Pages

Monday, July 4, 2011

பங்குச்சந்தை ஆத்திச்சூடி..- 31

பங்குச்சந்தை ஆத்திச்சூடி..



சென்ற வாரம் டிஸ்கவுன்ட் ரேட்டில் பயன்படுத்தப்படும் சில முக்கிய வார்த்தைகளுக்கான அர்த்தத்தைப் பார்த்தோம். இவ்வாரம் 'காஸ்ட் ஆஃப் ஈக்விட்டி’யைக் கண்டுபிடித்து டிஸ்கவுன்ட் ரேட்டை கண்டுபிடிப்போம்.
காஸ்ட் ஆஃப் ஈக்விட்டி கண்டுபிடிக்க உபயோகிக்கப்படும் ஃபார்முலா இதுதான்:      

ஆக, ஃபார்முலாவை நாம் இவ்வாறு சுருக்கலாம்: (RE) = RF + β X (RP)
மேற்கண்ட ஃபார்முலாவில் RFஎன்பது 8.30% என்று எடுத்துக் கொள்வோம். ஏனென்றால் நாம் ஏற்கெனவே கண்டதுபோல நமது இந்திய அரசாங்கத்தின் 10 வருட கடன் பத்திரங்கள் அந்த அளவு யீல்டை தற்பொழுது தந்து கொண்டிருக்கின்றன. ஆகவே, அதுதான் ரிஸ்க் ஃப்ரீ ரேட்.
பீட்டாவை எவ்வாறு கணக்கு செய்வது? அதை கணக்கு செய்வது எப்படி என்பது தனி பாடம் என்பதால், நமது உபயோகத்திற்கு எங்கிருந்து ரெடியாகக் கிடைக்கும் என்று பார்ப்போம். மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தை இணையதளங்கள் தங்களின் முக்கிய குறியீடுகளில் உள்ள நிறுவனங்களுக்கு, பீட்டாவைக் கணக்கிட்டு வெளியிடுகின்றன. நீங்கள் மதிப்பிட விரும்பும் நிறுவனத்தின் பீட்டா நேரடியாகக் கிடைக்காவிட்டால், அதே துறையைச் சார்ந்த, அதே அளவிலான நிறுவனத்தின் பீட்டாவை பங்குச் சந்தை இணையதளங்களில் இருந்து எடுத்துக் கொள்ளலாம்.
இங்கு நமது தமிழ்நாடு கூரியர் நிறுவனம் போக்குவரத்து மற்றும் லாஜிஸ்டிக்ஸ் துறையைச் சார்ந்தது ஆகும். அத்துறையில் லிஸ்ட் செய்யப்பட்ட நிறுவனங்கள் புளூடார்ட் எக்ஸ்பிரஸ் லிமிடெட் (Blue Dart Express Ltd.), கேட்டி (Gati), ஆல்கார்கோ (Allcargo) போன்ற சில நிறுவனங்கள் ஆகும். நமது தமிழ்நாடு கூரியர் நிறுவனம் செய்யும் தொழிலுடன் நெருங்கி வருவது புளூடார்ட் ஆகும். கிரிஸில் என்ற ரேட்டிங் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட ரிப்போர்ட்டில் புளூடார்ட்டின் பீட்டா 0.7 என கணக்கிட்டுள்ளது. இத்துறையில் இந்தியாவில் இது ஒரு ஜாம்பவான் நிறுவனம் ஆகும். மேலும், இது ஒரு மல்ட்டி நேஷனல் கம்பெனி ஆகும். நமது தமிழ்நாடு கூரியர் நிறுவனம் ஒரு சிறிய நிறுவனமாகும். இதன் ஏற்ற இறக்கம் அதிகமாக இருக்கும் என்பதால், இதனுடைய பீட்டாவை 1.3 என்று எடுத்துக் கொள்வோம். இது நிறுவன சைஸ், துறை, நாடு, புரமோட்டர் போன்ற பலவற்றைக் கொண்டு வேறுபடும்.
அடுத்ததாக நமக்குத் தேவையானது ரிஸ்க் பிரீமியம் ஆகும். ரிஸ்க் ஃப்ரீ ரேட்டைப் போல இரண்டு மடங்கு கிடைத்தால், தொழில்களில் முதலீடு செய்வது நன்மையே. நமது ரிஸ்க் ஃப்ரீ ரேட் 8.30% ஆகும். ஆக, நமது ரிஸ்க் பிரீமியமும் 8.30% என எடுத்துக் கொள்வோம். இது நாட்டைப் பொறுத்து, துறையைப் பொறுத்து, நிறுவன சைஸைப் பொறுத்து வேறுபடும்.
இப்போது நமது தமிழ்நாடு கூரியர் கம்பெனிக்கு காஸ்ட் ஆஃப் ஈக்விட்டி ரெடி:
(RE) = 8.30 + (1.3 X 8.30) = 19.09%
அடுத்து நாம் டிஸ்கவுன்ட் ரேட்டை 'வேக்’ (WACC – Weighted Average Cost of Capital) முறையைக் கொண்டு கண்டுபிடிப்போம். வேக் முறையில் டிஸ்கவுன்ட் ரேட்டை கணக்கிடுவதற்கு நிறுவனத்தின் பங்கு மற்றும் கடன் சதவிகிதம் நமக்குத் தெரிய வேண்டும். நாம் ஏற்கெனவே பார்த்ததுபோல் ஒரு நிறுவனம் தொழில் செய்வதற்கு பணம் இரண்டு வகையில் கிடைக்கிறது - ஒன்று, பங்கு மூலதனம் (E - Equity) வாயிலாக; மற்றொன்று கடன் (D - Debt) வாங்குவதன் மூலமாக. நமது தமிழ்நாடு கூரியர் கம்பெனி வாங்கியிருக்கும் நீண்ட கால கடன் 3.53 கோடி என்றும், அதன் பங்கு மூலதனம் 5.30 கோடி என்றும் வைத்துக் கொள்வோம். இது ஒவ்வொரு நிறுவனத்தின் பேலன்ஸ்ஷீட்டிலும் கிடைக்கும்.
பங்கு மூலதனத்தையும் கடனையும் கூட்டினால் (5.30+3.53) நமக்கு கிடைப்பது 8.83 கோடியாகும். இதன் மூலம் நமது நிறுவனத்தின் பங்கு மூலதன சதவிகிதம் மற்றும் கடன் சதவிகிதம் எவ்வளவு என்று கண்டுபிடித்து விடலாம்.
பங்கு சதவிகிதம் = E/ (D + E) X 100 = (5.30)/(5.30 + 3.53) X 100 = 60%
கடன் சதவிகிதம் = D/ (D + E) X 100 = (3.53)/(5.30 + 3.53) X 100 = 40%
தமிழ்நாடு கூரியர் நிறுவனம் தான் வாங்கியுள்ள கடன்களுக்கு ஆண்டுக்கு 15% வீதம் வட்டி கொடுத்து வருகிறது என்று வைத்துக் கொள்வோம்.  (இன்றைய நிலையில் வங்கிகளும், பெரிய நிறுவனங்களும் ஆண்டுக்கு 10% - 12% வட்டி கொடுத்து வருவதால், நமது கூரியர் நிறுவனத்திற்கு ஆண்டுக்கு 15%-க்கு குறைவாக கிடைக்கவில்லை. வட்டி குறையும் காலங்களில் இந்த வட்டியும் குறைய வாய்ப்பிருக்கிறது.)
வேக் = (காஸ்ட் ஆஃப் ஈக்விட்டி ஜ் பங்கு சதவிகிதம்) + {(கடனிற்கு கொடுக்கும் வட்டி விகிதம் ஜ் கடன் சதவிகிதம்) ஜ் (1 - டேக்ஸ் ரேட்)}
WACC = (Cost of Equity x Percent of Equity) + {(Interest Rate x Percent of Debt) x (1 – Corporate Tax Rate)}
இதுவரை நாம் மேலே கண்டுபிடித்த அனைத்தையும் உபயோகித்து கணக்கு செய்தால், கீழ்க்கண்டவாறு வேக்கை (டிஸ்கவுன்ட் ரேட்டை) கண்டுபிடித்து விடலாம்.
வேக் = (19.09 X 60%) + {(15% X 40%) X (1 - 33.99%)} = 15.41%
ஆக, நமது தமிழ்நாடு கூரியர் நிறுவனத்தின் டிஸ்கவுன்ட் ரேட் 15.41% என கண்டுபிடித்துள்ளோம். இது நிறுவனத்தின் சைஸை, பீட்டாவை, கடன்/பங்கு சதவிகிதத்தை, நிறுவனத்தின் குவாலிட்டியை, வட்டி விகிதத்தைப் பொறுத்து அதிகமாக/குறைவாக இருக்கக்கூடும்.
இதற்கு அடுத்த ஸ்டெப், இந்த டிஸ்கவுன்ட் ரேட்டை உபயோகித்து நமது தமிழ்நாடு கூரியர் நிறுவனத்திற்கு டெர்மினல் வேல்யூ கண்டுபிடிப்பது. அதற்கு முன்பு டெர்மினல் வேல்யூ பற்றி சற்று விரிவாகப் பார்க்கலாம்.  நாம் ஃப்ரீ கேஷ் ஃப்ளோவை அடுத்த ஐந்து வருடங்களுக்கு ஃபோர்காஸ்ட் செய்துள்ளோம். ஐந்து வருடங்களுக்குப் பிறகும் தமிழ்நாடு கூரியர் கம்பெனி நடந்து கொண்டுதான் இருக்கும். ஆக, அதன்பின் வருகிற காலங்களில் உள்ள அந்நிறுவனத்தின் மதிப்பை எவ்வாறு கணக்கில் கொண்டு வருவது? அதற்குத்தான் இந்த டெர்மினல் வேல்யூ. நிறுவனங்களுக்கு அழிவு இல்லை. ஆகவே, தமிழ்நாடு கூரியர் கம்பெனி எதிர்காலத்தில் எப்போதும் ஆபரேஷனில் இருக்கும், மேலும் எப்போதும் வருமானத்தைத் தந்து கொண்டிருக்கும் என எடுத்துக் கொள்வோம். அடுத்த இதழில் டெர்மினல் வேல்யூவைக் கண்டுபிடித்து, டிஸ்கவுன்டட் கேஷ் ஃப்ளோ கண்டுபிடிப்போம்.
(படி ஏறுவோம்)

Tuesday, June 28, 2011

இதைப் படியுங்க முதலில்! - தவனை திட்டத்தில் மனை வாங்க ஆசையா?

தவனை திட்டத்தில் மனை வாங்க ஆசையா?

இதைப் படியுங்க முதலில்!

முன்பெல்லாம் டி.வி.யை ஆன் செய்தால் பல சேனல்களில் டெலி மார்க்கெட்டிங் பற்றியோ அல்லது ஏதாவது ஃபிட்னஸ் மெஷினை வாங்குவது பற்றியோ அல்லது வைத்திய நிகழ்ச்சியோ ஓடிக்கொண்டிருக்கும். இப்போது அந்த இடத்தைப் பிடித்திருப்பது சுலபத் தவணைத் திட்டத்தில் மனைவாங்கச் சொல்லி வரும் விளம்பர நிகழ்ச்சிகள்தான்... பெரிய சேனல்களில் ஆரம்பித்து, லோக்கல் கேபிள் டி.வி. வரை சக்கைபோடு போடுகிறது இத்தகைய விளம்பர நிகழ்ச்சிகள்.
ரியல் எஸ்டேட் முதலீடு சூப்பர் வருமானம் தரும் முதலீடு என்ற எண்ணம் மக்கள் மனதில் அழுத்தம் திருத்தமாக விழுந்துவிட்டதால் ஊருக்கு உள்ளேயோ வெளியேயோ எங்காவது ஒரு துண்டு இடத்தை வாங்கிவிட மாட்டோமா என்று துடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இதைப் புரிந்துகொண்ட ரியல் எஸ்டேட் பிஸினஸ்மேன்களும் டி.வி., ஃபிரிட்ஜ் விற்பது போல மாதத் தவணைத் திட்டத்தில் மனைகள் தருகிறோம் என்று களத்தில் இறங்கியிருக்கிறார்கள். போதாக்குறைக்கு தங்க நாணயம், டி.வி., ஃபிரிட்ஜ் என பல கவர்ச்சிகரமான பரிசுகளை வேறு அள்ளிவிடுகிறார்கள். விளைவு இந்த இ.எம்.ஐ. திட்ட பிஸினஸ் பின்னி எடுத்துக் கொண்டிருக்கிறது!



இன்று தமிழ்நாட்டில் எந்த ஊராக இருந்தாலும் ரியல் எஸ்டேட் விலை நிலவரங்கள் உச்சாணிக் கொம்பில் இருக்க, மொத்தமாக ஒரு லட்சம், இரண்டு லட்சம் என பணம் கொடுத்து இடம் வாங்கும் வசதி எல்லோரிடமும் இருக்காது. அப்படிப்பட்டவர்களுக்கு இந்த தவணைத் திட்டம் உண்மையில் ஒரு வரப்பிரசாத மாகவே இருக்கிறது. கூடவோ குறையவோ, எப்படியோ ஒரு தொகையைக் கொடுத்து மனைக்கு சொந்தக்காரர் ஆகி விட முடிகிறது இதனால்.
மாசம் ஐந்நூறோ ஆயிரமோ கொடுத்து குருவி சேர்க்கிற மாதிரி சேர்த்து, கடைசியில் இடத்துக்கு சொந்தக்காரர் ஆகிவிடும்போது வரும் மகிழ்ச்சி இருக்கிறதே அதுக்கு இணை வேறு கிடையாது! ஆனால் அதுவே ஏடாகூடமாக முடிந்து விட்டால் அதனால் ஏற்படும் கஷ்டத்துக்கும் அளவே இருக்காது. தவணைத் திட்டம் என்பது நல்ல விஷயம்தான். அதே சமயம் தவறான ஆட்களிடம் சிக்கிவிட்டால் சிக்கலாகிவிடும். சாம்பிளுக்கு ஒரு சம்பவம் இதோ...
மதுரையைச் சேர்ந்த ராகவனுக்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சொல்லும் போதே கண்ணில் நீர்கோர்த்து விட்டது...''ரெண்டு வருஷ தவணைத் திட்டத்துல சேர்ந்து மாசம் தவறாம இ.எம்.ஐ.  கட்டி முடிச்சேன். நிலத்தைக் கிரையம் செஞ்சிக்கலாம் என்கிறப்ப, 'மனையோட விலை ரெண்டு மடங்கா ஏறிடுச்சு. அதிகப் பணம் கொடுத்தாத்தான் பத்திரம் பதிஞ்சு தருவோம். இல்லைன்னா வேற இடத்தை வாங்கிக்குங்க’ன்னு சொல்லிட்டாங்க. என்னால தட்டிக் கேட்கவும் முடியலை, அவங்க கேட்ட பணத்தை தரவும் முடியல. அதனால, வேற வழி இல்லாம அவங்க கொடுத்த வேற ஒரு இடத்தை வாங்க வேண்டியதாயிடுச்சு.
அந்த இடம் ஏற்கெனவே காட்டின இடத்திலிருந்து ஏழு கி.மீ. தள்ளி இருக்கிற இடம்! வாயை மூடிக்கிட்டு வாங்கிட்டு வரவேண்டியதாப் போச்சு..! இடத்தைப் பார்த்து பிடிச்சுப் போய்தான் அந்த திட்டத்துலயே சேர்ந்தேன். ஆனா கடைசியில எனக்கு அநியாயம் பண்ணிட்டாங்க...'' என்று புலம்பித் தள்ளிவிட்டார் ராகவன். ''ஊருக்கு வெளியில சாமானியமா போய் வர முடியாத இடமா பார்த்துதான் பல பேரு சுலப தவணைத் திட்ட மனைகளைப் போடறாங்க.. அதுல 90% மனைகளுக்கு முறையான அங்கீகாரம் இருக்காதுங்கிறது என்னோட நம்பிக்கை! சில இடங்கள்ல புறம்போக்கு, குளம், கண்மாய்ன்னு ஆரம்பிச்சு, யார் யாருக்கோ சொந்தமான இடத்தைக்கூட வளைச்சு பிளாட் போட்டு வித்துடறாங்க.
இந்த இடத்தை வாங்கு றவங்க ஏழைபாழைகள் என்கிறதால அவங்களும் சரியா விசாரிச்சு வாங்குறதில்லை. இந்த இடத்தை வாங்குனவங்க, பத்திரம் முடிச்சு வீடு கட்றப்பத்தான் அவங்க வாங்கினது சரியான இடமா, இல்லை சிக்கல் ஏதும் இருக்கா?’ங்கிறதே தெரிய வரும்'' என்று பானையைப் போட்டு உடைக்கிற மாதிரி உண்மையைப் போட்டு உடைத்தார் கோவையைச் சேர்ந்த முன்னணி புரோக்கர் ஒருவர்.
இந்நிலையில் இப்படிப் பட்ட திட்டங்கள் மூலமாக மனையை வாங்குவதாக இருந்தால் அதற்கு முன்பாக என்னென்ன விஷயங் களைக் கவனிக்க வேண்டும் என சென்னையின் முன்னணி வக்கீல்களில் ஒருவரான அழகுராமனிடம் கேட்டோம்.
''இது ஒரு கவர்ச்சியான மார்க்கெட்டிங் திட்டம்தான். விற்பனையை அதிகரிக்க இம்மாதிரி திட்டங்களைக் கொண்டு வருகிறார்கள். பளு தெரியாமல் பணம் கட்டி முடிப்பதால் மக்களும் இதற்கு ஆதரவு அளித்து வருகிறார்கள். இந்த மனைகளை வாங்கி முதலீடு செய்யும் முன், அந்த மனைக்கான லே-அவுட் உள்ளாட்சி அமைப்பிடம் அப்ரூவல் வாங்கப்பட்டிருக்கிறதா என்பதைக் கவனிக்க வேண்டும். அப்ரூவ்டு மனைதான் என்று தெரிந்தால் மட்டுமே வாங்க முடிவெடுக்கலாம்.
ரெடி கேஷ் கொடுத்து ஒரு இடத்தை வாங்கும் போது எவ்வளவு கவனமாக இருப்போமோ, அந்த கவனம் இதிலும் இருக்க வேண்டும். வில்லங்க சான்றிதழ் கேட்க வேண்டும். இதிலெல்லாம் எந்த பிரச்னையும் இல்லை என்று தெரிந்த பின்னரே முதலீட்டு முடிவை எடுக்க வேண்டும். அடுத்து, மூல ஆதார ஆவணங்களையும் புரமோட்டரிடமிருந்து பெற்று சரிபார்க்க வேண்டும்'' என்றவர் சற்று நிறுத்தி,
''புரமோட்டர் யார் என்பதை முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டும். அவர் எப்படிப் பட்டவர்? எத்தனை ஆண்டுகளாக இந்த தொழிலில் இருக்கிறார்? அவரது பின்னணி பலம் என்ன என்பதை எல்லாம்  விசாரித்து அறிவது நலம். லே-அவுட் போடப்பட்டிருக்கும் மனை அவருக்குச் சொந்தமானதா? அல்லது வேறொருவர் நிலத்துக்கு இவர் பவர் ஆஃப் அட்டர்னி பெற்று விற்கிறாரா என்பதையும் முக்கியமாகக் கவனிக்க வேண்டும்.
புரமோட்டரின் சொந்த நிலமாக இருந்தால் அதிக சிக்கல்கள் வர வாய்ப்பில்லை. இதுவே பவர் ஆஃப் அட்டர்னியாக இருந்து நிலத்தின் உரிமையாளர் பவரை ரத்து செய்திருந்தால் அது நமக்குத் தெரியாமல் போய்விடும். அப்படி பவர் கொடுக்கப்பட்டிருந்தால் பவர் கொடுத்தவர் எங்கே இருக்கிறார் என்பதைப் பார்த்து அவரிடம் சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொண்ட பிறகு மனையை வாங்குவது குறித்து முடிவெடுப்பது நல்லது'' என்றவர், இந்த விஷயத்தில் பலரும் செய்யும் தவறை தவிர்ப்பது எப்படி என்பது பற்றியும் விளக்கினார்.
''தவணை முறையில் மனை வாங்குபவர் களில் பெரும்பாலோர், புரமோட்டருடன் கிரைய ஒப்பந்தம் போட்டுக் கொள்வதில்லை. தெளிவாக ஒப்பந்தம்போட்டுக் கொள்ளும் பட்சத்தில் பல பிரச்னைகளைத் தவிர்க்க முடியும். இந்த ஒப்பந்தத்தை 20 ரூபாய் மதிப்புள்ள ஸ்டாம்ப் பேப்பரில்கூட எழுதினால் போதும். அதில், நிலத்தின் விலை எவ்வளவு, மாதத் தவணை எவ்வளவு, எத்தனை மாதங்கள், மனை எண், பரப்பளவு என அனைத்து தகவல்களையும் தெளிவாகக் குறிப்பிட்டு ஒப்பந்தம் போட்டுக் கொள்ள வேண்டும்.
ஒப்பந்தம் போடும்போது கிரையம் செய்து தர தாமதம் ஏற்பட்டால் காலதாமதம் ஏற்படும் நாட்களுக்கு வட்டி போட்டுத் தர வேண்டும் என்றும் ஒப்பந்தத்தில் குறிப்பிட வேண்டும். இந்த மாதிரி ஒப்பந்தங்கள் போட்டுக் கொள்வது பாதுகாப்பானதாக இருக்கும்.
அதே நேரத்தில் நாமும் தவணையை சரியாகச் செலுத்தி வர வேண்டும். எப் போது நாம் தவணை பணத்தைச் செலுத்த தொடங்குகிறோமோ, அப்போதே அந்த நிலத்தில் உரிமை பெற்றுவிடுகிறோம். அதனால் தவணை காலத்தில் நிலத்தை அடிக்கடி பார்வையிட வேண்டும். அப்போதுதான் ஏதேனும் ஆக்கிரமிப்புகள் ஏற்பட்டால் தடுக்க முடியும்'' என்றார் அழகுராமன்.
ஆக மொத்தம் தவணைத் திட்டத்தில் எந்த குறையும் இல்லை. சூப்பரான திட்டம்தான். யாரிடம் வாங்குகிறோம் எத்தகைய நிலத்தை வாங்குகிறோம் என்பதைப் பொறுத்துதான் நமது காணி நில கனவு கைகூடுவதும் கூடாததும்!
- செ.திருக்குறள் அரசி.


Source - Vikatan Magazine

ஐ.பி.ஓ. வருமா எல்.ஐ.சி?

ஐ.பி.ஓ. வருமா எல்.ஐ.சி?


இதோ அதோ என இத்தனை நாட்களும் தள்ளிப் போன லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்கான ஐ.பி.ஓ. விதிமுறைகள் இப்போது வெளிவந்து விட்டது. இதன்மூலம் சில இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் கூடிய விரைவில் ஐ.பி.ஓ. வரும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
ஐ.ஆர்.டி.ஏ. விதிமுறைகள்!



இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் தொடங்கி பத்தாண்டுகள் பூர்த்தியான நிறுவனங்கள் மட்டுமே ஐ.பி.ஓ. வரமுடியும் என்று சொல்லி அதிர்ச்சியை தந்திருக்கிறது ஐ.ஆர்.டி.ஏ.  
நம் நாட்டில் மொத்தம் 24 ஆயுள் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் உள்ளன. இதில் ஹெச்.டி.எஃப்.சி. லைஃப் இன்ஷூரன்ஸ், ஐ.சி.ஐ.சி.ஐ. புரூடென்ஷியல், எஸ்.பி.ஐ. லைஃப், பஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்ஷூரன்ஸ் மற்றும் மேக்ஸ் நியூயார்க் ஆகிய ஐந்து நிறுவனங்கள் மட்டுமே பத்தாண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகின்றன.  ஐ.ஆர்.டி.ஏ.வின் விதிமுறைபடி இந்த நிறுவனங்கள் மட்டுமே ஐ.பி.ஓ. வந்து பங்குச் சந்தையில் நிதி திரட்ட முடியும்.
ரிலையன்ஸ் லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு  2012-ம் ஆண்டு ஜனவரியில் பத்தாண்டு நிறைவு பெறுவதால், அந்நிறுவனமும் ஐ.பி.ஓ. வர வாய்ப்புண்டு.
அரசு பொதுத் துறை நிறுவனமான எல்.ஐ.சி. அரை நூற்றாண்டுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. ஐ.பி.ஓ. வரத் தேவையான அனைத்து தகுதிகளும் இதற்குண்டு என்றாலும் ஐ.பி.ஓ. வரலாமா வேண்டாமா என மத்திய அரசாங்கம்தான் முடிவு செய்ய வேண்டும். தற்போது எல்.ஐ.சி. ஹவுஸிங் ஃபைனான்ஸ் ஏற்கெனவே பங்குச் சந்தையில் பட்டியலிட்டிருப்பதால், எல்.ஐ.சி. நிறுவனமும் ஐ.பி.ஓ. வரலாம் என்கிறார்கள் நிபுணர்கள். இதற்கு எல்.ஐ.சி. ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கக்கூடும். அப்படி ஒரு நிலை வந்தால் அதை அரசாங்கம் எப்படி சமாளிக்கும் என்பது முக்கியமான விஷயம்.
ஐ.ஆர்.டி.ஏ. வெளியிட்ட விதிமுறைகளில் அடுத்து முக்கியமானது, ஐ.பி.ஓ. வரும் இன்ஷூரன்ஸ் நிறுவனம், கடந்த ஐந்து நிதி ஆண்டுகளில், மூன்று நிதி ஆண்டுகளில் தொடர்ந்து நிகர லாபம் சம்பாதித்து இருக்க வேண்டும். அல்லது அதன் அளிக்கப்பட்ட பங்கு மூலதனத்தைப் போல் இரு மடங்கு 'எம்பெடெட் மதிப்பு’ (Embedded Value-EV) இருக்க வேண்டும் என்பது.
இந்த 'எம்பெடெட் மதிப்பை’ எப்படி கணக்கிட வேண்டும் என்றும் ஐ.ஆர்.டி.ஏ. வரையறுத்துக் கொடுத்திருக்கிறது. பங்குதாரர்களின் நிகர சொத்து மதிப்பு மற்றும் காப்பீடு நிறுவனத்தின் பிஸினஸ் மதிப்பு இரண்டும் சேர்ந்ததுதான் எம்பெடட் மதிப்பு. இந்த மதிப்பீட்டை தனிப்பட்ட இரு தணிக்கை நிபுணர்கள் மூலம் உருவாக்கித் தர வேண்டும் என்றும் ஐ.ஆர்.டி.ஏ. சொல்லி இருக்கிறது.
தொடர்ந்து மூன்று ஆண்டு நிகர லாபம் அல்லது எம்பெடட் மதிப்பு- இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் நிறைவு செய்ய  வேண்டும்.
இது தவிர, ஐந்தாண்டுகளில் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் மொத்த பிரீமியம், செயல்பாட்டுச் செலவு விகிதம், முதலீட்டு மீதான வருமானம், லாபம்/நஷ்ட விவரங்களையும் ஐ.பி.ஓ வரும் நிறுவனம் குறிப்பிட வேண்டும். தவிர, அந்த கம்பெனிக்கு இருக்கும் ரிஸ்க்குகளையும் தெரிவிக்க வேண்டும் என்றும் ஐ.ஆர்.டி.ஏ. சொல்லியிருக்கிறது.
ஐ.ஆர்.டி.ஏ-ன் இந்த விதிமுறைகள் மத்திய அரசின் ஒப்புதல் பெறுவதற்காக அனுப்பப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்த பிறகே, இது நடைமுறைக்கு வரும் என்று சொல்லப்படுகிறது.
மும்பையைச் சேர்ந்த பங்குச் சந்தை நிபுணர் ஒருவருடன் இந்த புதிய விதிமுறைகள் பற்றி பேசினோம்.
''ஐ.பி.ஓ. வெளியிட பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியமான செபிக்கு விண்ணப்பிக்கும் முன் ஐ.ஆர்.டி.ஏ-விடம் முறைப்படி அனுமதிபெற வேண்டும் என்கிற விதிமுறை வரவேற்கக்கூடியதே. அதேநேரத்தில், இன்ஷூரன்ஸ் நிறுவனம்
நிர்ணயிக்கும் பங்கு விலைப்பட்டை நியாய மானதாக உள்ளதா என்பதையும் ஐ.ஆர்.டி.ஏ. கண்காணிப்பது அவசியம். இது நீண்ட காலத்தில் பாலிசிதாரர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் நலனைப் பாதுகாக்க உதவும்'' என்றார்.
ஐ.ஆர்.டி.ஏ. இதையும் கவனத்தில் கொண்டால் நல்லது.
- சி.சரவணன்
படம்: சொ.பாலசுப்பிரமணியம்

Source - Vikatan Magazine

Monday, June 27, 2011

முதற்படி முதலில் படி! - 30

முதற்படி முதலில் படி!

பங்குச்சந்தை ஆத்திச்சூடி..


கடந்த சில வாரங்களாக ஃப்ரீ கேஷ் ஃப்ளோ கண்டுபிடிப்பதற்குத் தேவையான அனைத்து அளவுகோல் களையும் விரிவாகப் பார்த்தோம்...  அவற்றைக் கொண்டு கணக்கிட்ட ஃப்ரீ கேஷ் ஃப்ளோ அட்டவணை 1-ல் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள அட்டவணையில் ஆபரேட்டிங் பிராஃபிட்டிலிருந்து, அதாவது செயல்பாட்டு லாபத்திலிருந்து வருமான வரி, நிகர முதலீடு மற்றும் ஒர்க்கிங் கேபிட்டலில் உள்ள மாற்றம் போன்றவற்றைக் கழித்துள்ளோம். அவ்வாறு கழித்தபிறகு கடைசியாகக் கிடைப்பதுதான் நிறுவனத்திற்கு கிடைக்கும் ஃப்ரீ கேஷ் ஃப்ளோ. நிறுவனத்தின் மதிப்பைக் கண்டுபிடிக்க இன்னும் இரண்டு 'ஸ்டெப்’ தூரத்தில் உள்ளோம்.
ஒன்று, நாம் முதலில் கூறியதுபோல டிஸ்கவுன்ட் ரேட்டைக் கண்டுபிடிக்க வேண்டும். மற்றொன்று, நிறுவனத்திற்கு டெர்மினல் வேல்யூ (Terminal Value) கண்டுபிடிக்க வேண்டும். முதலில் டிஸ்கவுன்ட் ரேட்டை கண்டுபிடித்து விடுவோம். ஏனென்றால், அதை உபயோ கித்துத்தான் டெர்மினல் வேல்யூவைக் கண்டுபிடிக்க வேண்டும். டிஸ்கவுன்ட் ரேட்டை எவ்வாறு கணக்கிடுவது என்பதற்கு முன்பாக, அதைப் பற்றி பார்த்து விடுவோம்.
டிஸ்கவுன்ட் ரேட் என்பது எந்த ஒரு முதலீட்டிலும் நீங்கள் எதிர்பார்க்கும் வருமான சதவிகிதம். உதாரணமாக, உங்களிடம் 1 கோடி ரூபாய் உள்ளது. உங்களுக்கு இரண்டு ஆப்ஷன் கிடைக்கிறது.
1. இந்திய அரசாங்க கடன் பத்திரத்தில் (பாண்ட்) முதலீடு செய்தால் உங்களுக்கு உறுதியாக எந்தவித ரிஸ்க்கும் இல்லாமல் ஆண்டிற்கு 8% வருமானம் கிடைக்கிறது. நமது அரசாங்கம் திவாலாகாது என்பதால், அது கொடுக்கும் ரேட்தான் ரிஸ்க் ஃப்ரீ ரேட்.

2. ஒரு நிறுவனம் விலைக்கு வருகிறது. ரிஸ்க் எடுத்து, அந்த நிறுவனத்தை வாங்கினால், எல்லாச் செலவுகளும் போக ஆண்டுக்கு 6% வருமானம் கிடைக்கிறது. புத்திசாலியாகிய நீங்கள் எந்த ஆப்ஷனைத் தேர்ந்தெடுப்பீர்கள்? நிச்சயமாக முதல் ஆப்ஷனைத்தான்.
இப்போது இன்னுமொரு கம்பெனி (உதாரணமாக, ஏபிசி லிமிடெட்) விலைக்கு வருகிறது - அதே ஒரு கோடி ரூபாய்க்கு? ரிஸ்க் எடுத்து அதை வாங்கினால், எல்லாச் செலவுகளும் போக உங்களுக்கு ஆண்டிற்கு 16% வருமானம் கிடைக்கும். ரிஸ்க்கிற்கு ஏற்ற ரிவார்ட் நன்றாக உள்ளது என்று நினைக்கிறீர்கள். எனவே,  அரசு கடன் பத்திரத்தில் முதலீடு செய்யாமல், எபிசி லிமிடெட்டை விலைக்கு வாங்க முடிவு செய்கிறீர்கள். ஆகவே, ரிஸ்க்குடன் கூடிய லாபமாகிய 16%-தான் உங்களின் டிஸ்கவுன்ட் ரேட். உங்களின் நண்பருக்கு 14% வருமானம் போதும் என்று நினைத்தால் அது அவருடைய டிஸ்கவுன்ட் ரேட்.
இந்த டிஸ்கவுன்ட் ரேட்டை எவ்வாறு கணக்கிடுவது? என்பதை தெரிந்து கொள்ளும் முன், நாம் உருவாக்கிக் கொள்ளும் சில அனுமானங்களைப் பொறுத்தே டிஸ்கவுன்ட் ரேட் அமையும் என்பது முக்கியமான விஷயம். சுருக்கமாகச் சொன்னால், இந்த டிஸ்கவுன்ட் ரேட் நாட்டைப் பொறுத்து, நிறுவனத்தைப் பொறுத்து, செய்யப் போகும் தொழிலின் ரிஸ்க்கைப் பொறுத்து அமையும்.
டிஸ்கவுன்ட் ரேட்டை வேக் (WACC – Weighted Average Cost of Capital) முறையைக் கொண்டு கணக்கிடலாம். பொதுவாக, பணம் ஒரு நிறுவனத்திற்கு ஈக்விட்டி முதலீடாகவும், கடனாகவும் கிடைக்கும். இந்த இரண்டு வகையான நிதி திரட்டுதலின் சதவிகிதத்தை (வெயிட்டை) எடுத்துக் கொண்டு அவற்றின் விலையால் (equity cost and interest cost) பெருக்கி, பிறகு கூட்டினால் கிடைப்பதுதான் டிஸ்கவுன்ட் ரேட். கடனுக்குக் கொடுக்கும் வட்டியிலிருந்து, வரியை கழித்துக் கொள்ள வேண்டும். ஏன் என்பதை கீழே விரிவாகக் காண்போம்.
வாங்கும் கடனுக்கு நிறுவனங்கள் வட்டி கொடுக்கும். அந்த வட்டியை நிறுவனங்கள் இன்கம் ஸ்டேட்மென்டில் செலவாக எழுதுகின்றன. அதனால், அந்த அளவிற்கு வருமான வரியை நிறுவனங்கள் குறைத்துச் செலுத்துகின்றன. இதனால், நிறுவனங்களுக்கு எஃபெக்டிவ் வட்டிச் செலவு (effective interest cost), வரி செலுத்தும் அளவிற்குக் குறையும்.
உதாரணத்திற்கு ஒரு நிறுவனம் 1,00,000 ரூபாயை 2010-11-ம் ஆண்டில் வட்டி யாகக் கொடுப்பதாக வைத்துக் கொள்வோம். அதே நிறுவனம் கடன் வாங்காமல் இருந்தால், வருமான வரியை அதிகமாகச் செலுத்தி யிருக்கும். கீழே உள்ள அட்டவணையில் கடன் வாங்கியுள்ள நிறுவனம் 33,990 ரூபாய் குறைவாக வருமான வரி கொடுத்துள்ளதைக் காணலாம். அது கடன் வாங்கியதால் கிடைத்த லாபம். ஆகவேதான் நாம் டிஸ்கவுன்ட் ரேட் கணக்கு செய்யும்போது கடன் வாங்கிய பகுதிக்கு, வருமான வரியைக் கழித்துக் கொள்கிறோம்.
டிஸ்கவுன்ட் ரேட்டைக் கண்டுபிடிக்கும் முன், அதில் பயன்படுத்தப்படும் சில முக்கிய வார்த்தைகளை பார்ப்போம்.
ரிஸ்க் ஃப்ரீ ரேட் (Risk Free Rate): எந்தவிதமான ரிஸ்க்கும் எடுக்காமல் கிடைக்கக்கூடிய ரிட்டர்ன் இது. RF என  அழைக்கப்படும் இது இந்திய அரசாங்கத்தின் 10 வருட கடன் பத்திரத்தின் (10 Year Govt. of India Securities) தற்போதைய வருமானம் (யீல்ட்) ரிஸ்க் ஃப்ரீ ரேட்டாக எடுத்துக் கொள்ளலாம். இது தற்போது 8.30% ஆகும்.
பீட்டா (Beta): பீட்டா என்பது ஏற்ற இறக்கத்தைக் காட்டும் அளவுகோல். ஒரு பங்கின் பீட்டா, ஒன்றிற்குமேல் இருந்தால் மார்க்கெட் ரிஸ்க்கை விட அதிக ரிஸ்க் உடைய பங்கு என்று அர்த்தம். பீட்டா ஒன்றிற்குக் கீழே இருந்தால் மார்க்கெட் ரிஸ்க்கைவிட குறைவு என்று அர்த்தம். நெகட்டிவ்வாக இருந்தால் ரிவர்ஸ் கோரிலேஷன் (reverse corelation) என்று அர்த்தம். அதாவது, மார்க்கெட் குறைந்தால், இதன் விலை ஏறும். மார்க்கெட் ஏறினால் இதன் விலை குறையும். தங்கம் போன்ற முதலீடுகள் இவ்வாறு ரிவர்ஸாக செயல்படும்.
பங்கு முதலீட்டின் விலை (Cost of Equity): பங்கு முதலீட்டாளர்கள் நிறுவனத் திடம் இருந்து எதிர்பார்க்கும் ரிட்டர்ன்தான் காஸ்ட் ஆஃப் ஈக்விட்டி. பொதுவாக இது டிவிடென்ட் மற்றும் கேபிட்டல் அப்ரிசியேஷன் மூலமாக இருக்கும்.
ஈக்விட்டி ரிஸ்க் பிரீமியம் (Equity Risk Premium): பங்கு (ஈக்விட்டி) முதலீடு ரிஸ்க் நிறைந்தது என்பதால், ரிஸ்க் ஃப்ரீ ரேட்டைவிட அதிகமாக முதலீட்டாளர்கள் கேட்கும் ரேட்தான் ஈக்விட்டி ரிஸ்க் பிரீமியம் என்று கூறப்படுகிறது. உதாரணமாக, தற்போதைய ரிஸ்க் ஃப்ரீ ரேட் 8.30%. ஈக்விட்டி முதலீட்டாளர்கள் 15.30% எதிர்பார்த்தால், ரிஸ்க் பிரீமியம் 7% ஆகும்.
சி.ஏ.பி.எம் (CAPM – Capital Asset Pricing Model): காஸ்ட் ஆஃப் ஈக்விட்டியைக் கணக்கிட உதவும் ஃபார்முலா. இந்த ஃபார்முலாவைக் கண்டுபிடித்ததற்காக வில்லியம் ஷார்ப்பி என்பவருக்கு 1990-ல் நோபல் பரிசு கிடைத்தது.
அடுத்த வாரத்தில் காஸ்ட் ஆஃப் ஈக்விட்டி கண்டுபிடித்து, வேக் உபயோகித்து டிஸ்கவுன்ட் ரேட் கண்டுபிடித்து, டெர்மினல் வேல்யூ கண்டுபிடிப்பதைப் பார்ப்போம்.
(படி ஏறுவோம்)

Source - Vikatan Magazine

இன்ஷூரன்ஸ் பாலிசி ரேட்டிங்!

இன்ஷூரன்ஸ் பாலிசி ரேட்டிங்!


ங்குச் சந்தையோ, மியூச்சுவல் ஃபண்டோ... பணம் சம்பந்தப்பட்ட எந்த ஒரு விஷயமாக இருந்தாலும், அதன் குறை - நிறைகள் அனைத்தையும் அக்குவேறு ஆணிவேறாக அலசி ஆராய்ந்து, வாசகர்களுக்கு எடுத்துச் சொல்வதைத் தனது தாரக மந்திரமாகவே கொண்டு நாணயம் விகடன் செயல்படுவது அனைவரும் அறிந்த ஒன்றே... அந்த வகையில் இப்போது மிகச் சரியான இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுப்பது குறித்தும் வழிகாட்டும் முயற்சியில் இறங்கியுள்ளது.

நீங்கள் புதிதாக ஒரு மோட்டார் பைக் வாங்க நினைக்கிறீர்கள். என்ன செய்வீர்கள்? முதலில் ஏற்கெனவே வாங்கி பயன்படுத்திக் கொண்டிருக்கும் நான்கு பேரிடம் விசாரிப்பீர்கள். அடுத்து உங்களுக்குத் தெரிந்த மெக்கானிக்கிடம் கேட்பீர்கள். கடைசியில் உங்களுக்குக் கிடைத்த தகவல்களின் அடிப் படையில் ஒரு பைக்கை வாங்குவீர்கள்.
ஆனால், மேலை நாடுகளில் பெரும்பாலும் இது மாதிரி யாரிடமும் போய்க் கேட்டுக் கொண்டிருப்பதில்லை. அங்கே பைக்குகளை ரேட்டிங் செய்வதற்கென்றே பல ஏஜென்ஸிகள் இருக்கின்றன. அவை ஒவ்வொரு பைக்கையும் ஆராய்ந்து ரேட்டிங் கொடுத்து இன்டர்நெட்டில் வெளியிட்டிருப்பார்கள். நாம் செய்ய வேண்டியதெல்லாம் நமது பட்ஜெட்டுக்கு ஏற்ற பைக்கில் எது அதிக ரேட்டிங் வாங்கியிருக்கிறது என்பதைப் பார்த்து அதை செலக்ட் செய்ய வேண்டியதுதான்!
இன்ஷூரன்ஸுக்கும் ரேட்டிங்!
இப்படி பைக் மட்டுமல்ல, கார்கள், கம்பெனிகள், மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் என சகலத்தையும் அலசி ஆராய்ந்து, அதற்கு ரேட்டிங் கொடுக்கிறார்கள். அப்படி இருக்கும்போது இன்ஷூரன்ஸ் பாலிசிகள் மட்டும் அதற்கு விதிவிலக்காக இருக்குமா என்ன? அதற்கும் ரேட்டிங் இருக்கிறது.
பொதுவாக நாம் இன்ஷூரன்ஸ் பாலிசியை எப்படி எடுக்கிறோம்? பைக் எடுக்கிற மாதிரிதான். தெரிந்தவர்கள் அல்லது இன்ஷூரன்ஸ் ஏஜென்டுகள் என்ன சொல்கிறார்களோ அதை எடுத்து விடுகிறோம். அப்படி இல்லாமல் நாமே செலக்ட் செய்ய முடியாதா? முடியும். நமது தேவைகளோடு பொருந்தக்கூடிய பாலிசியை நாமே தேர்ந்தெடுத்துக் கொள்வது ஒன்றும் பெரிய விஷயமில்லை. இன்றைக்கு எந்த நிறுவனத்தில் என்னென்ன பாலிசிகள் இருக்கின்றன என்பதை சொடக்கு போடும் நேரத்தில் பெற்றுவிடலாம். அதில் நமது தேவைக்கு, பட்ஜெட்டுக்கு ஏற்றது எது என்பதையும் கண்டுபிடித்து விடலாம். ஆனால் அப்படி எடுத்த ஒன்று சிறந்ததுதானா என்பதை மட்டும் கண்டுபிடிக்க முடியாது! அதற்கு நிச்சயமாக நிபுணர்கள் துணை தேவைப்படும்.
இதேபோன்ற நிலைதான் பெரும்பாலான இன்ஷூரன்ஸ் ஏஜென்டுகளுக்கும். அவர் களும் தங்களுடைய வாடிக்கை யாளர்களுக்கு சிறந்த பாலிசியைத்தானே சிபாரிசு செய்ய விரும்புவார்கள். அதற்கு அவர்களுக்கும் நிபுணர்களின் துணை அவசியமாக இருக்கிறது. ஆனால், எத்தனை பேர்களால் நிபுணர்களை விரும்பிய நேரத்தில் அணுகிவிட முடியும்?
இந்நிலையில்தான் ஏஜென்ட் மற்றும் பாலிசி எடுக்க விரும்புப வர்களுக்கு உதவும் வகையில், நிபுணர்களின் துணையோடு இன்ஷூரன்ஸ் பாலிசிகளை ரேட்டிங் செய்து கொடுத்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தோம். நினைத்த வேகத்தில் செயலிலும் இறங்கி னோம். ஆன்லைன் மூலம் மியூச்சுவல் ஃபண்டுகளை வெற்றிகரமாக மார்க்கெட்டிங் செய்துவரும் 'ஃபண்ட்ஸ் இந்தியா டாட் காம்’ நிறுவனத்தினர் இந்த சவாலான இன்ஷூரன்ஸ் ரேட்டிங் வேலையை ஏற்றுக் கொள்ள முன்வந்தனர்.

அளவுகோல்கள்..!
இன்ஷூரன்ஸ் பாலிசிகளை வரிசைப்படுத்தும் வேலை எளிதான விஷயமல்ல என்பது அனைவரும் அறிந்ததுதான். எண்டோவ்மென்ட், டேர்ம் என இன்ஷூரன்ஸ் பாலிசிகளில் உட்பிரிவுகள் அதிகம். இந்த பிரிவுக்குள் ஒவ்வொரு நிறுவனமும் நூற்றுக்கணக்கான பாலிசிகளை வைத்திருக்கிறது. இன்றைய தேதியில் நம் நாட்டில் இருபதுக்கும் மேற் பட்ட லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் இருக்கின்றன. ஒரு நிறுவனத்தில் சராசரியாக 25 பாலிசிகள் என வைத்துக் கொண்டால்கூட, 500 பாலிசி களையாவது எடுத்து அலசி ஆராய வேண்டியிருக்கும். இந்த 500 பாலிசிகளில் சிறந்தவற்றைத் தேர்வு செய்வது கடலில் மூழ்கி முத்தெடுப்பது போன்றதுதான்.
நிறுவனமும் முக்கியம்!
பொதுவாக இத்தகைய ரேட்டிங்கின் போது பாலிசிகளை மட்டுமே எடுத்துக்கொண்டு ரேட்டிங் வழங்குவார்கள். ஆனால் நாம் பாலிசிகளை மட்டுமின்றி அதை வழங்கும் நிறுவனத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டோம்... பாலிசிகளைப் பொறுத்த வரை பிரீமியம் மற்றும் ரைடர் உள்ளிட்ட எல்லா வற்றையும் கணக்கில் எடுத்துக் கொண்டு புள்ளிகள் வழங்கப்பட்டன.
பாலிசி அம்சங்களைகூட ஒப்பிட்டுவிடலாம். ஆனால், இன்ஷூரன்ஸ் நிறுவனத்தை எப்படி அளப்பது? அதற்கும் வழியைக் கண்டுபிடித்தோம். பாலிசி எடுப்பதே ஏதாவது அசம்பாவிதம் ஏற்படும் குடும்பத்தினரின் பொருளாதார இழப்பீடுகளை ஈடுகட்டதான். சில சமயங்களில் நியாயமற்ற காரணங்களைச் சொல்லி, கிளைமை நிராகரிக்க வாய்ப்பிருக்கிறது. அதனால், ஒவ்வொரு நிறுவனமும் இதுவரை கிளைம்களுக்கு எத்தனை சதவிகிதம் பணம் கொடுத்திருக்கிறது என்பதை ஓர் அளவுகோலாக எடுத்துக் கொண்டோம்.
இதிலும்கூட கூர்ந்து கவனித்தபோது ஒரு விஷயம் புலப்பட்டது. அதாவது, கிளைம் கொடுக்கப்பட்டது, கிளைம் மறுக்கப்பட்டது மற்றும் கிளைம் விசாரணையில் இருப்பது என மூன்று விதமாக புள்ளிவிவரங்கள் இருக்கின்றன. இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள், விசாரணையில் இருக்கும் கிளைம்களின் எண்ணிக்கையும் சேர்த்துதான் தங்களுடைய  கிளைம்
விகிதமாகக் காட்டி வருகின்றன. ஆனால், விசாரணையில் இருக்கும் கிளைம்கள் பின்னர் மறுக்கப்படவும் வாய்ப்பிருக்கிறது. அதனால், கொடுக்கப்பட்ட கிளைம்களை மட்டுமே நாம் ரேட்டிங்குக்காக எடுத்துக் கொண்டிருக்கிறோம்.

சால்வென்சி விகிதம்!
அடுத்து நாம் எடுத்துக் கொண்டது சால்வென்சி விகிதம். அதாவது, கிளைம் கொடுக்கத் தேவையான பணத்தை, இன்ஷூரன்ஸ் நிறுவனம் ஒதுக்கி வைத்திருக்கிறதா என்கிற விவரம். அனைத்து நிறுவனங்களும் குறைந்தபட்சம் 1.5 ஆக சால்வென்சி விகிதத்தை வைத்திருக்க வேண்டும் என்பது ஐ.ஆர்.டி.ஏ-வின் விதி. அதனால் அதிக சால்வென்சி விகிதம் உள்ள நிறுவனத்துக்கு அதிக புள்ளிகள் வழங்கப்பட்டன. இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக் கான புள்ளிகள், பாலிசிக்கான புள்ளிகள் இரண்டையும் இணைத்துத்தான் ஒட்டுமொத்த ரேட்டிங் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
எந்த பாலிசிகளுக்கு ரேட்டிங்?
டேர்ம் பிளான், சைல்ட் பிளான், யூலிப், பென்ஷன் பிளான் என ஒவ்வொரு பிளான்களுக்கான பாலிசி களுக்கும் அடுத்தடுத்த வார இதழ்களில் ரேட்டிங் இடம் பெற உள்ளது. முதற்கட்டமாக அடுத்த வாரம் வரப்போகிறது டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி களுக்கான ரேட்டிங்!
தொடர்ந்து படியுங்கள்..!

Source - Vikatan Magazine

Tuesday, June 21, 2011

ஆலோசனை! - பர்சனல் லோனை ஊதித் தள்ள பக்கா வழிகள்!

பர்சனல் லோனை ஊதித் தள்ள பக்கா வழிகள்!

ஆலோசனை!
டீரென உடல் நலமில்லாமல் போய் மருத்துவ மனையில் அட்மிட் ஆகிவிடுவது... நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு உதவுவது இப்படி யாக கொஞ்சமும்  எதிர்பாராமல் வந்து சேரும் திடீர் செலவுகளைச் சமாளிக்க ஒரே வழி, ஏதாவது ஒரு வங்கியில் பர்சனல் கடன் வாங்குவதே. அடமானம் மற்றும் ஜாமீன் எதையும் கேட்டு நோண்டாமல் கொடுக்கிற கடன் இது என்பதாலோ என்னவோ இதற்கு விதிக்கப்படும் வட்டியும் அதிகமே. ஏதோ ஒரு அவசரத்தில் இந்தக் கடனை வாங்கிவிட்டு, பிற்பாடு ஒழுங்காகத் திரும்பக் கட்ட முடியாமல் தவிப்பவர்கள் பலர். இந்தக் கடனிலிருந்து எளிதாக மீள இதோ சில வழிகள்...!
சொத்தை வைத்து சமாளிக்கலாம்!
உங்களிடம் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வீடு, கார், ஆயுள் காப்பீட்டு பாலிசிகள், வரி சேமிப்புச் சான்றிதழ்கள், பங்குகள், பாண்டுகள், தங்க நகைகள், மியூச்சுவல் ஃபண்ட், ஃபிக்ஸட் டெபாசிட் போன்ற சொத்துக்களை வங்கியில் அடகு வைத்து தனிநபர் கடனை அடைக்கலாம்.  சில வங்கிகள் இது மாதிரியான சொத்துகளுக்குக் குறைந்த வட்டியில் கடன் கொடுக்கின்றன. அதனைப் பயன்படுத்தி அதிகளவி லான வட்டி கட்டுவதைத் தவிர்க்கலாம்.
மறுசீரமைப்பு!
நீங்கள் முப்பது லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டின் பெயரில் வீட்டுக் கடன் வாங்கியிருக்கிறீர்கள் எனில், தற்போது அந்த வீட்டிற்கான மதிப்பு அதிகரித்திருக்கும் நிலையில் மீண்டும் வீட்டின் மீது கடன் வாங்கி தனிநபர் கடனை அடைக்கலாம். வீட்டுக்கான கடனின் வட்டி 10.75-11 சதவிகி தமாக இருக்கும் பட்சத்தில், தனிநபர் கடன் 16-24 சதவிகிதமாக இருப்பதால் வீட்டின் மீது மறுசீரமைப்பு (Restructure) முறையில் கடனைப் பெற்று, தனிநபர் கடனை அடைத்து விடலாம்.
இம்முறையில் கடன் பெறும்போது மாறுபடும் வட்டி விகிதத்தில் இருந்தால், வருங் காலத்தில் வட்டி விகிதம் குறையும்போது கூடுதல் பலன் கிடைக்கும். இதற்கு நீங்கள் ஒழுங்காக இ.எம்.ஐ. கட்டியிருக்க வேண்டும்; சிபில் அமைப்பில் உங்கள் பெயர் இல்லாமல் இருக்க வேண்டும். இதுமாதிரி உங்கள் வங்கி  ரெக்கார்டில் எந்த குறை பாடும் இருக்கக்கூடாது. 
பல வங்கிகளில் வேண்டாமே!
பலர் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிகளில் தனிநபர் கடன் வாங்கி இருப்பார்கள். ஒவ்வொரு வங்கியிலும் ஒவ்வொரு விதமான வட்டி கணக்கிடப்படும். இதனாலும் அதிகளவில் நீங்கள் வட்டி செலுத்த வேண்டியிருக் கலாம். பல வங்கிகளில் தனிநபர் கடன் வாங்கியவர்கள், வட்டி குறைவாக இருக்கும் வங்கியில் தகுதி இருந்தால் அந்தத் தொகைக்கு ஈடாக கடன் வாங்கி, மற்ற வங்கிகளில் வாங்கிய கடன்களை அடைத்துவிடலாம். இதில் கண்ணுக்குத் தெரியாமல் போகும் அதிக வட்டி நமக்கு மிச்சமாகும்.
குறைந்த காலத்தில் கட்டுங்க!
நீங்கள் வாங்கிய தனிநபர் கடனைத் திரும்பச் செலுத்தும் போது இ.எம்.ஐ. குறைவாக இருக்க வேண்டும் என்பதற்காக கடனைத் திரும்பச் செலுத்தும் காலத்தை அதிகமாக வைத்திருப்பீர்கள். ஆனால், காலம் செல்லச் செல்ல அதிக வட்டி கட்ட வேண்டி யிருக்கும் என்பதை பலரும் நினைத்துப் பார்ப்பதே இல்லை. எனவே, கடன் பணம் குறைவோ, அதிகமோ அதை எவ்வளவு சீக்கிரத்தில் கட்டி முடிக்க முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் கட்டி முடித்து விட்டால், வட்டியாக கொடுக்கும் பெரும் பணத்தை எளிதாக மிச்சப்படுத்தலாம். 
யோசித்து வாங்கவும்!
அதிகப்படியான வட்டியில் கொடுக்கப்படும் தனிநபர் கடனை வாங்கும்முன் ஒன்றுக்குப் பலமுறை யோசித்துவிட்டு வாங்குவது நல்லது. என்னதான் அவரசத் தேவை என்றாலும் நம்மிடம் இருக்கும் பங்குகளை விற்றோ, ஃபிக்ஸட் டெபாசிட்டில் இருக்கும் பணத்தை எடுத்தோ அவசரத் தேவையை பூர்த்தி செய்து கொள்வதே புத்திசாலித்தனம்.
மாதச் சம்பளம் வாங்குபவர் எனில் உங்கள் சம்பள விவரம், தெளிவான வங்கி பரிவர்த்தனை ஆகிய விவரங்களைக்ne கொண்டு வங்கியை அணுகி குறைந்த வட்டியில் அடமானக் கடன் பெற்றுக் கொள்வது நல்லது. 
வாங்குவது கடன்தான் என்றாலும், அதை குறைந்த வட்டியில் வாங்குவதே நல்லது. திட்டமிட்டு செயல்பட்டால், பர்சனல் லோனை எளிதாகக் கட்டி முடிக்கலாமே!
-பானுமதி அருணாசலம்.

தி

Source - Vikatan Magazine

பங்குச்சந்தை ஆத்திச்சூடி.. - 29

பங்குச்சந்தை ஆத்திச்சூடி..

ஷேர் மார்க்கெட்டில் நுழைய விரும்பும் புதியவர்களுக்கான வழிகாட்டித் தொடர்!

கடந்த வாரம் 'ஃப்ரீ கேஷ் ஃப்ளோ' கணக்கிடுவதற்கான ஃபார்முலாவைக் கண்டோம்... அடுத்த ஐந்து ஆண்டிற்கான இன்கம் ஸ்டேட்மென்டை கணிப்பது எப்படி என்பதையும் கடந்த வாரம் பார்த்தோம். அதிலிருந்து ஆபரேட்டிங் பிராஃபிட் மற்றும் வருமான வரிச் செலவு எவ்வளவு என்று தெரியும். ஆக, நமக்குத் தெரிய வேண்டிய வேறு இரு அயிட்டங்கள், நிகர முதலீட்டுச் செலவு மற்றும் ஒர்க்கிங் கேப்பிட்டலில் உள்ள மாற்றம் ஆகியவை மட்டுமே. முதலில் 'நெட் கேப்பிட்டல் எக்ஸ்பென்ஸ்’ எவ்வாறு கண்டுபிடிப்பது என்று பார்ப்போம்...  
மிழ்நாடு கூரியர் கம்பெனியின் கேப்பிட்டல் எக்ஸ்பென்ஸஸ்(முதலீட்டுச் செலவுகள்) அடுத்த ஐந்து ஆண்டில் எவ்வளவு இருக்கும் என்று நாம் கணிக்க வேண்டும். இதற்கு கடந்த ஐந்து ஆண்டுகளில் கேப்பிட்டல் எக்ஸ்பென்ஸஸ் எவ்வளவு இருந்தது என்று  தெரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாடு கூரியரின் கடந்த ஐந்து ஆண்டுகால முதலீட்டுச் செலவு, அட்டவணை1-ல் கொடுக்கப் பட்டுள்ளது. இந்த செலவு, நிறுவனங்களின் கேஷ் ஃப்ளோ ஸ்டேட்மென்டில் கிடைக்கும்.
மேலே உள்ள அட்ட வணையில் முதலீட்டுச் செலவிற்கும்  விற்பனைக்கும் உள்ள விகிதத்தைக் கண்டுபிடித் துள்ளோம். இதன்படி சராசரியாக கடந்த ஐந்து ஆண்டுகளில் விற்பனையில் 4%-ஐ முதலீட்டுச் செலவாக  நிறுவனம் செலவழித்துள்ளது. ஆகவே, இனிவரும் காலங் களில் குறைந்தது அந்த அளவாவது நிறுவனம் செலவழிக்க வேண்டும். விற்பனையில் 4% முதலீட்டுச் செலவு  என்று எடுத்துக் கொண்டால், இனிவரும் ஆண்டுகளில் தமிழ்நாடு கூரியரின்  முதலீட்டுச் செலவு அட்டவணை-2-ல் கூறப்பட்ட வாறு இருக்கும்.

முதலீட்டுச் செலவுகளை கண்டுபிடித்து விட்டோம். நிகர முதலீடு கண்டுபிடிப்பது எப்படி? நாம் இன்கம் ஸ்டேட்மென்டில் தேய்மானச் செலவைப் பார்த்தோம் அல்லவா? அது வெறும் புத்தகச் செலவுதானே தவிர, பணச் செலவு அல்ல. ஆகவே, முதலீட்டுச் செலவில் இருந்து தேய்மானச் செலவை கழித்தால் கிடைப்பதே நிகர முதலீடு.
நிகர முதலீடு = முதலீட்டுச் செலவு - தேய்மானச் செலவு
(Net Investments = Capital Expenditure – Depreciation & Amortization)
ஆக, நிகர முதலீடு அடுத்த ஐந்து ஆண்டுகளில் எவ்வளவு இருக்கும் என்பதைக் கண்டுபிடித்து விட்டோம் (அட்டவணை-3). இதில் காணும் தேய்மானச் செலவு நாம் சென்ற இதழில் கணித்த இன்கம் ஸ்டேட்மென்டில் இருந்து எடுக்கப் பட்டுள்ளது. அடுத்ததாக, ஒர்க்கிங் கேப்பிட்டலில் உள்ள மாற்றத்தை எவ்வாறு கண்டுபிடிப்பது என்று பார்ப்போம்.
ஒர்க்கிங் கேப்பிட்டலில் உள்ள மாற்றத்தைக் கண்டுபிடிப்பதற்கு, ஒர்க்கிங் கேப்பிட்டலை முதலில் கண்டுபிடிக்க வேண்டும். ஒர்க்கிங் கேப்பிட்டல் என்றால் என்ன? எந்த ஒரு தொழிலிலும் அசையும் சொத்துக்கள் மற்றும் அசையாச் சொத்துக்கள் என இரு வகை இருக்கும். அசையாச் சொத்துக்களை எளிதில் பணமாக்க முடியாது. அதேசமயத்தில் அசையும் சொத்துக்களான பேங்க் டெபாசிட், இன்வென்டரி (குடோனில் உள்ள பொருட்கள்), வரவேண்டிய சிறு கடன்கள், வேலை நடந்து கொண்டிருக்கும் பொருட்கள் போன்றவற்றை எளிதில் குறுகிய காலத்தில் பணமாக்கக் முடியும்.
அதேபோல, நடப்பு காலத்தில் கொடுக்க வேண்டிய கடன்களும் கொஞ்சம் இருக்கும். நடப்பு காலத்தில் பெறக்கூடிய சொத்துக்கும், நடப்பு காலத்தில் கொடுக்க வேண்டிய கடன்களுக்கும் உள்ள வித்தியாசம்தான் ஒர்க்கிங் கேப்பிட்டல். நடப்பு காலம் என்று நாம் கூறுவதை 90 நாட்கள் என்று எடுத்துக் கொள்ளலாம். இதை நிறுவனங்களின் பேலன்ஸ் ஷீட்டில் இருந்து பெறலாம்.
செயல்பாட்டு மூலதனம் = நடப்பு கால சொத்துக்கள் - நடப்பு கால கடன்கள்.
(Working Capital = Current Assets – Current Liabilities)
தொழில் வளரும்போது, ஒர்க்கிங் கேப்பிட்டலின் தேவையும் அதிகமாகும். தமிழ்நாடு கூரியரின் கடந்தகால ஒர்க்கிங் கேப்பிட்டல் கணக்கை அட்டவணை-4-ல் கொடுத்துள்ளோம். குறுகிய கால சொத்துக்கள் மற்றும் கடன்கள் தமிழ்நாடு கூரியரின் பேலன்ஸ்ஷீட்டில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள அட்டவணையில் நாம் ஒர்க்கிங் கேப்பிட்டலை கண்டுபிடித்துள்ளோம். பிறகு ஒர்க்கிங் கேப்பிட்டலுக்கும் விற்பனைக்கும் உள்ள விகிதத்தைக் கண்டுபிடித்துள்ளோம். அதன்படி கடந்த ஐந்து ஆண்டுகளில் சராசரியாக விற்பனையில் 3.1% ஒர்க்கிங் கேப்பிட்டலாக தேவைப்பட்டுள்ளது. அதே அளவு இனிவரும் காலங்களிலும் தேவைப்படும் என்று வைத்துக் கொள்வோம். அவ்வாறு எடுத்துக்கொண்ட சதவிகிதத்தைக் கொண்டு இனி அடுத்து வரும் 5 ஆண்டுகளுக்கான ஒர்க்கிங் கேப்பிட்டல் தேவை அட்டவணை-5-ல் கணிக்கப் பட்டுள்ளது.
நாம் சராசரி என்று கண்டு பிடித்த 3.1%-ஐ அந்தந்த ஆண்டு விற்பனையுடன் பெருக்கினால், அந்தந்த ஆண்டிற்கு உள்ள ஒர்க்கிங் கேப்பிட்டல் தேவை எவ்வளவு என்பது நமக்குத் தெரிந்துவிடும். ஆனால், நமக்குத் தேவை ஒர்க்கிங் கேப்பிட்டலில் உள்ள மாற்றம். அடுத்த ஆண்டின் ஒர்க்கிங் கேப்பிட்டல் தேவையை இந்த ஆண்டின் தேவையிலிருந்து கழித்தால், நமக்கு ஒர்க்கிங் கேப்பிட்டலில் உள்ள மாற்றம் கிடைத்துவிடும். அட்ட வணை- 5-ல் உள்ள மார்ச் 2013 மற்றும் மார்ச் 2012-ல் ஒர்க்கிங் கேப்பிட்டல் தேவை முறையே 76 லட்ச ரூபாய் மற்றும் 66 லட்ச ரூபாய். ஆகவே, மார்ச் 2013-ல் ஒர்க்கிங் கேப்பிட்டல் மாற்றம் 10 (76 - 66 = 10) லட்ச ரூபாய் ஆகும்.
ஆக நமக்கு 'ஃப்ரீ கேஷ் ஃப்ளோ’ கண்டுபிடிப்பதற்குத் தேவையான அனைத்து விவரங்களும் தற்போது நம் கையில் உள்ளது. அடுத்த வாரம் 'ஃப்ரீ கேஷ் ஃப்ளோ’வைக் கண்டுபிடிப்போம்.
(படி ஏறுவோம்)

Source - Vikatan Magazine