தவனை திட்டத்தில் மனை வாங்க ஆசையா?
இதைப் படியுங்க முதலில்!
முன்பெல்லாம் டி.வி.யை ஆன் செய்தால் பல சேனல்களில் டெலி மார்க்கெட்டிங் பற்றியோ அல்லது ஏதாவது ஃபிட்னஸ் மெஷினை வாங்குவது பற்றியோ அல்லது வைத்திய நிகழ்ச்சியோ ஓடிக்கொண்டிருக்கும். இப்போது அந்த இடத்தைப் பிடித்திருப்பது சுலபத் தவணைத் திட்டத்தில் மனைவாங்கச் சொல்லி வரும் விளம்பர நிகழ்ச்சிகள்தான்... பெரிய சேனல்களில் ஆரம்பித்து, லோக்கல் கேபிள் டி.வி. வரை சக்கைபோடு போடுகிறது இத்தகைய விளம்பர நிகழ்ச்சிகள்.
மாசம் ஐந்நூறோ ஆயிரமோ கொடுத்து குருவி சேர்க்கிற மாதிரி சேர்த்து, கடைசியில் இடத்துக்கு சொந்தக்காரர் ஆகிவிடும்போது வரும் மகிழ்ச்சி இருக்கிறதே அதுக்கு இணை வேறு கிடையாது! ஆனால் அதுவே ஏடாகூடமாக முடிந்து விட்டால் அதனால் ஏற்படும் கஷ்டத்துக்கும் அளவே இருக்காது. தவணைத் திட்டம் என்பது நல்ல விஷயம்தான். அதே சமயம் தவறான ஆட்களிடம் சிக்கிவிட்டால் சிக்கலாகிவிடும். சாம்பிளுக்கு ஒரு சம்பவம் இதோ...
மதுரையைச் சேர்ந்த ராகவனுக்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சொல்லும் போதே கண்ணில் நீர்கோர்த்து விட்டது...''ரெண்டு வருஷ தவணைத் திட்டத்துல சேர்ந்து மாசம் தவறாம இ.எம்.ஐ. கட்டி முடிச்சேன். நிலத்தைக் கிரையம் செஞ்சிக்கலாம் என்கிறப்ப, 'மனையோட விலை ரெண்டு மடங்கா ஏறிடுச்சு. அதிகப் பணம் கொடுத்தாத்தான் பத்திரம் பதிஞ்சு தருவோம். இல்லைன்னா வேற இடத்தை வாங்கிக்குங்க’ன்னு சொல்லிட்டாங்க. என்னால தட்டிக் கேட்கவும் முடியலை, அவங்க கேட்ட பணத்தை தரவும் முடியல. அதனால, வேற வழி இல்லாம அவங்க கொடுத்த வேற ஒரு இடத்தை வாங்க வேண்டியதாயிடுச்சு.
அந்த இடம் ஏற்கெனவே காட்டின இடத்திலிருந்து ஏழு கி.மீ. தள்ளி இருக்கிற இடம்! வாயை மூடிக்கிட்டு வாங்கிட்டு வரவேண்டியதாப் போச்சு..! இடத்தைப் பார்த்து பிடிச்சுப் போய்தான் அந்த திட்டத்துலயே சேர்ந்தேன். ஆனா கடைசியில எனக்கு அநியாயம் பண்ணிட்டாங்க...'' என்று புலம்பித் தள்ளிவிட்டார் ராகவன். ''ஊருக்கு வெளியில சாமானியமா போய் வர முடியாத இடமா பார்த்துதான் பல பேரு சுலப தவணைத் திட்ட மனைகளைப் போடறாங்க.. அதுல 90% மனைகளுக்கு முறையான அங்கீகாரம் இருக்காதுங்கிறது என்னோட நம்பிக்கை! சில இடங்கள்ல புறம்போக்கு, குளம், கண்மாய்ன்னு ஆரம்பிச்சு, யார் யாருக்கோ சொந்தமான இடத்தைக்கூட வளைச்சு பிளாட் போட்டு வித்துடறாங்க.
''இது ஒரு கவர்ச்சியான மார்க்கெட்டிங் திட்டம்தான். விற்பனையை அதிகரிக்க இம்மாதிரி திட்டங்களைக் கொண்டு வருகிறார்கள். பளு தெரியாமல் பணம் கட்டி முடிப்பதால் மக்களும் இதற்கு ஆதரவு அளித்து வருகிறார்கள். இந்த மனைகளை வாங்கி முதலீடு செய்யும் முன், அந்த மனைக்கான லே-அவுட் உள்ளாட்சி அமைப்பிடம் அப்ரூவல் வாங்கப்பட்டிருக்கிறதா என்பதைக் கவனிக்க வேண்டும். அப்ரூவ்டு மனைதான் என்று தெரிந்தால் மட்டுமே வாங்க முடிவெடுக்கலாம்.
ரெடி கேஷ் கொடுத்து ஒரு இடத்தை வாங்கும் போது எவ்வளவு கவனமாக இருப்போமோ, அந்த கவனம் இதிலும் இருக்க வேண்டும். வில்லங்க சான்றிதழ் கேட்க வேண்டும். இதிலெல்லாம் எந்த பிரச்னையும் இல்லை என்று தெரிந்த பின்னரே முதலீட்டு முடிவை எடுக்க வேண்டும். அடுத்து, மூல ஆதார ஆவணங்களையும் புரமோட்டரிடமிருந்து பெற்று சரிபார்க்க வேண்டும்'' என்றவர் சற்று நிறுத்தி,
''புரமோட்டர் யார் என்பதை முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டும். அவர் எப்படிப் பட்டவர்? எத்தனை ஆண்டுகளாக இந்த தொழிலில் இருக்கிறார்? அவரது பின்னணி பலம் என்ன என்பதை எல்லாம் விசாரித்து அறிவது நலம். லே-அவுட் போடப்பட்டிருக்கும் மனை அவருக்குச் சொந்தமானதா? அல்லது வேறொருவர் நிலத்துக்கு இவர் பவர் ஆஃப் அட்டர்னி பெற்று விற்கிறாரா என்பதையும் முக்கியமாகக் கவனிக்க வேண்டும்.
புரமோட்டரின் சொந்த நிலமாக இருந்தால் அதிக சிக்கல்கள் வர வாய்ப்பில்லை. இதுவே பவர் ஆஃப் அட்டர்னியாக இருந்து நிலத்தின் உரிமையாளர் பவரை ரத்து செய்திருந்தால் அது நமக்குத் தெரியாமல் போய்விடும். அப்படி பவர் கொடுக்கப்பட்டிருந்தால் பவர் கொடுத்தவர் எங்கே இருக்கிறார் என்பதைப் பார்த்து அவரிடம் சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொண்ட பிறகு மனையை வாங்குவது குறித்து முடிவெடுப்பது நல்லது'' என்றவர், இந்த விஷயத்தில் பலரும் செய்யும் தவறை தவிர்ப்பது எப்படி என்பது பற்றியும் விளக்கினார்.
''தவணை முறையில் மனை வாங்குபவர் களில் பெரும்பாலோர், புரமோட்டருடன் கிரைய ஒப்பந்தம் போட்டுக் கொள்வதில்லை. தெளிவாக ஒப்பந்தம்போட்டுக் கொள்ளும் பட்சத்தில் பல பிரச்னைகளைத் தவிர்க்க முடியும். இந்த ஒப்பந்தத்தை 20 ரூபாய் மதிப்புள்ள ஸ்டாம்ப் பேப்பரில்கூட எழுதினால் போதும். அதில், நிலத்தின் விலை எவ்வளவு, மாதத் தவணை எவ்வளவு, எத்தனை மாதங்கள், மனை எண், பரப்பளவு என அனைத்து தகவல்களையும் தெளிவாகக் குறிப்பிட்டு ஒப்பந்தம் போட்டுக் கொள்ள வேண்டும்.
ஒப்பந்தம் போடும்போது கிரையம் செய்து தர தாமதம் ஏற்பட்டால் காலதாமதம் ஏற்படும் நாட்களுக்கு வட்டி போட்டுத் தர வேண்டும் என்றும் ஒப்பந்தத்தில் குறிப்பிட வேண்டும். இந்த மாதிரி ஒப்பந்தங்கள் போட்டுக் கொள்வது பாதுகாப்பானதாக இருக்கும்.
அதே நேரத்தில் நாமும் தவணையை சரியாகச் செலுத்தி வர வேண்டும். எப் போது நாம் தவணை பணத்தைச் செலுத்த தொடங்குகிறோமோ, அப்போதே அந்த நிலத்தில் உரிமை பெற்றுவிடுகிறோம். அதனால் தவணை காலத்தில் நிலத்தை அடிக்கடி பார்வையிட வேண்டும். அப்போதுதான் ஏதேனும் ஆக்கிரமிப்புகள் ஏற்பட்டால் தடுக்க முடியும்'' என்றார் அழகுராமன்.
ஆக மொத்தம் தவணைத் திட்டத்தில் எந்த குறையும் இல்லை. சூப்பரான திட்டம்தான். யாரிடம் வாங்குகிறோம் எத்தகைய நிலத்தை வாங்குகிறோம் என்பதைப் பொறுத்துதான் நமது காணி நில கனவு கைகூடுவதும் கூடாததும்!
- செ.திருக்குறள் அரசி.
Source - Vikatan Magazine