Pages

Friday, April 29, 2011

இது ஐ.பி.ஓ. முதலீட்டுக்கு ஏற்ற காலமா?

இது ஐ.பி.ஓ. முதலீட்டுக்கு ஏற்ற காலமா?

முதலீடு செய்வதில் ஒவ்வொருத்தருடைய ஸ்டைலும் ஒவ்வொரு விதமாகத்தான் இருக்கிறது. சிலர் குறிப்பிட்ட ஒரே ஒரு பங்கை மட்டுமே வாங்கி வருவார்கள். சிலர் செகண்டரி மார்க்கெட்டில் மட்டுமே வாங்குவார்கள், மறந்தும்கூட ஐ.பி.ஓ. பக்கம் ஒதுங்க மாட்டார்கள். இன்னும் சிலரோ வாங்கினால் ஐ.பி.ஓ-வில்தான் வாங்குவேன் என்று சபதம் போட்டுவிட்டு வந்திருப்பார்கள்!
ஐ.பி.ஓ. வரும்போது ஒரு லாட் இரண்டு லாட் என்று முதலீடு செய்வார்கள். பிறகு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட அன்றே மொத்த பங்குகளையும் விற்று லாபம் பார்த்து விடுவார்கள். எக்காரணம் கொண்டும் அந்த
முதலீட்டை தொடர மாட்டார்கள். இப்படியான முதலீட்டாளர்களை இப்போது சந்தித்துக் கேட்டால் அவர்கள் ரத்தக் கண்ணீர் விடுவார்கள்! காரணம் சமீபத்தில் வெளிவந்த அத்தனை ஐ.பி.ஓ-களிலும் அவர்கள் முதலீடு செய்திருந்தால் அவர்களின் முதலீடு கிட்டத்தட்ட பாதிக்கு மேல் கரைந்திருக்கும்.
கடந்த 2010-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் சமீபத்தில் பட்டியலிடப்பட்ட அத்தனை ஐ.பி.ஓ-களையும் எடுத்து ஆராய்ந்தோம்.
இந்த இடைப்பட்ட காலத்தில் வெளிவந்த மொத்த ஐ.பி.ஓ-களின் எண்ணிக்கை 81. இதில் 30 பங்குகள்தான் பட்டியலிடப்பட்ட விலையைவிட அதிகமான விலையில் வர்த்தகமாகிறது. மீதமுள்ள 51 பங்குகள் பட்டியலிடப் பட்ட விலையைவிட குறைவாகவே வர்த்தகமாகிறது. இதிலும் 17 பங்குகள் 50 சதவிகிதத்துக்கு கீழே போய்விட்டது.

இருந்தாலும் நிறுவனங்கள் ஐ.பி.ஓ. வருவது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதற்கு காரணம் சந்தை இப்போது ஓரளவு ஸ்திரமாக இருப்பதுதான்.
அதேபோல் சிறு முதலீட்டாளர் களும் ஐ.பி.ஓ-வில் முதலீடு செய்யும் ஆர்வத்தைக் குறைத்துக் கொள்ளவில்லை. காரணம் ஏதாவது ஒரு ஐ.பி.ஓ.-விலாவது பணத்தைப் பார்த்துவிட மாட்டோமா என்பதுதான்!
லேட்டஸ்ட் வரவு ஃபியூச்சர் வென்ச்சர்ஸ் ஐ.பி.ஓ. சமீபகால மாகவே ஐ.பி.ஓ. வரும் அனைத்து நிறுவனங்களுமே முகமதிப்புக்கு மேலாக அதிக பிரீமியம் வைத்தே வெளியிடுகின்றன. இந்தச் சூழ்நிலையில் முகமதிப்பிலேயே ஒரு நிறுவனம் ஐ.பி.ஓ. வருகிறது என்றால் அது வித்தியாசமான ஒன்றுதானே!
பத்து ரூபாய் பங்கு பத்து ரூபாய்க்கே கிடைக்கலாம் என்பது பாராட்டத்தகுந்த விஷயம்தான் என்றாலும், இந்தப் பங்கினை வாங்குவது லாபகரமாக இருக்குமா என்பது அதைவிட முக்கியமானதல்லவா? இதுகுறித்து பேட்டர்சன் நிறுவனத்தின் துணைத் தலைவர் சத்யநாராயணனிடம் கேட்டோம். இந்த ஐ.பி.ஓ.-வை பற்றி பல்வேறு கோணங்களில் நமக்கு எடுத்துச் சொன்னார்.
''ரீடெய்ல் துறையின் முன்னோடி நிறுவனமான இதன் முக்கிய பிஸினஸ் உணவு மற்றும் ஆடைகள்(ஃபேஷன்)தான். இந்த இரண்டுக்கும் எப்போதுமே டிமாண்ட் இருக்கத்தான் செய்யும். இது சாதகமான விஷயம். இனி பாதகங்களைப் பற்றிப் பார்ப்போம்.
இந்த நிறுவனம் இப்போது 750 கோடி ரூபாய்க்கு நிதி திரட்டப்போகிறது. இதில் 150 கோடி ரூபாயை விரிவாக்கப் பணிகளுக்காகவும், மீதமுள்ள பணத்தை நன்றாகச் செயல்படும் நிறுவனங்களில் முதலீடு செய்வதற்காகவும் பயன்படுத்த உள்ளது. அதாவது, மீதமிருக்கும் 600 கோடி ரூபாயை என்ன செய்யப் போகிறார்கள், எதில் முதலீடு செய்யப் போகிறார்கள் என்ற முழுமையானத் திட்டம் இவர் களிடத்தில் இல்லை.
ரீடெய்ல் துறை எப்போதுமே டிமாண்ட் உள்ள துறையாக இருந்தாலும், தற்போதைய பொருளாதாரம் மற்றும் உயர்ந்து வரும் பணவீக்கத்தைப் பார்க்கும் போது, மக்கள் முதலில் குறைக்கும் செலவு ரீடெய்லுக்கான செலவாகத் தான் இருக்கும்.
இவை எல்லாவற்றையும்விட 2008-ம் ஆண்டு ஃபியூச்சர் கேப்பிட்டல் நிறுவனத்துக்காக 490 கோடி ரூபாய்க்கு மேல் நிதி திரட்டினார்கள். பட்டியலிடப் பட்ட சமயத்தில் ஒரு பங்கின் விலை 765 ரூபாய். தற்போது 164.45 ரூபாயில் வர்த்தகமாகிறது. கிட்டத் தட்ட 4.5 மடங்குக்கு மேல் குறைவு.

'ஏற்கெனவே நஷ்டமடைந்தது போல் இனிமேலும் நஷ்டமடையக் கூடாது என்பதற்காகத்தான் பத்து ரூபாய் முகமதிப்புள்ள பங்கினை பத்து ரூபாய்க்கே தருகிறோம்’ என்று இந்நிறுவனத்தின் தலைவர் கிஷோர் பியானி சொல்லி இருக்கிறார். ஆனால், அதையும் முழுமையாக ஏற்க முடியவில்லை. இந்த பங்கினையும் பிரீமியம் விலையில் கொண்டுவந்திருந்தால் முதலீடு செய்ய யாரும் வரமாட்டார்கள். அதனால்தான் முகமதிப்பிலேயே கொண்டு வந்திருக்கிறார். மேலும் இந்த குரூப் நிறுவனங்களில் பெரும்பாலானவை நஷ்டத்தில் இயங்குகின்றன. அதனால் மற்ற நிறுவனங்களில் இருக்கும் நிதித்தட்டுப்பாட்டைச் சமாளிப் பதற்காக இந்த ஐ.பி.ஓ. கொண்டு வரப்பட்டதாகவே நான் நினைக்கிறேன். சாதகங்களைவிட பாதகங்களே அதிகமாக இருக்கிறது என்பதால் இந்த ஐ.பி.ஓ.வில் முதலீடு செய்ய வேண்டாம்.
பட்டியலிடும் அன்றைக்கே விற்றுவிட்டு லாபம் சம்பாதிக்க நினைப்பவர்களைப் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை. அது அவர்களுடைய ரிஸ்க். சந்தையின் இறக்கத்தில் பெரிய பெரிய நிறுவனங்களின் பங்குகளே சரிவைச் சந்திக்கும்போது, இந்த நிறுவன பங்கும்  விலை குறையவே வாய்ப்பிருக்கிறது. அதனால் பட்டியலிடப்பட்ட பின்பு மார்க்கெட் நிலவரத்தைப் பொறுத்து வாங்குவதே சரியாக இருக்கும்'' என்றார்.

-வா.கார்த்திகேயன்

Source - Vikatan Magazine

யார் பினாமி?

யார் பினாமி?

சர்ச்சை

நேற்று சாதாரணமாக சைக்கிளில் சென்ற ஒருவர் இன்று காரில் வந்து இறங்குகிறார். எப்படி இவருக்கு இவ்வளவு செல்வம் சேர்ந்தது என குழம்பிப்போவோம். விபரமறிந்தவர்கள் சொல்வார்கள் அவர், 'எவருக்கோ பினாமியாக இருக்கிறார்’ என்று. இப்படி 'இவர் அவருக்கு பினாமி, அவர் இவருக்கு பினாமி’ என பினாமிகள் பற்றி பல  கிசுகிசுக்கள் ஏதோ ஒரு வகையில் அன்றாடம் நம் காதுகளுக்கு வரத்தான் செய்கிறது.
ண்மை காலத்தில் இந்தியாவில் இதுபோன்ற பினாமிகள் அதிகரித்து விட்டதாக புள்ளிவிபரங்கள் சொல்கிறது. வரி ஏய்ப்பு உள்ளிட்ட பல பிரச்னைகள் இதனால் ஏற்படுவதால் இந்த போக்கைத் தடுப்பதற்கு அரசாங்கம் தவியாய் தவிக்கிறது.
பினாமிக்கு 'இரவல் பெயர்’ என்று தமிழில் அர்த்தம் சொல்லலாம். 'பெயர் இல்லாதது’ என்று உருது மொழி சொல்கிறது. இந்த பெயர் இல்லாததுதான் இந்த பாடு படுத்துகிறது இந்தியாவை.
யார் பினாமி?

ஒருவர் தன்னுடைய பெயரால் சொத்து வாங்குவதையோ, வணிகம் செய்வதையோ குறைத்துக் கொண்டு, மனைவி, மகள் போன்ற மிக நெருங்கிய குடும்ப உறுப்பினர் அல்லாமல் வேறொருவர் பெயரில் செய்யும்போது அந்த இன்னொரு நபர் பினாமியாகி விடுகிறார். அசையும் பொருளாக இருந்தாலும் சரி, அசையா பொருளாக இருந்தாலும் சரி, இப்படி இன்னொருவர் பெயரில் வாங்கினாலே அது பினாமி எல்லைக்குள் வந்துவிடும்.
ஆரம்ப காலத்தில், பாசத்தை வெளிக்காட்டும் விதமாக மனைவி, பிள்ளைகள் பெயரில் குடும்பத் தலைவர் சொத்துக்கள் வாங்குவது நடந்தது. அதாவது, மிகவும் நம்பகமான குடும்ப உறுப்பினர்கள் பெயரில் சொத்துகள் வாங்குவார்கள். 
அதன்பிறகு கடன்காரர்களை ஏமாற்ற, வரி ஏய்ப்பு செய்ய, லஞ்சம், ஊழல் மூலம் சம்பாதித்ததை கணக்கில் காட்டாமல் மறைக்க, கோர்ட்டில் திவால் நோட்டீஸ் கொடுக்க என பல காரணங்களால் குடும்ப உறவு அல்லாத ஆட்களின் பெயரில் சொத்து வாங்குவது அதிகரித்தது. இப்படி குடும்ப உறவு இல்லாத மற்றவர்கள் பெயரில் சொத்து வாங்குவதுதான் பினாமி சொத்து ஆகும்.
இப்படி பினாமிகள் பெயரில் சொத்துகள் வாங்கி, பினாமிக்கும் சொத்தை வாங்கிக் கொடுத்தவருக்கும் இடையே பிரச்னை வந்துவிட்டால் என்ன ஆகும்? சொத்து யார் கைக்கு போய்விடும்? 1988-ம் வருடத்துக்கு முன்பு வரை சொத்தை வாங்கிக் கொடுத்தவருக்குதான் உரிமை போய்ச் சேர்ந்தது. ஒரு உதாரணம் மூலம் இதைப் பார்க்கலாம்...
பிரபு என்கிற நபர், வரி கட்டுவதிலிருந்து தப்பிக்க தன் நண்பரான சுரேஷ் பெயரில் பினாமியாக சொத்தை பதிவு செய்தார். இடையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதில், பிரபு வாங்கிக் கொடுத்த சொத்தை, சுரேஷ் தர முடியாது என்று சொல்லி விட்டார். பிரபு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, சுரேஷ் பெயரில் வாங்கப்பட்ட சொத்துக்கு நான்தான் பணம் கொடுத்தேன் என்பதை நிரூபித்தார். விளைவு, பிரபு வசம் சொத்து வந்தது. அதாவது, சொத்தை வாங்க யார் பணம் கொடுத்தார்களோ அவர்களே உண்மையான உரிமையாளர் என்றானது. இதேபோல், மனைவி பெயரில் கணவர் சொத்து வாங்கியிருந்தாலும், மனைவி தான் இஷ்டப்பட்டவர்களுக்கு அந்த சொத்தை கொடுக்க முடியாத நிலைதான் இருந்தது. அதாவது, அப்பாவின் பணத்தில் அம்மா பெயரில் சொத்து வாங்கப்பட்டிருந்ததால், அதை குறிப்பிட்டு எங்களுக்கும் சொத்தில் உரிமை இருக்கிறது என தாய் மீது வழக்கு தொடர்வதும் அதிகரித்தன.
1988-க்கு முன்பு வரை பினாமி சொத்துகளை முறைப்படுத்த சரியான எந்தச் சட்டமும் இல்லாததால் இப்படி பல பிரச்னைகள் எழுந்தன. 
பினாமி தடுப்புச் சட்டம்
அத்துமீறி செயல்படுபவர்களையும், சட்ட விரோதமாக சம்பாதிப்ப வர்களையும் கட்டுப்படுத்தும் விதமாக 1988-ம் ஆண்டு, 'பினாமி சொத்து தடுப்புச் சட்டம்’ கொண்டு வரப்பட்டது.
அதன் முக்கிய ஷரத்துகள் வருமாறு:
* பினாமி சொத்தை வாங்குவதோ விற்பதோ சட்ட விரோதம்.
* சொத்து யார் பெயரில் இருக்கிறதோ, யாரிடம் இருக்கிறதோ அவர்தான் உரிமையாளர்.
* பினாமி பெயரில் சொத்து பரிமாற்றம் செய்தவர்கள் மீது குற்ற வியல் வழக்கு தொடரப்படும்.
* குற்றம் நிரூபிக்கப்பட்டால்    3 ஆண்டு சிறைத் தண்டனை.
* பினாமி பெயரில் வாங்கப் பட்ட சொத்துக்கு நான்தான் பணம் கொடுத்தேன். எனவே, அது என் சொத்து என உரிமை கோரி கோர்ட்டில் வழக்கு தொடர முடியாது.
* பினாமி சொத்து பறிமுதல் செய்யப்படும்.
விதி விலக்குகள்
இந்தச் சட்டத்தில் விதி விலக்குகளும் இருக்கின்றன. அதாவது, கணவன் தன் மனைவி பெயரிலோ, தந்தை  தன் திருமணம் ஆகாத மகள் பெயரிலோ சொத்து வாங்கினால் அது பினாமி தடுப்பு சட்டத்தால் பாதிக்கப்படாது.
அதே நேரத்தில், தந்தை,  மகன் பெயரில் சொத்து வாங்கும்போது அது பினாமியாக கருதப்படும். இதேபோல், இந்துக் கூட்டுக் குடும்பத்தில் குடும்பத் தலைவர் மற்றவர்களுக்காக சொத்து வாங்குவது பினாமி சொத்தாக கருதப்படாது. பலர் பலன் அடையும் டிரஸ்ட் பெயரில் வாங்கப்படும் சொத்துகளும் பினாமி சொத்து அல்ல என்று தெளிவுப்படுத்தப்பட்டது. 
ஆனாலும், ஒருவர் பெயரில் ஒரு சொத்து வாங்கப்பட்டாலும், அதற்கான வருமான ஆதாரம் இல்லை என்றால் அது பினாமி சொத்தாகத்தான்  கருதமுடியும் என்று சட்டம் சொல்கிறது. ஆனால், இப்படியான சட்டம் கொண்டு வந்த பின்னும் அதை முறையாக அமல்படுத்த விதிகள் எதுவும் இல்லை என்பதால் பினாமிகள் எல்லாம் உண்மையான உரிமையாளர்கள் போலவே நடந்து கொள்வதோடு, அதனை தங்களின் சொத்தாக கருதி அனுபவித்து வருகிறார்கள். இந்நிலையில், வாங்கிக் கொடுத்தவர்கள் திடீர் என இறந்துவிட்டாலோ அல்லது வேறு ஏதாவது பிரச்னையில் சிக்கி ஜெயிலுக்குப் போய்விட்டாலோ பினாமிகளுக்கு கொண்டாட்டம்தான். ஐந்து பைசா கூட போடாமல், அவர்கள் பெயரில் வாங்கப்பட்ட கோடிக்கணக்கான சொத்துக்கள் எல்லாம் அவர்களுக்கே அவர்களுக்குதானே!
இது ஒருபுறமிருக்க பல இடங்களில் சொத்து வாங்கிக் கொடுத்தவர்களும் பினாமி சொத்தின் பலனை அனுபவிப்பதால் சட்டம் தன்னுடைய கடமையைச் செய்ய முடியாத நிலையில்தான் உள்ளது.
சட்டத் திருத்தம்..!
இந்த நிலையில் தற்போது பினாமி சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இருபத்தி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு வரப்போகும் முக்கியமான சட்டத் திருத்தம் என்பதால் அது எப்படியிருக்கும் என்பது குறித்து வழக்கறிஞர் என். ரமேஷிடம் கேட்டோம்.
''பழைய சட்டத்தில் பினாமி சொத்து குறித்து யாரிடம் புகார் கொடுப்பது, யார் புகார் கொடுப்பது, விசாரணை வழி முறைகள் என்ன என்பது போன்ற எதுவும் தெளிவுபடுத்தப்படாமல் இருந்தது. மேலும், சொத்தை பறிமுதல் செய்வது தொடர்பான அதிகாரமும் வரையறுக்கப்படவில்லை. இதனால், இதுவரை பினாமி பரிமாற்றம்  தொடர்பான சொத்துகள் பறிமுதல் செய்யப்படவோ, குற்ற நடவடிக்கை எடுக்கப்படவோ இல்லை. இந்தக் குறைபாடுகளை சரிசெய்து, சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது நல்ல விஷயம்தான். 
அதாவது, பினாமி சொத்துகளை சட்டப்படி பறிமுதல் செய்வதற்கான அதிகாரம், வழிமுறைகள் கொண்டு வரப்பட இருக்கிறது. இந்த சட்டத்திருத்த மசோதா பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தப்படலாம்'' என்றார்.
சொத்து விலை குறையுமா?
இந்நிலையில், சொத்துக்களை வாங்கியதற்கான சரியான வருமான ஆதாரத்தை பினாமிகள் காட்டவில்லை என்றால் சொத்து பறிமுதல் செய்யப்படும் என்பதை அரசு எந்த ஒரு பாரபட்சமும் காட்டாமல் அமல்படுத்தினால் நாட்டில் சொத்துக்கள் மீதான பரிவர்த்தனை குறைந்து அதன் விலை கணிசமாக குறைய வாய்ப்பு இருப்பதாக மும்பையைச் சேர்ந்த முன்னணி ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனம் ஒன்றின் உயர் அதிகாரி கருத்து தெரிவித்தார்.
முறையாக சம்பாதித்து , முறையாக வரிகட்டி சொத்து சேர்த்தவர்களுக்கு இந்த சட்டத்தால் எந்த பாதிப்பும் இருக்காது. பிஸினஸ் மேன்களும், அரசியல்வாதிகளும் பினாமிகள் பெயரில் வாங்கி குவித்திருக்கும் சொத்துகள் என்ன ஆகும்?  இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால்தான் தெரியும்?  பொறுத்திருந்துதான் பார்ப்போமே.
- சி.சரவணன்

Source - Vikatan Magazine

Sunday, April 24, 2011

முதற்படி முதலில் படி! - 21

முதற்படி முதலில் படி!

ஷேர் மார்க்கெட்டில் நுழைய விரும்பும் புதியவர்களுக்கான வழிகாட்டித் தொடர்!
டிவிடெண்ட் யீல்டு
கடந்த இரண்டு வாரங்களாக குவான்டிடேட்டிவ் அனாலிசிஸில் முக்கியமான விஷயங்கள் சிலவற்றைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக இந்த வாரம் மேலும் சில முக்கியமான  அளவுகோல்கள் குறித்துப் பார்ப்போம்...
டிவிடெண்ட் யீல்ட்: எந்த ஒரு முதலீடும் தொடர்ந்து கொஞ்சமாவது கேஷ் ஃப்ளோவை கொடுத்து வரவேண்டும். நீங்கள் எக்ஸ்ட்ராவாக ஒரு வீடு வைத்துள்ளீர்கள் - அதிலிருந்து மாதாமாதம் வாடகை வந்து கொண்டிருந்தால் உங்களுக்கு சந்தோஷம்தானே? அதைப் போலவே பங்கு முதலீட்டிலிருந்து வருவது டிவிடெண்ட் ஆகும். நாம் நீண்ட நாட்களுக்கு ஒரு நிறுவனப் பங்கில் முதலீட்டாளராக இருக்கும்போது, நமக்கு
டிவிடெண்ட் ஒன்றுதான் கேஷ் ஃப்ளோவாகக் கிடைக்கக்கூடியது. டிவிடெண்ட் என்பது நிறுவனம் தனது லாபத்தில் ஒரு பகுதியை பங்குதாரர் களுக்கு பிரித்துக் கொடுப்பது. இதை கொஞ்சம் விளக்கமாக பார்க்கலாமா?

ஒவ்வொரு பங்கிற்கும் முகமதிப்பு என்று ஒன்று இருக்கிறது. நம் நாட்டில் இந்த முகமதிப்பின் அடிப்படையில் டிவிடெண்டை அறிவிக்கிறார்கள். உதாரணத்திற்கு, 10 ரூபாய் முகமதிப்பு கொண்ட இந்தியன் வங்கி, மார்ச் 2010-ல் முடிந்த நிதி ஆண்டில் 25% டிவிடெண்ட் ஒருமுறையும், 40% டிவிடெண்ட் மற்றொருமுறையும், ஆக மொத்தம் 65% (6.50) டிவிடெண்ட் அந்த ஆண்டு கொடுத்தது.
இந்த டிவிடெண்ட் சதவிகிதத்தை முகமதிப்பை அடிப்படையாக வைத்து சொல்கிறார்கள். ஆனால், தற்போதைய விலையின் மீது வைத்து இதன் வருமானத்தைப் பார்ப்பது அல்லது நீங்கள் வாங்கிய விலையை வைத்து இதன் வருமானத்தைப் பார்ப்பதுதான் சரியானது. அதைத்தான் டிவிடெண்ட் யீல்ட் என்று கூறுகிறோம். உதாரணமாக, இந்தியன் வங்கியையே எடுத்துக் கொள்வோமே!
இந்த பங்கின் தற்போதைய விலையை வைத்துப் பார்த்தால், இந்தியன் வங்கியின் மார்ச் 2010-ம் ஆண்டின் டிவிடெண்ட் யீல்ட் 2.78% (6.50/234) ஆகும். இந்தியன் வங்கி தனது பங்கை முதன் முதலில் 2007-ம் ஆண்டு மக்களுக்கு விற்றபோது நீங்கள் அப்பங்கை 91 ரூபாயில் வாங்கியிருந்தால், உங்களின் யீல்ட் 7.14% (6.50/91) ஆகும். நீங்கள் பங்குகளை வாங்கப் போகுமுன் பார்க்க வேண்டிய அளவுகோல்களில் டிவிடெண்ட் யீல்ட் ஒரு முக்கியமான அளவுகோல் ஆகும். அது அதிகமாக இருப்பது நல்லது. சில சமயங்களில் பங்கு விலை, நிறுவனத்தில் இருக்கும் பெரிய பிரச்னையால், திடீரென்று சரிந்திருக்கும். அதுபோன்ற சமயங்களில் டிவிடெண்ட் யீல்ட் அதிகமாக தென்படும். ஆகவே, முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியது அவசியம்.
இந்தியப் பொருளாதாரமும், நிறுவனங்களும் இன்று வளர்ச்சிப் பாதையில் இருப்பதால், டிவிடெண்ட் யீல்ட் பொதுவாகவே குறைவாக உள்ளது. காரணம், நிறுவனங்கள் தங்களது லாபத்தை தொழில்களிலேயே திருப்பி முதலீடு செய்துவிடுவது தான். நமது நிஃப்டி குறியீட்டின் டிவிடெண்ட் யீல்ட் வெறும் 1.07 சதவிகிதம்தான். வங்கி போன்ற சில துறை சார்ந்த பங்குகளின் டிவிடெண்ட் யீல்ட் சற்று அதிகமாக இருக்கும். பொதுவாக நடுத்தர மற்றும் சிறிய நிறுவனங்களின் டிவிடெண்ட் யீல்ட் பெரிய நிறுவனங்களைவிட அதிகமாக இருக்கும். ரிஸ்க் குறைவாக எடுக்க விரும்புகிறவர்கள் டிவிடெண்ட் யீல்ட் அதிகமாக உள்ள பங்குகளில் முதலீடு செய்யலாம். பொதுவாக பழைய பொருளாதார நிறுவனங்களின் (புதிய பொருளாதார நிறுவனங்களைவிட) டிவிடெண்ட் யீல்ட் அதிகமாக இருக்கும்.
உச்சபட்ச விலை / குறைந்தபட்ச விலை
பொதுவாக பங்குகளை வாங்க பல அளவுகோல்களை அலசும்போது அப்பங்கின் அதுவரையிலான உச்சபட்ச விலை/குறைந்தபட்ச விலை மற்றும் 52 வார அதிகம்/குறைவு  போன்றவற்றையும் பாருங்கள். இது பங்கு காளையின் பிடியில் உள்ளதா அல்லது கரடியின் பிடியில் உள்ளதா என்பதைக் காண்பிக்கும். பங்குகள் தங்களது உச்சபட்ச விலையை ஒட்டி வர்த்தகம் ஆகும்போது வாங்குவதை தவிர்ப்பது நல்லது. அதேசமயம் பங்குகள் கரடியின் பிடியில் இருக்கும்போது வாங்குவது நல்லது.
சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்துக்கு சில ஆண்டுகள் நிகழ்ந்ததைப் போல ஏதேனும் பெரிய பிரச்னைகள் ஒரு நிறுவனத்திற்கு நிகழலாம். அதுபோன்ற சமயங்களில் எச்சரிக்கை தேவை. சந்தை மொத்தமாக அடிபட்டிருக்கும் போது அல்லது சில துறைகள் அடிபட்டிருக்கும்போது பங்குகள் மிகவும் மலிவான விலையில் கிடைக்க வாய்ப்புண்டு. அதுபோன்ற சமயங்களில் மற்ற அளவுகோல்கள் சாதகமாக இருக்கும் பட்சத்தில், உறுதியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
ஷேர்ஹோல்டிங்
நீங்கள் வாங்கப் போகும் நிறுவனத்தின் பங்குகளை வேறு யார் யார் வைத்திருக்கிறார்கள் என்று பாருங்கள். நன்றாக செயல்படும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள், அரசு சார்ந்த மற்றும் தனியார் துறையின் பெரிய நிறுவனங்கள், இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள், ஐ.எஃப்.சி (இண்டர்நேஷனல் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன்) போன்ற நிறுவனங்கள் ஷேர்ஹோல்டராக இருப்பது பாஸிட்டிவ்-ஆன விஷயம். அதை நீங்கள் ஒரு ஃபில்ட்டராக வைத்துக் கொள்ளலாம். ஓரளவு ஆராயாமல் அவர்கள் அந்நிறுவனப் பங்குகளை வாங்கியிருக்க மாட்டார்கள். எஃப்.ஐ.ஐ. என்று கூறப்படும் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ஷேர்ஹோல் டர்களாக இருப்பது ஒரு வகையில் நன்மை - பங்கின் விலை உயரும்; மற்றொரு வகையில் தீமை - வெளிநாடுகளில் அவர்களுக்கு போட்ட பணம் தேவைப்பட்டால் இங்கிருந்து உடன் எடுத்துச் செல்லும்போது, அப்பங்கின் விலை சடாரென்று குறைய வாய்ப்புண்டு. ஆகவே, சற்று எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். பெரிய நிறுவனப் பங்குகளைப் பொறுத்தவரை, இது ஒன்றும் பிரச்னை இல்லை. நடுத்தர மற்றும் சிறிய நிறுவனப் பங்குகள் அவ்வாறு அடிபட்டால் எழுந்து வர நாளாகும்.
மொத்தக் கடன்
பல நிறுவனங்கள் மூலைக்கு தள்ளப்படுவதற்குக் காரணம் சக்திக்கு மீறிய கடன். கடன் என்பது இருதலைக் கொள்ளி போன்றது. சமயம் சரியாக இருந்தால் ஒரு நிறுவனத்தை அளவிற்கு அதிகமாகத் தூக்கிவிடும். கஷ்டம் என்று வருகையில் அதலபாதாளத் திற்கு தள்ளிவிடும். இதுபோல், இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பல நிறுவனங்கள் பாதாளத்தில் தள்ளப்பட்டிருக்கின்றன. கடனே இல்லாமல் செயல்படும் நிறுவனங் கள் மிக மிகச் சிறந்தவை. சில நேரங்களில் நிறுவனத்துக்கு ஓரளவு கடன் இருந்தால், மேனேஜ்மென்ட் சற்று துரிதமாக வேலை பார்க்கும். மேலும், நிறுவனத்தில் சற்று வேகம் இருக்கும். அதுபோக, பங்கின் மீதான வருமானம் சற்று அதிகமாக இருக்கும். நீங்கள் வாங்கப் போகும் நிறுவனத்தின் மொத்தக் கடன் எவ்வளவு என்று பாருங்கள். பங்கு முதலைப் போல் எத்தனை மடங்குக்கு கடன் வாங்கியுள்ளது என்பதைக் கவனியுங்கள். இது ஒவ்வொரு துறைக்கும் சற்று மாறுபடும். வங்கிகள் கடன் (டெபாசிட்) வாங்காமல் தொழில் செய்ய முடியாது. அதுபோல் சர்வீஸ் துறையில் இருக்கும் நிறுவனங்களுக்கு அதிகமாக கடன் தேவைப்படாது. நீங்கள் வாங்கப்போகும் பங்கை அத் துறையில் உள்ள சிறந்த நிறுவனப் பங்குடன் ஒப்பிடுங்கள். அப்போது உங்களுக்குத் தெளிவு பிறக்கும்.
(படி ஏறுவோம்)
Source - Vikatan Magazine

Monday, April 18, 2011

கம்பெனி அலசல்

 


பத்து ஆளு செய்யிற வேலைய ஒத்த ஆளா பாக்குறவன்தான் பயில்வான். அப்படி இருக்குற ஒருத்தனுக்கு இன்னொரு பயில்வான்தான் போட்டியா இருக்க முடியும். அவங்ககூட மத்த யாரும் போட்டி போட முடியாது. அப்படி ஒரு பயில்வானைப் போல உள்ள கம்பெனியைதான் இந்த வாரம் அலசப்போகிறோம்.

கட்டுமானத் துறை தளவாடங்களைத் தயாரிக்கும் ஆக்ஷன் கன்ஸ்ட்ரக்ஷன் எக்யூப்மென்ட்தான் (ஏஸ்) அந்த நிறுவனம்.  
இந்த கம்பெனி ஈடுபட்டிருக்கிற துறையில் இவர்கள் மட்டுமே 53 சதவிகித மார்க்கெட் ஷேரை வைத்திருக்கிறார்கள். இருக்கிற ஒரே ஒரு போட்டி கம்பெனி 42 சதவிகித மார்க்கெட்டை வைத்திருப்பதால் இந்த துறையில் இவர்களின் மார்க்கெட் இடத்தை யாராலும் நெருங்க முடியாது. அதிலும் வேக வேகமாக வளர்ந்து வரும் துறையில் இருக்கும் நிறுவனம் என்பதால் அந்த வளர்ச்சிகளை எல்லாம் விற்பனையாக்கி 35% வரை (சி.ஏ.ஜி.ஆர்) வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
என்ன தொழில்?
கட்டுமானத் துறையின் முக்கிய தளவாடங்களான கிரேன்கள், மெட்டீரியல் ஹேண்ட்லிங் இயந்திரங்கள், பிக்-அண்ட்-கேரி கிரேன்கள், ட்ரக்கில்  பொருத்தப் பட்டு உபயோகப்படுத்தப்படுகின்ற கிரேன்கள், எல்லாவிதமான கரடு முரடான பூமிகளிலும் சென்று வேலை செய்யக்கூடிய கிரேன்கள் மற்றும் லாரி/ட்ரக்குகளில் பொருட்களை லோட் செய்யத் தேவையான கிரேன்கள் என அனைத்துவிதமான மொபைல் கிரேன்களையும் இந்த நிறுவனம் உற்பத்தி செய்கிறது.
மூன்று முதல் நாற்பது டன் வரையிலான எடை தூக்கும் மொபைல் கிரேன்களை தயாரித்து விற்பனை செய்வதில் முன்னணியில் இருப்பது மட்டுமல்லாமல், மொபைல் டெலி ஹேண்ட்லர்ஸ் எனப்படும் ஸ்பெஷல் வகை கிரேன்களை சீனாவிலிருந்து இறக்குமதி செய்தும் விற்பனை செய்து வருகிறது. இப்போது இந்த வகை கிரேன்களுக்கு டிமாண்ட் அதிகம் இல்லை என்றாலும், இதை தயாரிக்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளது. ராணுவம் இந்த  இயந்திரத்தை அப்ரூவ் செய்தால் விற்பனை மிக அதிமாகும் என எதிர்பார்க்கலாம்.
தனித்திறமை ஏதும் இருக்கிறதா?
மொபைல் கிரேனில் மட்டு மல்லாது டவர் கிரேன்களிலும் தன்னுடைய தனித்தன்மையை கோலோச்சி வருகிறது. அதோடு,  புதுவிதமான மாடல்களையும், புதிய டைப் கிரேன்களையும் வடிவமைத்து முன்னோடியாகவும் இருக்கிறது இந்த கம்பெனி.
கஸ்டமர்கள் யார்?
கட்டுமானம், சாலைப்பணி, என்ஜினீயரிங் மற்றும் ஹெவி என்ஜினீயரிங் இண்டஸ்ட்ரி, நிலக்கரிச் சுரங்கங்கள், கெமிக்கல் மற்றும் ஃபெர்ட்டிலைசர், மின் நிலையங்கள், துறைமுகங்கள், ரயில்வே, சிமென்ட், ஆயில் மற்றும் ராணுவம் வரையிலும்  கிட்டத்தட்ட 8,500 கஸ்டமர்களைக் வைத்திருக்கிறது. ரிலையன்ஸ், ஏ.பி.ஜி., எல் அண்ட் டி, புஞ்ச் லாயிட், எஸ்ஸார், பி.எச்.இ.எல்., நாகார்ஜுனா கன்ஸ்ட்ரக்ஷன், குஜராத் அம்புஜா, சிம்ப்ளெக்ஸ் இன்ஃப்ரா, கோல் இந்தியா, கேமான் இந்தியா என இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்களை பார்த்தாலே இந்த கம்பெனியின் தரமும் திறனும் புரியும்.
நெட்வொர்க் இருக்கிறதா?
  இந்தியா முழுவதுமாக 80-க்கும் மேற்பட்ட இடங்களில் டீலர்களையும் 5 ரீஜினல் ஆபீஸ்களையும் வைத்து தொழிலைத் திறம்பட வளர்த்து வருகிறது இந்நிறுவனம்.
புதிய செக்மென்டுகள் ஏதும் செயல்படுகின்றதா?
இரண்டாண்டு காலமாக சிறிய டிராக்டர்களையும் உற்பத்தி செய்வதோடு  விற்பனையும் செய்து வருகிறது. ஹரியானா, உத்தரப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் மட்டுமே இப்போது சிறிய டிராக்டர்கள் விற்கப்பட்டு வருகிறது.
வருகின்ற நிதியாண்டில் பஞ்சாபின் சில பகுதிகளிலும், மத்தியப் பிரதேசத்திலும் விற்பனையை ஆரம்பிக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. எதிர்வரும் நிதியாண்டில் 7,500 சிறிய டிராக் டர்களை விற்கலாம் என்று எதிர்பார்க்கலாம்.
கெப்பாசிட்டி எக்ஸ்பான்சன் உண்டா?
மொபைல் கிரேன் செக்மென்டில் லீடராக இருப்பதால் எப்போதுமே இதன் கிரேன்களை புக் செய்தே பெறவேண்டியுள்ளது. மாதத்திற்கு 575 கிரேன்கள் தேவையிருக்கிறது. ஆனால், இந்நிறுவனத்தால்  400 கிரேன்களை மட்டுமே செய்ய முடிகிறது. இதனால்
ஆர்டர் புக் எப்போதுமே ஃபுல்லாக இருக்கிறது.  இதுபோல் தொடர்ந்து ஆர்டர் புக் ஃபுல்லாக இருப்பதும், தாமதமாக டெலிவரி செய்வதும் போட்டியாளர்களை வளரவைத்துவிடும் என்பதை உணர்ந்துள்ள இந்நிறுவனம்  கெப்பாசிட்டியை அதிகரிக்க முயற்சிகள் எடுத்து வருகிறது.
உத்தராஞ்சலில் ஒரு புதிய கிரேன் உற்பத்தி செய்யும் தொழிற் சாலையை நிறுவியுள்ளது. இந்த புதிய கிரேன் உற்பத்தி தொழிற் சாலையின் முதல்படி ஏப்ரல் 2011 நிறைவில் நிலைபெற்றுவிடும் என எதிர்பார்க்கலாம். அப்படி நிலைபெற்றால் தற்போதிருக்கும் கெப்பாசிட்டியான 400-லிருந்து 550 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.  அடுத்த ஏப்ரலில் மாதாந்திர கெப்பாசிட்டி 750 வரை அதிகரிக்கும்.
எதிர்காலம் எப்படி?
இன்ஃப்ராஸ்ட்ரக்சரின் கீழே வரும் கட்டுமானம், ரோடுகள், ரயில்வே, துறைமுகங்கள், ஆயில் மற்றும் கேஸ், ராணுவம் என அத்தனை ஏரியாக்களிலும் வேகமாக வளர்ந்து வரும் நாடாகிய இந்தியா, அதிக அளவில் முன்னேற்றத்துக்காக பொருட் செலவு செய்யவிருக்கிறது. அதனால் மேலே குறிப்பிடப்பட்டுள்ள அத்தனை ஏரியாக்களிலும் இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் நிச்சயம் தேவைப்படும். பெரியதொரு மார்க்கெட் லீடராக இருப்பதால் குறிப்பிட்டுள்ள துறைகளின் வளர்ச்சியின் வேகத்துக்கு ஈடாக இந்நிறுவனமும் வளரும். விவசாயத் துறையிலும் டிராக்டர் உற்பத்தி மூலம் கால்பதிப்பதால் அரசாங்கத்தின் கவனம் அதிகம் உள்ள விவசாயம் சார்ந்த டிராக்டர் விற்பனையும் அதிகரித்து லாபத்தை உயர்த்தும் என்பதில் ஐயமேதுமில்லை.
மேலும் கட்டுமானத்துறையில் இதுநாள்வரை பெரிய அளவில் உபகரணங்கள் (கிரேன், மிக்ஸர் போன்றவை) உபயோகப் படுத்தப்படவில்லை.  வேகமான வளர்ச்சிகாணும் பொருளா தாரத்தால், இனிவரும் காலத்தில் கட்டுமானத்துறையில் கூலி வேலைக்கு ஆள் கிடைக்கும் வாய்ப்பு மிகக்குறைவாகவே இருக்கும். எனவே, கட்டுமானத் துறையில் இயந்திரங்கள் பெரிய அளவில் ஈடுபடுத்தப்பட முழு வாய்ப்பு உள்ளது. இதனாலும் இந்நிறுவனத்துக்கு பெரியளவில்  நன்மை ஏற்படும். நகரமயமாதலும் அதனால் ஏற்படும் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் தேவைகளும் ஏஸின் வளர்ச்சியை வேகமாக்கும் என்பதில் மாற்றுக் கருத்தே இருக்கமுடியாது. மெட்டல் மற்றும் எனர்ஜியின் தேவை
நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போவதாலும் சுரங்கத் துறைக்கு தேவையான இயந்திரங் களின் தேவையும் அதிகரித்துக் கொண்டேதான் போகும். 
இவ்வாறு ஏஸ் சம்பந்தப்பட் டுள்ள அத்தனை தொழில்களுமே இன்றைய சூழ்நிலையை வைத்துப் பார்த்தால் எதிர்காலத்தில் பெரிய அளவில் வளர்ச்சியடைய வாய்ப்புள்ளதைப் போலவே தோன்றுகிறது. எனவே, அந்தத் துறைகளுக்கான இயந்திரங்களை சப்ளை செய்யும் ஏஸும் அவற்றுடன் சேர்ந்து வளரத்தான் செய்யும்.
என்ன ரிஸ்க்?
திடீரென வட்டி விகிதங்கள் வேகமாக மேலே சென்றால் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் கம்பெனிகள் தங்களுடைய நடவடிக்கைகளை தள்ளிப் போடலாம். அப்படித் தள்ளிப்போடும்போது ஏஸின் வருமானம் ஓரளவிற்கு குறையலாம்.
ஏதாவதொரு காரணத்தால் உலகப் பொருளாதார சூழல் திடீரென மீண்டும் கீழே போனாலும் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் மற்றும் கன்ஸ்ட்ரக்ஷன் செக்டாரில் பெரிய அளவில் தொய்வு விழ வாய்ப் புள்ளது. அந்த சூழ்நிலையில் இந்த இரண்டு துறையையும் சார்ந் திருக்கும் ஏஸின் லாபம் நன்றாகவே குறையலாம்.
ஏன் இந்த ஷேரை வாங்க வேண்டும்?
இந்த துறையில் இரண்டு   மேஜர் பிளேயர்கள் மட்டுமே  இருப்பதால் வளர்ச்சி நிச்சயம், அதனால் போட்டியும் குறைவு. 2011-12-ன் ஜி.டி.பி. எதிர்பார்ப்பான 8-9 சதவிகிதம் வளர்ச்சியைக் கண்டாலே பெரிய அளவில் லாபம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மொபைல் கிரேன்கள் லாரி/கார் போன்ற வாகனங்களுக்கு சமமான ஒன்றாகும். நாளாக நாளாக மாற்ற வேண்டிய ஒரு மெக்கானிக்கல் விஷயம்.
எனவே, புதிய விற்பனை அதிகரிக்க அதிகரிக்க, ஸ்பேர் பார்ட்ஸ் விற்பனையும், நாளாக நாளாக ரீப்ளேஸ்மென்ட் சேல்ஸும் இந்த கம்பெனிக்கு நன்றாகவே கைகொடுக்கும். எனவே, வாசகர்கள் இந்த கம்பெனியை இரண்டாண்டு கால முதலீட்டிற்காக ரூபாய் 80 வரை செல்லும் என்ற எதிர்பார்ப்பில் இன்றைய விலையான 47 ரேஞ்சில் முதலீடு செய்யலாம் என்பதே நம் கருத்து.
-நாணயம் டீம்  

Source - Vikatan Magazine

முதற்படி முதலில் படி! - 20

முதற்படி முதலில் படி!

பங்குச்சந்தை ஆத்திச்சூடி..
ஷேர் மார்க்கெட்டில் நுழைய விரும்பும் புதியவர்களுக்கான வழிகாட்டித் தொடர்!
சென்ற வாரம் பி/இ பற்றிக் கண்டோம். இந்த வாரம் மற்றொரு முக்கியமான அளவுகோலான புத்தக மதிப்பு மற்றும் அதன் விகிதமான H/HM (P/BV)  பற்றிக் காண்போம்.


புத்தக மதிப்பு என்றால் என்ன?
பங்குச் சந்தையில் ஈடுபட்டி ருக்கும் அனைவரும் பல வகையான குறியீடுகளைப் பயன்படுத்தி, தாங்கள் வாங்கப் போகும் பங்குகளைத் தேர்வு செய்கின்றனர். அவற்றினுள் அதிகமாகப் பேசப்படும் ஒரு குறியீடுதான் புத்தக மதிப்பு. இந்த தலைப்பிற்குள் விரிவாகச் செல்லும்முன்னர் புத்தக மதிப்பு என்றால் என்ன என்பதை முதலில் அறிந்து கொள்வோம். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில் ஒரு
நிறுவனத்தின் சொத்து மதிப்பி லிருந்து கடன் மதிப்பைக் கழித்த பிறகு மிஞ்சுவதைத்தான் புத்தக மதிப்பு என்கிறோம்.
இந்த மொத்த புத்தக மதிப்பை, அந்நிறுவனம் வெளியிட்டுள்ள பங்குகளினால் வகுத்தால் கிடைப்பதுதான் ஒரு பங்கின் புத்தக மதிப்பாகும். ஒரு கம்பெனியின் மதிப்பை பலவாறாக கணக்கிடலாம். அவற்றுள் புத்தக மதிப்பும் ஒன்றாகும்.
மற்றுமொரு வகையில் பார்த்தால், ஒரு நிறுவனம் ஏதோ ஒரு காரணத் தினால் மூடப்பட்டால், அதன் சொத்துக்களை விற்றால் எவ்வளவு கிடைக்கும் என்பதுதான் புத்தக மதிப்பு. இந்த மதிப்பு அனைத்து கம்பெனிகளின் ஐந்தொகையில் (Balance Sheet) கிடைக்கும்.
என்ன இது - சுலபம் என்று கூறிவிட்டு கழித்தல், வகுத்தல் எல்லாம் செய்யச் சொல்கிறாரே என்று கவலைப்பட வேண்டாம். பல ஃபைனான்ஷியல் இணைய தளங்கள், ஒரு பங்கின் புத்தக மதிப்பு மற்றும் பி/பிவி போன்ற விகிதங்களை ரெடிமேடாக கொடுக்கின்றன. ஆகவே, அவற் றைக் கண்டுபிடித்து ஒப்பிட்டுப் பார்க்கத் தெரிந்து கொண்டாலே போதும்.
சந்தை விலை / புத்தக மதிப்பு விகிதம்

புத்தக மதிப்பு ஒரு நல்ல குறியீடு என்றாலும், அதைத் தனியாக காண்பதைக் காட்டிலும் மற்றொன்றோடு ஒப்பிட்டுப் பார்த்தால்தான் மிகவும் பயனுள்ளதாக அமையும். இந்த விகிதம்தான் பரவலாக உபயோகிக் கப்படும் பங்கின் விலைக்கும் புத்தக மதிப்பிற்கும் உள்ள விகிதம் (Market Price/ Book Value or P/BV). இந்த விகிதம் ஒரு பங்கின் புத்தக மதிப்பைப்போல் அப்பங்கின் சந்தை விலை எத்தனை மடங்கு உள்ளது என்பதைக் காண்பிக்கும். பொதுவாக இவ்விகிதம் குறைவாக இருப்பது, முதலீட்டாளர்களுக்கு நல்லது. இதை நாம் பி/பிவி விகிதம் என்று எடுத்துக் கொள்வோம். இந்த விகிதமானது மதிப்பு குறைவாக சந்தையில் விற்பனையாகும் பங்குகளைத் தேர்ந்தெடுக்க மிகவும் உதவிகரமாக இருக்கும். மேலும், பழைய பொருளாதார நிறுவனங்கள் அனைத்தையும் ஆராய்வதற்கு இது ஒரு சிறந்த குறியீடாகும். மற்ற பி/இ போன்ற விகிதங்கள் அக்கவுன்டிங் மாறுபாடுகளினால் ஒவ்வொரு நாட்டிற்கும் சிறிது வித்தியாசப்படலாம். ஆனால், புத்தக மதிப்பு என்பது கிட்டத்தட்ட அனைத்து நாடுகளிலும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். ஆகவே, பி/பிவி ஒரு சமமான அளவுகோல் ஆகும். இரண்டாவதாக முதலீட்டாளர்கள் புரிந்து கொள்வதற்கும், பங்குகளை சுலபமாக ஒப்பிடு வதற்கும் இந்த விகிதம் மிகவும் உதவிகரமாக இருக்கும்.
ஒரு நிறுவனம் 50 ஆண்டுகளுக்கு முன்பு தான் வாங்கிய இடங்களையும், கட்டடங்களையும் அன்றைய விலையிலேயே இன்றும் காண் பித்துக் கொண்டிருக்கும். ஆகவே, அதன் இன்றைய புத்தக மதிப்பு அதிகமாக இருந்த போதிலும், ஐந்தொகையில் (Balance Sheet) குறைவாகக் காணப்படலாம்.  அதேபோல் அதன் ஆர்.ஓ.இ. (ROE) என்று சொல்லக் கூடிய பங்கு மூலதனத்திலிருந்து வரும் வருமானம் மிக அதிகமாக இருக்கலாம். இதுபோன்ற பங்குகள் குறைந்த பி/பிவி-யில் கிடைத்தால் மதிப்பைப் பார்த்து முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு (Value Investorss) அது ஒரு வரப்பிரசாதம்.
இதே கூற்று நேர்மாறாக இருப்பதும் உண்டு. ஒரு கம்பெனியின் பங்கு அதன் புத்தக மதிப்பைவிட குறைவாக சந்தையில் வர்த்தகமாகிக் கொண்டிருப்பதற்கு வேறு இரண்டு காரணங்கள் இருக்கலாம்.
1) கம்பெனி அதன் சொத்துக்களின் மதிப்பை அதிகமாக காட்டியிருக்கிறது என்று சந்தை ஊகிப்பது.
2) கம்பெனிக்கு அதன் சொத்துக்களில் இருந்து வரும் வருமானம் குறைவாக அல்லது நெகடிவ்வாக கூட இருப்பது. அவ்வாறு இருக்கும் பட்சத்தில், அதுபோன்ற பங்குகளில் முதலீடு செய்யாமல் இருப்பதே நல்லது.

சந்தை விலை/ புத்தக மதிப்பு விகிதத்தின் அசௌகரியங்கள்.
எந்த ஒரு விகிதத்திற்கும் நன்மை தீமைகள் இருப்பதுபோல, பி/பிவி விகிதத்திற்கும் சில அசௌகரியங்கள் உள்ளன. புத்தக மதிப்பு எம்மாதிரியான நிறுவனங் களுக்கு மிகவும் அதிகமாக இருக்கும்? - கேப்பிட்டல் இன்டென்ஸிவ் என்று ஆங்கிலத்தில் கூறக்கூடிய முதலீடு அதிகம் தேவைப்படக் கூடிய தொழில்களுக்குத்தான் புத்தக மதிப்பு அதிகமாக இருக்கும். இதுபோன்ற தொழில்கள் பெரும்பாலும் உற்பத்தித்துறை, உலோகத்துறை, நிதித்துறை, மின்சார தயாரிப்பு நிறுவனங்கள் போன்றவற்றைச் சார்ந்தவையாக இருக்கும். எந்த ஒரு நிறுவனத் திற்கும் காணக்கூடிய மற்றும் காணமுடியாத சொத்துக்கள் (Tangible & Intagible Assets) என இரு வகையான சொத்துக்கள் இருக்கும். காணக்கூடிய சொத்துக்கள் நாம் அனைவரும் அறிந்த ஒன்று - உபகரணங்கள், கட்டடங்கள், கருவிகள், மற்றும் பிற முதலீடுகள். ஆராய்ச்சி மற்றும் மென்பொருள் தயாரிப்பு போன்ற தொழில்களில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு அந்நிறுவனங்களின் மூலதனமே அவர்களின் ஊழியர்கள்தான் - ஊழியர்களின் மூளைதான்.
அதேபோல் பிராண்ட் மதிப்பும் (Brand Value) பல நிறுவனங் களுக்கும் அவர்கள் விற்கும் பொருட்களுக்கும் முக்கிய மானதாக உள்ளது. பிராண்டை மதிப்புள்ளதாக ஆக்குவதற்கு அந்நிறுவனங்கள் பெருவாரியாகச் செலவு செய்கின்றன. இதுபோல் இன்னும் பலப்பல காண முடியாத சொத்துக்கள் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் உள்ளன.
அவற்றையெல்லாம் நமது ஐந்தொகை கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. இந்தக் காணமுடியாத சொத்துக்களை சந்தை மதிப்பில் எடுத்துக் கொள்வதால் அப்பங்குகளின் விலை புத்தக மதிப்பைவிட பல மடங்கு  அதிகமாக இருக்கும். ஆகவே, இதுபோன்ற நிறுவனங் களுக்கு பி/பிவி-யும் மிகவும் அதிகமாக இருக்கும். இதனால் முதலீட்டாளர்கள் பங்குகளைப் தேர்ந்தெடுக்கும்போது துறை வாரியாக பி/பிவி-யை பார்த்து, அத்துறைக்குள் பங்குகளை ஒப்பிடுவது நன்மை பயக்கும்.
உதாரணத்திற்கு இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பி/பிவி 8.41 ஆகும். ஹிந்துஸ்தான் யூனிலீவரின் பி/பிவி 23.13 ஆகும். ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள சன் பார்மா ரிஸர்ச்சின் பி/பிவி 111.99 ஆகும். அதே எதிர்பகுதியில் உள்ள நிறுவனங்களைப் பார்க்கும்போது மிகவும் குறைவாக இருக்கும். உதாரணத்திற்கு ஷிப்பிங் கார்ப்பரேஷனின் பி/பிவி 0.85 ஆகும். அதேபோல் ஜி.இ. ஷிப்பிங்கின் பி/பிவி 0.80 ஆகும். சிண்டிகேட் பேங்கின் பி/பிவி 1.22 ஆகும்.
மேலும், லாபத்தில் இல்லாத பல நிறுவனங்களின் சந்தை விலை குறைவாக இருக்கும். ஆனால், அவற்றின் முடங்கிக்கிடக்கும் முதலீடு அதிகமாக இருக்கும். ஆகவே, அவற்றின் புத்தக மதிப்பு அதிகமாகக் காணப்படும். பொதுவாக அதுபோன்ற பங்குகளில் இருந்து விலகி இருப்பது நன்று.
இன்னும் கொஞ்சம் சுலபமாகப் புரிந்து கொள்வதற்கு ஓர் உதாரணம்... உங்கள் ஊரில் நீங்கள் ஒரு சூப்பர்மார்க்கெட் ஆரம்பிக்க நினைக்கிறீர்கள். அதே ஊரில் இருக்கும் சூர்யா சூப்பர்மார்க்கெட் சரியாக வியாபாரம் நடக்கவில்லை என்று விலைக்கு வருகிறது. உங்களுக்கோ, அக்கடைக்காரர் சரியாக மார்க்கெட்டிங் செய்யாததால் தான் வியாபாரம் சரியாக நடக்க வில்லை என்று அழுத்தமான நம்பிக்கை. நீங்கள் புதிதாக ஆரம்பித்தால் தளவாடச் சாமான்களுக்கான செலவு சுமார் 5 லட்சம் ஆகும். அதேபோல் தளவாடச் சாமான்கள் உள்ள அந்த கடைக்காரர் கேட்கும் விலையோ ரூ 3 லட்சம்தான். நீங்களும் விலை சாதகமாக உள்ளது என்று அக்கடையை வாங்கிவிடுகிறீர்கள்  ரூ. 3 லட்சம் கொடுத்து! சொல்லப்போனால உங்களுக்கு நல்ல டீல் கிடைத்துள்ளது. சூர்யா சூப்பர் மார்க்கெட்டின் புத்தக மதிப்பு 5 லட்சம். அதன் மார்க்கெட் விலையோ 3 லட்சம். ஆக அதன் பி/பிவி 0.6 (3/5 = 0.6) ஆகும். இதைப்போல் பல பங்குகள், தொழில் நன்றாக நடந்து கொண்டிருந்தாலும் தனது புத்தக மதிப்பிலிருந்து குறைந்த விலையில் கிடைக்கின்றன! முதலீட்டாளராகிய உங்களின் வேலை அப்பங்குகளை தேடிக் கண்டுபிடிப்பதுதான்! கண்டுபிடிப்பதோடு மட்டுமல்லாமல் அப்பங்குகள் வேறுபல அளவுகோல்களிலும் ஒத்துவருகிறதா என்று கூர்ந்து கவனியுங்கள்!
(படி ஏறுவோம்)
Source - Vikatan Magazine

Tuesday, April 12, 2011

சகோதர சோதனைகள்! - இந்தியாவின் இருபெரும் பணக்காரர்கள்

சகோதர சோதனைகள்!

ட்ட காலிலேயே படும் என்கிற மாதிரி இந்தியாவின் இருபெரும் பணக்காரர்களான முகேஷ் அம்பானியும், அனில் அம்பானியும் அடுத்தடுத்து பல சோதனைகளில் சிக்கித் தவியாய்த் தவிக்கிறார்கள். எத்தனை சோதனை வந்தாலும் அதிலிருந்து எளிதாக மீண்டு வந்துவிடும் அறிவும் திறமையும் இந்த இரு சகோதரர்களிடமும் உண்டு. எனவே, இவர்களின் பொறுப்பில் இருக்கும் நிறுவனங்களின் எதிர்காலத்தைப் பற்றி பெரிய அளவில் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை என்பது ஒரு பக்கமிருக்க, அம்பானி சகோதரர்களுக்கு அப்படி என்ன சோதனை வந்துவிட்டது என்பதைப் பார்ப்போம்.
முதலில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு வந்த சோதனையைப் பார்ப்போம்.
குறையும் எரிவாயு!
ரிலையன்ஸ் நிறுவனத்தின் வருங்கால வருமானத்துக்கு மிகப் பெரிய அளவில் நம்பி இருந்தது, கிருஷ்ணா - கோதாவரி ஆற்றுப் படுகையில் டி-6 பிளாக்கில் கிடைக்கும் இயற்கை எரிவாயுவைத்தான். அண்மைக் காலம்வரை மிகப் பெரிய அளவில் இந்த படுகையிலிருந்து எரிவாயு கிடைக்கும் என்றுதான் நினைத்தது ரிலையன்ஸ். ஆனால், சமீபத்தில் வந்த செய்திகளின்படி, முன்பு எதிர்பார்த்த அளவுக்கு எரிவாயு கிடைக்காது என்கிற தகவல் முகேஷ் அம்பானியை மட்டுமல்ல, அவருடைய ரிலையன்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் அனைவரையுமே அதிர்ச்சி அடையச் செய்திருக்கிறது. டி-6 பிளாக்கிலிருந்து தினமும் 60 மில்லியன் ஸ்டாண்டர்ட் கியூபிக் மீட்டர் எரிவாயு கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இப்போது வெறும் 47 மில்லியன் ஸ்டாண்டர்ட் கியூபிக் மீட்டர் என்ற அளவுக்குதான் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள். தவிர, டி-1 மற்றும் டி-3 பிளாக்குகளிலிருந்து கிடைக்கும் எரிவாயுவின் அளவும் குறையலாம் என்கிறார்கள். ஆக, எரிவாயுவின் மூலம் வரவேண்டிய வருமானம் வராமல் போனால், அதை ரிலையன்ஸ் நிறுவனம் எப்படிச் சமாளிக்கப் போகிறது என்பது முகேஷ§க்கு முன் இருக்கும் பெரிய சோதனை.

'ரிலையன்ஸ் நிறுவனங்களில் முதலீடு செய்திருப்பவர்கள் கொஞ்சம் அக்கறையோடு அணுக வேண்டிய பிரச்னை இது. காரணம், கே.ஜி. பேசின் மூலம் கிடைக்க வேண்டிய வருமானம் குறைந்தால், அதை ரிலையன்ஸ் குரூப்பில் உள்ள லாபம் சம்பாதிக்கும் நிறுவனங்களிலிருந்துதான் எடுக்க வேண்டியிருக்கும். ஆக, ஒரு மைனஸ் பல பிளஸ்களை கரைத்துவிடும்'' என்றார் மும்பையில் இருக்கும் பங்குச் சந்தை புரோக்கர் ஒருவர்.
தம்பி அனில் அம்பானியோடு ஒப்பிடும்போது அண்ணன் முகேஷ் அம்பானி அதிர்ஷ்டசாலிதான். மேற்சொன்ன ஒரேஒரு கஷ்டம் தவிர, அவருக்கு பெரிய அளவில் வேறு கஷ்டம் எதுவுமில்லை என்றே சொல்லிவிடலாம். ஆனால், தம்பி அனில் அம்பானிக்கு அப்படியில்லை. அவருடைய பெரும்பாலான நிறுவனங்கள் மட்டுமல்ல, அவரே பல்வேறு பிரச்னைகளில் மாட்டி முழி பிதுங்கிக் கொண்டிருக்கிறார். முதலில் அவருடைய நிறுவனங்களுக்கு வந்திருக்கும் சோதனைகளைப் பார்ப்போம்.
கழுத்தை நெறிக்கும் கடன்!
கடனே வாங்காத நிறுவனங்களே இல்லை. ஆனால், அளவுக்கதிகமாக கடன் இருக்கும் எந்த நிறுவனமும் நிம்மதியாக இருந்ததும் இல்லை என்பதற்கு ஒரு அருமையான உதாரணம், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ். இந்த நிறுவனத்துக்கு இப்போது இருக்கும் கடன் கிட்டத்தட்ட 7 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 34,000 கோடி). கடந்த ஆறு காலாண்டுகளாக நஷ்டத்தை மட்டுமே வருமானமாக சம்பாதித்து வருகிறது இந்த நிறுவனம். இவ்வளவு பெரிய கடன் ஒருபக்கமிருக்க, இன்னொரு பக்கம் பெரிய அளவில் வருமானமும் இல்லை.
இது தவிர, 2ஜி அலைவரிசை  கிடைத்தது தொடர்பாக சி.பி.ஐ. ஏற்கெனவே விசாரித்து வருகிறது. நாடாளுமன்ற கணக்குக் குழுவும் இது தொடர்பாக அனில் அம்பானியை சமீபத்தில் அழைத்து விசாரித்தது. இப்படி அடுத்தடுத்து பல சோதனைகள் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்துக்கு வந்து சேர, இதிலிருந்து விடுபட ஓடிக் கொண்டிருக்கிறார் அனில்.
தப்பாகிப் போன கணக்கு!
சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அனில் அம்பானி தனது ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் ஐ.பி.ஓ-வை கொண்டு வந்தபோது இந்தியா முழுக்க உள்ள ஷேர் மார்க்கெட் முதலீட்டாளர்கள் அதில் பணத்தைக் கொண்டு வந்து
கொட்டினார்கள். ஐ.பி.ஓ-வின் போது எந்த நிறுவனத்துக்கும் கிடைக்காத வரவேற்பு ரிலையன்ஸ் பவருக்கு கிடைத்தது. ஆனால், ஐ.பி.ஓ. வந்த ஓராண்டு காலத்திலேயே அந்த ஷேர் பாதி விலையாகக் குறைந்தது. இதற்கு முக்கிய காரணம், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் ஏற்கெனவே ஒப்புக் கொண்ட விலையில் இயற்கை எரிவாயுவைக் கொடுக்க மறுத்ததுதான். அனில் ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தை தொடங்கியதே ரிலையன் ஸிடமிருந்து குறைந்த விலையில் இயற்கை எரிவாயு கிடைக்கும் என்பதால்தான். ஆனால், உச்சநீதிமன்றம் வரை சென்று போராடிய பிறகும் அனிலால் இயற்கை எரிவாயுவை வாங்க முடியவில்லை.
இனி ரிலையன்ஸ் பவர் நிறுவனம், மார்க்கெட் விலைக்குத்தான் இயற்கை எரி வாயுவை வாங்க வேண்டும். இதனால், அந்நிறுவனத்தின் லாபம் பெருமளவில் குறையும். எரிவாயு கிடைக்காதபட்சத்தில் நிலக்கரியை வாங்கித்தான் மின்சாரம் தயாரிக்க முடியும். நிலக்கரி விலையும் இப்போது அதிகமாகவே இருக்கிறது. மின்சார உற்பத்திக்கான மூலப் பொருட்களை மிகக் குறைந்த செலவில் அனில் அம்பானி எப்படி கொண்டு வரப் போகிறாரோ?
கட்டுமானத்துக்கு வந்த கஷ்டம்!
கட்டுமான நிறுவனங்கள் அனைத்துக்குமே இப்போது கஷ்டகாலம். இன்ஃப்ரா பங்குகள்  மிகப் பெரிய சரிவை சந்தித்து தரை தட்டி நிற்கின்றன. எல் அண்ட் டி நிறுவனம் மட்டுமே ஓரளவு லாபத்தை தந்து வருகிறது. ஆனால், அனில் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்துக்கும் கஷ்டகாலம் தான். கடந்த ஆண்டு ஜூலை மாதத்தின்போது இந்தப் பங்கு ஒன்றின் விலை 1,200 ரூபாய்க்கு மேல் இருந்தது. அன்று முதல் விலை குறைய ஆரம்பித்து, கடந்த பிப்ரவரி மாதம் 535 ரூபாய் வரை குறைந்தது.
இதற்கு முக்கிய காரணம், அனில் அம்பானி குழும நிறுவனங்களின் மீது பங்கு தாரர்களுக்கு ஏற்பட்ட நம்பிக்கையின்மைதான். மேலும், 2009-10-ம் நிதியாண்டில் இந்த நிறுவனத்தின் லாபம் 1,151 கோடி ரூபாய். ஆனால், இந்த நிதி ஆண்டில் டிசம்பர் வரையிலான முதல் மூன்று காலாண்டில் இந்நிறுவனம் 581 கோடி ரூபாய் மட்டுமே லாபம் சம்பாதித்துள்ளது. மார்ச் காலாண்டு முடிவு இனிமேல் வரவேண்டும் என்றாலும், அதிலும் மிகப் பெரிய லாபம் எதுவும் வந்து விடப் போவதில்லை. இதையெல்லாம் கணக்கிட்ட முதலீட்டாளர்கள் அந்நிறுவனத் தின் பங்கை சரமாரியாக விற்கத் தொடங்க, பங்கின் விலை கடுமையாகக் குறைந்து வருகிறது. இந்த விலைச் சரிவை தடுத்து நிறுத்த, சுமார் ஆயிரம் கோடி ரூபாய் பெறுமானமுள்ள பங்குகளைத் திரும்ப வாங்க இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஒரு பங்கு விலை சராசரியாக 725 ரூபாய்க்கு திரும்ப வாங்க ரிலையன்ஸ் இன்ஃப்ரா நிறுவனம் முடிவு செய்தாலும் பங்கின் விலை 692 ரூபாய்க்கு மட்டுமே விற்பனையாகிறது. பைபேக் அறிவித்த பிறகும் இந்தப் பங்கின் விலை குறைந்து வருவது அனிலுக்கு ஏற்பட்டுள்ள இன்னொரு பெரிய சோதனை.
எல்லா பிஸினஸ்மேன் களுக்கும் சோதனைகள் வரும், போகும். அம்பானி சகோதரர் களுக்கும் இப்போது கஷ்டகாலம் வந்திருக்கிறது. கூடிய விரைவில் இந்த கஷ்டங்களுக்குத் தீர்வு கண்டு, அதிலிருந்து மீண்டு வந்துவிடுவார்கள் என்றாலும், இப்போதுள்ள நிலையில் ரிலையன்ஸ் நிறுவனங்களின் பங்குகளை வாங்கியவர்கள் தொடர்ந்து அதை வைத்திருப் பதா, இல்லை இப்போதைக்கு விற்றுவிட்டு, பிற்பாடு வாங்குவதா என்பதை கொஞ்சம் யோசித்தே முடிவு செய்ய வேண்டும்!
-ஏ.ஆர்.குமார்

Source - Vikatan Magazine

Monday, April 11, 2011

பி.எஃப். பணம் - இனி நீங்களே பார்க்கலாம்!

பி.எஃப். பணம் - இனி நீங்களே பார்க்கலாம்!

ரசு நிறுவனமாகட்டும், தனியார் நிறுவனமாகட்டும், அதில் வேலை பார்க்கும் ஊழியர்களின் ஒரே சந்தோஷம் கண்ணுக்குத் தெரியாமலே அவர்கள் பெயரில் சேமிப்பாகும் பி.எஃப். பணம்தான். ஆனால், ஊழியர்களின் சம்பளத்திலிருந்து பிடிக்கப்படும் இந்த பி.எஃப். பணத்தை, பி.எஃப். அலுவலகத்தில் கட்டாமல் சில நிறுவனங்கள் ஏமாற்றி வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் இந்த ஏமாற்று கம்பெனிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருப்பதாக பி.எஃப். அலுவலகமே சொல்லி இருக்கிறது. 2009-10-ம் ஆண்டின்படி, இந்தியா முழுக்க சுமார் 165 கோடி பணம் பி.எஃப். அலுவலகத்துக்கு கொடுக்காமலே ஏப்பம் விடப்பட்டிருக்கிறதாம். இதில், இன்னொரு அதிர்ச்சியான தகவல், பி.எஃப். கணக்கில் மோசடி செய்யும் நிறுவனங்கள் அதிக அளவில் இருப்பது தமிழகத்தில்தானாம்!

இந்திய அளவில் மொத்தம் ஐந்து கோடி பேர் பி.எஃப். கணக்கு வைத்திருக்கிறார்கள். இவர்களில் ஒவ்வொருவருக்கும் நிதி ஆண்டின் இறுதியில், சிறிய வால் போன்ற ரசீது ஒன்று கொடுக்கப்படும். அதில், முந்தைய ஆண்டில் மொத்தம் எவ்வளவு பணம் கட்டப்பட்டிருக்கிறது, கணக்கில் உள்ள மொத்தப் பணம்  போன்ற விவரங்கள் மட்டும்தான் தரப்படும். சந்தாதாரரின் பணம் மாதம்தோறும் பி.எஃப். கணக்கில் கட்டப்படுகிறதா என்கிற விவரத்தை இந்த சின்ன ரசீது மூலம் அறிந்து கொள்ள முடியாது. இந்தப் பிரச்னை களுக்கெல்லாம் ஒரு தீர்வு காண இப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து மத்திய பிராவிடண்ட் ஃபண்ட் ஆணையத்தின் உயர்அதிகாரி ஒருவருடன் பேசினோம். ''பெரும்பாலான சந்தாதாரர் களுக்கு அவர்களின் கணக்கில் எவ்வளவு தொகை வரவு வைக்கப்பட வேண்டும் என்ற விவரம் தெரிவதில்லை. இதனால், பல நேரங்களில் அவர்களின் சம்பளத்தில் பிடிக்கப்படும் பி.எஃப். தொகை மற்றும் அதற்கு இணையாக தொழில் நிறுவனம் கட்டும் தொகை ஆகியவற்றை சரி பார்க்க முடிவதில்லை.
இதுநாள் வரை நிறுவனங்கள் பி.எஃப்.க்கு உரிய தொகையை மாதம்தோறும் கட்டி வந்தாலும், எந்த பணியாளர் கணக்கில் எவ்வளவு பணம் கட்டப்பட்டிருக்கிறது என்கிற விவரத்தை ஒவ்வொரு ஆண்டின் ஏப்ரல் மாதத்தில்தான்  பி.எஃப் அலுவலகத்துக்கு தெரிவிக்கும். இதன் அடிப்படையில் பணத்தைப் பிரித்துப்போட்டு, அதற்குரிய வட்டி எல்லாம் கணக்கிட்டு செப்டம்பர் மாத வாக்கில் நிறுவனங்களுக்கு அனுப்புகிறது பி.எஃப். அலுவலகம்.
ஆனால், பி.எஃப். ஆணையம் இப்போது கொண்டு வந்திருக்கும் புதிய நடைமுறையின்படி, எல்லா நிறுவனங்களும் இனி மாதம்தோறும் பி.எஃப். பணத்தை கட்டும்போதே, எந்த ஊழியரின் கணக்கில் எவ்வளவு பணம் போட வேண்டும் என்பதையும் தெரிவிக்க வேண்டும். அப்படி நாங்கள் செய்யும் பட்சத்தில், பல்வேறு அலுவலகங்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள் தங்கள் பி.எஃப். கணக்கில் எவ்வளவு பணம் சேர்ந்திருக்கிறது என்பதை கம்ப்யூட்டர் மூலம் பார்த்துக் கொள்ளும் வசதியையும் கொண்டுவரப் போகிறோம். இந்த வேலைகள் எல்லாம் சரியாக முடிந்துவிட்டால், 2013-ம் ஆண்டு முதல் வங்கிக் கணக்குப்போல, பி.எஃப். கணக்கிலும் எவ்வளவு பணம் சேர்ந்திருக்கிறது என்பதை எப்போது வேண்டுமானாலும் பார்த்து தெரிந்து கொள்ள முடியும். மேலும், எஸ்.எம்.எஸ் மூலமும் இருப்புத் தொகையை அறிந்து கொள்ளும் ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம்'' என்றார்.
வரவேற்கத்தக்க இந்த விஷயம் கூடிய சீக்கிரத்திலே நடக்கட்டும்!
- சி.சரவணன்



Source - Vikatan Magazine

'ஓஹோ' லாபத்துக்கு ஒரு கூடை ஜவுளிப் பங்குகள்!

'ஓஹோ' லாபத்துக்கு ஒரு கூடை ஜவுளிப் பங்குகள்!

வ்வொரு காலகட்டத்திலும் குடத்திலிட்ட விளக்காக சில துறைகளைச் சார்ந்த பங்குகள் இருந்துவிடுவதையும், அதுவே சிலகாலம் கழித்து குன்றிலிடப்பட்ட விளக்காக மாறி ஜொலிப்பதையும் அவ்வப்போது நாம் பார்த்துதான் வந்திருக்கிறோம். அப்படி வரும் காலத்தில் ஜொலிக்கப்போகும் பங்குகள் ஏதாவது இருக்கிறதா என்று தேடியபோது, ஜவுளித் துறையைச் சார்ந்த பங்குகளை நமக்கு இனம் காட்டினார் ஆனந்த் ரதியின் முதன்மை துணைத் தலைவரான ஏ.கே பிரபாகர்.

என்னென்ன காரணங்களால் டெக்ஸ்டைல் துறை நன்றாக இருக்கும், அத்துறையில் எந்தெந்த பங்குகள் நல்ல லாபத்தைத் தரும் என்று இங்கே விரிவாகச் சொல்கிறார் அவர்...
''முக்கியமாக மூன்று காரணங்களை வைத்து வருங்காலத்தில் இத்துறை நன்றாக இருக்கும் என்று சொல்லலாம். முதலாவதாக, தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி திட்டத்தை (Technology Upgradation Fund Scheme)  கடந்த  ஜூன் மாதம் 29-ம் தேதி மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது. இப்போது மீண்டும் அந்த திட்டத்தைக் கொண்டு வருவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. விரைவில் இந்த திட்டம் அமலுக்கு வந்துவிடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது இரண்டாவதாக, இப்போதைக்கு சிங்கிள் பிராண்ட் ரீடெய்ல் துறையில் அந்நிய முதலீடு அனுமதிக்கப் பட்டிருக்கிறது. இருப்பினும், மல்டி பிராண்ட் ரீடெய்ல் கடைகளில் இதுவரை அந்நிய முதலீட்டை அனுமதிக்கவில்லை.
ஆனால், விரைவில் அனுமதி கிடைக்கும் சூழல் நிலவுகிறது. இது இத்துறையில் இருக்கும் மல்டி பிராண்ட் கடைகளுக்கு  சாதக மான விஷயம்.
மூன்றாவதாக, லைசன்ஸ் வைத்திருப் பவர்கள் மட்டுமின்றி, அனைவரும் நூல் ஏற்றுமதி செய்யலாம் என்று மத்திய அரசு அனுமதித் திருக்கிறது. இந்த உத்தரவு நூல் உற்பத்தி நிறுவனங்களுக்கு சாதகமாக இருக்கும். இந்த மூன்று காரணங்களையும் வைத்து பார்க்கும்போது டெக்ஸ்டைல் துறை பங்குகள் அடுத்த சில மாதங்களில் நல்ல வருமானம் கொடுப்பதாக இருக்கும்'' என்றவர் நாணயம் விகடன் வாசகர்களுக்காக அத்துறையைச் சார்ந்த ஆறு பங்குகளை ஸ்பெஷலாகத் தேர்ந்தெடுத்துக் கொடுத்தார்.



Source - Vikatan Magazine

எப்படி முதலீடு செய்வது?

எப்படி முதலீடு செய்வது?



மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய பான் நம்பர் வேண்டும். கட்டணம் 100 ரூபாய்க்குள்தான். யூ.டி.ஐ. டெக்னாலஜிஸ் சர்வீசஸ் நிறுவனத்தில் விண்ணப்பித்தால் சுமார் 15 நாட்களுக்குள் பான் கார்டு வந்துவிடும்.
கே.ஒய்.சி.!

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்கிறவர்கள் 'கே.ஒய்.சி’. எனப்படும் புதிய படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். இந்தப் படிவத்தை இன்டர்நெட்டிலேயே டவுன்லோட் செய்து கொள்ளலாம்.  இந்தப் படிவத்தை பூர்த்தி செய்து, பான் கார்டு மற்றும் ரேஷன் கார்டு நகலையும் ஏதாவது மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் அல்லது நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனத்தில் கொடுத்தாலே போதும். அதன் பிறகு ஃபண்டில் முதலீடு செய்யலாம்.
பான் கார்டு நகலுடன் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவன கிளை அல்லது மியூச்சுவல் ஃபண்ட் ஏஜென்டை அணுகினால், முதலீட்டை ஆரம்பித்துவிடலாம். முதலீட்டுத் தொகையை காசோலை அல்லது டி.டி-ஆக மட்டுமே கொடுக்க வேண்டும்.
100 ரூபாய்கூட போதும்!
சாதாரண மக்களும் முதலீடு செய்ய வேண்டும் என்பதற்காக ஆரம்ப முதலீட்டுத் தொகையாக 100 ரூபாயை பல நிறுவனங்கள் வைத்திருக்கின்றன.
யூனிட் ஒதுக்கீடு
ஃபண்ட் நிறுவனம், ஒரு திட்டத்தை முதன்முதலாக அறிமுகப்படுத்துவதை என்.எஃப்.ஓ. என்கிறார்கள். நியூ ஃபண்ட் ஆஃபர் என்பது இதன் விரிவாக்கம். பொதுவாக, என்.எஃப்.ஓ-வில் முதலீடு செய்ய குறைந்தபட்ச முதலீடு 5,000 ரூபாயாக இருக்கும். 2009 ஜூலை மாதத்துக்கு முன்னர் ஃபண்டில் முதலீடு செய்ய நுழைவுக் கட்டணம்  வசூலிக்கப்பட்டது. அது சுமார் 2% ஆக இருந்தது. அதாவது, 5,000 ரூபாய் முதலீடு செய்தால் 100 ரூபாயைக் கழித்துக் கொண்டு மீதமுள்ள 4,900 ரூபாய்க்கு யூனிட் ஒதுக்கி வந்தார்கள்.
நுழைவுக் கட்டணம் ரத்து செய்யப் பட்ட பிறகு, இப்போது முழுத் தொகைக்கும் யூனிட்கள் ஒதுக்கப் படுகிறது. இங்கே யூனிட் என்பது 10 ரூபாய் முகமதிப்பு கொண்டது. இந்த மதிப்புக்குத்தான் டிவிடெண்ட் வழங்குவார்கள்.
என்.ஏ.வி.!
என்.எஃப்.ஓ-வின்போது யூனிட் மதிப்பு 10 ரூபாயாக இருக்கும். இந்த மதிப்பு, அதன் பிறகு திட்டத்தின் செயல்பாட்டைப் பொறுத்து அதிகரிக் கவோ, குறையவோ செய்யும். அந்த மதிப்பை என்.ஏ.வி.(நிகர சொத்து மதிப்பு) என்பார்கள்.
என்.எஃப்.ஓ-வில் முதலீடு செய்யாமல் ஏற்கெனவே செயல்பட்டு கொண்டிருக்கும் மியூச்சுவல் ஃபண்டுகளில்கூட முதலீடு செய்யலாம். அப்படி செய்யும்போது, முதலீடு செய்யும் தொகையில் அப்போதைய என்.ஏ.வி-யில் வகுத்து யூனிட்களாக உங்களது கணக்கில் செலுத்தப்படும்.
முதலீட்டுக்கான ஆதாரம்!
உங்களின் பெயரில் யூனிட்கள் வாங்கப்பட்டதற்கான ஆதாரமாக அக்கவுன்ட் ஸ்டேட்மென்டை தபால் அல்லது மெயில் மூலம் அனுப்பி வைப்பார்கள்.

Source - Vikatan Magazine

Sunday, April 10, 2011

பாதுகாப்பான முதலீடு

பாதுகாப்பான முதலீடு


இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறை கடந்து வந்தபாதையைக் கொஞ்சம் திரும்பிப் பார்த்தால் மலைப்பாகத்தான் இருக்கிறது. 2000-ம் ஆண்டு இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் நிர்வகித்த தொகை 1 லட்சம் கோடி ரூபாய். ஆனால், இதுவே 2011 பிப்ரவரி மாத முடிவில் 7,07,412 கோடி ரூபாயாக மிகப் பெரிய வளர்ச்சி கண்டுள்ளது.
முதல் ஃபண்ட்!
இந்தியாவில் முதல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமான யூ.டி.ஐ. 1963-ம் ஆண்டு நாடாளுமன்ற சட்டப்படி உருவானது. இதற்கடுத்த ஆண்டில் யூ.எஸ்.64 என்ற தனது முதல் புதிய திட்டத்தை அறிமுகப் படுத்தியது. 1987-ம் ஆண்டு பொதுத் துறை வங்கிகளும் இந்தத் துறையில் நுழைய, மியூச்சுவல் ஃபண்ட் துறை அடுத்தக் கட்டத்தை நோக்கி முன்னேற அது உறுதுணை யாக இருந்தது.
செபியின் வரவு!

மியூச்சுவல் ஃபண்ட் துறையை நெறிப்படுத்தும் 'செபி’ அமைப்பு 1993-ல் உருவாக்கப்பட்டது. இந்த ஆண்டில்தான் தனியார் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களும் மியூச்சுவல் ஃபண்ட் துறையில் நுழைய அனுமதிக்கப்பட்டது. அதனால் தனியார் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமான 'கோத்தாரி பயோனியர்’ உருவானது. அடுத் தாண்டில் வெளிநாட்டு நிறுவனமான மார்கன் ஸ்டேன்லி தனது முதல் ஃபண்டை வெளியிட்டதன் மூலம் இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறையில் களமிறங்கியது. 1996-ம் ஆண்டு செபியின் விதிமுறைகள் அமலுக்கு வந்ததன் மூலம் முதலீட்டாளர்களுக்குப் பாதுகாப்பு கிடைத்தது. இதனால்  சிறு முதலீட்டாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியது.
ஏஜென்டுகளுக்கு சான்றிதழ்!
தங்களது திட்டங்களை மக்களுக்குக் கொண்டு செல்ல ஏஜென்டுகளை நியமித்தது ஃபண்ட் நிறுவனங்கள். இதனால் 2003-ம் ஆண்டில் ஏஜென்டு களுக்கு 'ஆம்ஃபி’யின் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டது. அதுவரை அதிக தொகை இருந்தால்தான் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய முடியும் என்கிற நிலையை மாற்றி 50, 100 ரூபாய் இருந்தால்கூட முதலீடு செய்யலாம் என்ற நிலையை ஐ.சி.ஐ.சி.ஐ. புரூடென்ஷியல் மற்றும் ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் கொண்டு வந்தன.
நுழைவுக் கட்டணம் ரத்து!
பங்குச் சந்தை மிகப் பெரிய சரிவு ஏற்பட்ட 2008-ம் ஆண்டில் ஏஜென்ட் மூலம் அல்லாமல் நேரடியாக மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு நுழைவுக் கட்டணம் ரத்து செய்யப் பட்டது. அதன்பிறகு பங்குச் சார்ந்த ஃபண்டுகளுக்கும் நுழைவுக் கட்டணம் ரத்து செய்யப்பட்டது.
இதுபோன்ற காரணங்களால் முதலீட்டாளர்கள் லாபம் அடைந் தார்கள்.  பாதுகாப்பான முதலீட்டுக்கு பக்காவான பிளான் மியூச்சுவல் ஃபண்டுதான் என்பதை மக்கள் இன்று உணரத் தொடங்கிருப்பதால், வளர்ச்சிப்பாதையில் பயணிக்கிறது இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறை.

Source - Vikatan Magazine

ஏன்? ஏதற்கு?

ஏன்? ஏதற்கு?


அதிக விலையுள்ள ஏதாவது ஒரு பொருளை வாங்க வேண்டுமென்று பணம் சேர்த்து வருவோம். மொத்தமாகப் பணம் சேர்ந்தபிறகு எடுத்துக் கொண்டு போனால், விலைவாசி ஏகத்துக்கும் உயர்ந்து, அந்தப் பொருளின் விலையும் எகிறியிருக்கும். கடைசியில் பொருளை வாங்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி வருவோம்.
துவே நம் பணத்தை விலைவாசி உயர்வையும் தாண்டி வருமானம் தருகிற ஏதாவது மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் போட்டிருந்தால் ஆசைப்பட்ட பொருளை நிச்சயம் வாங்கி இருக்கலாம்.
இன்றைய தேதியில் பணவீக்க விகிதத்தைத் தாண்டி வருமானம் தருவதில் பங்குச் சந்தை முதலீடு முதலிடத்தில் இருக்கிறது. ஆனால், அதில் முதலீடு செய்ய, மார்க்கெட் பற்றிய விரிவான நல்ல அறிவு,  போதுமான நேரம், காலம் எல்லாம் வேண்டும். இதெல்லாம் நம்மில் பலருக்கு வாய்ப்பதில்லை.
இந்த நிலையில் பங்குச் சந்தைக்கு இணையாக, ஏன் அதைவிட அதிக வருமானம் கிடைக்கும் முதலீடு எது என்று பார்த்தால் அது மியூச்சுவல் ஃபண்ட் திட்டமாகதான் இருக்கும்.
இன்றைய தேதியில் தமிழ்நாட்டில் மியூச்சுவல் ஃபண்ட் பற்றி கேள்விப்படாதவர்கள் இருக்க முடியாது. என்றாலும், இந்தத் துறையில் புதிதாக நுழைய விரும்புபவர்களுக்கு இதோ அதுபற்றிய ஒரு சுருக்கமான அறிமுகம்...
பல லட்சக்கணக்கான முதலீட்டாளர்களிடம் பணத்தைத் திரட்டி, அதை சிறப்பான திட்டங்கள் பலவற்றில் பிரித்து முதலீடு செய்து, அதன் மூலம் கிடைக்கும் லாபத்தை முதலீட்டாளர்களுக்குப் பகிர்ந்து கொடுப்பதுதான் மியூச்சுவல் ஃபண்ட். அதாவது, பரஸ்பரம் லாபம் அடைவது இதன் முக்கிய நோக்கம்.
மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீட்டைக் கண்காணித்து அதிக லாபம் சம்பாதித்துக் கொடுக்க திறமையான ஃபண்ட் மேனேஜர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில், முதலீட்டாளர்களுக்கு பெரிய டென்ஷன் எதுவும் இல்லை. பொதுவாக, முதலீட்டாளர்களிடம் திரட்டப்படும் நிதி, திட்டத்தின் தன்மைக்கு ஏற்ப பங்குகள், கடன் பத்திரங்கள், நிதிச் சந்தை போன்றவற்றில் முதலீடு செய்யப்படும்.
கடந்த ஐந்தாண்டுகளை எடுத்துக் கொண்டால், ஒரே ஒரு ஆண்டைத் தவிர, மற்ற எல்லா ஆண்டிலும் மியூச்சுவல் ஃபண்டில் முக்கிய திட்டமான ஈக்விட்டி டைவர்சிஃபைட் ஃபண்ட் கொடுத்திருக்கிற சராசரி வருமானம், பங்குச் சந்தை வருமானத்தைவிட அதிகமாக இருக்கிறது.

Source - Vikatan Magazine

முதற்படி முதலில் படி! - 19

முதற்படி முதலில் படி!




சென்ற சில வாரங்களில் குவாலிடேட்டிவ் அனாலிசிஸில் அவசியம் பார்க்க வேண்டிய பல விஷயங்கள் குறித்து கண்டோம். இனி வரும் வாரங்களில் குவாண்டிடேட்டிவ் அனாலிசிஸில் அவசியம் கவனிக்க வேண்டிய விஷயங்களைப் பற்றி விரிவாக பார்ப்போம்.
குவாண்டிடேட்டிவ் அனாலி சிஸ் என்பது ஒரு நிறுவனத் தின் எண்களை அலசி ஆராய்வது. எந்தவிதமான நிறுவனத்திற்கும் மூன்று அடிப்படை ஸ்டேட் மென்ட் உள்ளது. அவை, இன்கம் ஸ்டேட்மென்ட், பேலன்ஸ் ஷீட், மற்றும் கேஷ் ஃபுளோ ஸ்டேட்மென்ட். ஒரு நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யும்போது, அதுவும் சிறிய முதலீட்டாளராக இருந்து செய்யும்போது, இந்த மூன்று ஸ்டேட்மென்டையும் அலசுவதற்கு, நீங்கள் ஒரு ஃபைனான்ஷியல் அனலிஸ்ட் டாகவோ அல்லது சார்ட்டட் அக்கவுன்டன்ட் ஆகவோ இருக்க வேண்டும் என்கிற அவசிய மில்லை. கூட்டல், கழித்தல் தெரிந்த யாரும் இந்த ஸ்டேட்மென்டைப் படித்து தங்களுக்கு வேண்டியதைத் தெரிந்து கொள்ளலாம்.
இன்கம் ஸ்டேட்மென்டில் நிறுவனத்தின் வரவு-செலவுகள் சொல்லப்படும். பேலன்ஸ் ஷீட்டில் நிறுவனத்தின் சொத்துக்கள் மற்றும் கடன்கள் சொல்லப்படும். கேஷ் ஃபுளோ ஸ்டேட்மென்டில் நிறுவனத்திற்கு பணம் எவ்வாறு வந்து செல்கிறது என்பது சொல்லப்படும்.

இந்த குவாண்டிடேட்டிவ் அனாலிசிஸை நாம் இரு பிரிவுக ளாகப் பிரித்துக் கொள்வோம்... ஒன்று, முதலீட்டிற்கு நேரடியாக உதவும் அளவுகோல்கள். மற்றொன்று, ஆழமாக அனாலிசிஸ் செய்ய விரும்புபவர்களுக்கான பல ரேஷியோக்கள், குரோத், மதிப்பீடு (வேல்யூவேஷன்) போன்ற அளவுகோல்கள். முதல் சில அத்தியாயங்களில் முதலீட்டிற்கு நேரடியாக உதவும் அளவுகோல்கள் பற்றி விரிவாகப் பார்ப்போம்...
முதலில் உங்கள் அனைவருக்கும் மிகவும் பரிச்சயமான இ.பி.எஸ். என்று சொல்லக்கூடிய ஒரு பங்கின் வருமானம் மற்றும் அதன் ரேஷியோவான பி/இ பற்றி இந்த வாரம் பார்ப்போம்...
இ.பி.எஸ். அதாவது, ஒரு பங்கிற்கான வருமானம்... இதைப் பற்றி எளிமையான உதாரணம் ஒன்றின் மூலம் புரிந்துகொள்வோம். ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் மார்ச் 2010 முடியும் நிதி ஆண்டின் இன்கம் ஸ்டேட்மென்டின் ஒரு பகுதியை இங்கே கொடுத்துள்ளோம். அந்த வருடம் அந்த வங்கியின் நிகர லாபம் 4,024.98 கோடி ரூபாய். அதாவது 4,025 கோடி ரூபாய். அந்த வங்கியின் பங்கு மூலதனம் 1,114.89 கோடி ரூபாய். ஒவ்வொரு பங்கும் 10 ரூபாய் முகமதிப்பு கொண்டது. ஆகவே அந்நிறுவனத்தின் அன்றைய தினத்தில் மொத்த பங்குகளின் எண்ணிக்கை 111.489 கோடியாகும். நிகர லாபத்தை மொத்த பங்குகளின் எண்ணிக்கையால் வகுக்கும்போது (4024.98/111.489) கிடைப்பதுதான் இ.பி.எஸ். இதைத்தான் 'பேஸிக் இ.பி.எஸ்’ என்று கூறுகிறோம். அதற்குக் கீழ் 'டைல்யூட்டட் இ.பி.எஸ்’ என்று ஒன்று இருப்பதைக் கவனியுங்கள். அது என்ன?
ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி போன்ற பல தனியார் நிறுவனங்கள், தங்களுடைய ஊழியர்களுக்கு (பெரும்பாலும் டாப் லெவல் ஊழியர்களுக்கு) நன்றாக லாபத்தை ஈட்டித் தந்தால் அந்த நிறுவனத்தின் பங்குகளை இலவசமாகவோ அல்லது குறைந்த விலையிலோ எதிர்காலத்தில் தருவதாக வாக்குறுதி கொடுத்திருப்பார்கள். அந்த வாக்குறுதிப் பங்குகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டால், மொத்தப் பங்குகளின் எண்ணிக்கை சிறிது அதிகமாகும். அப்போது அந்நிறுவனத்தின் இ.பி.எஸ். சற்று குறையும். அதைத்தான் 'டைல்யூட்டட் இ.பி.எஸ்’ என்று கூறுகிறோம். ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் மார்ச் 2010-ல் முடிந்த நிதி ஆண்டில் டைல்யூட்டட் இ.பி.எஸ். 35.99 ஆகும். கன்சர்வேட்டிவ் கணக்கிற்கு டைல்யூட்டட் இ.பி.எஸ்ஸை எடுத்துக் கொள்வதே சிறந்தது.
பங்கின் சந்தை விலையை இந்த இ.பி.எஸ்-ஸால் வகுத்தால் கிடைப்பதுதான் பி/இ ஆகும். சரி, எந்த இ.பி.எஸ்-ஸை எடுத்துக்கொள்ள வேண்டும்? பொதுவாக சென்ற நிதி ஆண்டின் முடிவின் இ.பி.எஸ்-ஸை எடுத்துக் கொள்ளலாம். இப்போதெல்லாம் காலாண்டு முடிவுகள் வர ஆரம்பித்துவிட்டதால், கடந்த 4 காலாண்டுகளின் இ.பி.எஸ்-ஸை எடுத்துக் கொள்ளலாம். இதை டி.டி.எம். (TTM – Trailing Twelve Monthsலீs) என்று கூறுவார்கள். அந்த டி.டி.எம். இ.பி.எஸ்-ஸை எடுத்துக் கொண்டு பி/இ-யை கணக்குப் பார்த்தால் இன்னும் துல்லியமாக இருக்கும்.
சில சமயங்களில் சில நிறுவனங்கள் தற்போது முடிந்த காலாண்டில் பெரிய நஷ்டத்துடன் செயல் பட்டிருக்கும். அதனால் அதன் இ.பி.எஸ் நெகட்டிவ்வாக இருக்கும். அப்போது கடந்த நிதி ஆண்டு அல்லது டி.டி.எம். இ.பி.எஸ்-ஸை வைத்துப் பார்த்தால், இன்னும் பாஸிட்டிவ் ஆகவே இருக்கும். அதுபோன்ற சமயங்களில் பங்குகளை வாங்கச் செல்லும்போது எச்சரிக்கை தேவை. பொதுவாக கடந்த 5-10 ஆண்டுகளாக தொடர்ந்து லாபம் ஈட்டி பாஸிட்டிவ் இ.பி.எஸ்-ல் இருந்துவரும் நிறுவனங்களாகப் பார்த்து வாங்குவது நல்லது.
பி/இ என்பது பொதுவாக எதைக் குறிக்கிறது?
நீங்கள் ஒரு பங்கை 100 ரூபாய் விலை கொடுத்து வாங்குகிறீர்கள். அதன் சென்ற ஆண்டு இ.பி.எஸ். 25 என வைத்துக் கொள்வோம். அப்படி என்றால் அந்நிறுவனப் பங்கின் பி/இ நான்கு. அடுத்த நான்கு வருடங்களுக்கு இதேபோல் குறைந்தது 25-ஐ இ.பி.எஸ்-ஸாக ஈட்டினால்தான், நீங்கள் கொடுத்த விலை ஈடாகிறது என்றுஅர்த்தம்.
இன்னுமொரு நடைமுறை உதாரணத்தை எடுத்துக் கொள் வோம்... உங்கள் ஊரில் ஒரு சூப்பர் மார்க்கெட் விலைக்கு வருகிறது. அந்த சூப்பர் மார்க்கெட்டின் விலை 10 லட்ச ரூபாய் என்று கூறுகிறார். அதன் வருட நிகர லாபம் 2.5 லட்சம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்படி என்றால் நீங்கள் போட்ட பணத்தை திருப்பி எடுப்பதற்கு நான்கு வருடங்கள் ஆகும். இந்த நான்குதான் நீங்கள் வாங்கிய சூப்பர் மார்க்கெட்டின் பி/இ. ஆக பி/இ என்பது நீங்கள் போட்ட பணத்தை எவ்வளவு காலத்தில் லாபத்தின் மூலம் எடுக்கமுடியும் என்பதற்கான அளவு கோல் எனக் கொள்ளலாம். அந்த லாபம் முழுவதும் உங்கள் கையில் வருகிறதா அல்லது ஒரு பகுதி நிறுவனத்தின் வளர்ச்சிக்காக செல் கிறதா என்பது வேறு விஷயம்.
பி/இ அதிகமாக இருப்பது நல்லதா அல்லது குறைய இருப்பது நல்லதா?
பொதுவாக குறைய இருப்பது நல்லது. ஆனால், இது அவ்வளவு சுலபமாக முடிவெடுத்து விடக்கூடிய விஷயமல்ல! மிகச் சிறிய நிறுவனங் களுக்கு பொதுவாக பி/இ குறைவாக இருக்கும். ஏனென்றால் அந்நிறுவனங்களில் ரிஸ்க் அதிகம் என்பதே-பொருளாதார இறக்கத்தில் அந்நிறுவனங்கள் அதிகமாக பாதிக்கப்படலாம் அல்லது ஒரு பெரிய கஸ்டமர் விலகிப் போனால், அந்நிறுவனம் நஷ்டத்தில் சென்றுவிடலாம் அல்லது அந்நிறுவனத்தில் உள்ள முக்கிய நபருக்கு ஏதேனும் ஆகி விட்டால் அந்நிறுவனமே ஆடிப் போகலாம் - இதுபோல பல ரிஸ்க் உள்ளது. ஆகவே, சிறிய நிறுவனங் களின் பி/இ குறைவாக இருக்கும். அதே சமயத்தில் பெரிய நிறுவனங் களின் பி/இ அதிகமாக இருக்கும்.
அதேபோல் ஒரே சைஸில் உள்ள பெரிய நிறுவனங்கள் அல்லது சிறிய நிறுவனங்களை கூர்ந்து கவனியுங்கள். அவற்றிற்குள்ளும்   பி/இ வித்தியாசம் இருக்கும் - காரணம் ஒரு நிறுவனத்தின் மேனேஜ்மென்ட் மிகவும் நியாய மானதாக இருக்கும்; மற்றொன்று சில குறுக்கு வழிகளைக் கையாளலாம். நியாயமான மேனேஜ்மென்ட் உள்ள நிறுவனத்தின் பி/இ எப்போதும் அதிகமாக இருக்கும். இல்லையெனில் ஒரு நிறுவனம் வளர்ச்சியுடன் கூடிய லாபத்தை தந்து கொண்டே இருக்கும். மற்றொன்றில் வளர்ச்சி இருக்கும்; ஆனால் லாபம் வளராது. இதுபோல் பலப்பல காரணங்கள் பி/இ-ன் அளவை நிர்ணயிக்கின்றன.
சரி, பங்கு வாங்க புறப்பட்டு விட்டீர்கள். நீங்கள் வாங்க நினைக்கும் நிறுவனப் பங்கின் பி/இ-ஐ அந்நிறுவனத்தைச் சார்ந்த துறையின் சராசரி பி/இ விகிதத் தோடு ஒப்பிட்டுப் பாருங்கள்; மேலும் அந்நிறுவனத்தின் நேருக்கு நேரான போட்டி நிறுவனத்தின் பி/இ-யோடு ஒப்பிட்டுப் பாருங்கள். இதிலிருந்து உங்களுக்கு ஒரு ஐடியா கிடைக்கும். மேலும் பி/இ மட்டுமே ஒரு நிறுவனத்தை மதிப்பிடுவதற்கான அளவுகோல் அல்ல. இன்னும் எவ்வளவோ உள்ளன. அவற்றோடும் சேர்த்துப் பார்க்கும் போது நீங்கள் பங்கை வாங்கலாமா அல்லது வேண்டாமா என்பதை முடிவு செய்யலாம்.
கன்சர்வேட்டிவ் முதலீட்டாளர் கள் குறைந்த பி/இ உள்ள, நீண்ட காலம் தொழில் செய்து வரக்கூடிய தரமான நிறுவனங்களை நாடிச் செல்வது சிறந்தது.
(படி ஏறுவோம்)

Source - Vikatan Magazine

Thursday, April 7, 2011

முதற்படி முதலில் படி! - 18

 

முதற்படி முதலில் படி! - 18

பங்குச்சந்தை ஆத்திச்சூடி..

மார்க்கெட்டில் நுழைய விரும்பும் புதியவர்களுக்கான வழிகாட்டித் தொடர்!

ஃபண்டமென்டல் இதையும் பார்க்க வேண்டும்!
சென்ற வாரம் ஃபண்டமென்டல் அனாலிசிஸ்-ல் முக்கியமாகப் பார்க்க வேண்டிய குவாலிடேட்டிவ் அளவுகோல்கள் சிலவற்றைக் கண்டோம். இதே மாதிரியான வேறு சில அளவுகோல்களையும் இனி காண்போம்.

கஸ்டமர் சேவை:
வாடிக்கையாளர் சேவை என்பது எந்த ஒரு நிறுவனத்துக்கும் மிக முக்கியமானது. இந்தியாவில் தனியார் துறை வங்கிகளின் வளர்ச்சி இந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறது என்றால் அதற்கு அடிப்படைக் காரணம், பொதுத்துறை வங்கிகள்தான். அந்த அளவிற்கு பொதுத்துறை வங்கிகளின் வாடிக்கையாளர் சேவை சிறப்பாக இருந்திருக்கிறது. அதேபோல் தனியார் துறையில் டெலிபோன் (செல்போன் உட்பட) நிறுவனங்கள் வளர் வதற்கு நமது பி.எஸ்.என்.எல்-தான் அடிப்படைக் காரணம். ஆனால் அதேசமயம் சில மத்திய மாநில அரசு நிறுவனங்கள் சேவை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் நிலையில்தான் இருக்கின்றன.
ஒரு வங்கியில் கணக்கு ஆரம்பிக்க வேண்டுமென்றாலோ அல்லது ஒரு மொபைல் போன் சேவை பெற வேண்டு மென்றாலோ, எந்த நிறுவனம் சிறப்பாக சேவை புரிகிறதோ, அங்குதான் செல்வீர்கள். உங்களைப்போல் பலரும் அந்நிறுவனத்தை தேடிச் செல்லும்போது அந்நிறுவனத் தின் வியாபாரம் உயரும்; லாபம் பெருகும். அதனால் நீங்கள் வைத்திருக்கும் பங்கின் விலையும் உயரும்! வாடிக்கையாளர் சேவையில் கண்ணும் கருத்துமாக இருக்கும் நிறுவனங்கள் நீண்ட கால முதலீட்டிற்கு சிறப்பாகவே இருக்கும். ஆகவே, நீங்கள் வாங்கப் போகும் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை எவ்வாறு உள்ளது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
கஸ்டமரை நன்றாகக் கவனித்துக் கொள்ளக்கூடிய நிறுவனம், பங்குதாரர்களையும் நன்றாகக் கவனித்துக் கொள்ளும் என்பது உறுதி. தொழிற்துறையில் போட்டிகள் அதிகமாகிக் கொண்டிருக்கும் இத்தருணத்தில், வாடிக்கையாளர் சேவை நிச்சயமாக ஒரு நிறுவனத்தை மற்றொரு நிறுவனத்திலிருந்து பிரித்துக் காட்டும் என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை.
பங்குதாரர் சேவை:
நம்மில் பெரும்பாலோர் பல நிறுவனங்களில் மிகச் சிறிய முதலீட்டாளராக உள்ளோம். அவ்வாறு இருக்கும்போது நமது முதலீடு சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கான சேவை மிகவும் அத்தியாவசியமாக உள்ளது. இது சின்னச் சின்ன விஷயங்கள் முதல் பெரிய விஷயங்கள் வரை இருக்கலாம். பெயர் மாற்றம் செய்வது; உரிய நேரத்தில் டிவிடெண்ட் வராமல் இருப்பது; ரைட்ஸ், போனஸ் போன்றவைகளை பெறுவதில் தாமதம் ஏற்படுவது போன்ற பல பிரச்னைகளை முடித்துத் தருவதில் நிறுவனம் துரிதமாகச் செயல்பட வேண்டும். இவையெல்லாம் சின்னச் சின்ன பிரச்னைகள். பெரிய நிறுவனப் பங்குகளை வைத்துள்ள வர்களுக்கு இதுபோன்ற பிரச்னைகள் பெரும்பாலும் இருக்காது. ஆனால் இதைவிட பெரிய பிரச்னை என்னவென்றால், நியாயமாக நடந்து கொள்வது. இன்று பல புரமோட்டர்கள் இன்வெஸ்ட்மென்ட் பேங்கர்ஸ்/ஆடிட்டர்ஸ் உதவியுடன் தங்களது பங்கு சதவிகிதத்தை நிறுவனத்தில் அநியாயமாக (சிறிய முதலீட்டாளர்களுக்கு பாதகம் விளைவிக்கும் வகையில்) ஏற்றிக் கொள்கிறார்கள். வாரண்ட் வெளியிட்டுக் கொள்வதன் மூலம், பங்கு விலையை சந்தையில் ஏற இறங்கச் செய்வதன் மூலம், தங்களைச் சார்ந்த வேறு ஒரு நிறுவனத்துடன் குறைந்த விலையில் இணைப்பதன் மூலம் என பல வகைகளில் இதைச் செய்து முடிக்கிறார்கள். இவ்வாறெல்லாம் தில்லுமுல்லு செய்யாத, நல்ல வரலாறு உள்ள நிறுவனங்களில் உங்களது முதலீட்டை மேற்கொள்ளுங்கள். பங்குதாரரை உண்மையான பங்குதாரராக நினைத்து, நடத்தும் நிறுவனமாக அது இருக்க வேண்டும்.

பிராண்ட் வேல்யூ:
ஒரு கம்பெனிக்கு பிராண்ட் வேல்யூ முக்கியம். டாடாவின் பெயர் இன்று உலகத்தில் உள்ள அனைவருக்கும் பிரசித்தம். பிரிட்டனில் லேண்ட் ரோவர் மற்றும் ஜாகுவார் என்ற கார் கம்பெனிகள் உள்ளன. சில ஆண்டுகள் முன்பு அந்த நிறுவனங்கள் விற்பனைக்கு வந்தன. அப்போது பல நாட்டு நிறுவனங்களும் அந்த கார் கம்பெனிகளை வாங்க வந்தன. ஆனால், அங்குள்ள தொழிலாளர்கள் யூனியன் ஒப்புக்கொண்டது டாடாவை மட்டும்தான். முடிவில் டாடா நிறுவனம்தான் அந்நிறுவனங் களை வாங்கியது. ஒரு நிறுவனத்தின் பிராண்ட் வேல்யூ எவ்வாறெல்லாம் உதவியாக இருக்கிறது என்று பாருங்கள்!
பிஸ்கெட் என்றால் நம்மில் பலருக்கும் ஞாபகம் வருவது பிரிட்டானியாதான். அதேபோல் கார் என்றவுடன் நம்மில் பலர் நினைப்பது மாருதியைத்தான். பேங்க் என்றவுடன் எஸ்.பி.ஐ; இன்ஷூரன்ஸ் என்றவுடன் எல்.ஐ.சி. இவை அனைத்திற்கும் ஒரே பொதுவான விஷயம், பிராண்ட் வேல்யூதான். அரசாங்கம் மற்றும் பொதுமக்க ளிடம் நல்ல பிராண்ட் வேல்யூ இருந்தால் அது பல வகைகளில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உதவி செய்யும். பிராண்ட் வேல்யூ நன்றாக இருந்தால், வியாபாரம் பெருகும்; தொழில் விரிவாக்கம் சுலபமாக இருக்கும்; வேலை செய்ய விண்ணப்பதாரர்கள் அதிகமாகக் கிடைப்பார்கள்; அந்நிறுவனப் பங்குகளுக்கு சந்தையில் அதிக டிமாண்ட் இருக்கும் என அடுக்கிக் கொண்டே செல்லலாம். ஆக, மொத்தத்தில் நீங்கள் வாங்கப் போகும் பங்கிற்கு நல்ல பிராண்ட் வேல்யூ இருக்கிறதா என்று பார்ப்பது அவசியம்!
எதிர்காலத் திட்டங்கள்:
ஒரு நிறுவனத்திற்கு கடந்த காலம் மற்றும் நிகழ்காலம் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் அதன் எதிர்காலம். நிறுவனங்களின் மேனேஜ்மென்ட் ஆண்டறிக்கையில் நிறுவனங் களின் எதிர்காலத் திட்டங்கள் பற்றித் தெரிவிக்கப்பட்டிருக்கும். மேலும், அவ்வப்போது பத்திரிகைகளிலும் இதுகுறித்த செய்திகள் வெளிவரும். இதன் மூலம் அந்நிறுவனங்களின் எதிர்காலத் திட்டம் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
மிக வேகமான வளர்ச்சிக்கு எதிர்காலங்களில் அந்நிறுவனம் திட்டமிடுகிறது என்றால், அந்நிறுவனத்தின் ரிஸ்க்கும் அதிகரிக்கும். அதேபோல் கடன் அதிகம் வாங்காமல், லாபத்தை வைத்தே தனது பிஸினஸை விஸ்தரிக்கும் நிறுவனம் என்றால், ரிஸ்க் வெகுவாகக் குறைந்துவிடும். மேலும், ஐ.டி துறையில் முன்னணியாக இருக்கும் நிறுவனம் திடீரென்று ரியல் எஸ்டேட்டில் வேகமாக நுழையப் போகிறது என்றால், சற்று யோசிக்க வேண்டும். அதேபோல் எதிர்காலத்தில் நிறுவனப் பங்குகளை, ஃபாலோ ஆன் ஆஃபர் மூலம், தொழில் விஸ்தரிப்பிற்காக இரட்டிப்பாக்கப் போகிறது என்றால், அதுவும் யோசிக்க வேண்டிய விஷயமே. இதைப் போல் பலப்பல விஷயங்களைத் தெரிந்து நுழைவது சிறந்தது.

வேலை செய்பவர்களின் தரம்:
ஒரு நிறுவனத்தின் தரத்தை அங்கு வேலை செய்பவர்களை வைத்து மதிப்பிடலாம். தரமான ஊழியர்களைக் கொண்ட நிறுவனம் எப்போதும் தழைத்து நிற்கும். அவர்கள் கொண்டுவரும் புதிய ஐடியாக்கள் மூலம் நிறுவனமும் இளமையாக இருக்கும். அவ்வாறு தரமான ஊழியர்கள் கிடைப்பதற்கும், அவர்களைத் தக்க வைத்துக் கொள்வதற்கும் மதிப்புடன் நடத்த வேண்டும்; நல்ல சம்பளம் கொடுக்க வேண்டும்; அவர்களும் அதனால் நிறுவனமும் வளர்வதற்கு வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.
முப்பது, நாற்பது வருடங்களுக்கு முன்பே டாடா குழுமத்தினர் தங்கள் ஊழியர்கள் குளிர்சாதனப் பெட்டிகள், வாகனங்கள் போன்ற அனைத்து வசதியோடும் வாழ வேண்டும் என்று நினைத்து, அதற்குத் தேவையான வசதி வாய்ப்புகளையும் செய்து கொடுத்தனர். ஆகவே, நீங்கள் வாங்கப் போகும் நிறுவனம் தரமான ஊழியர்களைக் கொண்டுள்ளதா என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.
இனிவரும் வாரங்களில் குவாண்டிடேடிவ் அனாலிசிஸ் என்று சொல்லக்கூடிய நிறுவனங் களை மதிப்பிட உதவும் விகிதங்கள் மற்றும் எண்களை பற்றிக் காண்போம்.
(படி ஏறுவோம்)

Source - Vikatan Magazine