முதற்படி முதலில் படி!
பங்குச்சந்தை ஆத்திச்சூடி..
கடந்த சில வாரங்களாக ஃப்ரீ கேஷ் ஃப்ளோ கண்டுபிடிப்பதற்குத் தேவையான அனைத்து அளவுகோல் களையும் விரிவாகப் பார்த்தோம்... அவற்றைக் கொண்டு கணக்கிட்ட ஃப்ரீ கேஷ் ஃப்ளோ அட்டவணை 1-ல் கொடுக்கப்பட்டுள்ளது.
ஒன்று, நாம் முதலில் கூறியதுபோல டிஸ்கவுன்ட் ரேட்டைக் கண்டுபிடிக்க வேண்டும். மற்றொன்று, நிறுவனத்திற்கு டெர்மினல் வேல்யூ (Terminal Value) கண்டுபிடிக்க வேண்டும். முதலில் டிஸ்கவுன்ட் ரேட்டை கண்டுபிடித்து விடுவோம். ஏனென்றால், அதை உபயோ கித்துத்தான் டெர்மினல் வேல்யூவைக் கண்டுபிடிக்க வேண்டும். டிஸ்கவுன்ட் ரேட்டை எவ்வாறு கணக்கிடுவது என்பதற்கு முன்பாக, அதைப் பற்றி பார்த்து விடுவோம்.
டிஸ்கவுன்ட் ரேட் என்பது எந்த ஒரு முதலீட்டிலும் நீங்கள் எதிர்பார்க்கும் வருமான சதவிகிதம். உதாரணமாக, உங்களிடம் 1 கோடி ரூபாய் உள்ளது. உங்களுக்கு இரண்டு ஆப்ஷன் கிடைக்கிறது.
1. இந்திய அரசாங்க கடன் பத்திரத்தில் (பாண்ட்) முதலீடு செய்தால் உங்களுக்கு உறுதியாக எந்தவித ரிஸ்க்கும் இல்லாமல் ஆண்டிற்கு 8% வருமானம் கிடைக்கிறது. நமது அரசாங்கம் திவாலாகாது என்பதால், அது கொடுக்கும் ரேட்தான் ரிஸ்க் ஃப்ரீ ரேட்.
இப்போது இன்னுமொரு கம்பெனி (உதாரணமாக, ஏபிசி லிமிடெட்) விலைக்கு வருகிறது - அதே ஒரு கோடி ரூபாய்க்கு? ரிஸ்க் எடுத்து அதை வாங்கினால், எல்லாச் செலவுகளும் போக உங்களுக்கு ஆண்டிற்கு 16% வருமானம் கிடைக்கும். ரிஸ்க்கிற்கு ஏற்ற ரிவார்ட் நன்றாக உள்ளது என்று நினைக்கிறீர்கள். எனவே, அரசு கடன் பத்திரத்தில் முதலீடு செய்யாமல், எபிசி லிமிடெட்டை விலைக்கு வாங்க முடிவு செய்கிறீர்கள். ஆகவே, ரிஸ்க்குடன் கூடிய லாபமாகிய 16%-தான் உங்களின் டிஸ்கவுன்ட் ரேட். உங்களின் நண்பருக்கு 14% வருமானம் போதும் என்று நினைத்தால் அது அவருடைய டிஸ்கவுன்ட் ரேட்.
இந்த டிஸ்கவுன்ட் ரேட்டை எவ்வாறு கணக்கிடுவது? என்பதை தெரிந்து கொள்ளும் முன், நாம் உருவாக்கிக் கொள்ளும் சில அனுமானங்களைப் பொறுத்தே டிஸ்கவுன்ட் ரேட் அமையும் என்பது முக்கியமான விஷயம். சுருக்கமாகச் சொன்னால், இந்த டிஸ்கவுன்ட் ரேட் நாட்டைப் பொறுத்து, நிறுவனத்தைப் பொறுத்து, செய்யப் போகும் தொழிலின் ரிஸ்க்கைப் பொறுத்து அமையும்.
டிஸ்கவுன்ட் ரேட்டை வேக் (WACC – Weighted Average Cost of Capital) முறையைக் கொண்டு கணக்கிடலாம். பொதுவாக, பணம் ஒரு நிறுவனத்திற்கு ஈக்விட்டி முதலீடாகவும், கடனாகவும் கிடைக்கும். இந்த இரண்டு வகையான நிதி திரட்டுதலின் சதவிகிதத்தை (வெயிட்டை) எடுத்துக் கொண்டு அவற்றின் விலையால் (equity cost and interest cost) பெருக்கி, பிறகு கூட்டினால் கிடைப்பதுதான் டிஸ்கவுன்ட் ரேட். கடனுக்குக் கொடுக்கும் வட்டியிலிருந்து, வரியை கழித்துக் கொள்ள வேண்டும். ஏன் என்பதை கீழே விரிவாகக் காண்போம்.
வாங்கும் கடனுக்கு நிறுவனங்கள் வட்டி கொடுக்கும். அந்த வட்டியை நிறுவனங்கள் இன்கம் ஸ்டேட்மென்டில் செலவாக எழுதுகின்றன. அதனால், அந்த அளவிற்கு வருமான வரியை நிறுவனங்கள் குறைத்துச் செலுத்துகின்றன. இதனால், நிறுவனங்களுக்கு எஃபெக்டிவ் வட்டிச் செலவு (effective interest cost), வரி செலுத்தும் அளவிற்குக் குறையும்.
டிஸ்கவுன்ட் ரேட்டைக் கண்டுபிடிக்கும் முன், அதில் பயன்படுத்தப்படும் சில முக்கிய வார்த்தைகளை பார்ப்போம்.
ரிஸ்க் ஃப்ரீ ரேட் (Risk Free Rate): எந்தவிதமான ரிஸ்க்கும் எடுக்காமல் கிடைக்கக்கூடிய ரிட்டர்ன் இது. RF என அழைக்கப்படும் இது இந்திய அரசாங்கத்தின் 10 வருட கடன் பத்திரத்தின் (10 Year Govt. of India Securities) தற்போதைய வருமானம் (யீல்ட்) ரிஸ்க் ஃப்ரீ ரேட்டாக எடுத்துக் கொள்ளலாம். இது தற்போது 8.30% ஆகும்.
பங்கு முதலீட்டின் விலை (Cost of Equity): பங்கு முதலீட்டாளர்கள் நிறுவனத் திடம் இருந்து எதிர்பார்க்கும் ரிட்டர்ன்தான் காஸ்ட் ஆஃப் ஈக்விட்டி. பொதுவாக இது டிவிடென்ட் மற்றும் கேபிட்டல் அப்ரிசியேஷன் மூலமாக இருக்கும்.
ஈக்விட்டி ரிஸ்க் பிரீமியம் (Equity Risk Premium): பங்கு (ஈக்விட்டி) முதலீடு ரிஸ்க் நிறைந்தது என்பதால், ரிஸ்க் ஃப்ரீ ரேட்டைவிட அதிகமாக முதலீட்டாளர்கள் கேட்கும் ரேட்தான் ஈக்விட்டி ரிஸ்க் பிரீமியம் என்று கூறப்படுகிறது. உதாரணமாக, தற்போதைய ரிஸ்க் ஃப்ரீ ரேட் 8.30%. ஈக்விட்டி முதலீட்டாளர்கள் 15.30% எதிர்பார்த்தால், ரிஸ்க் பிரீமியம் 7% ஆகும்.
சி.ஏ.பி.எம் (CAPM – Capital Asset Pricing Model): காஸ்ட் ஆஃப் ஈக்விட்டியைக் கணக்கிட உதவும் ஃபார்முலா. இந்த ஃபார்முலாவைக் கண்டுபிடித்ததற்காக வில்லியம் ஷார்ப்பி என்பவருக்கு 1990-ல் நோபல் பரிசு கிடைத்தது.
அடுத்த வாரத்தில் காஸ்ட் ஆஃப் ஈக்விட்டி கண்டுபிடித்து, வேக் உபயோகித்து டிஸ்கவுன்ட் ரேட் கண்டுபிடித்து, டெர்மினல் வேல்யூ கண்டுபிடிப்பதைப் பார்ப்போம்.
(படி ஏறுவோம்)
Source - Vikatan Magazine
No comments:
Post a Comment