Pages

Sunday, April 10, 2011

பாதுகாப்பான முதலீடு

பாதுகாப்பான முதலீடு


இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறை கடந்து வந்தபாதையைக் கொஞ்சம் திரும்பிப் பார்த்தால் மலைப்பாகத்தான் இருக்கிறது. 2000-ம் ஆண்டு இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் நிர்வகித்த தொகை 1 லட்சம் கோடி ரூபாய். ஆனால், இதுவே 2011 பிப்ரவரி மாத முடிவில் 7,07,412 கோடி ரூபாயாக மிகப் பெரிய வளர்ச்சி கண்டுள்ளது.
முதல் ஃபண்ட்!
இந்தியாவில் முதல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமான யூ.டி.ஐ. 1963-ம் ஆண்டு நாடாளுமன்ற சட்டப்படி உருவானது. இதற்கடுத்த ஆண்டில் யூ.எஸ்.64 என்ற தனது முதல் புதிய திட்டத்தை அறிமுகப் படுத்தியது. 1987-ம் ஆண்டு பொதுத் துறை வங்கிகளும் இந்தத் துறையில் நுழைய, மியூச்சுவல் ஃபண்ட் துறை அடுத்தக் கட்டத்தை நோக்கி முன்னேற அது உறுதுணை யாக இருந்தது.
செபியின் வரவு!

மியூச்சுவல் ஃபண்ட் துறையை நெறிப்படுத்தும் 'செபி’ அமைப்பு 1993-ல் உருவாக்கப்பட்டது. இந்த ஆண்டில்தான் தனியார் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களும் மியூச்சுவல் ஃபண்ட் துறையில் நுழைய அனுமதிக்கப்பட்டது. அதனால் தனியார் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமான 'கோத்தாரி பயோனியர்’ உருவானது. அடுத் தாண்டில் வெளிநாட்டு நிறுவனமான மார்கன் ஸ்டேன்லி தனது முதல் ஃபண்டை வெளியிட்டதன் மூலம் இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறையில் களமிறங்கியது. 1996-ம் ஆண்டு செபியின் விதிமுறைகள் அமலுக்கு வந்ததன் மூலம் முதலீட்டாளர்களுக்குப் பாதுகாப்பு கிடைத்தது. இதனால்  சிறு முதலீட்டாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியது.
ஏஜென்டுகளுக்கு சான்றிதழ்!
தங்களது திட்டங்களை மக்களுக்குக் கொண்டு செல்ல ஏஜென்டுகளை நியமித்தது ஃபண்ட் நிறுவனங்கள். இதனால் 2003-ம் ஆண்டில் ஏஜென்டு களுக்கு 'ஆம்ஃபி’யின் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டது. அதுவரை அதிக தொகை இருந்தால்தான் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய முடியும் என்கிற நிலையை மாற்றி 50, 100 ரூபாய் இருந்தால்கூட முதலீடு செய்யலாம் என்ற நிலையை ஐ.சி.ஐ.சி.ஐ. புரூடென்ஷியல் மற்றும் ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் கொண்டு வந்தன.
நுழைவுக் கட்டணம் ரத்து!
பங்குச் சந்தை மிகப் பெரிய சரிவு ஏற்பட்ட 2008-ம் ஆண்டில் ஏஜென்ட் மூலம் அல்லாமல் நேரடியாக மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு நுழைவுக் கட்டணம் ரத்து செய்யப் பட்டது. அதன்பிறகு பங்குச் சார்ந்த ஃபண்டுகளுக்கும் நுழைவுக் கட்டணம் ரத்து செய்யப்பட்டது.
இதுபோன்ற காரணங்களால் முதலீட்டாளர்கள் லாபம் அடைந் தார்கள்.  பாதுகாப்பான முதலீட்டுக்கு பக்காவான பிளான் மியூச்சுவல் ஃபண்டுதான் என்பதை மக்கள் இன்று உணரத் தொடங்கிருப்பதால், வளர்ச்சிப்பாதையில் பயணிக்கிறது இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறை.

Source - Vikatan Magazine

No comments: