பத்து ஆளு செய்யிற வேலைய ஒத்த ஆளா பாக்குறவன்தான் பயில்வான். அப்படி இருக்குற ஒருத்தனுக்கு இன்னொரு பயில்வான்தான் போட்டியா இருக்க முடியும். அவங்ககூட மத்த யாரும் போட்டி போட முடியாது. அப்படி ஒரு பயில்வானைப் போல உள்ள கம்பெனியைதான் இந்த வாரம் அலசப்போகிறோம்.
இந்த கம்பெனி ஈடுபட்டிருக்கிற துறையில் இவர்கள் மட்டுமே 53 சதவிகித மார்க்கெட் ஷேரை வைத்திருக்கிறார்கள். இருக்கிற ஒரே ஒரு போட்டி கம்பெனி 42 சதவிகித மார்க்கெட்டை வைத்திருப்பதால் இந்த துறையில் இவர்களின் மார்க்கெட் இடத்தை யாராலும் நெருங்க முடியாது. அதிலும் வேக வேகமாக வளர்ந்து வரும் துறையில் இருக்கும் நிறுவனம் என்பதால் அந்த வளர்ச்சிகளை எல்லாம் விற்பனையாக்கி 35% வரை (சி.ஏ.ஜி.ஆர்) வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
என்ன தொழில்?
கட்டுமானத் துறையின் முக்கிய தளவாடங்களான கிரேன்கள், மெட்டீரியல் ஹேண்ட்லிங் இயந்திரங்கள், பிக்-அண்ட்-கேரி கிரேன்கள், ட்ரக்கில் பொருத்தப் பட்டு உபயோகப்படுத்தப்படுகின்ற கிரேன்கள், எல்லாவிதமான கரடு முரடான பூமிகளிலும் சென்று வேலை செய்யக்கூடிய கிரேன்கள் மற்றும் லாரி/ட்ரக்குகளில் பொருட்களை லோட் செய்யத் தேவையான கிரேன்கள் என அனைத்துவிதமான மொபைல் கிரேன்களையும் இந்த நிறுவனம் உற்பத்தி செய்கிறது.
மூன்று முதல் நாற்பது டன் வரையிலான எடை தூக்கும் மொபைல் கிரேன்களை தயாரித்து விற்பனை செய்வதில் முன்னணியில் இருப்பது மட்டுமல்லாமல், மொபைல் டெலி ஹேண்ட்லர்ஸ் எனப்படும் ஸ்பெஷல் வகை கிரேன்களை சீனாவிலிருந்து இறக்குமதி செய்தும் விற்பனை செய்து வருகிறது. இப்போது இந்த வகை கிரேன்களுக்கு டிமாண்ட் அதிகம் இல்லை என்றாலும், இதை தயாரிக்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளது. ராணுவம் இந்த இயந்திரத்தை அப்ரூவ் செய்தால் விற்பனை மிக அதிமாகும் என எதிர்பார்க்கலாம்.
தனித்திறமை ஏதும் இருக்கிறதா?
மொபைல் கிரேனில் மட்டு மல்லாது டவர் கிரேன்களிலும் தன்னுடைய தனித்தன்மையை கோலோச்சி வருகிறது. அதோடு, புதுவிதமான மாடல்களையும், புதிய டைப் கிரேன்களையும் வடிவமைத்து முன்னோடியாகவும் இருக்கிறது இந்த கம்பெனி.
கட்டுமானம், சாலைப்பணி, என்ஜினீயரிங் மற்றும் ஹெவி என்ஜினீயரிங் இண்டஸ்ட்ரி, நிலக்கரிச் சுரங்கங்கள், கெமிக்கல் மற்றும் ஃபெர்ட்டிலைசர், மின் நிலையங்கள், துறைமுகங்கள், ரயில்வே, சிமென்ட், ஆயில் மற்றும் ராணுவம் வரையிலும் கிட்டத்தட்ட 8,500 கஸ்டமர்களைக் வைத்திருக்கிறது. ரிலையன்ஸ், ஏ.பி.ஜி., எல் அண்ட் டி, புஞ்ச் லாயிட், எஸ்ஸார், பி.எச்.இ.எல்., நாகார்ஜுனா கன்ஸ்ட்ரக்ஷன், குஜராத் அம்புஜா, சிம்ப்ளெக்ஸ் இன்ஃப்ரா, கோல் இந்தியா, கேமான் இந்தியா என இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்களை பார்த்தாலே இந்த கம்பெனியின் தரமும் திறனும் புரியும்.
நெட்வொர்க் இருக்கிறதா?
இந்தியா முழுவதுமாக 80-க்கும் மேற்பட்ட இடங்களில் டீலர்களையும் 5 ரீஜினல் ஆபீஸ்களையும் வைத்து தொழிலைத் திறம்பட வளர்த்து வருகிறது இந்நிறுவனம்.
புதிய செக்மென்டுகள் ஏதும் செயல்படுகின்றதா?
இரண்டாண்டு காலமாக சிறிய டிராக்டர்களையும் உற்பத்தி செய்வதோடு விற்பனையும் செய்து வருகிறது. ஹரியானா, உத்தரப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் மட்டுமே இப்போது சிறிய டிராக்டர்கள் விற்கப்பட்டு வருகிறது.
வருகின்ற நிதியாண்டில் பஞ்சாபின் சில பகுதிகளிலும், மத்தியப் பிரதேசத்திலும் விற்பனையை ஆரம்பிக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. எதிர்வரும் நிதியாண்டில் 7,500 சிறிய டிராக் டர்களை விற்கலாம் என்று எதிர்பார்க்கலாம்.
மொபைல் கிரேன் செக்மென்டில் லீடராக இருப்பதால் எப்போதுமே இதன் கிரேன்களை புக் செய்தே பெறவேண்டியுள்ளது. மாதத்திற்கு 575 கிரேன்கள் தேவையிருக்கிறது. ஆனால், இந்நிறுவனத்தால் 400 கிரேன்களை மட்டுமே செய்ய முடிகிறது. இதனால்
ஆர்டர் புக் எப்போதுமே ஃபுல்லாக இருக்கிறது. இதுபோல் தொடர்ந்து ஆர்டர் புக் ஃபுல்லாக இருப்பதும், தாமதமாக டெலிவரி செய்வதும் போட்டியாளர்களை வளரவைத்துவிடும் என்பதை உணர்ந்துள்ள இந்நிறுவனம் கெப்பாசிட்டியை அதிகரிக்க முயற்சிகள் எடுத்து வருகிறது.
உத்தராஞ்சலில் ஒரு புதிய கிரேன் உற்பத்தி செய்யும் தொழிற் சாலையை நிறுவியுள்ளது. இந்த புதிய கிரேன் உற்பத்தி தொழிற் சாலையின் முதல்படி ஏப்ரல் 2011 நிறைவில் நிலைபெற்றுவிடும் என எதிர்பார்க்கலாம். அப்படி நிலைபெற்றால் தற்போதிருக்கும் கெப்பாசிட்டியான 400-லிருந்து 550 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அடுத்த ஏப்ரலில் மாதாந்திர கெப்பாசிட்டி 750 வரை அதிகரிக்கும்.
எதிர்காலம் எப்படி?
இன்ஃப்ராஸ்ட்ரக்சரின் கீழே வரும் கட்டுமானம், ரோடுகள், ரயில்வே, துறைமுகங்கள், ஆயில் மற்றும் கேஸ், ராணுவம் என அத்தனை ஏரியாக்களிலும் வேகமாக வளர்ந்து வரும் நாடாகிய இந்தியா, அதிக அளவில் முன்னேற்றத்துக்காக பொருட் செலவு செய்யவிருக்கிறது. அதனால் மேலே குறிப்பிடப்பட்டுள்ள அத்தனை ஏரியாக்களிலும் இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் நிச்சயம் தேவைப்படும். பெரியதொரு மார்க்கெட் லீடராக இருப்பதால் குறிப்பிட்டுள்ள துறைகளின் வளர்ச்சியின் வேகத்துக்கு ஈடாக இந்நிறுவனமும் வளரும். விவசாயத் துறையிலும் டிராக்டர் உற்பத்தி மூலம் கால்பதிப்பதால் அரசாங்கத்தின் கவனம் அதிகம் உள்ள விவசாயம் சார்ந்த டிராக்டர் விற்பனையும் அதிகரித்து லாபத்தை உயர்த்தும் என்பதில் ஐயமேதுமில்லை.
மேலும் கட்டுமானத்துறையில் இதுநாள்வரை பெரிய அளவில் உபகரணங்கள் (கிரேன், மிக்ஸர் போன்றவை) உபயோகப் படுத்தப்படவில்லை. வேகமான வளர்ச்சிகாணும் பொருளா தாரத்தால், இனிவரும் காலத்தில் கட்டுமானத்துறையில் கூலி வேலைக்கு ஆள் கிடைக்கும் வாய்ப்பு மிகக்குறைவாகவே இருக்கும். எனவே, கட்டுமானத் துறையில் இயந்திரங்கள் பெரிய அளவில் ஈடுபடுத்தப்பட முழு வாய்ப்பு உள்ளது. இதனாலும் இந்நிறுவனத்துக்கு பெரியளவில் நன்மை ஏற்படும். நகரமயமாதலும் அதனால் ஏற்படும் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் தேவைகளும் ஏஸின் வளர்ச்சியை வேகமாக்கும் என்பதில் மாற்றுக் கருத்தே இருக்கமுடியாது. மெட்டல் மற்றும் எனர்ஜியின் தேவை
நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போவதாலும் சுரங்கத் துறைக்கு தேவையான இயந்திரங் களின் தேவையும் அதிகரித்துக் கொண்டேதான் போகும்.
இவ்வாறு ஏஸ் சம்பந்தப்பட் டுள்ள அத்தனை தொழில்களுமே இன்றைய சூழ்நிலையை வைத்துப் பார்த்தால் எதிர்காலத்தில் பெரிய அளவில் வளர்ச்சியடைய வாய்ப்புள்ளதைப் போலவே தோன்றுகிறது. எனவே, அந்தத் துறைகளுக்கான இயந்திரங்களை சப்ளை செய்யும் ஏஸும் அவற்றுடன் சேர்ந்து வளரத்தான் செய்யும்.
என்ன ரிஸ்க்?
திடீரென வட்டி விகிதங்கள் வேகமாக மேலே சென்றால் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் கம்பெனிகள் தங்களுடைய நடவடிக்கைகளை தள்ளிப் போடலாம். அப்படித் தள்ளிப்போடும்போது ஏஸின் வருமானம் ஓரளவிற்கு குறையலாம்.
ஏதாவதொரு காரணத்தால் உலகப் பொருளாதார சூழல் திடீரென மீண்டும் கீழே போனாலும் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் மற்றும் கன்ஸ்ட்ரக்ஷன் செக்டாரில் பெரிய அளவில் தொய்வு விழ வாய்ப் புள்ளது. அந்த சூழ்நிலையில் இந்த இரண்டு துறையையும் சார்ந் திருக்கும் ஏஸின் லாபம் நன்றாகவே குறையலாம்.
ஏன் இந்த ஷேரை வாங்க வேண்டும்?
இந்த துறையில் இரண்டு மேஜர் பிளேயர்கள் மட்டுமே இருப்பதால் வளர்ச்சி நிச்சயம், அதனால் போட்டியும் குறைவு. 2011-12-ன் ஜி.டி.பி. எதிர்பார்ப்பான 8-9 சதவிகிதம் வளர்ச்சியைக் கண்டாலே பெரிய அளவில் லாபம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மொபைல் கிரேன்கள் லாரி/கார் போன்ற வாகனங்களுக்கு சமமான ஒன்றாகும். நாளாக நாளாக மாற்ற வேண்டிய ஒரு மெக்கானிக்கல் விஷயம்.
எனவே, புதிய விற்பனை அதிகரிக்க அதிகரிக்க, ஸ்பேர் பார்ட்ஸ் விற்பனையும், நாளாக நாளாக ரீப்ளேஸ்மென்ட் சேல்ஸும் இந்த கம்பெனிக்கு நன்றாகவே கைகொடுக்கும். எனவே, வாசகர்கள் இந்த கம்பெனியை இரண்டாண்டு கால முதலீட்டிற்காக ரூபாய் 80 வரை செல்லும் என்ற எதிர்பார்ப்பில் இன்றைய விலையான 47 ரேஞ்சில் முதலீடு செய்யலாம் என்பதே நம் கருத்து.
-நாணயம் டீம்
Source - Vikatan Magazine
No comments:
Post a Comment