வங்கிகளில் நாம் போட்டு வைத்திருக்கிற ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு ஒவ்வொரு மாதமும் வட்டி வருகிற மாதிரி, மியூச்சுவல் ஃபண்டில் போடும் பணத்திற்கும் மாதா மாதம் வருமானம் வந்தால் எப்படி இருக்கும்? இப்படி நினைக்கிறவர்களின் தேவையை ஓரளவுக்கு பூர்த்தி செய்வதுதான் 'மன்த்லி இன்கம் பிளான்’. மியூச்சுவல் ஃபண்டுகளில் இருக்கும் பல்வேறு வகைகளில் இந்த மன்த்லி இன்கம் ஃபண்டும் ஒன்று.
எல்லா மாதமும் கிடைக்குமா?
பெயரிலேயே 'மன்த்லி இன்கம்’ என்று இருப்பதால் ஒவ்வொரு மாதமும் வருமானம் கிடைக்கும் என்று சொல்லிவிட முடியாது. பல மாதங்களில் கொடுப்பார்கள்; சில மாதங்களில் கொடுக்காமல்கூட இருக்கலாம். ஏன் இப்படி என்று கேட்கிறீர்களா? முதலீட்டின் மீது கிடைக்கும் வருமானத்தைப் பொறுத்தே டிவிடெண்ட் தரப்படும். சந்தை இறங்கும் சமயத்தில் வருமானம் இல்லாமல் போகும் என்பதால், அந்த மாதத்தில் டிவிடெண்ட் கொடுக்க மாட்டார்கள்.
ஆப்ஷன்கள்!இந்த ஃபண்டுகளில் மாதாந்திர டிவிடெண்ட், காலாண்டு டிவிடெண்ட் போன்ற ஆப்ஷன்கள் இருக்கிறது. நமக்கு தேவையான ஆப்ஷனை தேர்வுசெய்து கொள்ளலாம். டிவிடெண்ட் வேண்டாம் என்கிறவர்கள் குரோத் ஆப்ஷனை தேர்வு செய்து, பிற்பாடு மொத்தமாக வாங்கிக் கொள்ளலாம்.
இந்த ஃபண்டுகளில் திரட்டப்படும் தொகை, பெரும்பாலும் கடன் சார்ந்த திட்டங்களிலேயே முதலீடு செய்யப்படுகிறது. மிகக் குறைந்த அளவு தொகை மட்டுமே ஈக்விட்டி திட்டங்களில் முதலீடு செய்யப்படுகிறது. அதாவது, சுமார் 25 சதவிகித அளவுக்கு மட்டுமே பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது.
வருமானம் எப்படி?சுமார் 75% கடன் சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யப்படுவதால், இந்த ஃபண்டுகளில் வருமானம் ஓரளவுக்கு நிலையானதாகவே இருக்கும். பத்துக்கும் மேற்பட்ட ஃபண்டுகள், கடந்த ஐந்தாண்டுகளில் 10 சதவிகித வருமானம் தந்திருக்கிறது. சில ஃபண்டுகள் கடந்த மூன்றாண்டுகளில் 14 சதவிகித ஆண்டு வருமானமும் கொடுத்திருக்கின்றன.
யாருக்கு ஏற்றது?* வங்கி வட்டியைவிட கொஞ்சம் அதிக வருமானம் வேண்டும் என்பவர்களுக்கு...
* ஓரளவுக்கு மட்டுமே ரிஸ்க் எடுக்க முடியும் என்று நினைக்கிறவர்களுக்கு...
* சீனியர் சிட்டிசன்களுக்கு!
இந்த ஃபண்டின் மூலம் கிடைக்கும் டிவிடெண்டிற்கு வரி (டிவிடெண்ட் விநியோக வரி) இருக்கிறது. ஆனால், இந்த வரியை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் கட்டிவிடும் என்பதால், முதலீட்டாளர்கள் தனியாக வரி எதுவும் கட்டத் தேவையில்லை.
குறுகியகால மூலதன ஆதாய வரி!
அதிக அளவு தொகையை கடன் சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்வதால் கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு என்ன வரி விகிதமோ, அதையே இங்கும் செலுத்த வேண்டி இருக்கும்.
ஒரு வருட காலத்திற்குள் விற்கும்போது லாபத்திற்கு இந்த வரியைச் செலுத்த வேண்டும். முதலீட்டாளர்கள் தங்களது வருமான வரி எல்லைக்கு ஏற்ப இந்த வரியை செலுத்த வேண்டி இருக்கும். அதனால் அதிக வரி வரம்பிற்குள் இருப்பவர்கள், ஒரு வருட காலத்தில் எம்.ஐ.பி.யில் இருந்து வெளியேறுவது பயன் தருவதாக இருக்காது.
நீண்டகால மூலதன ஆதாய வரி!ஒரு வருடத்துக்குப் பிறகு விற்கும்போது, லாபத்தில் 10 சதவிகித வரி அல்லது பணவீக்க விகித சரிக்கட்டலுக்குப் பிறகு, 20 சதவிகித வரி உண்டு. இதில் எது குறைவோ அதை வரியாகச் செலுத்த வேண்டி இருக்கும்.
ஃபிக்ஸட் டெபாசிட்டைவிட அதிக வருமானம்; வருமான வரியும் குறைவு என்பது இந்த ஃபண்டின் கவர்ச்சிகரமான விஷயம். தங்கள் போர்ட் ஃபோலியோவில் கடன் சார்ந்த முதலீடு வேண்டும் என்பவர்கள் இந்த ஃபண்டை தாராளமாகத் தேர்வு செய்து கொள்ளலாம்.
- வா.கார்த்திகேயன்.
No comments:
Post a Comment