Pages

Thursday, April 7, 2011

முதற்படி முதலில் படி! - 16

 

முதற்படி முதலில் படி! - 16

பங்குச்சந்தை ஆத்திச்சூடி..
ஷேர் மார்க்கெட்டில் நுழைய விரும்பும் புதியவர்களுக்கான வழிகாட்டித் தொடர்!

சென்ற வாரம் ஃபண்டமென்டல் அனாலிசிஸ்-ல் முக்கியமாகப் பார்க்க வேண்டிய சில அளவுகோல்களாகிய பொருளாதாரம் மற்றும் துறைகளின் வாய்ப்புக்கள் பற்றி கண்டோம். இதுபோல் ஒரு சிறந்த பங்கைத் தேர்வு செய்வதற்கு இன்னும் பல அளவுகோல்கள் உள்ளன. அவற்றுள் முக்கியமானது, மேனேஜ்மென்ட் அல்லது நிர்வாகத்தின் தரம். அதைப் பற்றி பார்க்கலாம்....
நிர்வாகத்தின் தரம்:
பொருளாதாரம் மற்றும் துறைகளை அலசிய பிறகு, ஒரு பங்கை வாங்குவதற்குத் தேவைப்படும் முக்கியமான அம்சம், நிர்வாகத்தின் நம்பகத்தன்மை, திறமை மற்றும் நியாயமான நடத்தை. ஒரு நாட்டிற்கு அரசாங்கம் எவ்வளவு முக்கியமோ, ஒரு வீட்டிற்கு தலைவர் எவ்வளவு முக்கியமோ, ஒரு வகுப்புக்கு ஆசிரியர் எவ்வளவு முக்கியமோ, அந்த அளவுக்கு ஒரு நிறுவனத்துக்கு அதன் நிர்வாகம் முக்கியம்.
சரி, நிர்வாகம் என்று யாரைக் கூறுகிறோம்? சுருக்கமாகச் சொல்லப் போனால், ஒரு நிறுவனத்தை வழிநடத்திச் செல்லும் முக்கிய அணிதான் நிர்வாகம். குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், புரமோட்டர், சேர்மன், போர்டு ஆஃப் டைரக்டர்ஸ், சி.இ.ஓ. அல்லது மேனேஜிங் டைரக்டர் மற்றும் முக்கிய பொறுப்பு வகிப்பவர்களைக் கூறலாம்.
தரமான நிர்வாகம் தங்களுக்கென்று சில நல்ல கொள்கைகளை விடாப்பிடியாக வைத்திருப்பார்கள். அவற்றுள் முக்கியமானவை: உன்னதமான வாடிக்கையாளர் சேவை, வரி ஏய்ப்பு செய்யாமல் இருத்தல், தயாரிக்கும் பொருட்களின் தரத்திற்கு முதலிடம், தலையே போனாலும் லஞ்சம் கொடுக்காமல் இருத்தல், சட்டத்திற்கு மேல் ஒருபடி சென்று நியாயத்திற்கு முதலிடம் கொடுத்தல், ஊழியர்களின் நலன் கருதுதல், தங்களுக்கென்று அநியாயமான சம்பளம் எடுத்துக் கொள்ளாமல் இருத்தல் என்று அடுக்கிக் கொண்டே செல்லலாம்.

நிர்வாகத்தின் தரம் என்ற ஓர் அளவுகோலை அப்ளை செய்தாலே போதும் - இந்தியாவில் பல நிறுவனங்களை ஒதுக்கிவிடுவீர்கள் என்பது உறுதி. அந்த அளவிற்கு நிர்வாகத்தின் தரத்திற்கு நம் நாட்டில் பஞ்சம் உள்ளது. ரியல் எஸ்டேட் போன்ற துறைகளில் முதலீட்டாளர்கள் நுழையாமல் இருப்பதற்கு இதுவே முதல் காரணம். டாடா குழும நிறுவனங்கள், ஹெச்.டி.எஃப்.சி.குழுமம், இன்போஃஸிஸ், மஹிந்திரா அன்ட் மஹிந்திரா மற்றும் பல பொதுத்துறை நிறுவனங்கள் தலை நிமிர்ந்து நிற்பதற்கு காரணம் அவைகள் மக்களிடத்தில் பெற்றுள்ள அசராத நம்பிக்கைதான்! டாடா போன்ற நிறுவனங்கள் லஞ்சம் கொடுக்காமல் இருப்பதற்காக சில துறை களில் நுழையாமல் போனதும் உண்டு. ஏன் நமது தென்தமிழ் நாட்டில் டாடா குழுமம் ஒரு தொழிற்சாலையை ஆரம்பிக் காமல் போனார்கள். காரணம் அநியாயமான ரியல் எஸ்டேட் விலை. ஹெச்.டி.எஃப்.சி குழு மத்தின் பங்குகள் சந்தையில் எப்போதும் அதிக விலையில் விற்பதற்கு ஒரு காரணம் - அந்த நிர்வாகத்தின் தரம் மற்றும் வெளிப்படைத்தன்மை.
பங்குகளைத் தேர்வு செய்யும் போது நாம் ஏன் நிர்வாகத்திற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? அரசாங்கம் சரியில்லாவிடில் அந்த நாட்டு மக்கள் மட்டுமல்லாது பக்கத்து நாட்டு மக்களும் அவதிப்படுவார்கள். அதே போலத்தான் நிர்வாக விஷயமும். நிர்வாகத்தின் ஒரு சிறிய தவறான அணுகுமுறையினால், முதலீட்டாளர்கள் தங்களுடைய முதலீடு முழுவதையும்கூட இழக்கக்கூடும். பின்னணி தெரியாத அல்லது நம்பகத்தன்மை இல்லாத புரமோட்டர்கள், நிர்வாகத்தினர்களால் இந்திய முதலீட்டாளர்கள் இதுவரை இழந்துள்ளது எத்தனையோ கோடி!
'தி இன்டெலிஜென்ட் இன்வெஸ்டார்’ புத்தகத்தில் பெஞ்சமின் கிரஹாம் முதலீடு என்பதை இவ்வாறு விவரிக்கிறார்: 'முதலீடு என்பது அசலைப் பாதுகாக்கக்கூடியதாகவும் போதுமான அளவு வருமானத் தைத் தரக்கூடியதாகவும் இருக்க வேண்டும். இந்த வரையறைக்குள் வராதவை சூதாட்டம் ஆகும்.'
நமது முதலீடு (அசல்) எப்போது பாதுகாப்பாக இருக்கும்? அதற்கு முக்கிய காரணி எது என்று அலசினால், சந்தேகம் இல்லாமல் கிடைக்கும் விடை, தரமான  நிர்வாகம் என்பதே.
'தரமான நிர்வாகம் என்று சொல்கிறீர்களே? நானோ ஒரு சிறிய முதலீட்டாளர். நான் எவ்வாறு ஒரு நிறுவனத்தின் நிர்வாகம் தரமானதா அல்லது தரமற்றதா என்று கண்டுபிடிக்க முடியும்?’ என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம்.
உதாரணத்துக்கு நீங்கள் ஒரு தமிழர். தமிழ்நாட்டில் பல காலம் வசித்துள்ளீர்கள். உங்களது அப்பா அல்லது அம்மா நீண்ட காலமாக சுந்தரம் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் பணத்தை டெபாசிட் செய்து மாதாமாதம் வட்டி பெற்றுக் கொண்டிருந்ததும், அந்த வட்டி அந்த நிறுவனம் சொன்னது போல் மாதம்தோறும் தவறாமல் உரிய தேதியில் உங்களது பெற்றோருக்குக் கிடைத்ததும் உங்களுக்குத் தெரியும். அவர்களின் கஸ்டமர் சேவை உன்னதம் என்பதும்  உங்களுக்குத் தெரியும். மேலும் பல நிதி நிறுவனங்கள் தமிழ்நாட்டிலும் பிற மாநிலங்களிலும் மோசடி செய்து டெபாசிட் தாரர்கள் தங்களது அசலை இழந்தபோதும், சுந்தரம் ஃபைனான்ஸ் டெபாசிட்தாரர்கள் தங்களது பணத்தை ஒருபோதும் இழக்கவில்லை என்பதும் உங்களுக்குத் தெரியும்.
பொதுவாக பங்குச் சந்தையில் தரமான நிர்வாகம் கொண்ட நிறுவனங்களின் பங்குகளின் விலை அதன் போட்டி நிறுவனப் பங்குடன் ஒப்பிடுகையில் அதிக பிரீமியத்திலேயே விற்பனை யாகும். அதாவது, அதிக விலையில் விற்பனையாகும்!
ஒரு நிர்வாகத்தின் தரத்தை ஆராய்வதற்கு குறைந்தபட்ச ஃபில்டர்களாக கீழே கொடுக்கப் பட்டுள்ள புள்ளிகளை எடுத்துக் கொள்ளலாம்:
1. நிறுவனம் மற்றும் அதன் நிர்வாக டீம் எவ்வளவு நாட்களாக அத்தொழிலில் உள்ளார்கள்? 20 - 25 வருடங்களா? அல்லது அதற்கும் மேலா? அதிக காலம் இருப்பது நல்லது!
2. டெபாசிட்தாரர்களை, பாண்ட் வைத்திருப்பவர்களை, பங்குதாரர்களை அந்நிறுவனம் இதுவரை ஏமாற்றியுள்ளதா?
3. புரமோட்டர்கள் அல்லது நிர்வாகம் லஞ்ச, ஊழலில் இதுவரை ஈடுபட்டுள்ளதாக ஏதே னும் செய்திகள் வந்துள்ளதா?
4.நிறுவனமோ, புரமோட்டர்களோ, மேனேஜ்மென்ட்டோ அரசாங்கத்திடமோ, அதன் சார்பு நிறுவனங்களிடமோ அல்லது பொதுமக் களிடமோ சர்ச்சைக்கு ஆளாகி இருக்கிறதா?
5.   தங்களுடைய பங்குகளை சில ஸ்பெக்குலேட்டர்கள் மூலம் வாங்கி விற்பது (பங்கு விலையில் ஏற்ற இறக்கத்தை உண்டு பண்ணுவதற்காக) போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் களா?
6. சட்டத்தை முற்றிலுமாக மதித்து அதற்கு மேலும் நியாயத் துடன் செயல்படும் நிர்வாகமா?
7. தங்களுடைய ஊழியர் களை மதித்து அவர்கள் விசுவாசத்துடன் இருக்க போதிய வசதி வாய்ப்புக்களை செய்து கொடுத்திருக்கிறதா?
8. வாடிக்கையாளர்களை சொத்தாக நினைத்து சேவை புரியும் நிர்வாகமா?
9. செய்யும் தொழிலை தெய்வமாக நினைத்து அதைத் திறம்பட செய்யும் நிர்வாகமா?
10. நிர்வாகம் சொல்வதும் செய்வதும் ஒன்றாக இருக்கிறதா?
11. பங்குதாரர்களுக்கு சேவை மற்றும் பலன் நன்றாக உள்ளதா?
இது போல் எத்தனையோ ஃபில்டர்களை வைத்து நீங்களும் மேனேஜ்மென்டின் தரத்தை ஆராயலாம். இது ஒரு முடிவல்ல. ஆரம்பமே... நீங்கள் முக்கியமாக கருதும் வேறு சில விஷயங்களையும் இந்தப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளவும். மொத்தத்தில் பங்கில் முதலீடு செய்யுமுன் அந்த நிர்வாகத்தின் தரத்திற்கு உங்களது தராசு அதிகமாகச் சாயட்டும்.
(படி ஏறுவோம்)

Source - Vikatan Magazine

முதற்படி முதலில் படி! - 15

 

முதற்படி முதலில் படி! - 15

பங்குச்சந்தை ஆத்திச்சூடி..
ஷேர் மார்க்கெட்டில் நுழைய விரும்பும் புதியவர்களுக்கான வழிகாட்டித் தொடர்!
டந்த சில இதழ்களில் வெவ்வேறு முதலீட்டு யுக்திகள் பற்றியும் அவற்றின் நன்மை, தீமைகள் பற்றியும் பார்த்தோம்... முதலீட்டு யுக்தி களைப் பொறுத்தவரை ஓர் உண்மையை உணர வேண்டும். எல்லா முதலீட்டு யுக்திகளும் எல்லோருக்குமானதல்ல. சில யுக்திகள் சிலருக்கு சரிவரும்; சில யுக்திகள் சிலருக்கு கூடவேகூடாது. ஒவ்வொருவரும் தங்களுக்கு எவ்வகையான முதலீட்டு யுக்திகள் ஒத்துவரும் என்று ஆராய்ந்து அறிந்து, அதைத் தேர்வு செய்துகொள்ள வேண்டும்.
நாம் இதுவரை கண்ட அனைத்துமே நீண்ட கால முதலீட்டாளர்களுக்கான முதலீட்டு யுக்திகளே. குறுகிய காலத்தில் டிரேட் செய்பவர் களுக்கு மெக்கானிக்கல் டிரேடிங், மொமண்டம் டிரேடிங், ஸ்விங் டிரேடிங் என பல வகையான டிரேடிங் யுக்திகள் உள்ளன. ஆனால், இவை எல்லாம் நீண்ட கால நோக்கில் முதலீடு செய்ய நினைக்கும் முதலீட்டாளர்களுக்கு கொஞ்சம் அதிகப்படியான சமாசாரமே. ஒரு பங்கை சரியாக மதிப்பிடத் தெரிந்தால் போதும்; பங்குச் சந்தையில் நீங்கள் பணத்தைக் குவிப்பது உறுதி. ஆனால், பங்கை எப்படி மதிப்பிடுவது?

இரண்டு வகைகளில் பங்கை மதிப்பிடலாம். ஒன்று, ஃபண்டமென்டல் (Fundamental); மற்றொன்று டெக்னிக்கல். புதிதாக சந்தை யில் நுழைபவர்கள் பலர் டெக்னிக்கல் அனாலிஸிஸை டி.வி-யிலும் பத்திரிகைகளிலும் பார்த்து, சந்தையில் பணத்தைப் போட்டால் நன்றாகச் சம்பாதித்து விடலாம் என்று நினைத்து நுழைகிறார்கள்.  ஓரிரு தடவை பெரிய இழப்புகள் ஏற்படவும், இது ஒரு சூதாட்டம் என்று நினைத்து பங்கு முதலீட்டை விட்டே அடியோடு வெளியேறி விடுகிறார்கள். இன்னும் சிலரோ எவ்வாறு பங்குகளைத் தேர்ந்தெடுப்பது, அல்லது எந்த வழி சிறந்த வழி - டெக்னிக்கலா அல்லது ஃபண்டமெண்டலா என்ற குழப்பத்திலேயே இருக்கிறார்கள். உங்களுக்கு இது மாதிரியான குழப்பம் இருக்கிறது என்றால் இதோ என் கருத்து: ''பங்கு முதலீட்டுக்குச் சிறந்த வழி என்பது ஒரு நிறுவனத்தின் ஃபண்டமெண்டல்ஸைப் பார்த்துச் செய்வதுதான். ஒரு குழந்தையை நாம் எல்.கே.ஜி-யில் படிக்கச் சேர்க்கிறோம். அந்தக் குழந்தை பதினேழு பதினெட்டு ஆண்டுகள் பள்ளி மற்றும் கல்லூரியில் படித்து தேர்ச்சி பெற்ற பிறகுதான் ஒரு நல்ல வேலைக்குப் போகிறது. அதுவரை பெற்றோர்களாகிய நாம் பொறுமையாக இருக்கிறோம். இந்த காலகட்டத்திற்குள் நம் குடும்பத்தில் பலவிதமான கஷ்டங்கள் வந்தாலும், அதை எல்லாம் தாங்கிக் கொண்டு, குழந்தையைப் படிக்க வைக்கிறோம்.
ஆனால், இந்தப் பொறுமை இல்லாமல், குழந்தை பள்ளியில் படிக்கும் போதோ அல்லது கல்லூரியில் படிக்கும் போதோ நிறுத்திவிட்டால், அந்தக் குழந்தைக்கு என்ன வேலை கிடைக்கும் என்பது நமக்கே தெரியும். குழந்தையைப் போன்றது தான் முதலீடும். திடீரென்று வாங்குவது, திடீரென்று விற்பது கூடவே கூடாது. எனவே, டெக்னிக்கலைப் பற்றி நீண்டகால முதலீட்டாளர்கள் கவலைப்பட வேண்டியதில்லை'' என்பதே என் கருத்து.
ஆகவே, ஃபண்டமென்டல் அனாலிசிஸ்-ல் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய வெவ்வேறு விதமான அளவுகோல்களைப் பற்றி இனி விரிவாகக் காண்போம்...
பொருளாதாரம்:
நிறைய பணத்தை ஒரே தடவையில் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு முக்கியமான அளவுகோல் பொருளாதாரத்தின் நாடித்துடிப்புகளாகிய ஜி.டி.பி. வளர்ச்சி, பணவீக்கம், வட்டி விகிதம், வேலையில்லாதோர் எண்ணிக்கை போன்றவை ஆகும். உதாரணமாக, வட்டி விகிதம் உயர்ந்தால் பங்குச் சந்தை இறங்கும். இந்த மாற்றத்தால் நம் லாபம் குறையும் என்று பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் நினைப்பதே இதற்குக் காரணம். ஆனால், இந்தியா போன்ற பெரிய பொருளாதாரங்களில் வட்டி விகிதம் ஏறுவதும் இறங்குவதுமாகவே இருக்கிறது. ஆகவே ஒவ்வொரு தடவையும் வட்டி விகிதம் ஏறி, பங்குச் சந்தை சரிவதை நல்ல வாய்ப்பாக நினைத்து, முதலீடு செய்யலாம்.
அதே போல் பல காரணங் களால் பங்குச் சந்தை 2008-ம் ஆண்டு விழுந்தது. இது போன்ற சந்தர்ப்பங்கள் எப்போதாவது வர வாய்ப்புள்ளது. இது போன்ற சமயங்களில் புதிதாக முதலீடு செய்வதன் மூலம் முதலீட்டாளர்கள் தங்களுக்கு சாதகமான பலனை உருவாக்கிக் கொள்ளலாம். ஆனால் இப்படி முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்கள் அதிகமாக பணம் வைத்திருக்க வேண்டும். 'கேஷ் இஸ் த கிங்' (Cash is the King)  என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். அவ்வாறு வைத்தி ருக்கும் பணத்தையும் நல்ல தரமான டெபாசிட்டுகளில்/ அரசாங்க பத்திரங்களில் வைத்திருக்க வேண்டும்.
வாரன் பஃபட் போன்ற முதலீட்டாளர்களின் வெற்றியின் ரகசியம் இதுதான். சரியான சந்தர்ப்பம் கிடைக்கும்போது உடனே முதலீடு செய்ய ஏதுவாக பணத்தை ரெடியாக வைத்திருப்பார். எல்லோரும் அலறி அடித்துக் கொண்டு விற்கும் போது அவர் மட்டுமே நம்பிக்கையோடு பணத்தை முதலீடு செய்வார். அதன் விளைவுதான், உலகின் நம்பர் 2 பணக்காரர் என்கிற பெருமை.
துறையின் நிகழ்காலம், எதிர்காலம்:
நீங்கள் வாங்க விரும்பும் நிறுவனம் இருக்கும் துறையின் நிகழ்காலம், எதிர்காலம் எவ்வாறு உள்ளது என்பதை அலசி ஆராயுங்கள். அத்துறையின் வளர்ச்சி, பலம், பலவீனம் போன்ற வற்றை அறிந்து கொள்ளுங்கள். அதிவேக வளர்ச்சியுள்ள துறையா அல்லது அதிக கேஷ் ஃபுளோ உள்ள துறையா என்பதைக் கண்டறியுங்கள்.
புதிய பொருளாதார நிறுவனங்கள் ( நம்நாட்டில் எஸ்.கே.எஸ். மைக்ரோ ஃபைனான்ஸ்) அவ்வப்பொழுது திடீரென்று எழுந்து வரும். அத்துறையின் எதிர்காலம் சூரியன் போல பிரகாசிக்கும் என்று கூறுவார்கள். எத்துறையில் அதிக வாய்ப்புக்கள் இருக்கிறதோ, எத்துறையில் அதிக வளர்ச்சி இருக்கிறதோ, எத்துறை புதிய பொருளாதாரமாக உருவெடுக்கிறதோ அத்துறையில் அதிக ரிஸ்க்கும் இருக்கிறது என்பதை மனதில் கொண்டு செயல்படுங்கள்.
வேல்யூ இன்வெஸ்ட்டார்கள் இதுபோன்ற அதிக வளர்ச்சியுள்ள அல்லது புதிய பொருளாதார நிறுவனங்களில் முதலீடு செய்ய அஞ்சுவர். அதே சமயத்தில் சீரான வளர்ச்சியில் உள்ள பழைய பொருளாதார துறைகளைப் பற்றி ஈஸியாக அலசி ஆராய முடியும். ஏனென்றால் அத்துறையைப் பற்றிய புள்ளிவிவரங்கள் எளிதில் கிடைக்கும். தவிர, நம்மால் பழைய அனுபவத்தை வைத்து ஆராயவும் முடியும்.
சில துறைகள் சில சமயங்களில் அதலபாதாளத்தில் அடிபட்டுக் கிடக்கும். எல்லாத் துறைகளும் ஒரே மாதிரியாக வளராது. சில சமயங்களில் மருந்துத்துறை மந்தமாக இருக்கும், இன்னும் சில சமயங்களில் எஃப்.எம்.சி.ஜி. (FMCG -  Fast Moving Consumer Goods)  துறை மந்தமாக இருக்கும். வேறு சில தருணங்களிலோ இன்ப்ஃராஸ்ட்ரக்சர் துறை மந்தமாக இருக்கும். அதுபோன்ற சமயங்களில் அத்துறையில் உள்ள சிறந்த நிறுவனங்களின் பங்குகளை வாங்கிச் சேர்ப்பது நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு நன்மை பயக்கும்.
நீங்கள் முதலீடு செய்யப் போகும் துறையைப் பற்றிய பரிச்சயம் உங்களுக்கு எவ்வளவு உள்ளது என்று பாருங்கள். ஒரு துறையைப் பற்றிய பரிச்சயம் இருக்கும் போது அந்நிறுவனத்தின் பலம்/பலவீனம்/நிதி நிலைமை போன்றவற்றை ஆராய்வது ஈஸியாக இருக்கும். சுருக்கமாகச் சொல்லப் போனால் உங்களுக்குத் தெரிந்த/புரிந்து கொள்ளக்கூடிய துறைகளில் முதலீடு செய்வதே நல்லது.
(படி ஏறுவோம்)

Source - Vikatan Magazine

முதற்படி முதலில் படி! - 14

 

முதற்படி முதலில் படி! - 14

பங்குச்சந்தை ஆத்திச்சூடி..
ஷேர் மார்க்கெட்டில் நுழைய விரும்பும்
புதியவர்களுக்கான வழிகாட்டித் தொடர்!

டந்த மூன்று இதழ்களில் மூன்று விதமான முதலீட்டு யுக்திகள் பற்றி பார்த்தோம்... இந்த இதழில் நான்காவது முதலீட்டு யுக்தியான 'பேஸிவ் இன்வெஸ்ட்டிங்’ பற்றி விளக்கமாகப் பார்ப்போம்...
ஆங்கிலத்தில் 'ஆக்டிவ்’ (active) என்ற சொல்லிற்கு நேர் எதிர்மறைதான் ’பேஸிவ்’ (passive). 'பேஸிவ்’ என்றால் துரிதமான செயல்பாடு இல்லாமல் இருப்பது என்று பொருள். 'ஆக்டிவ்’ முதலீட்டாளர் இன்கம் ஸ்டேட்மென்ட், பேலன்ஸ் ஷீட் என ஒவ்வொரு நிறுவனங்களின் நிதி அறிக்கைகளை ஆராய்ந்து, அந்நிறு வனங்கள் செயல்படும் துறையின் செயல்பாட்டுடன், நாட்டின் பொருளாதாரத்தைப் பற்றியும் அறிந்து, பங்குகளை பொறுக்கி எடுப்பார்.
ஆனால் 'பேஸிவ்’ முதலீட்டா ளர்கள் இதற்கு நேரெதிர். நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றப் பாதையில் செல்கையில், பங்குச் சந்தை மொத்தமாக நன்றாகச் செயல்படும். அவ்வாறு செயல் படும்போது மொத்த பங்குச் சந்தையையே வாங்கினால் அதாவது நிஃப்டி அல்லது சென்செக்ஸ் குறியீடுகளில் முதலீடு செய்வது நல்லது அல்லவா? அதைவிட்டு விட்டு ஏன் சின்னச் சின்ன விஷயங்களைப் பற்றிக் கவலைப்படுவானேன்? 'எஃப்பீஷியன்ட் மார்க்கெட் தியரி’ (efficient market theory), சந்தையைவிட யாராலும் தொடர்ந்து அதிகமாக சம்பாதிக்க முடியாது என்று கூறுகிறது. அதை ஒப்புக் கொள்கிறவர்களுக்கு, இந்த பேஸிவ் இன்வெஸ்ட்டிங் ஓர் அருமையான முதலீட்டு யுக்தியாகும்.
பேஸிவ் முதலீட்டு யுக்தி எவ்வாறு செயல்படுகிறது? பொதுவாக பேஸிவ் இன்வெஸ்ட்டிங் என்று குறிப்பிடுவது இண்டெக்ஸ் ஃபண்டுகள் அல்லது இண் டெக்ஸ் இ.டி.எஃப்-களில் முதலீடு செய்வதைக் குறிக்கும். உதாரணத் திற்கு நிஃப்டி அல்லது சென்செக்ஸ் குறியீடுகளில் முதலீடு செய்வது பேஸிவ் இன்வெஸ்ட்டிங் ஆகும். இதைப் போல் இன்று இந்தியாவில் பலவிதமான குறியீடுகளில் முதலீடு செய்யலாம். இந்தியக் குறியீடுகள் மட்டுமல்லாமல், பல நாடுகளின் குறியீடுகளிலும் முதலீடு செய்வதற் கான வசதிவாய்ப்பு இன்று பெருகிக் கொண்டே வருகிறது.
இவ்விதமாகச் செயல்படும் ஃபண்டுகள் அல்லது இ.டி.எஃப்- கள் ஒரு குறிப்பிட்ட குறியீட்டை அடிப்படையாகக் கொண்டு, அந்தக் குறியீட்டின் கீழ் இருக்கும் அனைத்து பங்குகளிலும் அதே விகிதத்தில் முதலீடு செய்கின்றன. அவ்வாறு செய்யும்போது 'ட்ராக்கிங் எரர்’ (tracking error) ஒரு சிறிய அளவில் ஏற்படும். அந்த இண்டெக்ஸில் ஏதேனும் பங்குகள் மாற்றப்பட்டாலோ அல்லது சதவிகிதம் மாற்றப்பட்டாலோ, அந்த இண்டெக்ஸை டிராக் செய்யும் ஃபண்டுகளும் அதை அப்படியே மாற்றிக் கொள்ளும்.
குறியீடுகளில் முதலீடு செய்வதைத்தான் பெரும்பாலான பேஸிவ் இன்வெஸ்ட்டார்கள் செய்து வருகிறார்கள். ஆனால், இன்னும் சிலர் தாங்கள் ஒருமுறை பொறுக்கி எடுத்த பங்குகளை வாங்கி வைத்துவிட்டு மறந்துவிடு வார்கள் - அதை ஒரு சொத்தைப் போல நினைத்து! நீண்ட காலத்தில் எப்படியும் அந்தப் பங்குகள் லாபத்தைத் தந்துவிடும் என அவர்கள் உறுதியாக நினைப்பதே அதற்கு காரணம். அந்த அடிப்படையில் இதுவரை இந்தியாவில் நல்ல பங்குகளை வாங்கியவர்கள் யாரும் ஏமாந்து போகவில்லை! நல்ல லாபத்தையே அடைந்துள்ளார்கள். இதுவும் ஒரு பேஸிவ் இன்வெஸ்ட்டிங் முறைதான்!
வேறு சிலரோ சில குறிப்பிட்ட பங்குகளை ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் (எஸ்.ஐ.பி. போல) தொடர்ந்து வாங்கிக் கொண்டே இருப்பார்கள். சந்தையில் அந்தப் பங்கின் விலை ஏறியிறங்கிக் கொண்டிருப்பது பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். இவர்களும் ஒருவகையில் பேஸிவ் இன்வெஸ்ட்டார்களே!
வாரன் பஃபட் போன்றோர்கள் பங்குச் சந்தை பற்றி அதிகம் தெரியாதவர்களுக்கு இண்டெக்ஸ் ஃபண்ட் போன்ற பேஸிவ் இன்வெஸ்ட்டிங் முறையே மிகவும் சிறந்தது என்று கூறுகிறார்கள்.
பேஸிவ் இன்வெஸ்ட்டிங்கை பலரும் விரும்புவதன் நோக்கம் என்ன?

பேஸிவ் முதலீட்டில் பெரிய பிளஸ் பாயிண்ட் குறைந்த ஃபண்ட் செலவாகும். இந்தியாவில் ஆக்டிவ்வாக மேனேஜ் செய்யப் படும் பல ஃபண்டுகளின் 'எக்ஸ்பன்ஸ் ரேஷியோ’ அதிக பட்சமாக ஆண்டிற்கு 2.25% ஆகும். அதே சமயத்தில் பல இண்டெக்ஸ் ஃபண்டுகள் மற்றும் இ.டி.எஃப்-களின் 'எக்ஸ்பன்ஸ் ரேஷியோ’ அதிகபட்சமாக 1% ஆகும். இந்த 'எக்ஸ்பன்ஸ் ரேஷியோ’வில் மீதமாகும் தொகையே நீண்டகால அடிப்படையில் முதலீட்டாளர் களுக்கு லாபத்தை அள்ளித் தரும். ஒரு இண்டெக்ஸை வாங்குவதால் நல்ல டைவர்ஸிபிகேஷன் கிடைக் கும். அதற்கு மேல் டென்ஷனும் குறையும். சந்தை ஏறினாலும், இறங்கினாலும் உங்களது முதலீடும் அதே அளவில் ஏற்ற இறக்கத்தைக் காணும். மேலும், பேஸிவ் முதலீட்டாளர் கள் பெரும்பாலும் நீண்டகால முதலீட்டாளர்களே. ஆகவே மூலதன ஆதாய வரி எதுவும் கட்ட வேண்டியதில்லை. குறுகிய கால முதலீட்டாளர்கள் இந்தியாவில் கேப்பிட்டல் கெயின்ஸ் டாக்ஸாக லாபத்தில் 15% செலுத்த வேண்டும். ஆகவே அதுவும் ஒரு பெரிய மிச்சம். இதைவிடவெல்லாம் பெரிய மிச்சம் குறைந்த புரோக் கரேஜ் செலுத்துவது! பேஸிவ் இன்வெஸ்ட்டார் என்பதால் அடிக்கடி வாங்கி விற்க மாட்டீர்கள் அல்லவா? பேஸிவ் இன்வெஸ்ட்டிங்கில் ஃபண்ட் மேனேஜரின் திறமையைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை.
பேஸிவ் இன்வெஸ்ட்டிங்கில் தீமை ஏதும் உள்ளதா?
இண்டெக்ஸில் இடம் பெற்றிருக் கும் ஓரிரு துறைகளோ அல்லது ஓரிரு பங்குகளோ உங்களுக்குப் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால், இண்டெக்ஸை மொத்தமாக வாங்குவதால், நீங்கள் அவற்றையும் சேர்த்தே வாங்க வேண்டும்! தவிர, இந்திய சந்தை இன்னும் முழுத் திறனோடு செயல்படத் தொடங்கவில்லை. எனவே, ஆக்டிவ்-ஆகச் செயல்படும் ஃபண்டுகளும் முதலீட்டாளர்களும் பேஸிவ் முதலீட்டாளர்களைவிட நன்றாகவே சம்பாதித்துள்ளனர். ஆனால், அவர்கள் அடைந்த லாபமும் இண்டெக்ஸ் ரிட்டர்னுக் கும் குறைவாகவே இருக்கிறது என்பது உண்மை.
அமெரிக்காவில் செயல்படும் சில மிகப் பெரிய மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்/இ.டி.எஃப்-கள் பேஸிவ் இன்வெஸ்ட்டிங் முறையில் தான் செயல்படுகின்றன. இந்த பேஸிவ் இன்வெஸ்ட்டிங்கின் மார்க்கெட் சைஸ் அமெரிக்காவில் மட்டும் பல நூறு பில்லியன் டாலர்கள். உலக அளவில்
எஸ் அண்டு பி-ஐ அடிப்படையாகக் கொண்ட ஸ்பைடர்ஸ் (SPDRs - Spiders), எம்.எஸ்.சி.ஐ. குறியீட்டை அடிப்படையாகக் கொண்ட ஐஷேர்ஸ் (iShares), நாஸ்டாக்-100-ஐ அடிப்படையாகக் கொண்ட QQQQ, ஹேங் சேங் குறியீட்டை அடிப்படையாகக் கொண்ட ட்ரேக்ஸ் (TRAHK - Tracks) போன்றவை பேஸிவ் இன்வெஸ்ட்டிங் முறையில் பிரசித்தம்.
சரி, எனக்கு எது சரிப்பட்டு வரும்? ஆக்டிவ்வா? அல்லது பேஸிவா? என்கிறீர்களா?
பேஸிவ் இன்வெஸ்ட்டிங் எதை அடிப்படையாகக் கொண்டு உள்ளதோ (உதாரணத்திற்கு நிஃப்டி 50 பங்கு குறியீட்டை அடிப்படையாகக் கொண்டுள்ள இ.டி.எஃப்.) அந்தப் பொருள் ஏறும் அளவிற்கு, எனக்குக் கிடைக்கும் வருமானமும் இருந்தால் போதுமானது - கூடவோ குறையவோ வேண்டாம் என்று நினப்பவர்கள், நேரம் அதிகமில்லாதவர்கள், பங்குச் சந்தை குறித்து அதிகம் தெரியாதவர்கள், அலுத்துக் கொள்ளாமல் முதலீடு செய்பவர்கள், சந்தையில் உடனே நுழைய வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளவர்களுக்கு பேஸிவ் இன்வெஸ்ட்டிங் சிறந்ததாகும்.
அதிக நேரத்தைச் செலவிட முடிந்தவர்கள், பங்குச் சந்தை  விஷயங்களை நன்கு அறிந்தவர்கள், என்னால் சந்தையின் வருமானத் தைவிட அதிகமாகச் சம்பாதிக்க முடியும் என நினைப்பவர்கள், ரிஸ்க் எடுக்கத் தயாராக உள்ள வர்கள்  ஆக்டிவ் இன்வெஸ்டிங் வகையினர்.
(படி ஏறுவோம்)

Source - Vikatan Magazine

முதற்படி முதலில் படி! - 13

முதற்படி முதலில் படி! - 13

பங்குச்சந்தை ஆத்திச்சூடி..

நீங்க 'மாத்தியோசி' ரகமா?
'கான்ட்ரா'வுல கலக்கலாம் வாங்க!

சென்ற வாரம் குரோத் இன்வெஸ்ட்டிங் பற்றி பார்த்தோம்... இந்த வாரம் கான்ட்ரா இன்வெஸ்ட்டிங் பற்றி அறிந்து கொள்வோம்...
நீங்கள் கடலிலோ, ஆற்றிலோ எதிர்நீச்சல் போட்டிருக்கிறீர்களா? எல்லோரும் படிக்கும் படிப்பை விட்டுவிட்டு மிகவும் அதிக மக்கள் படித்திராத படிப்பைப் படித்து அதில் வெற்றி கண்டவரா? பொதுவாக அனைவரும் செய்யும் தொழிலையும், வேலையையும் போல் அல்லாமல், நீங்கள் மாற்றுத் துறையில் சென்று ஜெயித்தவரா? இவற்றிற்கெல்லாம் பதில் ஆம் என்றால், உங்களுக்கு கான்ட்ரா முதலீட்டு முறை கனகச்சிதமாகப் பொருந்தும்.
கான்ட்ரா முதலீட்டு முறை என்றால் என்ன?

சுருக்கமாகச் சொன்னால், பெருவாரியான மக்கள் யோசிப் பதற்கு எதிர்மறையாக யோசித்து அதன் மூலம் லாபம் ஈட்டுவதுதான் கான்ட்ரா முதலீடு. ஒரு பங்கோ அல்லது துறையோ, அனைவரும் விற்றுவிட்டுச் செல்லும்போது அந்தத் துறை யின் / பங்கின் மதிப்பு வெகுவாகக் குறைந்து காணப்படும். ஒரு சிறிய உதாரணம்: நவம்பர் 2008-ல் டாடா மோட்டார்ஸ் பங்கின் விலை சில காரணங்களினால் 125-க்குச் சென்றது. அப்பங்கின் தற்போதைய விலை 1,205.55 (பிப்ரவரி 18, 2011).
அந்த நேரத்தில் கொஞ்சம் மாற்றி யோசித்து, இந்தப் பங்கை துணிந்து வாங்கி கான்ட்ரா இன்வெஸ்ட்டிங் செய்திருந்தால், இன்று கொள்ளை லாபம் பார்த்திருக்கலாம். இது போன்ற எத்தனையோ உதாரணங்களை கான்ட்ரா இன்வெஸ்ட்டிங்கிற்கு சொல்ல முடியும்.
ஏதோ ஒரு காரணத் திற்காக முழுச் சந்தையே அடிபட்டிருக்கலாம் அல்லது தற்போது டெலிகாம் அல்லது இன்ஃப்ராஸ்ட்ரக்சர் துறையில் நிகழ்வது போல ஓரிரு துறைகள் அடிபடலாம். அல்லது டாடா மோட்டார்ஸ் போல ஏதாவது ஒரு பங்கு அடிபட்டிருக்கலாம். அது போன்ற சமயங்களை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்பவர்கள்தான் கான்ட்ரா முதலீட்டாளர்கள். சில பெரிய முதலீட்டாளர்கள் ஒரு பங்கின் அல்லது துறையின் மீது இருக்கும் வெறுப்பினால், அப்பங்கினை அல்லது அந்தத் துறையில் இருக்கும் அனைத்துப் பங்குகளையும் விற்று விட்டுச் செல்வர்.
பங்குகளின் மதிப்பின் ஒரு பகுதி சப்ளை அண்ட் டிமாண்டை வைத்து முடிவு செய்யப்படுகிறது. சப்ளை அதிகமாகும் அதுபோன்ற சமயங்களில் என்ன நடக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை - தக்காளி அதிகமாக விளையும் பொழுது கர்நாடகாவில் ரோட்டில் போட்டு அழிக்கும் கதைதான் நமது பங்குச் சந்தையிலும் நடக்கும்! அப்போது நமது பெரிய தந்தைகள் எல்.ஐ.சி. மற்றும் வாரன் பஃபட் (இந்தியச் சந்தையில் அவர் இன்னும் முதலீடு செய்ய ஆரம்பிக்கவில்லை. மார்ச் மாதத்தில் முதல் முறையாக பெங்களூருக்கு வருகிறார் பஃபட்.) போன்றவர்கள் வாங்க ஆரம்பிப்பார்கள். நீங்களும் ஏன் அவர்களைப் போன்று இருக்கக்கூடாது?
கான்ட்ரா முதலீட்டு முறையில் உள்ள நன்மைகள் என்ன? எல்லோரும் ஆட்டுமந்தைக் கூட்டத்தைப் போல செல்லும் திசையில் செல்லாமல், மாற்றுத் திசையில் செல்வதால் மலிவான விலையில் பங்குகளை வாங்கலாம். ஏற்கெனவே அடிபட்டுள்ள பங்குகளை வாங்குவதால், மேலும் கீழே செல்வதற்கான வாய்ப்புக் குறைவு. ஆட்டுமந்தைக் கூட்டம் திசை திரும்பும் போது, ஓஹோவென லாபம் கிடைக்குமே! பிறகென்ன, ஆட்டுமந்தைகளின் திசையிலிருந்து நீங்களும் மாறிவிடுங்கள். நீண்ட நாட்களுக்கு, சொத்தைப் போல் பங்குகளை வாங்கி வைத்து தங்களது செல்வத்தை வளர்க்க விரும்புகிறவர்களுக்கு இதைவிட அரிய சந்தர்ப்பம் வேறு ஏதும் கிடைக்காது!
கான்ட்ரா முதலீட்டு முறையில் உள்ள நல்ல விஷயங்களைச் சொல்லிவிட்டேன். ஆனால், அதில் சில அசௌகரியங்களும் இருக்கிறது. அவை என்ன?
எல்லோரும் செல்லும் திசையி லிருந்து நாம் மாறுபட்டுச் செல்வதால், துணைக்கு ஆளில்லாமல், நடுக்காட்டில் தன்னந் தனியாக நடந்து செல்வதுபோல் இருக்கும். இம்முதலீட்டு முறை ஒருவரின் பொறுமையை மிகவும் சோதிக்கும். நீங்கள் வாங்க வாங்க, பங்கின் விலை இறங்கிக் கொண்டே செல்லும். புதிதாக இந்த முறையை பின்பற்ற ஆரம்பித்தவர்களுக்கு, ஆழம் தெரியாமல் காலை விட்டு விட்டோமோ என்று தோன்றும். சில துறைகளின் / பங்குகளின் விலை ஏறுவதற்கு நாம் நினைத்ததைவிட காலம் அதிகமாகலாம். சந்தை ஏறிக் கொண்டிருக்கும்போது  நமது போர்ட்ஃபோலியோ மட்டும் ஆட்டுக்கல் போல நகராமல் அதே இடத்திலேயே இருக்கும்.
இந்த அசௌகரியங்களை எப்படிச் சமாளிக்கலாம்? எந்த ஒரு புது அணுகுமுறையையும் போல ஆரம்ப காலங்களில் இது சற்றுக் கடினமாகத்தான் இருக்கும். பொறுத்திருந்து ஓரிரு முதலீடுகளில் நல்ல லாபம் கண்டவுடன், தன்னம்பிக்கை தானாகவே வந்துவிடும். முதலீட்டிற்கு உகந்த பங்கின் விலை ஏதோ ஒரு காரணத்தினால் குறைய ஆரம்பிக்கின்றது என்று வைத்துக் கொள்வோம். உங்களுக்கும் அந்தப் பங்கை வாங்குவதில் ஆசை இருக்கின்றது. அதுபோன்ற சமயத்தில் ஒரு மிகச் சிறிய அளவை வாங்கிக் கொள்ளுங்கள். பிறகு அந்தப் பங்கின் விலை ஏறுவதும் இறங்குவதுமாக, சறுக்கு விளையாட்டுப் போல், இருக்கும். பட்ட இடத்திலேயே படும் என்பது போல, மற்றுமொரு நிகழ்வு வந்து அந்தப் பங்கின் விலை மேலும் வீழ்ச்சி காணும். அப்போது மேலும் அந்தப் பங்குகளை வாங்குங்கள். இதுபோல் வாங்குவதற்கு இரண்டு/மூன்று முறை வாய்ப்புகள் கதவைத் தட்டும். அதை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
அவ்வாறு வாங்கிய பங்குகளின் சராசரி விலை, நீங்கள் கடைசியாக வாங்கிய விலையைவிட அதிகமாகத்தான் இருக்கும். அதற்காக கவலைப்படாதீர்கள். ஒரு பங்கு உச்சபட்சமாக அல்லது குறைந்தபட்சமாக எவ்வளவு செல்லும் என்று அந்நிறுவனத்தை நிறுவியவருக்கே தெரியாது. ஆகவே நீங்களும் அவரும் ஒரே படகில்தான் பயணம் செய்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்!
நீங்கள் கவனமாக இருக்க வேண்டிய நேரம் - பங்கு விலை நீங்கள் வாங்கிய சராசரி விலைக் கெல்லாம் கீழ் அதலபாதாளத்திற்குச் சென்று விட்டு 'யூ' டர்ன் அடிக்கும் பொழுதுதான். சிறிது லாபம் வந்துவிட்டதே என்று விற்றுவிட்டு வெளியேறி விடாதீர்கள். ஒரு நல்ல கணிசமான லாபத்தைக் கண்ட பிறகே வெளியேறுங்கள்! அதுவே நீங்கள் நீண்ட கால முதலீட்டாளர் என்றால், அப்பங்கினை உங்களது வீட்டைப் போல் எக்காலத்திற்கும் வைத்துக் கொள்ளுங்கள்! நீங்கள் புதிய முதலீட்டாளர் என்றால் நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் பங்குகளுக்குள் கான்ட்ரா தேடலை வைத்துக் கொள்ளுங்கள்.
ரிவார்டை சொல்லியாச்சு. இனி இந்த முறையில் உள்ள ரிஸ்க் என்ன தெரியுமா?
எந்த ஒரு முதலீட்டு முறையையும் போல இந்த முதலீட்டு முறையிலும் ரிஸ்க் உள்ளது. நீங்கள் வாங்கிய பங்கு இறங்கிக் கொண்டே சென்று கடலில் மூழ்கி விடலாம். இந்தியா போன்ற வளரும் பொருளாதாரங்களில் பெரிய நிறுவனங்களுக்கு அது போன்ற மூழ்கும் ரிஸ்க் மிகக் குறைவு என்றாலும், எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது! இது போன்ற பிரச்னைகளில் இருந்து உங்களைப் பாதுகாத்து கொள்வதற்கு, ஒரு பங்கின் கனம் உங்கள் போர்ட்ஃபோலியோவில் 5%-ற்க்கு அதிகமாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஒரு பங்கு நன்றாக அடிபடுவதற்கு முன்பே நுழைந்துவிடுவதற்கான வாய்ப்பு உள்ளது. எல்லோரும் லாபத்தை பார்த்துக் கொண்டிருக்கும் போது, கான்ட்ரா முதலீட்டாளர் லாபம் காணாமல் போகக்கூடிய வாய்ப்பும் உண்டு.
கான்ட்ரா முதலீட்டாளர்கள் பயன்படுத்தும் கருவிகள் ஏதாவது உண்டா?
வேல்யூ முதலீட்டாளர்களைப் (Value Investors) போல, இவர்களும் குறைந்த பி/இ, குறைந்த புத்தக மதிப்பு போன்ற பங்குகளைத் தேடிப்பிடிப்பர். அதற்குமேல் மார்க்கெட் சென்டிமென்ட்டை (எல்லோரும் விற்கக் கூறும் பொழுது வாங்குவதும், பிறகு நேர்மாறாகச் செயல்படுவதும்) பார்த்தும் முதலீடு செய்வர். இவற்றிற்கெல்லாம் மேலாக சந்தை ஏற்ற இறக்கத்தைக் கணக்கிடக்கூடிய விக்ஸ் குறியீட்டையும் (India VIX – India Volatility Index) பார்த்து முதலீடு செய்வர்.
விக்ஸ் குறியீடு ஏற்ற இறக் கத்தை குறிப்பதால் சந்தை மிக வேகமாக இறங்கினாலோ அல்லது ஏறினாலோ இதன் அளவு அதிகரிக்கும். வாங்க விற்க நினைப்பவர்கள் குறியீட்டை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனாலும் விக்ஸ் என்ற ஒரு குறியீட்டை மட்டுமே வைத்து முதலீட்டை முடிவு செய்துவிட முடியாது. அதையும் ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
(படி ஏறுவோம்)

Source - Vikatan Magazine

முதற்படி முதலில் படி! - 12

முதற்படி முதலில் படி! - 12

பங்குச்சந்தை ஆத்திச்சூடி..
ஷேர் மார்க்கெட்டில் நுழைய விரும்பும் புதியவர்களுக்கான வழிகாட்டித் தொடர்!
சென்ற இதழில் வேல்யூ இன்வெஸ்ட்டிங் யுக்தி பற்றி விளக்கமாகப் பார்த்தோம்... இம்முறை குரோத் இன்வெஸ்டிட்ங் யுக்தி பற்றி விளக்கமாகப் பார்ப்போம். ஆங்கிலத்தில் குரோத் என்றால் வளர்ச்சி. வளர்ச்சியை விரும்பாதவர் உலகில் யாராவது இருப்பார்களா? ஆனால் வளர்ச்சி இருக்கும் இடத்தில்தான் அதிக ரிஸ்க்கும் இருக்கும் என்பதை நாம் மறக்கக்கூடாது.
நீங்கள் உங்கள் பெண்ணுக்கு ஒரு நல்ல வரனைத் தேடுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த மாப்பிள்ளையின் குடும்ப நிதி நிலைமை சுமாராக உள்ளது. ஆனால் அந்த மாப்பிள்ளையோ ஒரு நல்ல துடிப்புள்ள இளைஞனாக இருக்கிறார். வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற ஆர்வம் அவரிடம் அதிகமாகவே இருக்கிறது. தன் சொந்தக்காலில் நிற்க ஆசைப்படுகிறார். எல்லா அறிகுறிகளையும் பார்க்கும்போது, அந்த இளைஞர் எதிர்காலத்தில் நல்ல வளர்ச்சியைக் காண்பார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். உங்களது பெண்ணிற்கும் அவரைப் பிடித்துப் போய்விட்டது. திருமணம் முடிகிறது. நம்பிக்கை பொய்க்காமல் வெற்றிகரமான தம்பதிகளாக வாழ்ந்து காட்டுகிறார்கள் அவர்கள். இதுபோல் எத்தனையோ கதையைக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளில் வளர்ச்சிப் பங்கு களுக்கு உதாரணங்களைச் சொல்ல வேண்டுமென்றால், இன்ஃபோசிஸ், விப்ரோ, சிப்லா, பி.ஹெச்.இ.எல், எல் அண்ட் டி என பல நிறுவனங்களைச் சொல்லலாம். இன்றும் இந்தியப் பொருளாதாரம் அதிவேகமாக வளர்ந்து வருவதால், இன்று ஓரளவுக்கு சிறிதாக இருக்கும் நிறுவனங்கள் எதிர்காலத்தில் வளர்ச்சிப் பங்குகளாக மாறி, பெரும் நிறுவனங்களாக வளர்ந்தி ருக்கும். ஒரு புதிய முதலீட்டாளர் ஒவ்வொரு சிறிய நிறுவனப் பங்கைப் பார்க்கும் போதும், இந்த நிறுவனம் நாளைக்கு இன்ஃபோசிஸ் போன்ற ஒரு பெரிய நிறுவனமாக வளர்ந்துவிடும் என்று நினைத்துவிடுவார். எல்லா நிறுவனங்களும் இன்ஃபோசிஸ் போல் வளர்ந்துவிடாது. ஆகவே குரோத் நிறுவனப் பங்குகளைப் பொறுக்குவதில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்!
அதிவேகமாக வளர்ந்து வரும் நிறுவனங்களுக்கு திடீரென்று எதிர்பாராத பிரச்னைகளும் வரும். அப்படி வரும்போது அதைச் சமாளித்து அதிலிருந்து மீண்டு வரக்கூடிய நிர்வாகத் திறன் கொண்ட நிறுவனமாக அது இருக்க வேண்டும். வேல்யூ நிறுவனங்களைவிட குரோத் நிறுவனங்களில் முதலீடு செய்வதில் ரிஸ்க் அதிகம்; ரிவார்டும் அதிகம்!
சரி, குரோத் நிறுவனப் பங்குகளைத் தேர்ந்தெடுக்கும் விதம் என்ன? கீழ்கண்ட சில வரைமுறைகளை அடிப்படையாக வைத்துப் பார்த்தால் எவை குரோத் பங்குகள் என்பது உங்களுக்குத் தெளிவாகவே புரியும்.
1. கடந்த 5/ 10/ 15 வருடங்களில் டேர்ன் ஓவர், நிகர லாபம், இ.பி.எஸ். போன்ற அளவுகோல்களில் நல்ல வளர்ச்சியைக் கண்டிருக்க வேண்டும் ( உதாரணத்துக்கு 20%-க்கு மேல்!). அதன் துறை சார்ந்த நிறுவனங்களைவிட அதிகமாக வளர்ந்திருக்க வேண்டும் (குறைந்தது 10 சதவிகிதத்துக்கும் அதிகமாக)
2. கடந்த காலத்தில் மட்டுமல்ல, அடுத்த 5/ 10/ 15 வருடங்களில் அந்நிறுவனத்தின் டேர்ன் ஓவர், நிகர லாபம், இ.பி.எஸ். போன்றவற்றின் வளர்ச்சியும் அதிகமாவதற்கான வாய்ப்பு உள்ளதா என்று ஆய்வு செய்ய வேண்டும். அந்நிறுவனம் சார்ந்த துறைக்கு வளர்ச்சி வாய்ப்பு, போட்டிகள் மற்றும் நேர்மையான நிர்வாகம் ஆகியவை உள்ளனவா என்று அனலைஸ் செய்ய வேண்டும்.
3.செலவுகள் கட்டுக்குள் உள்ளனவா/ இனி வரும் காலங்களிலும் அது கட்டுக்குள் இருக்குமா என்று பார்க்க வேண்டும்.
4. திறமையான நிர்வாகத்தைக் கொண்டுள்ளதா, குறுக்கு வழியில் செல்லாத புரமோட்டர்களைக் கொண்டுள்ளதா என்று பார்க்க வேண்டும்
5. அடுத்த 3 அல்லது 4 ஆண்டுகளில் பங்கின் விலை இரட்டிப்பு ஆகுமா என்பதையும் அலச வேண்டும்.
6. ஆர்.ஓ.இ. (ROE – Return On Equity) வளர்ந்து கொண்டே இருக்கிறதா? (ஆர்.ஓ.இ = நிகர லாபம்/ பங்குதாரர்களின் முதலீடு)
சரி, குரோத் நிறுவனங்களின் குணாதிசயங்கள் என்னென்ன?
இவைகள் வேல்யூ பங்குகளுக்கு நேர் எதிர்மாறாக இருக்கும். உதாரணத்துக்கு, அதிக பி/இ,
பி/பிவி கொண்டவையாக இருக்கும். வரும் லாபம் அனைத்தையும் இந்நிறுவனங்கள் திரும்ப தனது தொழில் வளர்ச்சிக்காக முதலீடு செய்து விடுவதால், டிவிடெண்ட் பெரும் பாலும் மிகமிகக் குறைவாக இருக்கும். இந்நிறுவனங்கள் ஐ.டி., பயோடெக்னாலஜி போன்ற புதிய பொருளாதாரத்தைச் சார்ந்த நிறுவனங்களாக இருக்கும் அல்லது, அதிவேகமாக வளர்ந்து வரும் பகுதிகளில்/நாடுகளில்/துறைகளில் இடம் பெற்றிருக்கும். அந்நிறுவனங்களின் அதீத வளர்ச் சியால், நிகர லாபம் அதிகரித்துக் கொண்டே செல்லும். அதனால் அதன் பங்கு விலையும் உயர்ந்து கொண்டே செல்லும். இது போன்ற நிறுவனங் களில் முதலீடு செய்பவர்கள் பெரும்பாலும் முதலீட்டைப் பெருக்கும் (Capital Appreciation) நோக்கத்துடனேயே முதலீடு செய்வர்.
தாமஸ் ரோவ் பிரைஸ் ஜூனியர் (Thomas Rowe Price Jr.) என்பவரை குரோத் இன் வெஸ்ட்டிங் யுக்தியின் குரு என்று கூறலாம். 1937-ல் டி. ரோவ் பிரைஸ் அசோஸியேட்ஸ் என்ற பெயரில் தனது நிறுவனத்தை ஆரம்பித்தார். இவர் வாங்கிய பங்குகளை 'ரோவ் பிரைஸ் பங்குகள்’ என்று சந்தை கூறிய காலம் உண்டு. திறமையான நிர்வாகம் கொண்ட, வளமான துறைகளில் உள்ள, அதிக டிவிடெண்ட் மற்றும் வருமானம் கொடுக்கக்கூடிய, பணவீக்கத்தைவிட,  நாட்டின் பொருளாதாரத்தைவிட அதிக மான வளர்ச்சியைக் காணக்கூடிய நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்தார்.
மேலும், வளர்ச்சியுள்ள நிறுவனங்களை அவர் தேடிய போது சில குணாதிசயங்களைக் கண்டறிந்தார். சிறந்த ஆராய்ச்சி வசதி, குறைந்த போட்டி, மிகக் குறைந்த அரசாங்க கட்டுப்பாடு, குறைந்த மொத்த ஊழியர் சம்பளம் (அதே சமயத்தில் நல்ல சம்பளம் பெறக்கூடிய ஊழியர்கள்), குறைந்தது 10 சதவிகிதம் போட்ட முதலுக்கு வருமானம், உயர்ந்த லாப விகிதம், அதிக இ.பி.எஸ். வளர்ச்சி போன்றவை ஆகும்.
வாரன் பஃபட் போன்றோர் வேல்யூ மற்றும் குரோத் இன்வெஸ்ட்டிங் ஆகிய இரண்டுக் கும் பெரிய வித்தியாசம் இல்லை என்று கூறுகின்றனர். அவரைப் பொறுத்தவரை 'வேல்யூ ஒரு கால் என்றால் குரோத் இன்வெஸ்ட்டிங் இன்னொரு கால். இந்த இரண்டு கால்களும் இடுப்பில்தான் சேர்கின்றன'  என்கிறார்.
பீட்டர் லிஞ்ச் (Peter Lynch) என்பவர் மற்றுமொரு பிரசித்தி பெற்ற அமெரிக்க முதலீட்டாளர். இவர் ஃபிடலிட்டி இன்வெஸ்ட் மென்ட்ஸில் வெற்றிகரமான ஃபண்ட் மேனேஜராக நீண்ட நாட்கள் இருந்தார். இவர் எழுதிய பல புத்தகங்கள் (One Up On Wall Street, Beating the Street, and Learn to Earn) மிகவும் பிரசித்தம். இவர் வேல்யூ மற்றும் குரோத் ஆகிய இரு இன்வெஸ்ட்மென்ட் யுக்திகளையும் சேர்த்து 'கார்ப்’ (GARP – Growth At Reasonable Price) என்ற யுக்தியைப் பாப்புலராக்கினார்.
இவ்வகையான முதலீட்டா ளர்கள் சந்தையைவிட அதிக வளர்ச்சியுள்ள (குரோத் இன் வெஸ்ட்டிங்) அதே சமயம் குறைவான மதிப்புடைய (வேல்யூ இன்வெஸ்ட்டிங்) பங்குகளை நாடிச் செல்வர். இவ்வாறு தேடும்போது இரு வகையான முத லீட்டின் கோடிக்குச் செல்லாமல், குரோத் உள்ள அதே சமயம் குறைந்த பி/இ உள்ள பங்குகளை நாடிச் செல்வர்.
இவ்வகையான முதலீட்டை தேடுவதற்கு பல வகையான அளவு கோல்கள் இருந்த போதிலும், 'பெக்’[PEG – Price/ Earings to (EPS) Growth] விகிதம் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ஒன்றுக்கு குறைவாக இருந்தால் நல்ல முதலீடு என்று கருதப் படுகிறது. உதாரணத்துக்கு நீங்கள் தேர்வு செய்த பங்கின் பி/இ ஐந்து என வைத்துக் கொள்வோம். அந்நிறுவனத்தின் கடந்த ஐந்து ஆண்டு கால இ.பி.எஸ். வளர்ச்சி ஆண்டுக்கு 10% எனக் கொண்டால், அதன் 'பெக்’ விகிதம் (5/10 = 0.5) 0.5 ஆகும். இந்த உதாரணத் தில் 'பெக்’ விகிதம் ஒன்றிற்கு குறைவாக இருப்பதால், இதை ஒரு நல்ல முதலீட்டு வாய்ப்பாகக் கருதலாம்.
அடுத்து வாரத்தில் கான்ட்ரா மற்றும் பேஸிவ் இன்வெஸ்ட்டிங் முதலீட்டு முறை பற்றிக் காண்போம்.
(படி ஏறுவோம்)

Source - Vikatan Magazine

முதற்படி முதலில் படி! - 11

பங்குச்சந்தை ஆத்திச்சூடி..
ஷேர் மார்க்கெட்டில் நுழைய விரும்பும் புதியவர்களுக்கான வழிகாட்டித் தொடர்!
சென்ற இதழில் பங்குகளின் மதிப்பைக் கணக்கிட உதவும் சில அளவுகோல்களைப் பற்றி கண்டறிந்தோம். சில முதலீட்டு யுக்திகள் பற்றியும் கண்டோம். அவ்விதமான முதலீட்டு யுக்திகளைப் பற்றி இன்னும் சற்று விரிவாகக் காண்போம்...
வேல்யூ இன்வெஸ்ட்டிங்: சீசனில் ஒரு கிலோ தக்காளி 3 ரூபாய்க்கு விற்பனையாகிறது. நீங்கள் தக்காளியைப் பயிர் செய்தால், அதன் அடக்க விலை ஒரு கிலோவிற்கு 7 ரூபாயாகும். ஆக உற்பத்தி விலையைவிட கிலோவிற்கு 4 ரூபாய் குறைவாகக் கிடைக்கிறது.
ஓர் ஆண்டுக்கு உங்களுக்கு 5 கிலோ தக்காளி சாஸ் தேவை. இதைத் தயாரிக்க, 20 கிலோ தக்காளி தேவைப்படுகிறது. இப்போது நீங்கள் கணக்குப் போடுகிறீர்கள் - விலை குறைவாக இருக்கும் இந்த நேரத்தில் நான் ஏன் அந்த 20 கிலோ தக்காளியையும் வாங்கக்கூடாது? வெறும் 60 ரூபாயில் எனக்கு 5 கிலோ சாஸிற்குத் தேவையான தக்காளி கிடைத்துவிடுகிறதே! இப்படி யோசிப்பதுதான், வேல்யூ இன்வெஸ்ட்டிங்!

50 லட்ச ரூபாய் முதலீட்டில் நீங்கள் ஒரு தொழில் தொடங்க நினைக்கிறீர்கள். ஆனால் அதே தொழில், அதே சைஸில், நீங்கள் எதிர்பார்க்கும் அதே லாபத்தில், 35 லட்ச ரூபாய் முதலீட்டிலேயே கிடைக்கிறது என்றால் வாங்குவீர்களா, இல்லையா? அதுதான் வேல்யூ இன்வெஸ்ட்டிங்! பங்குகளும் சில சமயங்களில் தங்கள் மதிப்பைவிட குறைவான விலையில் கிடைக்கவே செய்யும். ஆனால், இது மாதிரியான பங்குகளை எப்படிக் கண்டுபிடிப்பது? சொல்கிறேன். வேல்யூ பங்குகளுக்கு பி/இ, பி/பிவி போன்ற பல அளவுகோல்கள் குறைவாக இருக்கும். 'டிவிடெண்ட் யீல்ட்’ அதிகமாக இருக்கும். இந்த நிறுவனங்களில் வளர்ச்சியின் வேகம் அவ்வளவாக இருக்காது. ஆமை போல 'ஸ்லோ அண்ட் ஸ்டெடி’யாகச் செல்லும். வேகமாகச் செயல்பட முயலும் பல முதலீட்டாளர்களுக்கு இப்பங்குகளைப் பிடிக்காது.
இந்த முதலீட்டு முறையை உலகுக்கு எடுத்துச் சொன்னவர் பெஞ்சமின் கிரஹாம் மற்றும் டேவிட் டாட் (David Dodd) என்கிற இரு பெரும் நிபுணர்கள். இவர்கள் அமெரிக்காவில் உள்ள கொலம்பியா பிஸினஸ் ஸ்கூலில் 20-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் பேராசிரியர்களாக வேலை செய்தார்கள். இந்த இருவரும் இணைந்து 1934-ல் எழுதிய 'செக்யூரிட்டி அனாலிஸிஸ்' என்ற புத்தகம் மிகவும் பிரசித்தமானது.
இக்கால வேல்யூ இன்வெஸ்ட் டார் நாம் அனைவரும் அறிந்த வாரன் பஃபட் ஆவார். வாரன் பஃபட்டும் கிரஹாமின் சீடர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜான் டெம் பிள்டன், ஜோயல் கிரீன்ப்ளாட் (Joel Greenblatt)  போன்றோரும் வேல்யூ இன்வெஸ்ட்டிங்கில் சிறந்து விளங்கினர். வேல்யூ இன்வெஸ்ட்டிங் பற்றி கிரஹாம் எழுதிய 'தி இன்டெலிஜென்ட் இன்வெஸ்ட்டார்’ என்ற புத்தக மும் உலகப் புகழ் பெற்றது.
ஆங்கிலத்தில் 'இன்ட்ரின்ஸிக் வேல்யூ’ (Intrinsic value) என்று கூறுவார்கள் - அதாவது ஒன்றின் உண்மையான (உள்ளார்ந்த) மதிப்பு. நாம் மேலே கண்ட உதாரணத்தில் தக்காளியின் உள்ளார்ந்த மதிப்பு ஒரு கிலோவிற்கு 7. நமக்கு சந்தையில் கிடைத்ததோ கிலோ ஒன்றுக்கு 3. அதாவது அதன் உள்ளார்ந்த மதிப்பைவிட 57% தள்ளுபடி விலையில் கிடைத்திருக்கிறது. நீங்கள் உள்ளார்ந்த மதிப்பிலிருந்து குறைவாக வாங்கும் போது விலை மேலும் குறைவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு.
அது மட்டுமல்ல, வேல்யூ நிறுவனங்களின் நிதி நிலை (வரவு, செலவு, லாபம்) சீராக இருக்கும். ஆகவே எதிர்காலத்தில் எவ்வாறு இருக்கும் என்று நாம் ஈஸியாகக் கணிக்க முடியும். வேல்யூ நிறுவனங்களின் நடவடிக்கைகள் நிலையாக இருப்பதால், முதலீட்டு ரிஸ்க்கும் குறைவு. ஆனால், பொதுவாக வளர்ச்சி அதிகமாக உள்ள நிறுவனங்களின் எதிர்காலத்தை நாம் ஈஸியாகக் கணித்துவிட முடியாது என்பதோடு, அவை அதிவேக வளர்ச்சியில் இருப்பதால், ரிஸ்க்கும் அதிகமாக இருக்கும்.
எல்லாம் சரி, வேல்யூ பங்குகளை எவ்வாறு ஆராய்ந் தறிவது?
முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முதல் விஷயம், எந்தப் பங்காக இருந்தாலும் அதை அதிக மதிப்புக் கொடுத்து வாங்கக்கூடாது. பொதுவாக ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு புதிய துறை / பொருளாதாரம் உருவாகும். அவ்வாறு நிகழும்போது அந்தத் துறை / பொருளாதாரம் சார்ந்த பங்குகள் கணக்குவழக்கில்லாமல் விலை உயர ஆரம்பிக்கும். அது போன்ற சமயங்களில் வேல்யூ முதலீட்டாளர்கள் அப்பங்குகள் பக்கமே செல்ல மாட்டார்கள். இன்டர்நெட் நிறுவனப் பங்குகள் 2000-த்தில் அமெரிக்காவில் உச்சத்தில் பறந்த போது, அப்பங்குகள் பக்கமே வாரன் பஃபட் போகவில்லை.
அதே போல் மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் போதும் வேல்யூ முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்க மாட்டார்கள். மாறாக பங்குகளை விற்க ஆரம்பிப்பார்கள். சந்தை அடி பட்டு விழுந்து கிடக்கும் போது வேல்யூ முதலீட்டாளர்களுக்கு நாவில் எச்சில் ஊறும். அத்தோடு நின்று விடமாட்டார்கள் - சாப்பிடவும் செய்வார்கள். அந்த சமயத்தில் பங்குகளை அதிகமாக வாங்குவார்கள். அப்பங்கினை துறை சார்ந்த நிறுவனங்களோடு ஒப்பிடுவார்கள். மதிப்பு அளவுகோல்கள் (பி/இ, பி/பிவி, டிவிடெண்ட் மற்றும் பிற) கவர்ச்சிகரமானதாக இருக்கிறதா என்று பார்ப்பார்கள். மார்ஜின் ஆஃப் சேஃப்டி எவ்வளவு என்று கணிப்பார்கள். {நாம் மேலே கூறிய தக்காளி உதாரணத்தில் நமது மார்ஜின் ஆஃப் சேஃப்டி 4 (7 - 3 = 4)}. நிறுவனத்தின் கேஷ் ஃப்ளோ (Cash Flow) எந்த அளவு நிலையாக உள்ளது என்று பார்ப்பார்கள். அந்நிறுவனம் விற்கும் பொருட்களுக்கு எப்போதும் மவுசு இருக்குமா, போட்டியாளர்களை ஒப்பிடும் போது அந்த நிறுவனத்தின் வலிமை, பணபலம் போன்ற பலவற்றையும் ஆராய்ந் தறிவார்கள்.
வேல்யூ இன்வெஸ்ட்டிங் பற்றி சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் 'தி இன்டெலி ஜென்ட் இன்வெஸ்ட்டார்’ புத்தகத்தின் அறிமுக உரையில் கூறியிருப்பது போல, 'பங்குகளை வாசனைத் திரவியம் (சென்ட்) வாங்குவது போல வாங்காமல், பலசரக்கு வாங்குவது போல வாங்குங்கள்'. பலசரக்கு வாங்குவது நம்மவர்களுக்கு கைவந்த கலை என்றாலும், அந்தத் திறமையை பங்குகளை வாங்குவதில் காட்டத் தயங்குகிறார்கள்.

வேல்யூ இன்வெஸ்ட்டிங்கிற்கு அவசியமான குணாதிசயங் கள்: பொறுமை, உணர்ச்சிவசப் படாமல் இருப்பது, சாதாரண புத்திசாலித்தனம் (இங்கு வார்த்தை களைக் கூர்ந்து கவனிக்கவும்) மற்றும் முதலீட்டு ஒழுக்கம். வேல்யூ இன்வெஸ்ட்டிங் பற்றி இன்னும் விரிவாக இத்தொடரின் பிற்பகுதியில்  காண்போம்.
இந்த இடத்தில் பொதுவான ஒரு விஷயத்தை வாசகர்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். எந்த ஒரு செயலிலும் நமக்கு எடுத்த உடனேயே வெற்றி கிடைத்துவிடாது. பங்கு முதலீடும் அதற்கு விதிவிலக்கல்ல. நான் பார்த்த பல முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் இறங்கி கண்டபடி விளையாடி,  கையைச்  சுட்டுக் கொள்கிறார்கள். பிறகு, பங்குச் சந்தை ஒரு சூதாட்டம் என்றும், நமக்கும் அதற்கும் ராசியே இல்லை என்றும் சொல்லி, அந்தப் பக்கமே வராமல் போய்விடுகிறார்கள். அப்படி இல்லாமல் ஏற்கெனவே செய்த தவறுகளை உணர்ந்து, அந்தத் தவறுகளை மீண்டும் செய்யாமல் புதிய பல யுக்திகளைக் கையாண்டு, ஒரு வெற்றிகரமான முதலீட்டு அனுபவத்தைப் பெற முயற்சிக்கலாம். இன்று பங்குச் சந்தையில் மிகப் பெரிய ஜாம்பவான்களாக இருப்பவர்கள்கூட நஷ்டத்தைச் சந்தித்தே இந்த நிலைக்கு வந்திருக்கிறார்கள். நஷ்டம் அவர்களை வெற்றியாளர்களாக மாற்றி இருக்கிறதே ஒழிய, துவண்டுவிடச் செய்யவில்லை என்பதை நாம் மறக்கக்கூடாது.
(படி ஏறுவோம்)
Source - Vikatan Magazine

முதற்படி முதலில் படி! - 10

முதற்படி முதலில் படி! - 10
பங்குச்சந்தை ஆத்திச்சூடி..


சென்ற வாரம் பங்குச் சந்தையில் உள்ள ரிஸ்க் பற்றி விளக்கமாகப் பார்த்தோம்... இனி வரும் வாரங்களில் வெவ்வேறு முதலீட்டு முறைகள் பற்றியும், அவற்றில் உள்ள நன்மை, தீமைகள் பற்றியும் பங்குகளை எவ்வாறு மதிப்பிடுவது என்பது பற்றியும் விரிவாகப் பார்ப்போம். அதற்கு முன், பங்கு மதிப்பீட்டிற்காக உபயோகிக்கும் சில வார்த்தைகளை (டெர்மினாலஜிஸ்) பற்றி  அறிந்து கொள்வது அவசியம். காரணம், பங்குகளை அலசி ஆராய இவைதான் அடிப்படை!
ஒரு சிறிய உதாரணத்துடன் இதைப் பார்க்கலாமா? 'அஆஇ’ என்கிற பெயரில் நீங்கள் ஒரு சூப்பர் மார்க்கெட்டை நடத்தி வருகிறீர்கள். உங்களின் சென்ற ஆண்டு எளிமைப்படுத்தப்பட்ட இன்கம் ஸ்டேட்மென்ட், அதாவது, வருமான அறிக்கை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வருமான அறிக்கை என்பது ஒரு நிறுவனத்தின் வரவு செலவுகளைக் காண்பிக்கும்.. இதில் நிறுவனம் பெரிதாக பெரிதாக, பலவிதமான விவரங்கள் வரும். ஆனால் நாம் புரிந்து கொள்வதற்கு ஏற்ற மாதிரி எளிமையாக 'அஆஇ சூப்பர் மார்க்கெட்’டின் வருமான அறிக்கையைத் தந்திருக்கிறேன். இந்த சூப்பர் மார்க்கெட் மூலம் உங்கள் தினசரி வியாபாரம் சுமார் 5,000 என்று எடுத்துக் கொள்வோம். சென்ற ஆண்டு உங்களின் மொத்த விற்பனை (டர்ன் ஓவர் என்றும் கூறுவார்கள்) 18.5 லட்சம். அதில் 50 ஆயிரம் சேதாரத்தில் (பொருட்கள் உடைந்தது, கெட்டுப் போனது, திரும்பி வந்தது போன்றவை) போய்விட்டது. ஆகையால் உங்களின் நிகர விற்பனை 18 லட்சம்.

இதில் உங்களின் கொள்முதல் செலவு 8 லட்சம். வாடகை, சம்பளம், மின்சாரம், டீ, காபி போன்ற அனைத்துச் செலவுகளும் 5 லட்சம் ஆகிறது. நீங்கள் பயன்படுத்தும் உபகரணங்களுக்கு தேய்மானம் உண்டாகும். அதற்காக ஒரு குறிப்பிட்ட செலவை எழுதிக் கொள்ளலாம். இந்த ஸ்டோரில் அத்தொகை 10,000 என்று வைத்துக் கொள்வோம். இதன்பின் கிடைக்கும் லாபமான 4.90 லட்சத்திற்கு நீங்கள் உங்கள் நிறுவனத்தின் அமைப்பைப் பொறுத்து (உரிமையாளர், பார்ட்னர்ஷிப் அல்லது கம்பெனி) வரி கட்ட வேண்டும். நாம் இங்கு உச்சபட்ச வரியான 33.99%-ஐ கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளோம். ஆக வரி செலுத்தியபின் கிடைக்கும் லாபமான 3,23,449-தான் உங்களின் நிகர லாபம் ஆகும். இந்த அறிக்கையில் நீங்கள் கவனிக்க வேண்டியது தேய்மானச் செலவு. அந்தப் பணம் உங்கள் கையில்தான் உள்ளது - செலவு ஆகவில்லை.
அதேபோல், உங்கள் நிறுவனத்தின் தற்போதைய சொத்துக்களின் புத்தக மதிப்பு (அதாவது, சொத்துகளை வாங்கிய விலையில் இருந்து தேய்மானத்தைக் கழித்த பிறகு உள்ள மதிப்பு) 1,90,000 என்றும் வைத்துக் கொள்வோம்.
இ.பி.எஸ். (EPS – Earnings Per Share): இ.பி.எஸ் என்பது நிறுவனத்தில் ஒரு பங்கிற்கு உள்ள வருமானம்.  நிகர லாபத்தை மொத்த பங்குகளின் எண்ணிக்கையால் வகுத்தால் கிடைப்பதுதான் இ.பி.எஸ்.
இ.பி.எஸ் = நிகர லாபம்/பங்குகளின் எண்ணிக்கை.
மேற்கண்ட உதாரணத்தில் இ.பி.எஸ். 16.17 (3,23,449/20,000) ஆகும். அதிகமான இ.பி.எஸ்., ஒரு நிறுவனம் லாபகரமாகச் செயல்படுவதைக் காண்பிக்கும்.
புக் வேல்யூ (Book Value (BV) Per Share): புக் வேல்யூ என்பது நிறுவனத்தில் ஒரு பங்கிற்கு உள்ள புத்தக மதிப்பு ஆகும். இதில் நாம் கணக்கிடுவது புத்தக மதிப்பைத்தானே தவிர, நிறுவனச் சொத்துக்களின் மார்க்கெட் மதிப்பை அல்ல. ஒரு நிறுவனத்தின் கடன்களை அதன் சொத்துக்களில் இருந்து கழித்த பிறகு மிஞ்சுவதே புத்தக மதிப்பு என்கிறோம்.
புத்தக மதிப்பு = சொத்துக்கள் - கடன்கள் (Book Value = Assets - Liabilities)  ஒரு பங்கின் புத்தக மதிப்பு = புத்தக மதிப்பு/பங்குகளின் எண்ணிக்கை இந்த மொத்த புத்தக மதிப்பை, அந்நிறுவனம் வெளியிட்டுள்ள பங்குகளினால் வகுத்தால் கிடைப்பதுதான் ஒரு பங்கின் புத்தக மதிப்பாகும். ஒரு கம்பெனியின் மதிப்பை பலவாறாகக் கணக்கிடலாம். அவற்றுள் புத்தக மதிப்பும் ஒன்றாகும். மற்றுமொரு வகையில் பார்த்தால், ஒரு நிறுவனம் ஏதோ ஒரு காரணத்தினால் மூடப்பட்டால், அதன் சொத்துக்களை விற்றால் பங்கு வைத்திருப்பவர்களுக்கு எவ்வளவு பணம் திரும்பக் கிடைக்கும் என்பதுதான் புத்தக மதிப்பு. இந்த மதிப்பு அனைத்து கம்பெனிகளின் ஐந்தொகையில் (Balance Sheet) கிடைக்கும்.
மேற்கண்ட உதாரணத்தில் ஒரு பங்கின் புத்தக மதிப்பு 9.50 (1,90,000/20,000) ஆகும். இந்த உதாரணத்தில் நிறுவனத்திற்கு எந்தவிதமான கடனும் இல்லை என்று எடுத்துக்கொள்வோம். இந்த புத்தக மதிப்பு நிறுவனம் இருக்கும் துறையைப் பொறுத்து மாறுபடும். சில தொழில்களுக்கு (மின் உற்பத்தி போன்றவை) முதலீடு அதிகம் தேவைப்படும். அதே சமயம் சர்வீஸ் சார்ந்த துறைகளுக்கு முதலீடு அதிகம் தேவைப்படாது.
பங்கின் மார்க்கெட் மதிப்பு (அ) விலை: பங்குச் சந்தையில் வர்த்தகமாகும் விலை. இந்த உதாரணத்தில் பங்கின் சந்தை விலை 66 என்று எடுத்துக் கொள்வோம்.
பி/இ (P/E – Price/Earnings Per Share): இது பங்கின் சந்தை விலைக்கும், இ.பி.எஸ்-ஸிற்கும் உள்ள விகிதமாகும். ஒரு பங்கின் வருமானத்தைப் போல அப்பங்கின் சந்தை விலை எத்தனை மடங்காக உள்ளது என்பதை இந்த விகிதம் காண்பிக்கும். பொதுவாக இவ்விகிதம் குறைவாக இருப்பது நல்லது - அதாவது, சந்தை விலை குறைவாகவும், இ.பி.எஸ் அதிகமாகவும் இருப்பது நல்லது.
பி/இ = பங்கின் சந்தை விலை/ ஒரு பங்கின் வருமானம்
பி/பிவி (P/BV – Price/Book Value Per Share):  புத்தக மதிப்பு ஒரு நல்ல குறியீடு என்றாலும், அதை தனியாகக் காண்பதைக் காட்டிலும் மற்றொன்றோடு ஒப்பிட்டுப் பார்த்தால்தான் மிகவும் பயனுள்ளதாக அமையும். அவ்விகிதம்தான் பரவலாக உபயோகிக்கப்படும் பங்கின் விலைக்கும் புத்தக மதிப்பிற்கும் உள்ள விகிதம் (Market Price/ Book Value or P/BV). இவ்விகிதம் ஒரு பங்கின் புத்தக மதிப்பைப் போல் அப்பங்கின் சந்தை விலை எத்தனை மடங்கு உள்ளது என்பதைக் காண்பிக்கும்.
பி/பிவி = பங்கின் சந்தை விலை/ ஒரு பங்கின் புத்தக மதிப்பு
டிவிடெண்ட் (Dividend): நிறுவனங்கள் தங்களுக்கு வரும் லாபத்தில் ஒரு பகுதியை ஆண்டுதோறும் தங்களின் பங்குதாரர்களுக்கு பிரித்துக் கொடுப்பதை டிவிடெண்ட் என்று கூறுகிறோம். இந்த டிவிடெண்ட் கொடுக்கும்முன் நிறுவனங்களே வரி கட்டிவிடுவதால், பங்குதாரர்கள் இதற்கு வருமான வரி கட்ட வேண்டாம்.
டிவிடெண்ட் யீல்ட் (Dividend Yield): டிவிடெண்டுக்கும் பங்கின் சந்தை விலைக்கும் உள்ள விகிதம். உதாரணத்திற்கு, நீங்கள் வைத்திருக்கும் 'அஆஇ’ பங்கு ஒன்றிற்கு 3.30 டிவிடெண்ட்-ஆக சென்ற ஆண்டு வழங்கப்பட்டது என்று வைத்துக் கொள்வோம். மேலும், அப்பங்கின் சந்தை விலை 66 என்று எடுத்துக் கொள்வோம். அப்படி என்றால் நீங்கள் வைத்திருக்கும் பங்கின் டிவிடெண்ட் யீல்ட் 5% (3.30/66 ஜ் 100) ஆகும்.
டிவிடெண்ட் யீல்ட் = டிவிடெண்ட் தொகை/ பங்கின் சந்தை விலை X 100 பங்குச் சந்தையில் உள்ள வெவ்வேறு முதலீட்டு யுத்திகள் யாவை? முதலீட்டில் பலவிதமான யுத்திகள் உள்ளன. அவற்றில் சில இதோ கீழே:
1. வேல்யூ இன்வெஸ்ட்டிங்
2. குரோத் இன்வெஸ்ட்டிங்
3. கான்ட்ரா இன்வெஸ்ட்டிங்
4. பேஸிவ் இன்வெஸ்ட்டிங்
இவை தவிர வேறு சில யுத்தி களும் உள்ளன. ஆனால், அவற்றை எல்லாம் இந்த நான்கிற்குள்  கொண்டு வந்துவிடலாம்.
ஒருவரின் மனநிலைக்கு ஏற்ப அவரின் முதலீட்டு யுத்தியும்/முறை யும் அமைய வேண்டும். வேகமான மனநிலையில் இருப்பவர்கள் ’குரோத்’ பங்குகளை நாடிச் செல்வர். தாம் வாங்கும் பங்கில் வேல்யூ இருக்க வேண்டும் என்பவர்கள், 'வேல்யூ’ பங்குகளை நாடிச் செல்வர்; மாத்தி யோசிப்பவர்கள் 'கான்ட்ரா’ பங்குகளை நோக்கிச் செல்வர்.  மார்க்கெட் ரிஸ்க்கைவிட ஒரு துளி கூடவோ அல்லது குறையவோ எனக்கு வேண்டாம் என்று நினைப்பவர்கள் 'பேஸிவ்’ முறையை நாடிச் செல்வர்.
(படி ஏறுவோம்)

Source - Vikatan Magazine