபிக்ஸட் டெபாசிட் போன்றவற்றில் முதலீடு செய்கிறோம். திடீரென நமக்கு பணம் தேவைப்பட்டால் இவற்றில் ஏதாவது ஒன்றை விற்று, செலவை சமாளிப்பது ஒரு வழி. இதைவிட மிகச் சிறந்த வழி, இந்த நிதி ஆவணங்களையே அடமானம் வைத்து, கடன் பெறுவது!
பங்குகள்!
பங்குகளைப் புரோக்கிங் நிறுவனங்களிடமோ அல்லது வங்கிகளிலோ அடமானம் வைக்கலாம். வங்கிகளில் வட்டி சற்று குறைவாக இருக்கும். எந்த பங்குகளுக்கு கடன் தரமுடியும் என்பதை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள்தான் முடிவு செய்யும். பங்குகளின் மதிப்பில் அதிகபட்சம் 50% வரை கடன் கிடைக்க வாய்ப்புண்டு. அடமானத்தில் இருக்கும் பங்குகளின் மதிப்பு 10% சதவி கிதத்துக்கும் கீழ் குறையும் போது, அதற்கு இணையான தொகையை நாம் செலுத்த வேண்டியிருக்கும்.
மியூச்சுவல் ஃபண்ட்!
வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களிடம் மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்களைக் கொடுத்து கடன் வாங்க முடியும். மியூச்சுவல் ஃபண்டின் தற்போதைய மதிப்பில் அதிகபட்சம் 50% வரை கடன் கிடைக்க வாய்ப்புண்டு.
ஏறக்குறைய இதே நடைமுறைதான் தேசிய சேமிப்பு பத்திரம் மற்றும் இதர பத்திரங்களுக்கும்.

ஃபிக்ஸட் டெபாசிட்!
ஃபிக்ஸட் டெபாசிட்டுக் கான ஆவணத்தைக் கொடுத்து வங்கிகளில் எளிதில் கடன் வாங்கலாம். ஃபிக்ஸட் டெபாசிட்டில் இருக்கும் தொகையில் அதிக பட்சம் 90% வரை கடன் கிடைக்கும். வட்டியைப் பொறுத்தவரை ஃபிக்ஸட் டெபாசிட் மூலம் கிடைக்கும்  வட்டியைவிட கூடுதலாக ஒரு சதவிகிதம்தான் இருக்கும். கடனைத் திரும்பச் செலுத்தத் தவறினால், முதலீடு செய்திருக்கும் காலம் முடி வடைந்தவுடன் வட்டி போக மீதித்தொகையை  திருப்பித் தருவார்கள்..
இன்ஷூரன்ஸ்!
இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுத்த அதே நிறுவனத்திடமே அடமானம் வைத்து கடன் வாங்கிக் கொள்ளலாம். குறிப் பிட்ட டிரெடிஷனல் மற்றும் யூலிப் பாலிசிகளுக்கு மட்டுமே கடன் கிடைக்கும். டேர்ம் பாலிசி போன்றவற்றுக்கு கிடைக்காது. யூலிப் பாலிசியைப் பொறுத்தவரை அதன் என்.ஏ.வி. மதிப்பில் அதிகபட்சம் 40% வரை கடன் வாங்கலாம். டிரெடிஷனல் பாலிசியில் சரண்டர் மதிப்பில் 90% வரை கடன் பெறலாம்.
சாதகங்கள்!
ஃபிக்ஸட்டைப் பொறுத்த வரை அதிவிரைவில் கடன் கிடைத்துவிடும்.
நகை, வீடு போன்ற சென்டிமென்ட் சமாசாரம் இவற்றில் இருக்காது.
இன்ஷூரன்ஸில் கிடைக்கும் தொகை குறைவாக இருந்தாலும் வட்டி மிகவும் குறைவு.
- வா.கார்த்திகேயன்.


Source - Vikatan Magazine

No comments: