Pages

Monday, July 25, 2011

''குழந்தைகளின் எதிர்காலத்துக்கு இது போதுமா?''

''குழந்தைகளின் எதிர்காலத்துக்கு இது போதுமா?''

சைல்டு மியூச்சுவல் ஃபண்ட்
குழந்தைகளின் எதிர்காலத்துக்குச் சேமிக்காத பெற்றோர்களே இருக்க முடியாது. அது மாதிரியான பெற்றோர்களைக் கவர்வதற்காகவே 'குழந்தைகளின் எதிர்காலத்துக்கு’ என்ற பெயரில் பலவிதமான முதலீட்டுத் திட்டங்கள் உலா வருகின்றன.
இதைப் பார்த்த சில மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களும் குழந்தை களின் எதிர்காலத்துக்கு என சில மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை நடத்தி வருகின்றன. இவற்றின் சாதக, பாதகங்கள் என்ன, இந்த ஃபண்டுகளின் வருமானம் எப்படி, இதில் முதலீடு செய்யலாமா, கூடாதா என்கிற கேள்விகளுக்கான பதிலை இனி பார்ப்போம்.
இந்த வகை ஃபண்டுகளில் மூன்று முதல் பதினெட்டு வயதுக்குள் இருக்கும் சிறுவர்கள் பெயரில்தான் முதலீடு செய்ய முடியும். இந்த வகை ஃபண்டுகள் சிலவற்றில் 'லாக் இன்’ காலம் இருக்கிறது. இன்னும் சில ஃபண்டுகளில் 'லாக் இன்’ காலம் என்று சொல்லாமல், மூன்று வருடத்துக்கு முன்பு எடுத்தால் வெளியேறும் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்கிறது. பொதுவாக, டைவர்சிஃபைட் ஃபண்டுகளில் ஒரு வருடத்துக்குள் பணத்தை வெளியே எடுத்தால், வெளியேறும் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். ஆனால், சைல்டு பிளான்களில் மூன்று வருடத்துக்கு (சில ஃபண்டுகளில் ஏழு வருடம்!) முன்பு எடுக்கும் பட்சத்தில் வெளியேறும் கட்டணத்தைச் செலுத்த வேண்டியிருக்கும்.
இந்த ஃபண்டுகள் கடந்த சில ஆண்டுகளில் அளித்த வருமானத்தைப் பார்த்தால், அப்படி ஒன்றும் பெரிதாக இல்லை. கடந்த ஐந்தாண்டு களில் சராசரியாக 10 சதவிகித வருமானத்தையே தந்திருக் கின்றன. இதற்கு காரணம், தற்போது சந்தையில் இருக்கும் சைல்டு மியூச்சுவல் ஃபண்டுகள் பெரும்பாலும் பேலன்ஸ்ட் மற்றும் கடன் சார்ந்த ஃபண்டு களாகவே இருக்கின்றன.
முழுமையான ஈக்விட்டி ஃபண்டுகளே கிடையாது. குழந்தைகளின் எதிர்காலத் துக்காகச் சேமிக்கிறோம் என்று சொல்லிவிட்டு முழுமையாகக் கடன் திட்டங்களில் முதலீடு செய்வது சிறப்பான முதலீட்டு முடிவாக இருக்க முடியாது.
சாதாரண டைவர்சிஃபைட் ஃபண்டுகளைவிட சைல்டு ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஒன்று, குழந்தைகளின் பெயரில் தான் இந்த ஃபண்ட் இருக்கும். இரண்டாவது, மூன்று வருட காலத்துக்கு முன்பு எடுத்தால் வெளியேறும் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.
இவை தவிர சைல்டு மியூச்சுவல் ஃபண்டுகளை எடுப்பதற்கு வேறு எந்த சிறப்பான காரணமும் இருக்கிற மாதிரி தெரியவில்லை. எனவே, இந்த ஃபண்டுகளில் முதலீடு செய்வது குறித்து ஒருமுறைக்கு இருமுறை யோசித்தே முடிவெடுப்பது நல்லது என்பதே நிதி ஆலோசகர்களின் கருத்து.
அப்படி என்றால் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு என்ன மாதிரியான மியூச்சுவல் ஃபண்டுகளைத் தேர்வு செய்வது என்று நீங்கள் கேட்கலாம். பல வருடங்களாக தொடர்ந்து அதிக வருமானம் தரும் மியூச்சுவல் ஃபண்டுகள் சந்தையில் இருக்கவே செய்கின்றன.
இவற்றில் ஏதாவது ஒரு நல்ல ஃபண்டை தேர்வு செய்து எஸ்.ஐ.பி. முறையில் பத்து முதல் பதினைந்து ஆண்டுகளுக்கு தொடர்ந்து முதலீடு செய்யலாம். இடையில் பணத்தை எடுக்காமல், தொடர்ந்து முதலீடு செய்தாலே போதும், உங்களின் முதலீடு விருட்சமாக வளர்ந்துவிடும்.
- வா.கார்த்திகேயன்.

முதற்படி முதலில் படி! - 34 (இ.டி.எஃப்!)

முதற்படி முதலில் படி!

ஷேர் மார்க்கெட்டில் நுழைய விரும்பும் புதியவர்களுக்கான வழிகாட்டித் தொடர்!
இ.டி.எஃப்.!
சில வாரங்களுக்கு முன்பு பேஸிவ் இன்வெஸ்டிங் முறை பற்றி பார்த்தோம். அம்முறையின் ஒரு பகுதிதான் இ.டி.எஃப். என்று சொல்லப்படுகிற 'எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்டு’கள். அதுபற்றி இந்த இதழில் சற்று விரிவாகப் பார்ப்போம்.
ங்குச் சந்தையில் ஆயிரக்கணக்கான பங்குகள் இருக்கின்றன. இதில் ஒவ்வொரு பங்கையும் ஆராய்ந்து முதலீடு செய்ய நேரமில்லை. எனவே, சந்தையையே விலைக்கு வாங்கிவிட்டால் என்ன என்று நீங்கள் நினைத்தால், அதுதான் இ.டி.எஃப்!
'கோல்டு இ.டி.எஃப்...’ இப்போது நம்மூரில் வேகமாகப் பிரபலமாகி வருகிறது. தங்கத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குவதுதான் 'கோல்டு இ.டி.எஃப்.’ இதுவே ஒரு குறியீட்டை அடிப்படையாகக் கொண்டு செயல் பட்டால்? அதாவது, 'பேங்க் இண்டெக்ஸ்’ என்கிற குறியீட்டை எடுத்துக் கொள்வோம். இந்த இண்டெக்ஸில் உள்ள சில பங்குகளை மட்டும் ஒரு குரூப்பாக்கி, அதில் முதலீடு செய்தால் அதுதான் இ.டிஎஃப். பேங்க் இண்டெக்ஸில் உள்ள வங்கிகள் நன்றாக செயல்பட்டால், அதனால் அந்த இண்டெக்ஸ் உயர்ந்து நமக்கு லாபம் கிடைக்கும். சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் ஒரு குறிப்பிட்ட குறியீட்டின் ஏற்றத்தாழ்வுகளுக்கு ஏற்ப, இ.டி.எஃபின் விலையிலும் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். இது எக்ஸ்சேஞ்சில் டிரேட் ஆகும் என்றாலும், இதை நிர்வாகம் செய்வது மியூச்சுவல் ஃபண்ட் கம்பெனிகள்தான்.
உலக அளவில் இ.டி.எஃப்- களின் வரலாறு மிகக் குறுகியது. கடந்த 20 வருடங்களாகத்தான் இ.டி.எஃப்-கள் நடைமுறையில் உள்ளன. இருந்தபோதிலும் வளர்ந்த நாடுகளில் இம்முறை முதலீடு மிகவும் பிரசித்தம்.
இ.டி.எஃப்.-ல் முதலீடு செய்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? ஒன்றல்ல, இரண்டல்ல, பல நன்மைகள் கிடைக்கும்.
1. பங்குச் சந்தையில் எந்த ஒரு பங்கையும் வாங்குவது/ விற்பது போல, இ.டி.எஃபையும் எளிதில் வாங்கலாம்; விற்கலாம் - அதுவும் மிகக் குறைந்த கமிஷனில். தவிர, மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இதை நிர்வாகம் செய்ய எடுத்துக் கொள்ளும் தொகையும் மிக மிகக் குறைவு (low expense ratio).
2. சந்தையின் ஏற்றத்தாழ்வுகளுக்கு ஏற்ப நம் லாப நஷ்டமும் இருக்கும்.
  3. மியூச்சுவல் ஃபண்டில் ஒரு நாளில் எப்போது முதலீடு செய்தாலும், அன்றைய முடிவில் தரப்படும் என்.ஏ.வி. தான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். ஆனால், இ.டி.எஃப்.பில் முதலீடு செய்யும்போது பங்குகளைப் போல ஒரே நாளில் பல விலைகளில் வாங்க/விற்க முடியும்.
4. அலுத்துக் கொள்ளாமல் பங்குச் சந்தையில் முதலீடு (passive investment) செய்ய விரும்புபவர்களுக்கு இ.டி.எஃப்.கள் பெஸ்ட் சாய்ஸ். இத்தகைய முதலீடுகளை 'கவலை இல்லாத முதலீடு’ (in-vestment minus worries) என்றும் கூறலாம்.
5. இந்தியா அடுத்த 20/30 வருடங்களுக்கு உலக அளவில் ஒரு தலை சிறந்த பொருளாதாரமாக விளங்கி முதலீட்டாளர்களுக்கு நல்ல வருவாயை ஈட்டித் தரும். அவ்வாறு வளரும் தருணத்தில் இந்திய பங்குச் சந்தையும் அதன் குறியீடுகளும் நன்றாக வளரும். அந்த வளர்ச்சியை இ.டி.எஃப்.களில் நேரடியாகக் காணலாம்.
6. மியூச்சுவல் ஃபண்டுகளில் நீண்ட கால முதலீட்டாளர் களும், குறுகிய கால முதலீட்டாளர் களும் அடிக்கடி உள்ளே வந்து செல்வதால் ஏற்றயிறக்கம் இருக்கும். இ.டி.எஃப்.பில் அந்தப் பிரச்னை இல்லை.
7. பங்கு சார்ந்த இ.டி.எஃப்.களுக்கு வருமான வரி, பங்குகளைப் போலவே பாவிக்கப்படும். கடன் சார்ந்த இ.டி.எஃப்.களுக்கு, கடன் திட்டங்களைப் போல பாவிக்கப்படும்.
இப்படி எத்தனையோ விஷயங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.
பலவிதமான இ.டி.எஃப்.கள் நம் நாட்டில் உள்ளன. பங்கு சார்ந்தவை, கடன் சார்ந்தவை, துறை சார்ந்தவை, கமாடிட்டி சார்ந்தவை (தங்கம்) என பல வகைகளில் கிடைக்கிறது.
எவ்வகையான முதலீட்டாளர்கள் இ.டி.எஃப்.களில் முதலீடு செய்யலாம்?
இ.டி.எஃப். எதை அடிப்படையாகக் கொண்டு உள்ளதோ (உதாரணத்திற்கு நிஃப்டி 50 பங்கு குறியீட்டை அடிப்படையாகக் கொண்டுள்ள இ.டி.எஃப்) அந்த பொருள் ஏறுமளவுக்கு, எனக்கு கிடைக்கும் வருமானம் இருந்தால் போதுமானது - கூடவோ, குறையவோ வேண்டாம் என்று நினைப்பவர்கள், அலுத்துக் கொள்ளாமல் முதலீடு செய்ய விரும்புபவர்கள், சந்தையில் உடனே நுழைய வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளவர்கள், சந்தையின்/ குறியீட்டின் ஏற்ற இறக்கத்தைப் பயன்படுத்தி வருமானம் செய்ய நினைப்பவர்கள், ஹெட்ஜ் செய்ய விரும்புபவர்கள் போன்ற முதலீட்டாளர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.
டே டிரேடிங் அல்லது மிகக் குறுகிய காலத்திற்காக வர்த்தகம் செய்பவர்கள், இ.டி.எஃப்-ஐ உலகெங்கிலும் அதிகமாக உபயோகிக்கிறார்கள்.
இந்தியாவில் இ.டி.எஃப்.களில் முதலீடு செய்யும்போது கவனிக்க வேண்டியவை என்னென்ன?
இந்தியாவில் இ.டி.எஃப்.கள் இப்போதுதான் பிரபலமாகி வருகிறது. எனவே, சில இ.டி.எஃப்.கள் வர்த்தகமாகும் அளவு (volume) குறைவாக உள்ளது. முதலீட்டாளர்கள் இ.டி.எஃப்.களை முதலீடு செய்ய தேர்வு செய்யும்போது, தினசரி வர்த்தகமாகும் அளவை முக்கியமாகக் கவனிக்க வேண்டும். மேலும், அத்திட்டத்தை நிர்வாகம் செய்ய வசூலிக்கப்படும் தொகை, அதை நிர்வகிக்கும் நிறுவனம், அத்திட்டத்தின் செயல்பாடு, எந்தக் குறியீட்டை அடிப்படையாகக் கொண்டுள்ளதோ அக்குறி யீட்டை தொடர்ச்சியாக மிகச் சரியாக பிரதிபலிக்கிறதா என்பனவற்றையும் கவனிப்பது அவசியம்.
நம்மில் பலருக்கு ஒரு சந்தேகம் எழும். 'இண்டெக்ஸ் மியூச்சுவல் ஃபண்டு’களுக்கும் இ.டி.எஃப்-களுக்கும் என்ன வித்தியாசம் என்பதுதான் அது. இரண்டுமே குறியீட்டை அடிப்படையாகக் கொண்டவைதான் என்றாலும், நிர்வகிக்கப்படும் விதம், வர்த்தகம் செய்யப்படும் விதம், ஃபண்டு செலவு சதவிகிதம், என்.ஏ.வி அறிவிப்பு போன்ற அனைத்தும் வித்தியாசப்படும். பல கோணங்களில் இருந்து பார்க்கும்போது, இ.டி.எஃப். இண்டெக்ஸ், மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களைவிடச் சிறந்தது என்றே சொல்ல வேண்டும். 'பங்கு சார்ந்த, கடன் சார்ந்த, துறை சார்ந்த மற்றும் தங்கம் சார்ந்த இ.டி.எஃப்.கள் கிடைக்கின்றன. சமீப காலத்தில் பெஞ்ச்மார்க் மியூச்சுவல் ஃபண்டைப் போல இ.டி.எஃப்.களை முதன்மையான தொழிலாகக் கொண்டு மோத்திலால் ஆஸ்வால்  மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் களமிறங்கியுள்ளது.
இந்தியாவில் தற்போது எண்ணிக்கையில் அதிகமாக இருக்கும் இ.டி.எஃப். திட்டங்கள் தங்கம் சார்ந்தவைதான். கோல்டு இ.டிஎஃப். திட்டங்களில் கோல்டுபீஸ், நிஃப்டி 50-ஐ அடிப்படையாகக் கொண்ட நிஃப்டி பீஸ், வங்கி குறியீட்டை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் பேங்க் பீஸ் போன்ற இ.டி.எஃப்.கள் பிரபலமாக இருக்கின்றன. ஜூனியர் நிஃப்டியை வைத்து ஜூனியர்பீஸ், சி.என்.எக்ஸ். மிட்கேப் குறியீட்டை வைத்து எம்-100-ம் சமீப காலமாகப் பிரபலமாகி வருகிறது. இது தவிர இன்ப்ஃராபீஸ், லிக்விட்பீஸ் போன்றவையும் வர்த்தகமாகிறது. வெளிநாட்டுக் குறியீடுகளை வைத்தும் இந்தியாவில் இப்போது ஹேங்செங்பீஸ் மற்றும் நாஸ்டாக்-100 போன்ற இ.டி.எஃப்.களும் கிடைக்கின்றன.
(படி ஏறுவோம்)

Saturday, July 16, 2011

புத்திசாலிகளின் புதிய பாடம்! - லாபம் ஈட்டவும் அடகு வைக்கலாம்!

புத்திசாலிகளின் புதிய பாடம்! - லாபம் ஈட்டவும் அடகு வைக்கலாம்!

டகு... போலீஸ் ஸ்டேஷன், கோர்ட் படிக்கட்டு என வாழ்க்கையில் போகவே கூடாத இடங்களின் வரிசையில் ஒருகாலத்தில் அடகு வைப்பதுவும் இருந்தது. ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது; கருத்துகளும் மாறிவிட்டது. ஓர் ஆத்திர அவசரத்துக்கு யாரிடமும் கையேந்தாமல் நம்மிடம் இருக்கும் நகைகளையோ, சொத்துகளையோ அடகு வைத்து நிலைமையைச் சமாளிப்பதே நல்லது என்ற எண்ணம் எல்லோருக்கும் ஏற்பட்டு விட்டது. இப்போது அடுத்தகட்டமாக அவசர நிலைமைகளைச் சமாளிப்பதற்காக மட்டுமின்றி, லாபம் சம்பாதிக்கும் ஒரு வழியாகவும் அடகு வைப்பதைப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள் புத்திசாலிகள்.
தனிநபர் கடன், கிரெடிட் கார்டு கடன், வீட்டுக் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களுக்கு கொடுக்கும் வட்டியைவிட அடமானக் கடனுக்கு குறைவான வட்டி என்பதால் அதன் மூலம் தங்கள் சுமையைக் குறைத்துக் கொள்கிறார்கள். இன்னும் சிலரோ ஒருபடி மேலேபோய் தங்கள் சொத்தை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு ஒரு வழியாகவே அடகு வைப்பதை மாற்றியிருக்கிறார்கள்.
சுருக்கமாகச் சொல்வதென்றால் குறைந்த வட்டியில் அடகு வைத்து, அதில் வரும் வருமானத்தைக் கொண்டு முதலீடு செய்து அதிக லாபம் பார்க்க முடியும். அல்லது அதிக வட்டி கட்டுவதிலிருந்து நமது சுமையைக் குறைத்துக் கொள்ள முடியும். அல்லது சொத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முடியும். யோசித்துப் பார்த்தால் இன்னும் எத்தனையோ விதங்களில் அடகு வைப்பது லாபம் தரக்கூடியதாகவே இருக்கிறது.
இப்படி நல்வாய்ப்புகளை வழங்குவதாக மாறியிருக்கிறது அடகு. இந்நிலையில் எவற்றையெல்லாம் அடகு வைக்கலாம், அடகு வைக்கும்போது எதிலெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்பதைப் பற்றியும் சொன்னால், அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் அவற்றைப் பற்றி வரிசையாகக் கொடுத்திருக்கிறோம், படித்துப் பயனடையுங்கள்!

தங்கத்தை தாராளமாக 'அடகின் ராணி’ என்றே சொல்லலாம். காரணம் மற்ற எந்த கடன் வாங்குவதை விடவும் டக்கென்று நகையை அடகு வைத்து கடன் வாங்கிவிடலாம் என்பதால்தான். நகை இருந்தால் கிட்டத்தட்ட கையில் ரொக்கம் இருப்பதற்குச் சமம்! அதனால்தான் தங்கம் இன்றைக்கும் பளபளக்கிறது!

சாதகங்கள்!

பத்திரங்களையும் ஆவணங்களையும்போல அல்லாமல் சில நிமிடங்களி லேயே தங்க நகையின் தரத்தை யும் மதிப்பையும் சோதித்து அறிந்து கொள்ள முடியும். இந்த கையில் நகையைக் கொடுத்து அந்த கையில் பணத்தை எளிதாக வாங்கி விடலாம்!
கூட்டுறவு உள்ளிட்ட சில வங்கிகளில் அடகு வைக்க வங்கிக் கணக்குக்கூட தேவைப் படாது. கூட்டுறவு வங்கிகளில் ரேஷன் கார்டு நகல் மட்டும் கொடுத்தால் போதும்; உடனடி யாக உறுப்பினராகி, நகைக் கடனைப் பெற்று விடலாம்.
ஒருவர் அதிகபட்சமாக 20 லட்சம் ரூபாய் வரை தாராளமாக நகைக் கடன் பெற முடியும். இருப்பினும் இத்தொகை வங்கிக்கு வங்கி மாறுபடும். தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துக்கு ஏற்ப கடன் தொகையும் மாறுபடும். தற்போது கிராமுக்கு சுமார் 1,400 ரூபாய் வரை கடன் தருகிறார்கள்.
வங்கிகளில் மட்டுமின்றி அடகுக் கடைகள், தனிநபர்கள் என எல்லா இடத்திலும் தங்கம் செல்லுபடியாகும்!

கவனத்தில் கொள்ள வேண்டியவை!
வங்கிகளில் கடன் தொகையில் சுமார் 0.56% செயல்பாட்டுக் கட்டணம் இருக்கும்.
வங்கிகளில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே அடகில் வைத்திருக்க முடியும். அதன் பிறகு மீட்டாக வேண்டும். ஆனால், மீட்ட மறுநாளே மீண்டும் அடகு வைத்து நிலைமையைச் சமாளிக்கலாம்.
பொதுவாக மூன்று வருடங்கள் வரை வட்டி, அசல் எதுவும் கட்டவில்லை என்றால் வங்கிகள் நோட்டீஸ் அனுப்பும். வங்கிக்கு வங்கி கடனுக்கான காலம் வேறுபடலாம். குறிப்பிடப்பட்ட தேதியில் கடனைக் கட்டவில்லை என்றால் நகை ஏலத்துக்குப் போய்விடும்.
தனியார் நிதி நிறுவனங் களில் வட்டி மிக அதிகம். சில தனியார் நிறுவனங்களில் முதல் மூன்று மாதங்களுக்கு ஒரு வட்டியும், அதன் பிறகு மிக அதிக வட்டியும் வசூலிக் கிறார்கள். இதில் கொடுமை, மூன்று மாதங்கள் தாண்டிய பிறகுதான் அதிக வட்டி விதிக் கிறார்கள் என்றாலும், கடன் வாங்கிய முதல் நாளிலிருந்தே அந்த அதிக வட்டியை கணக்குப் பண்ணி கறந்து விடுகிறார்கள்!
தனியார் நிதி நிறுவனங் களில் நகை அடமானம் வைக்கும் சூழ்நிலை ஏற்பட்டால், விதிமுறைகளை ஒரு முறைக்கு இரு முறை படித்து பார்த்துவிட்டு கையெழுத்து போடவும்.
தனிநபர்கள், பான் புரோக்கர்கள் ஆகியோரிடம் அடகு வைப்பதை கடைசிக் கட்டமாக வைத்துக் கொள்ளவும்.

வரிச் சலுகை!    
நகை அடமானக் கடனுக்கு மாதச் சம்பளம் வாங்கும் நபர்களுக்கு வரிச் சலுகை கிடையாது. ஆனால், பிஸினஸ் செய்யும் நபர்களுக்கு வட்டியை லாபத்தில் கழித்துக் கொள்ளலாம். அதாவது இந்தத் தொகையை தொழில் செலவில் கணக்கு காண்பித்து, சலுகை பெறலாம். நகைக் கடன் அத்தாட்சி கடிதம் மற்றும் வட்டி ரசீது போன்றவைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது அவசியம்.                                  
-பானுமதி அருணாசலம்


கையில் காசில்லை; தவிர்க்க முடியாத தேவைக்கு பணம் தேவை. இந்த மாதிரி சமயங்களில் சொத்து இருந்தால் கவலையில்லை. வீடோ, மனையோ, ஃப்ளாட்டோ அதன் மதிப்புக்கேற்றவாறு அடமானம் வைத்து பணம் பெற்றுக் கொள்ளலாம். வாங்கிய கடனை வட்டியோடு அசலையும் ஒவ்வொரு மாதமும் கட்டினால் சொத்தும் கையை விட்டுப் போகாது; நம் பிரச்னையும் தீரும்.
வீட்டை அடமானம் வைப்பது என்று முடிவு செய்யும் பட்சத்தில் தனிப்பட்ட ஆட்களிடம் அடமானம் வைப்பதைவிட வங்கிகளில் அடமானம் வைப்பது பாதுகாப்பானது. தனியார் வங்கிகளில் தாராளமாக கடன் கிடைக்கும். ஆனால் வட்டி அதிகமாக இருக்கும். பொதுத்துறை வங்கிகளில் நிறைய அலைய வேண்டியிருந் தாலும் வட்டி குறைவு.  
சாதகங்கள்!
ஜாமீனாக நம் சொத்தைக் கொடுப்பதால் கடன் எளிதாகக் கிடைக்கும்.
மாதத் தவணை முறை என்பதால் கடன் கட்டுவதில் அதிக சிரமம் இருக்காது.
அடமானம் வைத்திருந்தாலும், அந்த வீட்டில் குடியிருக்கலாம். வாடகைக்கு விடுவதிலும் பிரச்னை இருக்காது.
அடிப்படைத் தகவல்கள்!
வீடு/மனை உள்ளாட்சி அமைப்பின் முறையான அங்கீகாரம் பெற்றதாக இருக்க வேண்டும்.
வங்கியின், சொத்துகள் தொடர்பான மதிப்பீட்டாளர் ஆய்வு செய்து சொத்தின் மதிப்பை தீர்மானம் செய்வார். அதனடிப்படையில் வங்கி கடன் வழங்கும்.
கடன் தொகை!
சொத்தின் மதிப்பில் ஐம்பது சதவிகிதம் வரை அடமானக் கடன் பெறலாம். குறைந்தது ஒரு லட்சத் திலிருந்து அதிகபட்சம் ஒரு கோடி ரூபாய் வரை கடன் கிடைக்கும். இதிலும் நகர்ப்புறம், கிராமப்புறம் என அடமானத் தொகை வேறுபடும்.
சொத்தின் மதிப்பில் பாதி கடன் தொகையாகக் கிடைக்க வாய்ப்புள்ளது என்றாலும், கடனைத் திருப்பிச் செலுத்தும் திறனைப் பொறுத்தே கடன் தொகை தீர்மானமாகும். மாதச் சம்பளம் பெறுகிறவர் எனில் அவருடைய திருப்பிச் செலுத்தும் திறன் 60% என பொதுவாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
கடன் தொகை மற்றும் திரும்பச் செலுத்தும் திறன், இதில் குறைந்தபட்ச தொகை எதுவோ அந்த அளவுக்கே கடன் கிடைக்கும்.
கடனை அதிகபட்சம் 84 மாதங்கள் வரை திரும்பக் கட்டலாம்.

தகுதி!
கடனுக்கு விண்ணப் பிப்பவர் குறைந்தபட்சம் இரண்டு வருடங்களாவது நிரந்தர பணியில் இருக்க வேண்டும்.
சொந்தத் தொழில் எனில் மூன்று வருடங்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்திருக்க வேண்டும். இல்லையெனில் சம்பந்தப்பட்ட வங்கியில் ஆறு மாதங்களாவது வாடிக்கையாளராக இருக்க வேண்டும்.
வயது வரம்பு 18 லிருந்து 60 வரை. சில வங்கிகளில் 21 லிருந்து 60 வரை..
தேவையான ஆவணங்கள்!
பட்டா, சொத்து மதிப்பு சான்றிதழ், 30 வருட வில்லங்கச் சான்றிதழ், தாய்ப் பத்திரம், கிரயப் பத்திரம், சொத்துவரி ரசீது, முகவரிச் சான்று, அடையாளச் சான்று.
வட்டி விகிதம்!
மாறுபடும் வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படும். வட்டி 12-16% வரை.
- நீரை.மகேந்திரன்


காலத்துக்கேற்ப மதிப்பு உயர்ந்து, பிற்காலத்திற்குப் பயன்படும் என்பதால்தான் பங்குகள், மியூச்சுவல் ஃபண்டுகள், ஃபிக்ஸட் டெபாசிட் போன்றவற்றில் முதலீடு செய்கிறோம். திடீரென நமக்கு பணம் தேவைப்பட்டால் இவற்றில் ஏதாவது ஒன்றை விற்று, செலவை சமாளிப்பது ஒரு வழி. இதைவிட மிகச் சிறந்த வழி, இந்த நிதி ஆவணங்களையே அடமானம் வைத்து, கடன் பெறுவது!
பங்குகள்!
பங்குகளைப் புரோக்கிங் நிறுவனங்களிடமோ அல்லது வங்கிகளிலோ அடமானம் வைக்கலாம். வங்கிகளில் வட்டி சற்று குறைவாக இருக்கும். எந்த பங்குகளுக்கு கடன் தரமுடியும் என்பதை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள்தான் முடிவு செய்யும். பங்குகளின் மதிப்பில் அதிகபட்சம் 50% வரை கடன் கிடைக்க வாய்ப்புண்டு. அடமானத்தில் இருக்கும் பங்குகளின் மதிப்பு 10% சதவி கிதத்துக்கும் கீழ் குறையும் போது, அதற்கு இணையான தொகையை நாம் செலுத்த வேண்டியிருக்கும்.
மியூச்சுவல் ஃபண்ட்!
வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களிடம் மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்களைக் கொடுத்து கடன் வாங்க முடியும். மியூச்சுவல் ஃபண்டின் தற்போதைய மதிப்பில் அதிகபட்சம் 50% வரை கடன் கிடைக்க வாய்ப்புண்டு.
ஏறக்குறைய இதே நடைமுறைதான் தேசிய சேமிப்பு பத்திரம் மற்றும் இதர பத்திரங்களுக்கும்.

ஃபிக்ஸட் டெபாசிட்!
ஃபிக்ஸட் டெபாசிட்டுக் கான ஆவணத்தைக் கொடுத்து வங்கிகளில் எளிதில் கடன் வாங்கலாம். ஃபிக்ஸட் டெபாசிட்டில் இருக்கும் தொகையில் அதிக பட்சம் 90% வரை கடன் கிடைக்கும். வட்டியைப் பொறுத்தவரை ஃபிக்ஸட் டெபாசிட் மூலம் கிடைக்கும்  வட்டியைவிட கூடுதலாக ஒரு சதவிகிதம்தான் இருக்கும். கடனைத் திரும்பச் செலுத்தத் தவறினால், முதலீடு செய்திருக்கும் காலம் முடி வடைந்தவுடன் வட்டி போக மீதித்தொகையை  திருப்பித் தருவார்கள்..
இன்ஷூரன்ஸ்!
இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுத்த அதே நிறுவனத்திடமே அடமானம் வைத்து கடன் வாங்கிக் கொள்ளலாம். குறிப் பிட்ட டிரெடிஷனல் மற்றும் யூலிப் பாலிசிகளுக்கு மட்டுமே கடன் கிடைக்கும். டேர்ம் பாலிசி போன்றவற்றுக்கு கிடைக்காது. யூலிப் பாலிசியைப் பொறுத்தவரை அதன் என்.ஏ.வி. மதிப்பில் அதிகபட்சம் 40% வரை கடன் வாங்கலாம். டிரெடிஷனல் பாலிசியில் சரண்டர் மதிப்பில் 90% வரை கடன் பெறலாம்.
சாதகங்கள்!
ஃபிக்ஸட்டைப் பொறுத்த வரை அதிவிரைவில் கடன் கிடைத்துவிடும்.
நகை, வீடு போன்ற சென்டிமென்ட் சமாசாரம் இவற்றில் இருக்காது.
இன்ஷூரன்ஸில் கிடைக்கும் தொகை குறைவாக இருந்தாலும் வட்டி மிகவும் குறைவு.
- வா.கார்த்திகேயன்.


Source - Vikatan Magazine

முதற்படி முதலில் படி! - 33

முதற்படி முதலில் படி!

ஷேர் மார்க்கெட்டில் நுழைய விரும்பும் புதியவர்களுக்கான வழிகாட்டித் தொடர்!
கடந்த சில வாரங்களாக பங்குகளை மதிப்பிடுவது எப்படி என்பது பற்றி கண்டறிந்தோம். இவ்வாரம் பங்குச் சந்தை வியூகம் (strategy) பற்றி பார்ப்போம். நம்மில் பலர் வாழ்க்கையில் பெரும் வெற்றிகளை சந்தித்திருப்போம். அது பள்ளியில் ஆகட்டும், கல்லூரியில் ஆகட்டும், வேலையில், தொழிலில், வாழ்க்கையில் என அடுக்கிக் கொண்டே செல்லலாம். அவற்றிற்கெல்லாம் முக்கிய காரணம் என்னவென்று சற்று ஆராய்ந்து பாருங்கள். பெரும்பாலும் நீங்கள் கடைப்பிடித்த வியூகமாகத்தான் இருக்கும். இதனை சிலர் செயல்திட்டம் என்கிறார்கள். இன்னும் சிலர் உத்தி என்றும், தந்திரம் என்றும் சொல்கிறார்கள். நாம் வியூகம் என்போம்.
பொதுவாக வியூகம் என்பது எப்போது தேவை? போர்க்களத்தில்தான். போரில் எப்படி ஜெயிப்பது என்று வரும்போது நமக்கு ஒரு செயல்திட்டம் வேண்டும். இந்த செயல்திட்டத்தை நிறைவேற்ற வழி அமைத்துக் கொடுப்பதுதான் வியூகம். பங்குச் சந்தை என்பது ஒரு போர்க்களம் என்று சொல்கிற அளவுக்கு பயங்கரமான விஷயமில்லை என்றாலும், நீங்கள் ஒரு வெற்றிகரமான முதலீட்டாளர் ஆவதற்கு சரியான வியூகம் தேவை. பங்குச் சந்தை முதலீட்டில் பலரும் பலவிதமான வியூகங்களைப் பயன்படுத்துவார்கள். மிகக் குறுகிய காலம், குறுகிய காலம், நடுத்தர காலம், நீண்ட காலம் என முதலீட்டாளரின் கால அளவைப் பொறுத்து வியூகம் மாறுபடும். நாம் இங்கு பார்க்கப் போவது நீண்டகால (ஐந்து வருடத்திற்குமேல்) முதலீட்டாளர்களுக்கான வியூகத்தைப் பற்றித்தான்.
இத்தொடரில் சில மாதங்களுக்கு முன்பு வெவ்வேறு முதலீட்டு யுக்திகள் பற்றி குறிப்பாக குரோத் இன்வெஸ்ட்டிங், வேல்யூ இன்வெஸ்ட்டிங், கான்ட்ரா இன்வெஸ்ட்டிங் மற்றும் பேஸிவ் இன்வெஸ்ட்டிங் குறித்துப் பார்த்தோம். இவற்றிற்கும் மேலாக பொதுவான வியூகங்கள் உள்ளன. அவற்றைப் பற்றி இப்போது பார்ப்போம்.
வியூகம் 1
அன்றாட வாழ்விற்கு மற்றும் குறுகிய காலத்திலேயே தேவைப்படக்கூடிய பணத்தை பங்குகளில் முதலீடு செய்யாதீர்கள்.
வியூகம் 2
போர்ட்ஃபோலியோ அலோகேஷன் என்பது மிக முக்கியமான ஒன்று. உங்களது போர்ட்ஃபோலியோவில் அவசரத் தேவைக்கான லிக்விட் பணம், நிரந்தர வைப்புநிதி திட்டங்கள், அரசாங்க பாண்டுகள், நிலம், தங்கம், பங்குகள் என அனைத்தும் வயதிற்கேற்ப/தேவைகளுக்கு ஏற்ப இருக்கட்டும்.
வியூகம் 3
போர்ட்ஃபோலியோ பேலன்ஸிங் என்பது முக்கியமான ஒன்று. உங்கள் வயதிற்கேற்ப, ரிஸ்க் எடுக்கும் திறனிற்கேற்ப, உங்கள் செல்வத்தின் மதிப்பிற்கு ஏற்ப உங்களது போர்ட் ஃபோலியோவை வருடத்திற்கு ஒரு முறையாவது பேலன்ஸ் செய்து கொள்ளுங்கள்.
வியூகம் 4
நீங்கள் பங்குச் சந்தைக்கு புதியவராக இருக்கும் பட்சத்தில், பெரிய நிறுவனப் பங்குகளில் அல்லது உங்களுக்கு மிகவும் பரிச்சயமான நிறுவனப் பங்குகளில் மட்டுமே முதலீடு செய்யுங்கள். நிறுவனங்கள் பற்றிய பரிச்சயம் இல்லாதவர்கள் இ.டி.எஃப்-ல் முதலீடு செய்யலாம்.
வியூகம் 5
நீங்கள் விரும்பிய பங்குகளை விரும்பிய விலையிலேயே வாங்குங்கள். விரட்டிச் சென்று வாங்காதீர்கள்.
வியூகம் 6
பங்கின் உண்மையான மதிப்பைவிட விலை குறைவாகக் கிடைக்கும்போது மட்டுமே வாங்குங்கள். அதேபோல் பங்கின் விலை உச்சத்தைத் தொட்டு, எந்தவிதமான வேல்யூவேஷன் வரம்புக்குள்ளும் வராமல் இருக்கும்போது துணிந்து விற்றுவிடுங்கள்.
வியூகம் 7
தரம், நிரந்தரம்! எப்போதும் தரமான நிறுவனப் பங்குகளையே வாங்குங்கள். கோடி ரூபாய் லாபம் கிடைக்கும் என்று சொன்னாலும் தரமற்ற நிறுவனப் பங்குகளை வாங்காதீர்கள்!
வியூகம் 8
பொறுமை கடலினும் பெரிது! தரமான பங்குகளை வாங்கிய பிறகு பொறுமையாகக் காத்திருங்கள்! (நினைவில் கொள்க: பங்கு முதலீடு என்பது சுவாரஸியமற்ற (தீஷீக்ஷீவீஸீரீ) விஷயம்.) குழந்தை பிறந்து, வளர்ந்து, படித்து சம்பாதிப்பதற்குக்கூட 21 வருடங்களுக்கு மேல் ஆகிவிடுகிறது. அவ்வாறு இருக்கும்போது குறைந்தது ஒரு ஐந்து வருடமாவது நாம் வாங்கிய பங்கினை வளர்வதற்கு அனுமதிக்க வேண்டாமா?
வியூகம் 9
நம்பினோர் கைவிடப் படார்! நீங்கள் அலசி ஆராய்ந்து வாங்கிய தரமான பங்குகள் ஒருபோதும் வீண் போகாது! நம்பிக்கையுடன் காத்திருங்கள். திடமான நம்பிக்கை இல்லாமல் (நீஷீஸீஸ்வீநீtவீஷீஸீ) பங்குகளை வாங்காதீர்கள்!
வியூகம் 10
இந்தியா ஒரு வளரும் நாடு என்பதால், டிவிடெண்ட் யீல்ட் குறைவாகத்தான் இருக்கும். இருந்தாலும், டிவிடெண்ட் யீல்டையும் பார்த்து பங்குகளை வாங்குங்கள். ஏனென்றால், ஆரம்ப காலங்களில் அது ஒன்றுதான் உங்களுக்கு அப்பங்கில் இருந்து கிடைக்கும் வருமானம்.
வியூகம் 11

உலகளவில் நிலம் மற்றும் தங்க முதலீட்டை விரும்பு பவர்களில் தமிழர்கள் முன்னணியில் இருப்பார்கள் என நினைக்கிறேன். வேறு முதலீடுகளைப்போல அவை களுக்கும் ரிஸ்க் உண்டு. ஆகவே, அவற்றில் மட்டுமே ஃபோக்கஸ் செய்யாமல், பங்கு முதலீட்டை முன்னிலைக்குக் கொண்டு வாருங்கள்! பங்கு முதலீடு கடந்த இருபது ஆண்டுகளில் சம்பாதித்துக் கொடுத்தது எக்கச்சக்கம். இன்னும் சம்பாதித்துக் கொடுக்க வேண்டியது ஏராளம்!
பங்குச் சந்தை ஒரு கடல் போன்றது. நாம் படகை/கப்பலை எத்திசையில் செலுத்து கிறோமோ, அத்திசையில் செல்வதற்கு கடல் ஒரு தளமாக அமைகிறது. அதுபோல பங்குச் சந்தை நமக்கு ஒரு நல்ல தளம். அதை தளமாக உபயோகித்து நீண்ட கால முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும். ஒரு சிறிய உதாரணத்திற்கு 'பெல்’ (BHEL)போன்ற தரமான நிறுவனங்கள் தற்சமயத்தில் பல காரணங்களினால் மலிவான விலையில் கிடைக்கின்றன. எஃப்.பி.ஓ. வரும்போது இன்னும்கூட சற்று குறைய வாய்ப்பிருக்கிறது. இதுபோன்ற தரமான நிறுவனங்களை நீண்ட கால முதலீட்டாளர்கள் குறித்துக் கொண்டு சிறுக சிறுக வாங்கிச் சேர்க்கலாம்!
பங்குச் சந்தை முதலீட்டில் தேர்ச்சி பெற்று ஒரு வெற்றிகர மான முதலீட்டாளர் ஆவதற்கு வருடங்கள் பல ஆகும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வியூகம் சரிவரும். உங்களுக்கு எந்த வியூகம் பொருந்துகிறது என்று கூர்ந்து கவனித்து, தேர்வு செய்து கொள்ளுங்கள். உங்கள் வியூகம் சரியா, தவறா என்பதை உங்களுக்கு கிடைக்கப் போகும் நஷ்டத்தைப் பொறுத்து தெரிந்து கொள்ளலாம்.
(படி ஏறுவோம்)

Source - Vikatan Magazine