ஐ.பி.ஓ. வருமா எல்.ஐ.சி?
இதோ அதோ என இத்தனை நாட்களும் தள்ளிப் போன லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்கான ஐ.பி.ஓ. விதிமுறைகள் இப்போது வெளிவந்து விட்டது. இதன்மூலம் சில இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் கூடிய விரைவில் ஐ.பி.ஓ. வரும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
ஐ.ஆர்.டி.ஏ. விதிமுறைகள்!
நம் நாட்டில் மொத்தம் 24 ஆயுள் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் உள்ளன. இதில் ஹெச்.டி.எஃப்.சி. லைஃப் இன்ஷூரன்ஸ், ஐ.சி.ஐ.சி.ஐ. புரூடென்ஷியல், எஸ்.பி.ஐ. லைஃப், பஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்ஷூரன்ஸ் மற்றும் மேக்ஸ் நியூயார்க் ஆகிய ஐந்து நிறுவனங்கள் மட்டுமே பத்தாண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகின்றன. ஐ.ஆர்.டி.ஏ.வின் விதிமுறைபடி இந்த நிறுவனங்கள் மட்டுமே ஐ.பி.ஓ. வந்து பங்குச் சந்தையில் நிதி திரட்ட முடியும்.
ரிலையன்ஸ் லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு 2012-ம் ஆண்டு ஜனவரியில் பத்தாண்டு நிறைவு பெறுவதால், அந்நிறுவனமும் ஐ.பி.ஓ. வர வாய்ப்புண்டு.
அரசு பொதுத் துறை நிறுவனமான எல்.ஐ.சி. அரை நூற்றாண்டுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. ஐ.பி.ஓ. வரத் தேவையான அனைத்து தகுதிகளும் இதற்குண்டு என்றாலும் ஐ.பி.ஓ. வரலாமா வேண்டாமா என மத்திய அரசாங்கம்தான் முடிவு செய்ய வேண்டும். தற்போது எல்.ஐ.சி. ஹவுஸிங் ஃபைனான்ஸ் ஏற்கெனவே பங்குச் சந்தையில் பட்டியலிட்டிருப்பதால், எல்.ஐ.சி. நிறுவனமும் ஐ.பி.ஓ. வரலாம் என்கிறார்கள் நிபுணர்கள். இதற்கு எல்.ஐ.சி. ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கக்கூடும். அப்படி ஒரு நிலை வந்தால் அதை அரசாங்கம் எப்படி சமாளிக்கும் என்பது முக்கியமான விஷயம்.
ஐ.ஆர்.டி.ஏ. வெளியிட்ட விதிமுறைகளில் அடுத்து முக்கியமானது, ஐ.பி.ஓ. வரும் இன்ஷூரன்ஸ் நிறுவனம், கடந்த ஐந்து நிதி ஆண்டுகளில், மூன்று நிதி ஆண்டுகளில் தொடர்ந்து நிகர லாபம் சம்பாதித்து இருக்க வேண்டும். அல்லது அதன் அளிக்கப்பட்ட பங்கு மூலதனத்தைப் போல் இரு மடங்கு 'எம்பெடெட் மதிப்பு’ (Embedded Value-EV) இருக்க வேண்டும் என்பது.
இந்த 'எம்பெடெட் மதிப்பை’ எப்படி கணக்கிட வேண்டும் என்றும் ஐ.ஆர்.டி.ஏ. வரையறுத்துக் கொடுத்திருக்கிறது. பங்குதாரர்களின் நிகர சொத்து மதிப்பு மற்றும் காப்பீடு நிறுவனத்தின் பிஸினஸ் மதிப்பு இரண்டும் சேர்ந்ததுதான் எம்பெடட் மதிப்பு. இந்த மதிப்பீட்டை தனிப்பட்ட இரு தணிக்கை நிபுணர்கள் மூலம் உருவாக்கித் தர வேண்டும் என்றும் ஐ.ஆர்.டி.ஏ. சொல்லி இருக்கிறது.
இது தவிர, ஐந்தாண்டுகளில் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் மொத்த பிரீமியம், செயல்பாட்டுச் செலவு விகிதம், முதலீட்டு மீதான வருமானம், லாபம்/நஷ்ட விவரங்களையும் ஐ.பி.ஓ வரும் நிறுவனம் குறிப்பிட வேண்டும். தவிர, அந்த கம்பெனிக்கு இருக்கும் ரிஸ்க்குகளையும் தெரிவிக்க வேண்டும் என்றும் ஐ.ஆர்.டி.ஏ. சொல்லியிருக்கிறது.
ஐ.ஆர்.டி.ஏ-ன் இந்த விதிமுறைகள் மத்திய அரசின் ஒப்புதல் பெறுவதற்காக அனுப்பப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்த பிறகே, இது நடைமுறைக்கு வரும் என்று சொல்லப்படுகிறது.
மும்பையைச் சேர்ந்த பங்குச் சந்தை நிபுணர் ஒருவருடன் இந்த புதிய விதிமுறைகள் பற்றி பேசினோம்.
''ஐ.பி.ஓ. வெளியிட பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியமான செபிக்கு விண்ணப்பிக்கும் முன் ஐ.ஆர்.டி.ஏ-விடம் முறைப்படி அனுமதிபெற வேண்டும் என்கிற விதிமுறை வரவேற்கக்கூடியதே. அதேநேரத்தில், இன்ஷூரன்ஸ் நிறுவனம்
நிர்ணயிக்கும் பங்கு விலைப்பட்டை நியாய மானதாக உள்ளதா என்பதையும் ஐ.ஆர்.டி.ஏ. கண்காணிப்பது அவசியம். இது நீண்ட காலத்தில் பாலிசிதாரர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் நலனைப் பாதுகாக்க உதவும்'' என்றார்.
ஐ.ஆர்.டி.ஏ. இதையும் கவனத்தில் கொண்டால் நல்லது.
- சி.சரவணன்
படம்: சொ.பாலசுப்பிரமணியம்
படம்: சொ.பாலசுப்பிரமணியம்
Source - Vikatan Magazine
No comments:
Post a Comment