Pages

Monday, July 25, 2011

''குழந்தைகளின் எதிர்காலத்துக்கு இது போதுமா?''

''குழந்தைகளின் எதிர்காலத்துக்கு இது போதுமா?''

சைல்டு மியூச்சுவல் ஃபண்ட்
குழந்தைகளின் எதிர்காலத்துக்குச் சேமிக்காத பெற்றோர்களே இருக்க முடியாது. அது மாதிரியான பெற்றோர்களைக் கவர்வதற்காகவே 'குழந்தைகளின் எதிர்காலத்துக்கு’ என்ற பெயரில் பலவிதமான முதலீட்டுத் திட்டங்கள் உலா வருகின்றன.
இதைப் பார்த்த சில மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களும் குழந்தை களின் எதிர்காலத்துக்கு என சில மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை நடத்தி வருகின்றன. இவற்றின் சாதக, பாதகங்கள் என்ன, இந்த ஃபண்டுகளின் வருமானம் எப்படி, இதில் முதலீடு செய்யலாமா, கூடாதா என்கிற கேள்விகளுக்கான பதிலை இனி பார்ப்போம்.
இந்த வகை ஃபண்டுகளில் மூன்று முதல் பதினெட்டு வயதுக்குள் இருக்கும் சிறுவர்கள் பெயரில்தான் முதலீடு செய்ய முடியும். இந்த வகை ஃபண்டுகள் சிலவற்றில் 'லாக் இன்’ காலம் இருக்கிறது. இன்னும் சில ஃபண்டுகளில் 'லாக் இன்’ காலம் என்று சொல்லாமல், மூன்று வருடத்துக்கு முன்பு எடுத்தால் வெளியேறும் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்கிறது. பொதுவாக, டைவர்சிஃபைட் ஃபண்டுகளில் ஒரு வருடத்துக்குள் பணத்தை வெளியே எடுத்தால், வெளியேறும் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். ஆனால், சைல்டு பிளான்களில் மூன்று வருடத்துக்கு (சில ஃபண்டுகளில் ஏழு வருடம்!) முன்பு எடுக்கும் பட்சத்தில் வெளியேறும் கட்டணத்தைச் செலுத்த வேண்டியிருக்கும்.
இந்த ஃபண்டுகள் கடந்த சில ஆண்டுகளில் அளித்த வருமானத்தைப் பார்த்தால், அப்படி ஒன்றும் பெரிதாக இல்லை. கடந்த ஐந்தாண்டு களில் சராசரியாக 10 சதவிகித வருமானத்தையே தந்திருக் கின்றன. இதற்கு காரணம், தற்போது சந்தையில் இருக்கும் சைல்டு மியூச்சுவல் ஃபண்டுகள் பெரும்பாலும் பேலன்ஸ்ட் மற்றும் கடன் சார்ந்த ஃபண்டு களாகவே இருக்கின்றன.
முழுமையான ஈக்விட்டி ஃபண்டுகளே கிடையாது. குழந்தைகளின் எதிர்காலத் துக்காகச் சேமிக்கிறோம் என்று சொல்லிவிட்டு முழுமையாகக் கடன் திட்டங்களில் முதலீடு செய்வது சிறப்பான முதலீட்டு முடிவாக இருக்க முடியாது.
சாதாரண டைவர்சிஃபைட் ஃபண்டுகளைவிட சைல்டு ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஒன்று, குழந்தைகளின் பெயரில் தான் இந்த ஃபண்ட் இருக்கும். இரண்டாவது, மூன்று வருட காலத்துக்கு முன்பு எடுத்தால் வெளியேறும் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.
இவை தவிர சைல்டு மியூச்சுவல் ஃபண்டுகளை எடுப்பதற்கு வேறு எந்த சிறப்பான காரணமும் இருக்கிற மாதிரி தெரியவில்லை. எனவே, இந்த ஃபண்டுகளில் முதலீடு செய்வது குறித்து ஒருமுறைக்கு இருமுறை யோசித்தே முடிவெடுப்பது நல்லது என்பதே நிதி ஆலோசகர்களின் கருத்து.
அப்படி என்றால் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு என்ன மாதிரியான மியூச்சுவல் ஃபண்டுகளைத் தேர்வு செய்வது என்று நீங்கள் கேட்கலாம். பல வருடங்களாக தொடர்ந்து அதிக வருமானம் தரும் மியூச்சுவல் ஃபண்டுகள் சந்தையில் இருக்கவே செய்கின்றன.
இவற்றில் ஏதாவது ஒரு நல்ல ஃபண்டை தேர்வு செய்து எஸ்.ஐ.பி. முறையில் பத்து முதல் பதினைந்து ஆண்டுகளுக்கு தொடர்ந்து முதலீடு செய்யலாம். இடையில் பணத்தை எடுக்காமல், தொடர்ந்து முதலீடு செய்தாலே போதும், உங்களின் முதலீடு விருட்சமாக வளர்ந்துவிடும்.
- வா.கார்த்திகேயன்.

No comments: