Pages

Monday, August 1, 2011

வருமான வரி சேமிப்பில் புலிகளாகும் புள்ளிமான்கள்!

வருமான வரி சேமிப்பில் புலிகளாகும் புள்ளிமான்கள்!

சேமிப்பதிலும் சரி, செலவு செய்வதிலும் சரி, நம்மூர் பெண்கள் கில்லாடிகள்தான்! இப்போது வருமான வரி விஷயத்திலும் வெளுத்துக் கட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். குறிப்பாக, வேலைக்குச் செல்லும் பெண்கள் வரிச் சேமிப்புக்கான வழிகளை சரியாக இனம்கண்டு அதைப் பயன்படுத்துவதிலும் புலிகளாகிவிட்டார்கள். இதை உறுதிப்படுத்தும் விதமாக, அண்மையில் 'டாக்ஸ் ஸ்பேனர்’ எனும் நிறுவனம் சுமார் 500 இந்திய நிறுவனங்களில் ஓர் ஆய்வை மேற்கொண்டபோது, வரி விஷயத்தில் ஆண்களைவிட பெண்கள்தான் மிகத் தெளிவாக இருப்பது தெரியவந்திருக்கிறது.
வேலைக்குச் செல்லும் பெண்களின் வரி விகிதம் (சம்பளத்தில், செலுத்தும் வரியின் விகிதம்) சராசரியாக 4 சதவிகிதமாக உள்ளது.
அதே சமயத்தில் ஆண்களின் வரி விகிதம் 6 சதவிகிதமாக இருக்கிறது. நாடு முழுவதும் இருக்கும் இந்த நிலவரம் ஒருபக்கம் இருக்க, நம்மூர் பெண்கள் எப்படி இருக் கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள ஒரு சோறு பதமாக மூன்று பெண்களைச் சந்தித்தோம்... உண்மையிலேயே அசர வைத்துவிட்டார்கள்!
டைட்டன் ஷோரூம் பிரான்ச்சைஸி உரிமையாளர்:
''வருமான வரி விஷயத்துல நான் எப்பவும் கவனமா இருப்பேன். சொந்தமா வீடு கட்ட முடிவு செஞ்சப்ப, அதுக்குத் தேவையான பணம் இருந்தாலும், வரிச் சலுகைக்காக வீட்டுக் கடன் வாங்கினேன். கையில இருந்த பணத்தை வச்சுகிட்டு பிஸினஸை விரிவுபடுத்தினேன்.
வீட்டுக் கடன் தவிர, அரசு கடன் பத்திரங்கள், இன்ஷூரன்ஸ் பாலிசிகள், மியூச்சுவல் ஃபண்டுகள்னு வரிச் சலுகைக்கான முதலீடுகளாகப் பார்த்து பணத்தைப் போட்டிருக்கிறேன்!''
உஷா நாராயணன், தனியார் நிறுவன ஊழியர்:
''எனது கணவர் இருந்த வரை நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களை அவர்தான் பார்த்துக் கொள்வார். ஆனால், அவர் மறைந்த பிறகு நானே வரி சேமிப்பை திட்டமிடுகிறேன்.
ஒவ்வொரு ஆண்டும் பெண்களுக்கான வரிச் சலுகை என்னென்ன என்பதைத் தெரிந்து கொண்டு, அதற்கு தகுந்தாற் போல் பிளான் செய்து முதலீடு செய்கிறேன். பி.பி.எஃப்., இன்ஃப்ரா பாண்டு பத்திரங்கள், இன்ஷூரன்ஸ் பாலிசிகள், மெடிக்ளைம், இ.எல்.எஸ்.எஸ். மியூச்சுவல் ஃபண்டில் எஸ்.ஐ.பி. மூலம் முதலீடு அப்படின்னு ஏறக்குறைய வரி கட்டத் தேவையில்லாத அளவுக்கு நடந்துகொள்கிறேன். நான் வரிச் சலுகை இல்லாத ஒன்றில் முதலீடு செய்கிறேன், அது தங்கத்தில் மட்டும்தான்!''
அனுராதா, தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர்:
''வரி சேமிப்பு விஷயத்தில் முன்பு எனக்கு ஆர்வமில்லை. ஆனால், இப்ப பட்ஜெட் தாக்கல் செய்யும் போதே, டி.வி. முன்னால் உட்கார்ந்து என்னென்ன வரிச் சலுகைகள் அறிவிக்கிறார்கள் என பார்த்து குறித்து வைத்துக் கொள்வேன். அதற்குத் தகுந்தாற்போல் நிதி ஆண்டின் தொடக்கத்திலே எவ்வளவு வருமானம் வரும் என கணக்கிட்டு, அதற்கேற்ப முதலீடு செய்வேன். இப்போதெல்லாம் தங்கத்தில் முதலீடு செய்வதைக் குறைத்துக் கொண்டு, வரிச் சேமிப்பு திட்டங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறேன். அந்த திட்டங்களும் நல்ல லாபம் கொடுப்பதாக இருக்கிறதா என்று பார்ப்பேன். வரி சேமிப்பிற்காக நஷ்டப்பட முடியாதில்லையா?''
இனியாவது, வரிக் கணக்கை பெண்களிடம் ஒப்படைத்து விட்டு நிம்மதியாக இருக்கலாமே!
-பானுமதி அருணாசலம்
படங்கள் : ச.இரா.ஸ்ரீதர்

சித்ரா சிவக்குமார்,

Source - Vikatan Magazine

No comments: