Pages

Monday, May 23, 2011

முதற்படி முதலில் படி! - 25

முதற்படி முதலில் படி!


வேறு எப்படியெல்லாம் மதிப்பீடு செய்யலாம்?
சென்ற வாரம் பி/இ முறையில் எவ்வாறு பங்குகளையும் தொழில்களையும் மதிப்பிடுவது என்று பார்த்தோம்... இவ்வாரம் பிற முறைகளில் மதிப்பீடு செய்வது பற்றி குறிப்பிட்டுள்ளோம்.
புத்தக மதிப்பு முறை மூலம் மதிப்பிடுதல்:
சென்ற வாரம் ஒரு கஸ்டமர் அவர் வாங்கப் போகும் நிறுவனத்தின் தளவாடச் சாமான்களின் மதிப்பைத்தான் கொடுப்பதற்கு தயாராக இருந்தார் என்று கூறினேன் அல்லவா? அவர் சொன்னது கிட்டத்தட்ட அந்த நிறுவனத்தின் புத்தக மதிப்பைத் தான். நிறுவனத்தின் புத்தக மதிப்பில், அவர் அந்நிறுவனத்தை விலைக்கு வாங்க முயன்றார். ஆனால் விற்பவரோ ஒப்புக் கொள்ளவில்லை. நிறுவனத்தின் அல்லது பங்கின் புத்தக மதிப்பை சரியாக கணக்கிட்டு அதன் மூலம் நிறுவனத்தின்/ பங்கின் மதிப்பைக் கண்டறிவதுதான் புத்தக மதிப்பீட்டுமுறை ஆகும்.
புத்தக மதிப்பை வைத்து கணக்கிடுவது எல்லாத் தொழில் களுக்கும் பொருந்தாது. உதாரணத் திற்கு நீங்கள் ஒரு டிபார்ட்மென்ட் ஸ்டோர் வைத்துள்ளீர்கள். அந்த ஸ்டோரை நீங்கள் ஆரம்பித்து 15 வருடங்கள் ஆகிவிட்டன என்று வைத்துக் கொள்வோம். உங்கள் ஸ்டோரின் தற்போதைய தளவாடச் சாமான்களின் மதிப்பு  10 லட்சம் ரூபாய் என்று வைத்துக் கொள்வோம். உங்கள் ஸ்டோரின் ஆண்டு நிகர லாபம் சுமார் 15 லட்சம் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் உங்கள் ஸ்டோரின் புத்தக மதிப்பில், அந்த ஸ்டோரை வெளிநபருக்கு விற்க தயாராக இருப்பீர்களா? சற்று சிந்தியுங்கள்!

ஆக ஒன்றை உறுதி செய்து கொள்ளுங்கள் - ஒவ்வொரு மதிப்பீட்டு முறையும் ஒவ்வொரு விதமான தொழில்களுக்குத்தான் உகந்தது. சேவைப் பொருளாதார நிறுவனங்களுக்கு (சர்வீஸ் இண்டஸ்ட்ரிஸ்) புத்தக மதிப்பீட்டு முறை ஒத்துவராது. கேப்பிட்டல் இன்டென்ஸிவ் என்று சொல்லக்கூடிய அதிகமாக மூலதனம் தேவைப்படும் தொழில்களை (ஷிப்பிங், மின்சாரம் தயாரிப்பு, வங்கி மற்றும் ஃபைனான்ஸ் துறை) புத்தக மதிப்பை வைத்து கணக்கிடலாம்.
அதேபோல் பழைய பொருளா  தார தொழில்கள் பலவற்றை புத்தக மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடலாம். புத்தக மதிப்பைவிட எப்பொழுது குறைவாக வாங்கலாம்? எதுபோன்ற நிறுவனப் பங்குகளை அச்சமயத்தில் வாங்கலாம்?
வளர்ச்சி அதிகம் இல்லாத துறைகள்/ பங்குகள், கடன் அதிகம் உள்ள நிறுவனங்கள் தங்களது புத்தக மதிப்பைவிட குறைவாக கிடைக்கலாம்.
நம் நாட்டு பொருளாதாரத்தில் பிரச்னைகள் இருக்கும்பொழுதோ அல்லது நல்ல நிறுவனங்களில் பிரச்னைகள் எழும்பொழுதோ அல்லது நல்ல நிறுவனங்களைப் பற்றி அதிகமாக வெளியுலகுக்கு பரிச்சயம் இல்லாமல் இருக்கும் பொழுதோ நிறுவனங்கள்/ நிறுவனப் பங்குகள் தங்களது புத்தக மதிப்பிலிருந்து குறைவாக கிடைக்க வாய்ப்புள்ளது. அது போன்ற சமயங்களில் நல்ல வரலாறு உள்ள தரமான நிறுவனப் பங்குகளாகப் பார்த்து வாங்குவது நல்லது.
மேலும் பல சமயங்களில் நிறுவனங்கள் தங்களது சொத்துக் களை வாங்கிய விலையிலேயே புத்தகத்தில் காண்பித்துக் கொண்டிருப்பார்கள். அதுபோன்ற பங்குகளில் மதிப்பு மறைந்து இருக்கும். அப்பங்குகளை ஆராய்ந் தறிந்து வாங்கினால் நல்ல லாபத்தை ஈட்டலாம்.
கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளில் ரியல் எஸ்டேட் நம் நாட்டில் வெகுவாக உயர்ந்துள்ளது. பல நிறுவனங்கள் இன்னும் தங்களது ரியல் எஸ்டேட்டை அக்காலத்தில் வாங்கிய விலை யிலேயே புத்தகத்தில் காண்பித்துக் கொண்டிருக்கின்றன. சமீப காலத்தில் வடநாட்டில் உள்ள சில
டெக்ஸ்டைல் துறையைச் சார்ந்த பங்குகள் திடீரென்று உயர்வதற்குக் காரணம் - அவற்றின் வசம் உள்ள காலியிடங்களில் குடியிப்பு மற்றும் வர்த்தகக் கட்டடங்களை கட்டி விற்று வருவது அல்லது வாடகைக்கு கொடுத்து வருவதன் மூலம் வருமானம்  ஈட்டுவது தான்.
புத்தக மதிப்பை வைத்து மதிப்பிடும் முறையை முதலீட்டா ளர்கள் கவனத்துடன் பயன்படுத்த வேண்டும். பியர் குரூப் உண்டு பண்ணி, பி/பிவி (பங்கின் சந்தை விலை/ புத்தக மதிப்பு) கண்டுபிடித்து ஒப்பிட்டுப் பார்த்தால், எந்தப் பங்கு முதலீட்டிற்கு உகந்தது என்று தெரிய வரும். தனியாக ஒரு பங்கின் புத்தக மதிப்பை மட்டும் வைத்தோ அல்லது பி/பிவி-யை மட்டும் வைத்தோ முதலீடு செய்யாதீர்கள்! ஏனென்றால் புத்தக மதிப்பைவிட மிகவும் விலை குறைவாகக் கிடைக்கும் சில நிறுவனங்கள் மிகவும் மோசமான நிலையில் இருக்க வாய்ப்புள்ளது. ஆகவே, பியர் குரூப்பை வைத்து ஒப்பிட்டு அல்லது வேறு பங்குகளுடன்/ தொழில்களுடன் வைத்து ஒப்பிட்டு முதலீடு செய்யுங்கள்.
சந்தை மதிப்பு முறை மூலம் மதிப்பிடுதல்:
சென்ற வாரம் ஒருவர் தான் பிளாட் வாங்குவதற்காக சந்தை விலையை ஒப்பிட்டுப் பார்த்ததை கண்டோம் அல்லவா? சந்தையில் மக்கள் வாங்க/ விற்க ரெடியாக இருக்கும் விலையை வைத்து கணக்கிடுவதுதான் இந்த முறை. இந்த முறையில் சாதகமும் உள்ளது;
அதே சமயத்தில் எந்த முறையையும் போல பாதகமும் உள்ளது. முதலில் பாதகத்தைப் பார்த்து விடுவோம்.
சந்தை விலை பலவற்றை வைத்து நிர்ணயிக்கப்படுகிறது - அவற்றில் முக்கியமான ஒன்று டிமாண்ட் மற்றும் சப்ளை. சந்தை உச்சத்திற்கு செல்வதும் பிறகு பாதாளத்திற்கு வருவதும் சகஜமான ஒன்று. ஆனால் நம்மில் இன்னும் பல அமெச்சூர் முதலீட்டாளர்கள் உச்சியில் வாங்குவதும் பிறகு திட்டிக்கொண்டு பாதாளத்தில் விற்பதும் சகஜம்.
சந்தை உச்சியில் இருக்கும்போது பல பங்குகளின்/ நிறுவனங்களின் மதிப்பு, டிமாண்ட் அதிகமாக இருப்பதால், எட்ட முடியாத தூரத்தில் இருக்கும். இதுபோல் அதிக விலையில் வாங்கி பிறகு வருத்தப்படுவது சிறிய முதலீட் டாளர்கள் மட்டும் அல்ல - டாடா போன்ற நிறுவனங்களுக்கும் அனுபவம் உண்டு.
2007-ல் டாடா ஸ்டீல் நிறுவனம் பிரிட்டனைச் சார்ந்த கோரஸ் நிறுவனத்தை 12.2 பில்லியன் டாலருக்கு சந்தை உச்சத்தில் வாங்கியது. அதேபோல் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பிரிட்டனில் உள்ள ஜேகுவார் நிறுவனத்தை 2008-ல் 2.3 பில்லியன் டாலருக்கு வாங்கியது. பிறகு நமது பங்குச் சந்தை சரிந்த பொழுது இந்நிறுவனப் பங்குகளும் வெகுவாகச் சரிந்தன. ரத்தன் டாடா பிறகு தனது நேர்காணலில் ஒருமுறை கூறும்போது - அந்த இரண்டு நிறுவனங்களையும் இன்னும் விலை குறைத்து வாங்கி யிருக்கலாம் என்று கூறினார்.
ஆகவே சந்தை விலை உண்மையான விலைதானா என்று அறிந்து வாங்க வேண்டும்.

இந்த முறையில் சாதகம் என்ன?
பொருளாதாரத்தில் அல்லது குறிப்பிட்ட துறையில்/ நிறுவனத்தில் பிரச்னை ஏற்படும்போது அந்தப் பங்குகளுக்கு/ நிறுவனங்களுக்கு டிமாண்ட் குறைவாக இருக்கும். அதனால் அதுபோன்ற சமயங்களில் தங்களது உண்மையான மதிப்பி லிருந்து மிகவும் விலை குறைவாகக் கிடைக்கும்.
உதாரணத்திற்கு எஸ்.கே.எஃப் பியரிங்ஸ் என்ற பியரிங்ஸ் தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனப் பங்கின் விலை ரூ 125 அளவிற்கு 2008-ல் சரிந்தது. இன்று அதன் விலை ரூ 600+. அதேபோல் 2008-09 சரிவில் வோல்டாஸ் நிறுவனத்தின் பங்கு ரூ 33 வரை சரிந்து வந்தது (2007-08 உச்சத்தில் ரூ 250-ற்குமேல் சென்றது). அதன் தற்போதைய விலை (ரூ 250-ற்கு மேல் சென்றுவிட்டு) ரூ 165+.
ஆகவே சந்தை மதிப்பு மிகவும் வெளிப்படையான மதிப்பு என்றாலும், சந்தையை நமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள தெரிந்திருக்க வேண்டும்.
(படி ஏறுவோம்)
Source - Vikatan Magazine

கல்விக் கடன் கம்ப்ளீட் அலசல்!

கல்விக் கடன் கம்ப்ளீட் அலசல்!


பிளஸ் டூ ரிசல்ட் வந்தாச்சு... அடுத்து காலேஜில் சேர வேண்டும். கல்லூரிகள் பக்கம் போனால் அவர்கள் கேட்கும் கட்டணமோ சாதாரணமானவர்களால் கட்டக்கூடிய அளவுக்கு இல்லை... இந்நிலையில் இருக்கும் ஒரே வழி கல்விக்கடன் வாங்குவதுதான். ஆனால் அதிலும் ஆயிரத்தெட்டு சந்தேகங்கள்... எந்த படிப்புக்கெல்லாம் கடன் கிடைக்கும், எவ்வளவு தொகை கிடைக்கும், வட்டி எவ்வளவு? அதற்கான தகுதி என்ன என ஏராளமான சந்தேகங்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மனதில் இருக்கும். அதற்கான விடைகளைப் பார்ப்போம்.
எந்தெந்த படிப்புகளுக்கு கிடைக்கும்?

கல்விக் கடன் என்பது உயர்கல்வி படிக்க கிடைக்கும் கடன். மருத்துவம், பொறியியல், எம்.பி.ஏ., எம்.சி.ஏ., பி.காம்., பி.எஸ்சி.,  போன்ற படிப்பு களுக்கு கல்விக் கடன் வாங்கிக் கொள்ளலாம். அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் உள்ள அனைத்து படிப்புகளுக்கும் கடன் வாங்கிக் கொள்ளலாம். சில வங்கிகளில் கலைப் படிப்புகளுக்கு கல்விக் கடன் இல்லை என்று சொல்ல வாய்ப்பு இருக்கிறது. அவர்கள் இதுபோன்ற படிப்புகளுக்கு எளிதாக வேலை கிடைக்காது என்பதால் கடன் கொடுக்க மறுக்கும் நிலை இருக்கிறது. அதுபோன்ற நிலையில் சற்று போராடினால் மட்டுமே கடன் வாங்க முடியும். பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு டிப்ளமோ படிப்பவர்களுக்கும் கல்விக் கடன் உண்டு.
எவ்வளவு கடன் கிடைக்கும்?
நான்கு லட்சம் ரூபாய் வரை உத்தரவாதம் எதுவும் இல்லாமல் கடன் கிடைக்கும். 4 லட்சம் முதல் 7.5 லட்சம் வரை பெற்றோரில் ஒருவர் தனிநபர் உத்தரவாதம் கொடுக்க வேண்டிவரும். 7.5 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் என்றால் சொத்து ஜாமீன் கொடுக்க வேண்டும். இது உள்நாடு மற்றும் வெளிநாடு சென்று படிக்கும் மாணவர்களுக்கு என அனைத்துக்கும் பொருந்தும்.
எப்படி வாங்குவது?
பெற்றோருக்கு எந்த வங்கியில் கணக்கு இருக்கிறதோ, அந்த வங்கி யில் கல்விக் கடன் பெறலாம். சில நகரங்களில் ஏதாவது ஒரு வங்கி, கல்விக் கடன் தருவதற்கென்றே ஒதுக்கப்பட்டிருக்கும். அப்படி இருக்கும்பட்சத்தில் அதில் கணக்கு ஆரம்பித்து, கல்விக் கடன் வாங்கிக் கொள்ளலாம்.

எந்த செலவுக்கு எல்லாம் கிடைக்கும்?
கல்விக் கட்டணம், விடுதி வாடகை மற்றும் சாப்பாட்டுச் செலவு, சீருடை, புத்தகங்கள், கல்விச் சுற்றுலா, மாணவருக்கு இன்ஷூரன்ஸ் பிரீமியம், கம்ப்யூட்டர்/லேப்டாப் உள்ளிட்டவைகளுக்கு கல்விக் கடன் வாங்கிக் கொள்ளலாம்.
எப்படி கடன் வாங்குவது?
கல்லூரியில் இருந்து கல்விக் கட்டணம், விடுதி வாடகை, உணவுக் கட்டணம், சீருடைகளுக்கு எனத் தனித்தனியாக எவ்வளவு ஆகும் என்று போனஃபைட் சான்றிதழில் குறிப்பிட்டு வாங்கிக் கொள்ள வேண்டும். அதன்பிறகு வங்கியை அணுகி விண்ணப்பிக்க வேண்டும். அதற்குரிய காசோலை கல்லூரி பெயரில் கொடுக்கப்படும். புத்தகங்கள், கம்ப்யூட்டர் போன்றவற்றை வாங்கிவிட்டு அதற்குரிய ரசீதை வங்கியில் கொடுத்தால் அந்த பணம் கிடைத்துவிடும். இது மாணவரின் கடன் கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படும்.
எப்போது கடனை திரும்பக் கட்டுவது?
படிப்பு முடிந்து ஒரு வருடத் துக்குப் பிறகு கடனைத் திருப்பிச் செலுத்த ஆரம்பிக்கலாம். ஆனால், வேலை கிடைத்துவிட்டால் உடனே கடனைக் கட்ட ஆரம்பித்துவிட வேண்டும். முன்பு படிக்கிற காலத்தில் கடனுக்கான வட்டி கணக்கிடப்பட்டு, வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால், 2009-க்குப் பிறகு கொடுக்கப்படும் கல்விக் கடனுக்கு, பெற்றோரின் ஆண்டு வருமானம் 4.5 லட்சம் ரூபாய்க்குள் இருந்தால் படிக்கிற காலத்திற்கான வட்டியை மத்திய அரசே வங்கிகளுக்குக் கொடுத்து விடுகிறது. வெளிநாடுகளில் படிக்கிற மாணவர்களுக்கு இந்தச் சலுகையை வங்கிகள் தருவதில்லை. ஆனால், வெளிநாட்டுப் படிப்புக்கும், உள்நாட்டுப் படிப்புக்கும் ஒரே வட்டி விகிதம்தான்.
விரைவாக கடனைத் திருப்பிச் செலுத்தும் மாணவர்களுக்கு 1% வட்டி குறைக்கப்படுகிறது. மாணவிகளுக்கு வட்டியில் சுமார் 0.5% சலுகை அளிக்கப்படுகிறது. கடனை மாதத் தவணையாகக் கட்ட வேண்டும் என்பதில்லை. மாதத் தவணை காலம்போக எப்போதெல்லாம் பணம் கிடைக்கிறதோ, அப்போ தெல்லாம் அந்த தொகையைக் கட்டி கடன் பளுவை குறைத்துக் கொள்ளலாம்.
தேவையான ஆவணங்கள்!
கல்லூரி போனோஃபைட் சான்றிதழ்.
கட்டணம் குறித்த தெளிவான தகவல்கள்.
பெற்றோரின் வருமானச் சான்றிதழ்.
இருப்பிடச் சான்றிதழ்.
பள்ளி மாற்று சான்றிதழ்.
10 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்.
பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட தொழிற்கல்வி என்றால் கவுன்சிலிங் அழைப்புக் கடிதம், சேர்க்கைக் கடிதம்  உள்ளிட்டவை தேவைப்படும்.
வெளிநாட்டு படிப்பு என்றால் கூடுதலாக விசா, எந்த கல்லூரியில் படிக்க இருக்கிறார், கல்லூரி மற்றும் படிப்புக்கான அங்கீகார விவரம் போன்றவற்றையும் கொடுக்க வேண்டும்.

கவனத்தில் கொள்ள வேண்டியவை!
எக்காரணம் கொண்டும் மாணவர்கள் ஏதாவது ஒரு பாடத்தில்கூட ஃபெயிலாகி விடக்கூடாது. ஏதாவது ஒரு பாடத்தில் ஃபெயிலானால்கூட சில வங்கிகள் அடுத்த ஆண்டுக் கான கடன் தருவதை நிறுத்திவிடும் அபாயம் இருக்கிறது. அதன்பின் அந்த பாடத்தை மீண்டும் எழுதி பாஸான பிறகுதான் கடன் கிடைக்கும்.
ஏதாவது ஒரு காரணத்துக்காக படிப்பை பாதியில் நிறுத்தினாலும் தொடர்ந்து கடன் கிடைக்காமல் போக வாய்ப்புண்டு. அதுவரையில் வாங்கிய கடனை வட்டியோடு திரும்பச் செலுத்த வேண்டிவரும்.
வரிச் சலுகை!
திரும்பச் செலுத்தும் கல்விக் கடனில் 80-இ பிரிவின் கீழ் வட்டிக்கு மட்டுமே வரிச் சலுகை உண்டு. திரும்பச் செலுத்தும் அசலுக்கு வரிச்சலுகை இல்லை. யார் படிப்புக்காக கல்விக் கடன் பெறப்பட்டுள்ளதோ, அவருக்குதான் வரிச் சலுகை உண்டு. கல்விக் கடனைக் திரும்பச் செலுத்த ஆரம்பித்து, எட்டு வருடங்கள் வரை மட்டுமே வருமான வரி விலக்கு கிடைக்கும்.

கடன் தர தயக்கம்
கல்விக் கடன் கொடுப்பதும், கொடுக்காமல் இருப்பதும் பொதுவாக அந்தந்த வங்கியின் மேலாளரைப் பொறுத்த விஷயமாக இருக்கிறது. குறைவாக மதிப்பெண் எடுத்திருப்பவர்களுக்கு கடன் வழங்க வங்கிகள் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால், சட்டப்படி மாணவருக்கு உயர் கல்வி படிக்க கல்லூரியில் அனுமதி கிடைத்துவிட்டாலே அவருக்கு கடன் வழங்க வேண்டும் என்பதுதான் அரசு விதி. இருப்பினும் இந்த விதியை பெரும்பாலான வங்கிகள் சட்டை செய்வதில்லை. அதேபோல் சில படிப்புகளுக்கு எதிர்காலத்தில் வேலைவாய்ப்பு அவ்வளவு பிரகாசமாக இருக்காது என வங்கிகள் நினைக்கலாம். அது போன்ற படிப்புகளுக்கு கடன் கிடைப்பது சற்று கடினம்தான். 
'மாணவர்கள் கடனை சரியாக திருப்பிச் செலுத்துவது இல்லை. இதனால், வாராக் கடன் அதிகரிக்கும்’ என்கிற பயத்தாலும் வங்கிகள் கடன் கொடுப்பதில் தயக்கம் காட்டுகின்றன. என்றாலும், முன்புபோல இல்லாமல் இப்போது நிறைய வங்கிகள் கல்விக் கடனை அதிக அளவிலேயே கொடுத்து வருகின்றன. இந்தியன் வங்கி அடுத்த ஓராண்டில் 1.5 லட்சம் மாணவர்களுக்கு 900 கோடி ரூபாய் கடன் கொடுக்கப் போவதாக அறிவித்துள்ளது. மற்ற வங்கிகளும் கல்விக் கடனை போட்டி போட்டுக் கொண்டு கொடுத்து வருகின்றன.
கொடுக்கும் கடன் மீண்டும் நல்லபடியாக திரும்ப வந்து சேரும் என்கிற நம்பிக்கை மட்டும் வந்துவிட்டால் போதும்; வங்கிகள் கல்விக் கடன் கொடுக்கத் தயங்காது. படித்துவிட்டு வேலைக்கு செல்லும் மாணவர்களும் ஒத்துழைத்தால் மட்டுமே இந்தப் பிரச்னைக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும்'' என்கிறார் முன்னணி பொதுத் துறை வங்கியின் மேலாளர் ஒருவர்.
- செ.திருக்குறள் அரசி

Source - Vikatan Magzine

Monday, May 16, 2011

முதற்படி முதலில் படி! - 24

முதற்படி முதலில் படி!


கடந்த சில இதழ்களில் பங்குகளின் மதிப்பைக் கண்டுபிடிக்க உதவும் பலவிதமான ரேஷியோக்கள் பற்றி பார்த்தோம். அதுபோல் வேறு பல குறியீடுகளையும் பார்த்தோம். இவையெல்லாம் ஒரு பங்கை மதிப்பிட, ஒப்பிட உதவும் எளிதான உபகரணங்கள். ஒரு பங்கை அல்லது ஒரு நிறுவனத்தின் மதிப்பை எவ்வாறு கணக்கிட முடியும்?
விரிவாகக் காணும்முன் சில சந்தேகங்களுக்கு பதில் கண்டு விடுவோம். சமீபத்தில் தனியார் நிறுவன வேலையை விட்டுவிட்டு தொழில் தொடங்க முயற்சி செய்து கொண்டிருக்கும் ஒருவர் ஆலோசனைக்காக வந்திருந்தார். ஏற்கெனவே செயல்பட்டு வரும் ஒரு நிறுவனத்தை வாங்குவதற்காக அவர் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தார். நிறுவனத்தை விற்பவர் அந்நிறுவனத்தின் நிகர லாபத்தைப் போல ஐந்து மடங்கு விலை கேட்பதாகச் சொன்னார். என்னிடம் ஆலோசனை கேட்க வந்தவருக்கோ, ஏன் அவ்வளவு விலை கேட்கிறார் என்று புரியவில்லை. வந்திருந்தவரைப் பொறுத்தமட்டில் வாங்கப் போகும் நிறுவனத்தில் உள்ள உபகரணங்களுக்கும், இடத்திற்கும் பணம் கொடுத்தால் போதும் என்று நினைக்கிறார். தான் புதிதாக அத்தொழிலைத் தொடங்கப் போனால் அவ்வளவுதானே செலவாகும் என்று நினைக்கிறார். அவர் நினைப்பதில் தப்பில்லை. ஆனால், உலகம் அவ்வாறு செயல்படுவதில்லை என்பதுதான் உண்மை! ஏன் என்பதை விளக்கமாக எடுத்துச் சொல்கிறேன்.
நீங்கள் ஒரு வீடு வாங்க நினைக்கிறீர்கள். நீங்கள் வாங்கப் போகும் இடத்தில் அடுக்கு மாடி கட்டட வீடுகள் சதுர அடி 2,500 ரூபாய் என்று விலை போய்க் கொண்டிருக்கிறது. உங்கள் நண்பர் அந்த விலைக்குத்தான் அந்தக் கட்டடத்தில் வீடு புக் செய்துள்ளதாகக் கூறுகிறார். பத்திரிகைகளில் பார்த்ததில் அந்த ஏரியாவில் அந்த விலைதான் போவதாகப் போட்டிருக்கிறார்கள். இவற்றையெல்லாம் பார்த்துவிட்டு அந்த விலை சரிதான் என்று நினைத்து நீங்களும் புக் செய்ய முடிவெடுத்து விடுகிறீர்கள். நீங்கள் செய்தது ஒரு வகையான வேல்யூவேஷன் ஆகும் - சந்தை விலையை வைத்து மதிப்பிட்டுள்ளீர்கள்.
ஒருவகை என்று கூறுகிறீர்களே, அப்படியானால் இதில் வேறு வகை இருக்கிறதா என்று நீங்கள் கேட்கலாம்.
உண்டு. அந்த வீட்டிலிருந்து உங்களுக்கு எதிர்காலத்தில் வரப்போகும் வருமானத்தை கணக்கிட்டுப் பார்த்து அந்த வீட்டின் விலையை மதிப்பிடலாம். அதேபோல் அந்த வீட்டை நீங்கள் சொந்தமாகக் கட்டினால் எவ்வளவு விலை ஆகும் என்று கணக்கிடலாம். அல்லது நீங்கள் அந்த வீட்டை முதலீட்டிற்காக மட்டும் வாங்குகிறீர்கள் என்றால், ரியல் எஸ்டேட் துறை அடிபடும்போது வாங்கினால் எவ்வளவு குறைவாக வாங்கலாம் என்று கணக்கிட்டுப் பார்க்கலாம். இதுபோல் பல வேல்யூவேஷன் முறைகள் உள்ளன.
இதேமாதிரி பங்குகளின் மதிப்பையும் பல்வேறு வேல்யூவேஷன்களின் அடிப்படையில் கணக்கிட முடியும்! பொதுவாக கீழே கொடுக்கப்பட்டுள்ள முறைகளை மட்டும் எடுத்துச் சொல்கிறேன்.
1. பி/ இ மடங்கு முறை.
2. புத்தக மதிப்பு முறை.
3. சந்தை மதிப்பு முறை.
4. புதிதாக அமைக்க ஏற்படும் செலவு கணக்கீட்டு முறை (Replacement Cost Method).
5. டி.சி.எஃப். முறை (DCF – Discounted Cash Flow).
6. வொர்ஸ்ட் கேஸ்/பெஸ்ட் கேஸ்.
இந்த முறைகளைப் பற்றி சற்று விரிவாகக் கீழே காண்போம்.
பி/இ மடங்கு முறை:
பி/இ பற்றி ஏற்கெனவே விரிவாகப் பார்த்திருக்கிறோம். பங்கின் சந்தை விலையை பங்கின் வருமானத்தால் வகுத்தால் கிடைப்பதுதான் பி/இ ஆகும். நீங்கள் வாங்கப் போகும் பங்கின் பி/இ-யை
அத்துறையில் உள்ள மற்றுமொரு பங்குடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது நீங்கள் வாங்கப்போகும் பங்கின் விலை அதிகமாக உள்ளதா அல்லது குறைவாக உள்ளதா என்பது தெரியவரும். ஆனால், நீங்கள் ஒப்பிடப்போகும் நிறுவனத்தை தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருக்க வேண்டும். இவ்வாறு தேர்ந்தெடுப்பதை பியர் குரூப் (Peer Group) உண்டு பண்ணுவது என்று கூறுவார்கள். நீங்கள் வாங்கப் போகும் பங்கும் ஒப்பிட எடுத்துக் கொள்ளும் பங்கும்/பங்குகளும் முதலில் ஒரே துறையில் ஒரே மாதிரியான தொழில்களை செய்து வரவேண்டும். அந்நிறுவனங்களின் விற்பனை (டேர்ன் ஓவர்) போன்றவை கிட்டத்தட்ட சமமாக இருக்க வேண்டும்.



உதாரணத்திற்கு நீங்கள் இந்தியன் பேங்கின் பங்கை வாங்கலாமா என்று நினைக்கிறீர்கள். அது ஒரு பொதுத்துறை வங்கி. இந்த வங்கியை இன்னொரு பொதுத்துறை வங்கியோடுதான் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். வேறு வங்கிகளுடனோ அல்லது நிதி நிறுவனங்களுடனோ ஒப்பிட்டுப் பார்ப்பது சரியல்ல! பொதுத்துறை வங்கிகளிலும், அந்த வங்கிக்கு இணையாக இருக்கும் இன்னொரு வங்கியுடன்தான் ஒப்பிட வேண்டும். இந்தியன் வங்கியை, எஸ்.பி.ஐ உடன் ஒப்பிடுவதும் சரியல்ல. அப்படியானால், இந்தியன் வங்கியை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியுடன் ஒப்பிடலாமா? தாராளமாக! ஏனென்றால் இரண்டு வங்கிகளும் தென்னிந்தியாவில் தனது கிளைகளை பெரும்பாலும் கொண்டுள்ளது. இரண்டு வங்கிகளின் மொத்த வருமானமும் கிட்டத்தட்ட அருகில் உள்ளது. (இந்தியன் வங்கியின் 31-03-2011-ல் முடிந்த நிதி ஆண்டின் மொத்த வருமானம் 10,543 கோடி ரூபாய்; இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் அந்த ஆண்டு மொத்த வருமானம் 13,327 கோடி ரூபாய்).
இதுபோல பொதுவான அளவுகோல்களை வைத்து ஒப்பிட்டு பியர் குரூப் சேர்க்க வேண்டும். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியுடன் அலகாபாத் பேங்க்கையும் சேர்த்துக் கொள்ளலாம். அவ்வங்கி வடநாட்டில் பெரும்பாலும் தனது கிளைகளை கொண்டிருந்த போதிலும், அதன் மொத்த வருமானம் (மார்ச் 2011) 12,472 கோடி ரூபாயாகும். இதேபோல் கார்ப்பரேஷன் பேங்க், சின்டிகேட் பேங்க், ஓரியண்டல் பேங்க், யூகோ பேங்க் போன்ற வங்கிகளையும் ஒப்பிட்டுப் பார்க்க நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.
இப்போது ஒரேமாதிரியான தன்மைகளைக் கொண்ட பியர் குரூப்பை உண்டு பண்ணிவிட்டீர்கள். பியர் குரூப்பின் பி/இ சராசரியை (சமீபத்திய இன்கம் ஸ்டேட்மென்டை வைத்துக் கொண்டு) பாருங்கள். இந்தியன் வங்கியின் பி/இ பியர் குரூப் ஆவரேஜுடனும் மற்றும் மிகவும் நெருங்கிய பேங்குடனும் ஒப்பிட்டுப் பாருங்கள். ஏன் வித்தியாசப்படுகிறது என்று அலசுங்கள். பிற அளவுகோல்களுடன் (பி/பிவி, டிவிடெண்ட் யீல்ட், வாராக் கடன் சதவிகிதம், வருமான வளர்ச்சி, கிளைகளின் எண்ணிக்கை, ஷேர்ஹோல்டிங் பேட்டர்ன், இன்னும் பிற) ஒப்பிட்டுப் பாருங்கள். அப்போது வித்தியாசம் ஏன் என்று புரியும். அதை வைத்து இந்தியன் வங்கிப் பங்குகளை வாங்குவது உகந்ததா, இல்லையா என்று முடிவெடுக்கலாம்.
மேலே நாம் கண்ட வேல்யூவேஷன் பங்குச் சந்தையில் லிஸ்ட் செய்யப்பட்ட நிறுவனங்களுக்கு சரிப்பட்டு வரும். ஏனென்றால் அவற்றிற்குத் தேவையான எல்லா விபரங்களும் நமக்கு கிடைக்கும். ஆனால், நீங்கள் சந்தையில் லிஸ்ட் செய்யப்படாத நிறுவனத்தை வாங்கச் செல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது சந்தையில் லிஸ்ட் செய்யப்பட்ட அதே துறை சார்ந்த நிறுவனங்களின் பி/இ ஆவரேஜை எடுத்துக் கொண்டு, வாங்கப் போகும் நிறுவனத்தின் நிகர லாபத்தை அந்த ஆவரேஜ் பி/இ-ஆல் பெருக்கினால் நீங்கள் வாங்கப் போகும் நிறுவனத்தின் உத்தேச மதிப்பு கிடைக்கும். அதிலிருந்து எவ்வளவு குறைத்து வாங்க முடியுமோ அவ்வளவு நல்லது.
இனிவரும் வாரங்களில் பிற மதிப்பீட்டு முறைகள் பற்றி பார்ப்போம்.
(படி ஏறுவோம்)

Source - Vikatan Magazine

குறையலாம் விலை... ரியல் எஸ்டேட் அசல் நிலவரம்

குறையலாம் விலை... ரியல் எஸ்டேட் அசல் நிலவரம்


''மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் சப்-பிரைம் பிரச்னை வந்து, அதனால் அந்நாட்டின் பொருளாதாரமே கடுமையாகப் பாதிப்படைந்தது. இன்று, அதேபோன்ற அபாயம் நம் நாட்டிலும் நெருங்கிக்கொண்டிருக்கிறது'' என்கிறார்கள் சில ரியல் எஸ்டேட் வல்லுநர்கள். ''அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் மனை மற்றும் ஃபிளாட்டுகளின் விலை அநியாயத்துக்கு குறையவும் வாய்ப்புண்டு'' என்கிறார்கள்.
ரு தும்மல் போட்டாலே மலேரியா, டபுள் நிமோனியா என்ற ரேஞ்சுக்கு பயங்காட்டும் நம்மூரில், ரியல் எஸ்டேட் விஷயத்திலும் அப்படித்தான் நடக்கிறார்களோ? அல்லது உண்மையிலேயே ஏதேனும் பிரச்னை ஆரம்பித்திருக்கிறதோ என்று விசாரிக்க ஆரம்பித்தோம்.
''வேகமாக வளர்ந்து வந்த இந்திய ரியல் எஸ்டேட் துறை தற்போது ஊழல், விற்பனை வீழ்ச்சி, என பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்து வருகிறது. ஆனால், இவை எல்லாவற்றையும்விட மிகப் பிரம்மாண்ட விஷயமாக இருப்பது அவற்றின் கடன் சுமைதான். இந்திய ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் மொத்தக் கடன் கிட்டத்தட்ட 1.8 லட்சம் கோடி ரூபாய்'' என்கிற அதிர்ச்சித் தகவலை சொல்லி இருக்கிறார் 45 நாடுகளில் இயங்கிவரும் சர்வதேச ரியல் எஸ்டேட் நெட்ஒர்க் நிறுவனமான நைட் ஃபிராங்க் (Knight Frank)-ன் இந்திய பிரிவு இயக்குநர் அமித் கோயங்கா.
அது மட்டுமல்ல, ''இந்தக் கடனை இந்திய ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் இன்னும் இரண்டு, மூன்று ஆண்டுகளுக்குள் கட்டியாக வேண்டும். இதனால் அந்நிறுவனங்களின் கேஷ் ஃப்ளோ மிகவும் குறைந்திருக்கிறது'' என்றும் அவர் சொல்லி இருக்கிறார்.
தேவை 20,000 கோடி!
தற்போதைய நிலையில் கடனைக் கட்டாமல் பல ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் 'டிபால்ட்’ ஆகி இருக்கின்றன. இந்த எண்ணிக்கை நடப்பு ஆண்டில் இன்னும் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. தற்போதைய நிலையில் இந்திய நிறுவனங்களுக்கு கடனை அடைக்க ஒரு மாதத்துக்கு மட்டும் சுமார் 20,000 கோடி ரூபாய் தேவை. இதை பொதுத் துறை வங்கிகளும் உறுதிப்படுத்துகின்றன.
பட்டியலிடப்பட்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் சுமார் அரை டஜன் கம்பெனிகள் இந்தப் பட்டியலில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கின்றன. ஆனால், அவற்றின் பெயர்களை வெளிப்படையாகச் சொல்ல எந்த வங்கியும் தயாராக இல்லை. பல நிறுவனங்கள், கடன் தவணையை பல மாதங்கள் தாண்டியும் கட்டாமல் இருக்கின்றன. இந்த தொகை மட்டுமே பல ஆயிரம் கோடி ரூபாய்க்குமேல் இருக்கும் என்கிறார்கள்.
பிள்ளையார் சுழி!
இந்திய ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் கடன் சுமை இந்த அளவுக்கு அதிகரிப்பதற்கான பிள்ளையார் சுழி, கடந்த 2008-ம் ஆண்டு அமெரிக்காவில் ஏற்பட்ட சப்-பிரைம் (தகுதி இல்லாதவர்களுக்கு வீட்டுக் கடனை வாரி வழங்கியது) மூலம் போடப்பட்டது. அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சர்வதேச மற்றும் உள்நாட்டு நிதி நெருக்கடி இந்தியாவில் வீடுகளின் விற்பனையை வெகுவாக பாதிக்கத் தொடங்கியது. ஐ.டி. துறை நிறுவனங்கள் மற்றும் அவற்றில் பணிபுரிபவர்களையும் நம்பி ஏராளமான கட்டடங்களையும், வீடுகளையும் கட்டித் தள்ளிய இந்திய ரியல் எஸ்டேட் துறை நிறுவனங்கள், ஐ.டி. துறை பாதிப்புக்கு உள்ளானதைத் தொடர்ந்து கட்டிய வீட்டை விற்க முடியாமல் தவித்தது.
இதனால் கடன் வாங்கி களத்தில் இறங்கிய பல முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் கடன் சுமை கடுமையாக அதிகரிக்க, அவற்றால் அடுத்த புராஜக்ட்டுகளை நிறைவேற்ற முடியாமல் போனது.

அதிகரித்த வட்டி!
குறைந்த கடன்!
இது ஒருபக்கமிருக்க, தொடர்ந்து அதிகரித்துவந்த பணவீக்க விகிதத்தை கட்டுப்படுத்த முக்கிய வட்டி விகிதங்களை உயர்த்த தொடங்கியது ஆர்.பி.ஐ. இதனால் வங்கிகள் ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு வழங்கும் கடனுக்கான வட்டியையும் கணிசமாக உயர்த்தியது. கூடவே கடனுக்கான அளவும் குறைக்கப்பட்டது. வழக்கமாக வீட்டுக் கடனுக்கான வட்டி சுமார் 9 சதவிகிதமாக இருக்கும் என்றால், ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு 13-15 சதவிகித வட்டி என்கிற கணக்கில் வங்கிகள் கடன் கொடுத்தன. 
லஞ்ச விவகாரம்!
இந்திய ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு ஏற்பட்ட அடுத்த பெரிய பாதிப்பு, கடன் கொடுப்பது தொடர்பான லஞ்ச வழக்கில் எல்.ஐ.சி. ஹவுசிங், பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்டவைகளின் உயர் அதிகாரிகளை சிபி.ஐ கைது செய்தது. 2010 நவம்பரில் நடந்த இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ரியல் எஸ்டேட் துறை நிறுவனங்களுக்கு கொடுக்கப்படும் கடனை ஒருமுறைக்கு பலமுறை ஆராய்ந்து கொடுக்க  வங்கிகளுக்கு ஆர்.பி.ஐ. உத்தரவிட்டது. வாங்கும் கடனை அந்த புராஜக்ட்டுக்குத்தான் செலவு செய்கிறார்களா என்பதையும் கண்காணிக்கச் சொன்னது.
25% வட்டியில் கடன்!
பன்னாட்டு வங்கி ஒன்றின் அதிகாரியிடம் நாம் இவ்விவகாரம் குறித்து பேசியபோது, ''வங்கிகளில் கடன் கிடைப்பது கஷ்டமாகிவிட்டதைத் தொடர்ந்து, பல ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் ஃபைனான்ஸ் கம்பெனிகளிடம் 20 முதல் 25 சதவிகித வட்டிக்கு கடன் வாங்கின. அந்த வட்டிச் சுமையால் இந்நிறுவனங்கள், கட்டி விற்கும் வீடுகளின் விலையும் அதிகரித்தன. ஏற்கெனவே கட்டிய வீடுகளே விற்க முடியாமல் இருக்கும்போது, வீடுகளின் விலையை உயர்த்தினால் எப்படி போணியாகும்? ஆக மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் தவித்து நிற்கின்றன இந்நிறுவனங்கள்.'' என்றார்.

அது வேறு, இது வேறு!
ஏற்கெனவே வாங்கியது வேறு புராஜக்ட்டுக்கு, இது புது புராஜக்ட்டுக்கு என சில ரியல் எஸ்டேட் நிறுவனங்கள்  புத்திசாலித்தனமாக விளக்கம் கொடுத்தபோதும், வங்கிகள் அதில் மசியவில்லை என்பது முக்கியமான விஷயம். இதற்கிடையே சில புத்திசாலி புரமோட்டர்கள், வேறு ஒரு புது வங்கியில் கடன் வாங்கி பழைய கடனைக் கட்டி நிலைமையை தற்காலிகமாக சமாளித்திருக்கிறார்கள். ஈமார் எம்.ஜி.எஃப். லேண்ட் நிறுவனம், கடந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் சுமார் 1,400 கோடி ரூபாய் கடனை அடைத்திருக்கிறது.
டி.எல்.எஃப். நிறுவனம் 2010-11-ம் நிதி ஆண்டில் மூன்றாம் காலாண்டில் 2,050 கோடி ரூபாய் கடனை மறுசீரமைப்பு செய்துள்ளது. ஹெச்.டி.ஐ.எல் பழைய கடனை அடைக்க 1,150 கோடி ரூபாய்க்கு பங்குகளுக்கு  மாறாக பத்திரங்களை வெளியிட்டுள்ளது.
ஐ.பி.ஓ.தான் தீர்வா?
புதிய புராஜக்ட் கடன்களுக்காக ஈமார் எம்.ஜி.எஃப். லேண்ட், லோதா டெவலப்பர்ஸ், யூனிடெக், டி.பி. ரியாலிட்டி உள்ளிட்டவை முயற்சி செய்து வருவதாக வங்கி அதிகாரிகள் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈமார் எம்.ஜி.எஃப். உள்ளிட்ட நிறுவனங்கள், ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை பங்குச் சந்தையில் ஐ.பி.ஓ. மூலமாவது  திரட்ட முடியுமா என முயற்சி செய்து வருகிறது. ஆனால், சந்தை அவற்றுக்கு சாதகமாக இல்லை என்பதால் அதுவும் தள்ளிக் கொண்டே போகிறது.
ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் இப்படி ஒரு இடியாப்பச் சிக்கலில் மாட்டி இருப்பதால், கூடிய விரைவில் மனை மற்றும் ஃபிளாட்டுகளின் விலை கணிசமாக குறைய நிறையவே வாய்ப்பிருக்கிறது. அடுத்த ஓராண்டு காலத்தில் வீடுகளின் விலை 15-20% குறைய வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள்.
இதுநாள் வரை சொந்தமாக சொத்து வாங்காதவர்கள், இனி விலை குறைந்தபின் இடமோ, ஃபிளாட்டோ வாங்க வாழ்த்துக்கள்!
- சி. சரவணன்


Source - Vikatan Megazin

Wednesday, May 11, 2011

முதற்படி முதலில் படி! - 23

முதற்படி முதலில் படி!

சென்ற வாரம் 'ரேஷியோ அனாலிசிஸ்’ பற்றி பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக இவ்வாரமும் மேலும் சில முக்கியமான ரேஷியோக்களைப் பற்றி பார்ப்போம். எந்த ஒரு தொழிலும் லாபகரமாக நடக்கிறதா என்பது முக்கியம். அவ்வகையில் சில முக்கியமான ரேஷியோக்கள் சிலவற்றைப் பார்ப்போம். ஒன்று, ஆர்.ஓ.இ. (ROE – Return on Equity) என்பதாகும். பங்கு முதலீட்டிற்கு கிடைக்கும் வருமானம்தான் ஆர்.ஓ.இ. எனப்படுகிறது.
ஆர்.ஓ.இ. = நிகர லாபம்/ பங்குதாரர்களின் முதலீடு.
இது சதவிகிதமாக கூறப்படும். இந்த ஆர்.ஓ.இ. பெல் நிறுவனத்திற்கு மார்ச் 2010-ல் முடிந்த நிதி ஆண்டிற்கு எவ்வளவு என்று பார்ப்போம். பங்குதாரர்களின் முதலீடு என்பது ஷேர் கேப்பிட்டல் மற்றும் ரிஸர்வ்ஸ் + சர்ப்ளஸ் ஆகிய இரண்டும் சேர்ந்ததாகும். பெல் நிறுவனத்திற்கு 31-03-2010 அன்று ஷேர் கேப்பிட்டல் 489.52 கோடி ரூபாயாகும். அன்றைய தினத்தில் ரிஸர்வ்ஸ் + சர்ப்ளஸ் 15,427.84 கோடி ரூபாய். ஆக மொத்தம் 15,917.36 கோடி ரூபாய்.  அவ்வருட நிகர லாபம் 4,310.64 கோடி ரூபாய். ஆகவே பெல் நிறுவனத்தின் ஆர்.ஓ.இ. 27.08% (4,310.64/15,917.36) ஆகும். இதையே ஆர்.ஓ.என்.டபிள்யூ (RONW – Return on Net Worth) என்றும் கூறுவார்கள். இந்த ரேஷியோ, பங்குதாரர்களின் முதலீட்டை ஒரு நிர்வாகம் எந்த அளவுக்கு திறமையாகப் பயன்படுத்துகிறது என்பதைக் காட்டும்.
பங்குச் சந்தை முதலீட்டாளர் களால் பரவலாக அலசப்படும் இன்னொரு ரேஷியோ ஆர்.ஓ.ஏ. (ROA – Return on Assets) ஆகும். இது எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதைப் பார்ப்போம்.
ஆர்.ஓ.ஏ. = நிகர லாபம்/மொத்த சொத்துக்கள்.

பெல்லின் மார்ச் 2010-ம் ஆண்டிற்கான நிகர லாபம் 4,310 கோடி ரூபாய். அந்த ஆண்டின் மொத்த சொத்துக்களின் மதிப்பு  16,045 கோடி ரூபாய். ஆகவே, அதன் ஆர்.ஓ.ஏ. (4310/16045) 26.9% ஆகும். ஆர்.ஓ.ஏ. அதிகமாக இருப்பது நன்று. வங்கிகள் போன்ற அதிகமாக சொத்துக்கள் தேவைப்படும் துறைகளுக்கு ஆர்.ஓ.ஏ. என்பது 1% - 2% என்ற
ரேஞ்சில் பொதுவாக இருக்கும். இந்த விகிதத்தையும் துறை சார்ந்த நிறுவனங்களுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதே சிறந்தது. இந்த விகிதத் தில் இருந்து அந்த குறிப்பிட்ட தொழிலுக்கு எவ்வளவு சொத்துக்கள் (பணம்) தேவைப்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
'அஸட் டேன்ஓவர் ரேஷியோ’ என்பது ஒவ்வொரு ரூபாய் சொத்துக்கும் எவ்வளவு விற்பனை நடந்துள்ளது என்பதைக் காட்டுவ தாகும். இது நிறுவனத்தின் சொத்துக்களை நிர்வாகம் எந்த அளவுக்கு திறமையாக உபயோகித்துள்ளது என்பதைக் காட்டும்.
அஸட் டேன்ஓவர் = மொத்த விற்பனை/ மொத்த சொத்துக்கள்.
பெல் நிறுவனத்தின் மார்ச் 2010-ம் ஆண்டின் மொத்த விற்பனை 34,396.67 கோடி ரூபாய். அந்த ஆண்டு மொத்த சொத்துக்களின் மதிப்பு 16,045 கோடி ரூபாய். ஆகவே அஸட் டேன்ஓவர் ரேஷியோ 2.14 (34396.67/16045) ஆகும். பொதுவாக குறைந்த லாப மார்ஜின் உள்ள நிறுவனங்களுக்கு அதிக அஸட் டேன்ஓவர் இருக்கும். அதேபோல் அதிவேகமாக வளரும் நிறுவனங்கள் லாபத்துடன் வளர்கின்றனவா என்பதையும் இந்த ரேஷியோ மூலம் தெரிந்து கொள்ளலாம்.
'இன்ட்ரஸ்ட் கவரேஜ் ரேஷியோ’ (Interest Coverage Ratio) இன்னுமொரு முக்கியமான விகிதமாகும். இந்த ரேஷியோ, கடன் வாங்கியிருக்கும் பல நிறுவனங்களுக்கும் தனி நபர்களுக்கும் மிக முக்கியமான ஒன்று. அதேபோல் தனி நபர்களுக்கும் மற்றும் நிறுவனங்களுக்கும், கடன் கொடுப்பவர்களுக்கும் (டெபாசிட் கொடுப்பவர்கள் என்று படிக்கவும்) இது ஒரு முக்கியமான விகிதம். இவ்விகிதம் கடன் வாங்கும் நிறுவனம் எந்த அளவு தனது கடனை சர்வீஸ் செய்ய முடியும் என்பதைக் காண்பிக்கும்.
இன்ட்ரஸ்ட் கவரேஜ் ரேஷியோ = வட்டி மற்றும் வரிக்கு முந்தைய லாபம்/வட்டிச் செலவு.
பெல் நிறுவனத்திற்கு மார்ச் 2010-ல் முடிந்த நிதி ஆண்டிற்கு வட்டி மற்றும் வரிக்கு முந்தைய லாபம் 6,590 கோடி ரூபாயாகும். அவ்வருட வட்டிச் செலவு 33.5 கோடி ரூபாய். ஆகவே, இன்ட்ரஸ்ட் கவரேஜ் கிட்டத்தட்ட 199.6 (6727/33) ஆகும்.
இந்த விகிதம் அதிகமாக இருப்பது பொதுவாக நல்லது. பெல் போன்ற இன்ட்ரஸ்ட் கவரேஜ் உள்ள நிறுவனத்திற்கு வங்கிகளும் தனிநபர்களும் கடன் கொடுப்பதற்கு வரிசையில் நிற்பர். அதோடு மட்டுமல்ல குறைந்த வட்டி விகிதத்திலும் கடன் கிடைக்கும்.
டிவிடெண்ட் பே அவுட் ரேஷியோ (Dividend Payout Ratio) என்பது ஒவ்வொரு வருடமும் தான் ஈட்டும் மொத்த லாபத்தில் இருந்து எந்த அளவு பங்குதாரர்களுக்கு டிவிடெண்டாக நிறுவனம் கொடுக்கிறது என்பதை எடுத்துக் காட்டும்.
டிவிடெண்ட் பே அவுட் ரேஷியோ = மொத்த டிவிடெண்ட்/நிகர லாபம்.
பெல் நிறுவனம் மார்ச் 2010-ம் ஆண்டு பங்குதாரர்களுக்கு வழங்கிய மொத்த டிவிடெண்ட் (டிவிடெண்ட் டேக்ஸ் உட்பட) 1,350 கோடி ரூபாய். அவ்வருட நிகர லாபம் 4,310 கோடி ரூபாய். ஆகவே, டிவிடெண்ட் பே அவுட் ரேஷியோ 31.3% (1350/4310) ஆகும். மீதி உள்ள லாபத்தை தனது தொழில் வளர்ச்சிக்காக பெல் நிறுவனம் பயன்படுத்திக் கொள்ளும். இந்தியா போன்ற வளரும் பொருளாதாரங்களில் உள்ள நிறுவனங்களின் டிவிடெண்ட்  பே அவுட் ரேஷியோ சற்று குறைவாகவே இருக்கும். அமெரிக்கா போன்ற வளர்ந்த பொருளாதாரங்களில் இந்த ரேஷியோ பொதுவாக அதிகமாக இருக்கும். இந்தியாவிலும் அதிக பே அவுட் கொடுக்கக்கூடிய நிறுவனங்களும் உள்ளன. பங்கு முதலீட்டில் சற்று ரிஸ்க் குறைவாக எடுக்க நினைப்பவர்கள் அதிக டிவிடெண்ட் பே அவுட் கொடுக்கக்கூடிய நிறுவனங்களாகப் பார்த்து முதலீடு செய்யலாம்.
இதுவரை நாம் முக்கியமான ரேஷியோக்கள் பற்றிப் பார்த்தோம். இதுபோல் பல ரேஷியோக்கள் உள்ளன. இது ஒரு ஆரம்பமே; முடிவல்ல! நீங்கள் வாங்கப் போகும் நிறுவனங்களின் விகிதாச்சாரங் களை அலசி ஆராய்வதன் மூலம் ஒரு தெளிவான முடிவை எடுக்கலாம்.
(படி ஏறுவோம்)

Source - Vikatan Magazine

Monday, May 2, 2011

பங்குச்சந்தை ஆத்திச்சூடி..- 22

பங்குச்சந்தை ஆத்திச்சூடி..


சென்ற வாரங்களில் குவான்டிடேட்டிவ் அனாலிசிஸில் முதலீட்டிற்கு நேரடியாக உதவும் அளவுகோல்கள் பற்றி கண்டோம். இனி சற்று ஆழமாக அனாலிசிஸ் செய்ய விரும்புபவர்களுக்கு உண்டான அளவீட்டு முறைகள் பற்றி பார்ப்போம். விகிதாசார ஆய்வு (ரேஷியோ அனாலிசிஸ்) என்பது ஃபைனான்ஷியல் உலகில் பரவலாக பயன்படுத்தப்படும் கருவி. நிதி முதலீட்டுக்கு மட்டுமல்ல, உங்கள் தினசரி வாழ்க்கை மற்றும் தொழிலுக்கும் இது மிகவும் பயன்படும். சிறிய உதாரணம் ஒன்றைப் பார்ப்போம்...
ங்களது சம்பளம் மாதத்துக்கு 20,000 ரூபாய் என்று வைத்துக் கொள்வோம். உங்கள் சேமிப்பு மாதத்திற்கு 6,000 ரூபாய் என்று வைத்துக் கொள்வோம். அப்படி என்றால் விகிதாசார அடிப்படையில் உங்கள் சேமிப்பு 30% (6,000/20,000) ஆகும். உங்கள் சேமிப்பை, உங்களின் வருமானத்துடன் ஒப்பிடுகிறோம். ஆனால், அதே சம்பளம் உள்ள உங்கள் நண்பரோ மாதம் 8,000 ரூபாய் வரை சேமிக்கிறேன் என்று கூறுகிறார். அப்படி என்றால் அவரின் சேமிப்பு மாத வருமானத்தில் 40% (8,000/20,000). இப்போது நீங்கள் இந்த சதவிகிதத்தை வைத்து உங்களின் செலவினங்களை உங்கள் நண்பரோடு ஒப்பிடுகிறீர்கள். எல்லாவற்றையும் கணக்குப் பார்த்ததில், உங்களால் இன்னும் ஒரு ஆயிரம் ரூபாய் சேமிப்பைக் கூட்ட முடியும் என்று முடிவு செய்கிறீர்கள். ஆக உங்களின் சேமிப்பு இனி வருங்காலத்தில் 35% (7,000/20,000) ஆகிவிடும். இந்த ரேஷியோ அனாலிசிஸ் செய்ததில் உங்களை நீங்களே மேம்படுத்திக் கொள்கிறீர்கள்.
 
இதேபோலத்தான் நீங்கள் வாங்கப்போகும் பங்கின் வெவ்வேறு விகிதங்களை அதன் போட்டி நிறுவனங்களோடு ஒப்பிட்டுப் பார்த்து, நீங்கள் வாங்கப் போகும் நிறுவனம் எந்த அளவு திறமையாகச் செயல்படுகிறது என்று அறிந்து கொள்ளலாம். ரேஷியோ அனாலிசிஸ் ஒரு பெரிய கடல் என்றாலும், அதில் முக்கியமான சில விகிதாசாரங்களை நாம் இங்கு தெரிந்து கொள்ளலாம். விகிதாசாரங்களை லாப அடிப்படையில், ஆபரேஷன்ஸ் அடிப்படையில், நிர்வாகத் திறமையின் அடிப்படையில், கடன் அடிப்படையில் என பலவாறாகப் பிரித்துக் கொள்ளலாம். நாம் இங்கு சில முக்கியமான விகிதங்களைப் பார்ப்போம். முதலில், லாபத்தை அடிப்படையாகக் கொண்ட சில விகிதங்களை முதலில் பார்ப்போம்...
பெல் நிறுவனத்தின் மார்ச் 2010-ல் முடிந்த 'இன்கம் ஸ்டேட்மென்ட்’ கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்டேட்மென்ட் ஒரு பொது வடிவத்தில் உள்ளது. இதில் அந்நிறுவனத்தின் நிகர விற்பனை 33,226.25 கோடி ரூபாயாகும்; மேலும் ஸ்டாக் அட்ஜஸ்ட்மென்ட்ஸ் 786.65 கோடி ரூபாயாகும். அந்நிறுவனத் தின் மொத்த செலவுகள் 27,913.71 கோடியாகும். அதன் ஆபரேட்டிங் லாபம் 6,099.19 கோடியாகும் (33,226.25 + 786.65 - 27,913.71).
ஆபரேட்டிங் பிராஃபிட் என்பது வட்டி, தேய்மானம் மற்றும் வருமான வரிக்கு முன்பான லாபம். அதாவது, நிகர விற்பனையிலிருந்து விற்பனைக்கு நேரடியாக உள்ள செலவுகளைக் கழித்தால் கிடைப்பது. இப்போது அந்நிறுவனத்தின் ஆபரேட்டிங் பிராஃபிட் மார்ஜின் என்னவென்று பார்ப்போம்...
[ஆபரேட்டிங் பிராஃபிட் மார்ஜின் = ஆபரேட்டிங் பிராஃபிட்/நிகர விற்பனை]
அதன்படி பெல்லின் மார்ச் 2010-ல் முடிந்த நிதி ஆண்டின் ஆபரேட்டிங் பிராஃபிட் மார்ஜின் 18.4% (6,099.19/33,226.25) ஆகும்.
அதைப்போல நெட் பிராஃபிட் (நிகர லாப) மார்ஜினும் மிகவும் உபயோகமான ஒன்று.
[நெட் பிராஃபிட் மார்ஜின் = நெட் பிராஃபிட்/ மொத்த வருமானம்]
நிகர விற்பனையுடன் மற்ற வருமானம் மற்றும் ஸ்டாக் கூட்டி குறைவதைச் சேர்த்துக் கொண்டால் மொத்த வருமானம் கிடைக்கும். பெல் நிறுவனத்துக்கு அவ்வருடம் பிற வருமானங்கள் (இன்வெஸ்ட்மென்ட்ஸ் மூலமோ அல்லது சொத்துக்களை விற்றதன் மூலமோ அல்லது வேறு ஏதேனும் செய்யும் தொழில் சாராததிலிருந்து வரும் வருமானம்) 1,085.73 கோடி ரூபாயாகும். ஸ்டாக் அட்ஜஸ்ட்மென்ட் 786.65 கோடி. ஆக, அந்த வருட மொத்த வருமானம்  35,098.63 கோடியாகும். நிகர லாபம் 4,310.64 கோடியாகும். இந்த நிகர லாபத்திற்கும் மொத்த வருமானத்திற்கும் உள்ள விகிதம்தான் நெட் பிராஃபிட் மார்ஜின். பெல்லின் மார்ச் 2010 நிகர லாப மார்ஜின் 12.30% (4,310.64/35,098.63) ஆகும். இந்த விகிதம் மூலம் ஒவ்வொரு ரூபாய் விற்பனைக்கும் லாபம் எவ்வளவு என்று நாம் தெரிந்து கொள்ளலாம்.
இதுதவிர மூலப் பொருட் களுக்கும் விற்பனைக்கும் உள்ள விகிதம்; விற்பனை, நிர்வாகம் மற்றும் பொதுச் செலவுகளுக்கும் விற்பனைக்கும் உள்ள விகிதம்; மின்சாரம் மற்றும் எரிபொருளுக்கும் விற்பனைக்கும் உள்ள விகிதம் என நமது ஆய்வின் தேவைக்கு ஏற்றாற்போல் பலவிதமான விகிதங்களை கணக்கிட்டு கொண்டே செல்லலாம். இவ்விகிதங்களைக் கணக்கிடுவது பெரிதல்ல. கணக்கிடுவதோடு அந்நிறுவனத்தின் போட்டி நிறுவனங்களின் விகிதம் எவ்வாறு உள்ளது என்று ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். அப்போதுதான் நீங்கள் வாங்கப்போகும் நிறுவனம் எந்த அளவு திறமையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று தெரியும் - சேமிப்பில் உங்கள் நண்பரை ஒப்பிட்டது போல!
இன்னும் சில முக்கியமான விகிதங்களைப் பற்றி கீழே பார்ப்போம். சிறிய தொழில் செய்யும் பலர் தங்களிடம் எவ்வளவு சரக்கு (இன்வென்டரி) உள்ளதோ அவ்வளவு தங்களுடைய தொழில் பலமாக உள்ளது என்று நினைப்பார்கள். ஆனால், பெரிய தொழில் நிறுவனங்கள் அப்படி நினைக்காது. காரணம், நாம் நூற்றுக்கணக்கான கோடிகளில் உள்ள சரக்குகளைப் பற்றி பேசுகிறோம். இதற்கெல்லாம் ஒரு படி மேலே போய் ஜப்பானியர்கள் அறிமுகப்படுத்திய 'ஜஸ்ட் இன் டைம் இன்வென்டரி மேலாண்மை’ இன்று பரவலாக உபயோகப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நிறுவனமும் தனது சரக்குகளை எத்தனை முறை சுழற்சி (அல்லது விற்பனை) செய்கிறது என்பதைக் கணக்கிட்டு விட்டால் எந்த அளவு சிறப்பாக அந்நிறுவனம் செயல்படுகிறது என்பது விளங்கும்.
உதாரணத்திற்கு, நீங்கள் ஒரு மருந்துக்கடைக்காரர். உங்களின் தினசரி விற்பனை 20,000 ரூபாய் என்று வைத்துக் கொள்வோம். வருடத்திற்கு சுமாராக 72 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்கிறீர்கள். உங்கள் கடையில் எப்போதும் இருக்கும் சரக்கோ 12 லட்சம் என்று வைத்துக் கொள்வோம். அப்படி என்றால் உங்கள் சரக்கின் சுழற்சி 6 (72/12) ஆகும். இந்த சுழற்சியை நீங்கள் கூட்ட முடிந்தால் உங்களின் லாபம் உறுதியாக கூடும். பெல் நிறுவனத்தின் சரக்கு சுழற்சி என்னவென்று கீழே பார்ப்போம்.
[இன்வென்டரி டர்னோவர் = ஆண்டின் விற்பனை/ ஆண்டு முடிவில் உள்ள சரக்குகளின் மதிப்பு]
பெல் நிறுவனத்தின் ஆண்டு இறுதி இன்வென்டரி (பாலன்ஸ் ஷீட்டில் கிடைக்கும்) 9,235.46 கோடியாகும். அவ்வருட நிகர விற்பனை 33,226.25 கோடி என நமக்குத் தெரியும். ஆக, பெல் நிறுவனத்தின் இன்வென்டரி டர்னோவர் 3.6 (33226.25/9235.46) ஆகும். இந்த இன்வென்டரி டர்னோவர் எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு நல்லது. அத்தனை முறை நிறுவனம் தன்னிடம் உள்ள சரக்குகளை சுழலச் செய்துள்ளது என்று பொருள்.
மேற்கண்ட ரேஷியோக்களைப் போல, ஒரு நிறுவனம் எவ்வளவு கடன் வாங்கியுள்ளது என்பது முதலீட்டாளர்களாகிய நமக்கு மிகவும் முக்கியம். கன்ஸர்வேட்டிவ் முதலீட்டாளர்கள் தாங்கள் வாங்கப்போகும் நிறுவனத்தில் கடனே இருக்கக்கூடாது என்று விரும்புவார்கள். இதை ஆராய்ந்தறிவதற்கு கடனிற்கும் பங்கு முதலீட்டிற்கும் உள்ள விகிதம் மிகவும் உதவும். இதை 'டெப்ட் டூ ஈக்விட்டி ரேஷியோ’ எனக் கூறுவர். பெல் நிறுவனத்தின் மொத்தக் கடன் மார்ச் 2010 முடிவில் 127.75 கோடி ரூபாயாகும். அவ்வாண்டு பங்கு மூலதனம் மற்றும் ரிஸர்வ்ஸ் 15,917.36 கோடி ரூபாயாகும். ஆகவே, அதன் 'டெப்ட் டூ ஈக்விட்டி ரேஷியோ’ 0.008 (1%-ற்கும் குறைவு) (127.75/15,917.36) ஆகும். இதுவே சில நிறுவனங்களுக்கு 100% அல்லது 200% என்றுகூட இருப்பது உண்டு. உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு அதுபோல் அதிகக் கடன் இருந்தால், பொருளாதாரம் சீர்குலையும்போது, அந்த  நிறுவனங்கள் மூலைக்குத் தள்ளப்படும்.
[டெப்ட் டூ ஈக்விட்டி ரேஷியோ = மொத்தக் கடன்/ ஷேர்ஹோல்டரின் நிதி]
ரேஷியோ அனாலிசிஸ் செய்யும் போது ஒன்றை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் - இந்த ரேஷியோக்களை ஒவ்வொரு துறையையும் வைத்துப் பார்க்க வேண்டும். உதாரணத்திற்கு, நிதித்துறை சார்ந்த நிறுவனங்கள், ரீடெய்ல் துறை, உற்பத்தித் துறை நிறுவனங்கள், மின்சாரம் தயாரிக்கும் நிறுவனங்கள் என ஒவ்வொரு துறைக்கும் தேவைகள் வெவ்வேறு. ஆகவே, அவற்றின் ரேஷியோக்களும் சற்று வித்தியாசப்படும். உதாரணமாக,  ரீடெய்ல் துறையில் டர்னோவர் ரேஷியோ அதிகமாக இருக்கும். நிதித்துறை நிறுவனங்கள் மற்றும் மின்சாரத்துறை நிறுவனங்களுக்கு அதிகமாக கடன் இருக்கலாம். ஆகவே ரேஷியோக்களை அதன் துறை சார்ந்த, ஒரே அளவிலான நிறுவனங்களோடு ஒப்பிட்டுப் பார்ப்பதே சரி.
(படி ஏறுவோம்)

Source - Vikatan Magazine